சமூகம்
Published:Updated:

“நீங்க மட்டும் யோக்கியமா?”

டீக்கடை
பிரீமியம் ஸ்டோரி
News
டீக்கடை

ஓவியம்: ஜீவா

டீக்கடையில் அமர்ந்து ‘காரசார’ அரசியல் பேசும் இந்தப் பகுதியில், இந்த முறை ரத்தத்தின் ரத்தங்களுக்கும், கழக உடன்பிறப்புகளுக்கும் இடையே நடக்கும் வார்த்தைப்போரின் 2.0 வெர்ஷன். உதடு புண்படாமல் குடிக்கவும்!

ர.ர: யோவ் திடலு... போற போக்கப் பார்த்தா உங்க அறிவாலயத்திலிருந்து பெரியார், அண்ணா படத்தையே மொத்தமா தூக்கிடுவாங்க போலருக்கே..?

டீக்கடை திடலிஸ்ட்: என்னய்யா சொல்ற... உளறாத!

ர.ர: பின்ன என்னய்யா... அவங்க அடிக்குற போஸ்டர், பேனர்லல்லாம் ஸ்டாம்ப் சைஸைவிட சின்னதா தேய்ஞ்சு போய்க்கிட்டிருக்காங்க ரெண்டு தலைவரும். ஆனா பேரன், கொள்ளுப்பேரன்னு அந்த ஒத்தக் குடும்பத்தோட குரூப் போட்டோதானே மொத்தமுமா இருக்கு?

“நீங்க மட்டும் யோக்கியமா?”

டீக்கடை திடலிஸ்ட்: ஓ... உதயநிதி அமைச்சரானதைத்தான் இப்படிச் சுத்தி வளைச்சு பேசிக்கிட்டிருக்கியாக்கும்!

உ.பி: `உதயநிதி உதயநிதி... உலகம் போற்றும் உதயநிதி...’ தானனனா தானனனா...

ர.ர: இந்தா வந்துட்டாருய்யா... கோபாலபுரத்து சொம்பு.

உ.பி: சொல்லிட்டாருய்யா டயர் நக்கி தம்பு. எங்க சின்னவர் அமைச்சரானதைப் பார்த்து பொறுக்க முடியாம வயிறு எரியுதா... எரியட்டும் எரியட்டும்... ஹாஹா!

ர.ர: எனக்கு ஏன்டா வயிறு எரியணும்... நியாயமா பார்த்தா உனக்குத்தான்டா வயிறு எரியணும். எங்க கட்சியில சாதாரண அடிமட்டத் தொண்டரா சேர்ந்த எங்க எடப்பாடியாரு, ஓ.பி.எஸ்-ஸெல்லாம் முதல்வராவே ஆகியிருக்காங்க. உங்க கழகத்துல அந்தக் குடும்பத்தைச் சேராத யாராவது முதல்வர் ஆக முடியுமா... 40 வருஷத்துக்கு முன்னாடி கட்சியில சேர்ந்த நீ இன்னும் போஸ்டர் ஒட்டிக்கிட்டு கிடக்க. நேத்து வந்தவங்கள்லாம் அமைச்சராகிட்டு இருக்காய்ங்க...

உ.பி: யோவ்... உங்க தலைவர்கள் மக்களால தேர்ந்தெடுக்கப்பட்டா முதல்வரானாங்க... ஹெலிகாப்டர் நிழலப் பார்த்து கும்பிட்டும், டேபிளுக்கு அடியில தவழ்ந்தும்தானே பதவிக்கு வந்தாங்க. அடிமையா இருந்துக்கிட்டு பேச்சப் பாரு...

ர.ர: யோவ், நீங்க மட்டும் யோக்கியமா... நாங்களாச்சும் கட்சித் தலைவியான எங்க அம்மா கால்லதான் விழுந்தோம். ஆனா நீங்க... வயசு வித்தியாசம்கூட இல்லாம உதயநிதி கால்லயும்ல விழுறீங்க. அடிமைத்தனம் பத்தியெல்லாம் நீங்க பேசலாமா?

டீ.திடலிஸ்ட் (மைண்ட்வாய்ஸ்): நல்லவேளை... இந்தக் கொடுமையெல்லாம் பார்க்குறதுக்கு முன்னாடியே பெரியாரும் அண்ணாவும் போய்ச் சேர்ந்துட்டாங்க.

ர.ர: சரி... அமைச்சர் போஸ்ட்டிங் தர்ற அளவுக்கு அப்படி உதய்ணா என்ன பண்ணிட்டாரு... தாத்தா மாதிரி இந்தியை எதிர்த்து, தண்டவாளத்துல தலை வெச்சுப் போராடுனாரா... இல்ல அப்பா மிசாவுல கைதான மாதிரி சிறைக்குப் போனாரா... சொல்லுய்யா.

உ.பி: அதான் ‘இந்தி தெரியாது போடா’னு டி-ஷர்ட் போட்டாரே... செங்கலைத் தூக்கிக் காமிச்சாரே... சென்னை சூப்பர் கிங்ஸுக்குப் பெரிய விசில் போட்டு மாநில சுயாட்சியைக் காத்தாரே...

டீ.திடலிஸ்ட்: ரைட்ரா!

ர.ர: எதே... டீ-ஷர்ட் போட்டாரா... அடேய், உங்க அமைச்சர் அலுவலகத்தை ரெடி பண்ணினதே முதல்ல இந்திக்காரத் தொழிலாளர்கள்தானாமே... அது தெரியுமா உனக்கு?

உ.பி: அதாவது... `பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’னு...

ர.ர: போதும் நிப்பாட்டு. ஆ... வூ...ன்னா செம்மொழி மாநாடு கேப்ஷனத் தூக்கிக்கிட்டு வந்து எஸ்கேப் ஆகுறது...

டீ.திடலிஸ்ட்: யோவ் ரத்தம்... நீயும் எவ்ளோதான்யா குடும்பத்தைப் பத்தியே கேப்பே. பாவம்ல நம்ம உ.பி... ஆட்சியைப் பத்திப் பேசுய்யா.

உ.பி: அதானே... தேங்க்ஸ்யா திடலு!

ர.ர: சரி... மூச்சுக்கு முந்நூறு தடவை `இது திராவிட மாடல் ஆட்சி’னு கூவுறீங்களே... அப்பிடின்னா என்னய்யா?

உ.பி: சமூகநீதி, பெண்ணுரிமை, அடித்தட்டு மக்கள்லேருந்து அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிதான் திராவிட மாடலு!

ர.ர: இந்த வருஷத்துல நடந்த மலக்குழி மரணங்கள்ல இந்தியாவுலேயே தமிழ்நாடுதான் டாப். இதுதான் சமூகநீதியா... முதல்வர் கான்வாய்ல பெண் மேயரைத் தொங்க வெக்கிறதுக்குப் பேருதான் சம உரிமையா... கொளத்தூர், திருவல்லிக்கேணினு தொடர்ச்சியா சென்னையில இருக்குற எல்லா விளிம்புநிலை மக்களோட குடிசைகளையும் இடிச்சு காலி பண்ணிட்டீங்க... இதுதான் அடித்தட்டு மக்களுக்கான ஆட்சியா?

டீ.திடலிஸ்ட்: யோவ் ரத்தம்... பேசுறது நீதானா... என்ன அதிசயம்... இன்னைக்கு நியூஸ் பேப்பர்லாம் படிச்சு, தயாரா வந்துருக்கபோல...

உ.பி: யோவ்... நீர்நிலை புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிச்சு வீடு கட்டுனா... இடிக்காம என்ன பண்ணுவாங்க?

ர.ர: ஆங்... குடிசைன்னா மட்டும் உங்க சட்டமும் பொக்லைனும் உடனே வேலை செய்யுது. இதுவே தனியார் நிறுவனங்கள், கார்ப்பரேட் சாமியார்களின் கட்டுமானங்கள்னா மட்டும் பம்மிக்கிட்டு நிக்குதே?

டீ.திடலிஸ்ட்: வேறென்ன... ‘இந்துக்களுக்கு எதிரான ஆட்சி’னு சொல்லி அந்த வாட்ச் கட்சிக்காரனுங்க மக்கள்கிட்ட பர்ஃபார்மன்ஸ் பண்ணி ஓட்டைக் கெடுத்துருவாங்கனு பயம்தான்!

ர.ர: அதனாலதான் அம்பேத்கர் சிலைக்கு மாலைபோட வந்த கூட்டணிக் கட்சிக்காரங்களைக் கீழே பிடிச்சு தள்ளிட்டு, அதே அம்பேத்கருக்கு காவிச்சட்டை, பட்டை போட்டு போஸ்டர் அடிச்சவங்களுக்கு ராஜ பாதுகாப்பு வழங்குச்சா உங்க காவல்துறை?

உ.பி: யோவ்.. உங்க கூட்டணியிலருந்து ஒவ்வொருத்தரா பிச்சுக்கிட்டு போய்க்கிட்டிருக்காங்கனு, ஒத்துமையா இருக்குற எங்க கூட்டணியையும் பிரிச்சுவிடப் பாக்குறியா... இது திராவிடக் கூட்டணி. பெரியார் மண்ணுல உங்க காவிக் கூட்டணிப் பருப்பு வேகாது.

ர.ர: எதே... பெரியார் மண்ணா... அதான் ரொம்பப் பாசத்துல ஏரி, ஆத்து மண்ணு மணலையெல்லாம் அள்ளிக் கடத்துறீங்களாக்கும். விழுப்புரத்துல அதைத் தட்டிக்கேட்ட `தோழமை சுட்டல்’ கட்சித் தொண்டரையே காரை வழிமறிச்சு அடிச்சு வெளுத்தீங்களாக்கும்?

உ.பி: நாங்க கூட்டணிக்குள்ள அடிச்சுப்போம், சேர்ந்துப்போம். அதைப் பத்தி உங்களுக்கென்ன கவலை... முதல்ல கட்சியே யார்கிட்ட இருக்குன்னு தெரியாம போட்டிப் பொதுக்கூட்டம் நடத்துற நீங்க இதைப் பத்தில்லாம் பேசலாமா?

ர.ர: சரிய்யா... நான் பொதுப் பிரச்னைக்கே வாரேன். இந்த வருஷத்துல மட்டுமே ஆவின் பால் விலை நாலு தடவை உயர்ந்துடுச்சு. அதனாலதான் நம்ம திடலிஸ்ட்டே கடுங்காபி போட்டுட்டு இருக்காரு. ஆனா, அமைச்சர் நாசர் வந்ததுக்கு அப்புறம்தான் பால் விலையே குறைஞ்சுடுச்சுனு உங்க முதல்வர் சொல்றாரேய்யா... இது கொஞ்சமாவது நியாயமா?

உ.பி: யோவ்... அவரா எங்கய்யா சொன்னாரு. பேப்பர்ல எழுதிக் கொடுத்ததை அவரு படிச்சாரு. இதைப் பெருசு பண்ணாதய்யா...

ர.ர: எங்க ஆட்சியில நாங்க கொண்டுவந்த திட்டத்தை யெல்லாம் விவசாயத்துக்கு எதிரான திட்டம்னு சொல்லி எதிர்த்து போராடுனீங்க. இப்போ நீங்களே பரந்தூர்ல விமான நிலையம், அன்னூர்ல சிட்கோனு விவசாய நிலத்தை அழிக்குற திட்டமா கொண்டுவர்றீங்களேய்யா...

உ.பி: `வளர்ச்சி’ முக்கியம்ல..!

டீ.திடலிஸ்ட்: யாருக்கு?

ர.ர: வேற யாருக்கு... அவங்களுக்குத்தான்!

உ.பி: யோவ்... இன்னைக்கு என்னை ரொம்ப அவமானப்படுத்திட்ட நீ. இனிமே நான் இங்க இருந்தா அது என் சுயமரியாதைப் பாரம்பர்யத்துக்கே இழுக்கு. நான் கிளம்புறேன்...

டீ.திடலிஸ்ட்: யோவ் உ.பி... குடிச்ச காபிக்குக் காசு கொடுத்துட்டு போய்யா.

ர.ர: உனக்குக் காசு கொடுக்கக் கூடாதுங்குறதுக்காகத்தானே அவன் இவ்ளோ வேகமா எழுந்து ஓடுறான்... அது தெரியலயா உனக்கு?