
18 மாணவிகள் எழுத்து மூலமாகப் புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மாணவிகள்
‘செந்தமிழ் சித்தர், ஆன்மிகச் சொற்பொழிவாளர், பட்டிமன்ற நடுவர், முதுகலைப் பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர், டியூஷன் மாஸ்டர்’ எனப் பல்வேறு அவதாரங்களில் வலம்வந்த ஆசிரியர் அசோகனின் இன்னொரு முகத்தைப் பார்த்து மிரண்டுபோயிருக்கிறது நாகை. 30-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார் அசோகன்!
நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த கத்திரிப்புலம் கிராமத்திலுள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராகப் பணியாற்றியவர் அசோகன். எம்.எஸ்சி பட்டதாரியான இவர், பள்ளி அருகிலேயே கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டியூஷன் சென்டரும் நடத்திவருகிறார். இந்த நிலையில், 10, 11, 12-ம் வகுப்பு மாணவிகள் சிலரை, தன் ஆசைவலையில் வீழ்த்தி, வக்கிரபுத்தியுடன் இவர் நடந்து கொண்டதாக வெளியாகியிருக்கும் செய்தி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இது குறித்து கத்திரிப்புலம் ஊராட்சி மன்றத் தலைவர் வீரமணியிடம் கேட்டபோது, “இந்தச் சம்பவமெல்லாம் பள்ளிக்கூடத்தில் நடக்கவில்லை. அவருடைய டியூஷன் சென்டரில்தான் நடந்திருக்கின்றன. இது பற்றி நான் ஏதாவது சொன்னால் ஊரில் பிரச்னை வரும்” என்று நழுவினார்.

இதையடுத்து முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவரான ராஜனிடம் பேசினோம். “பத்து வருஷத்துக்கு முன்னாடியே அசோகன், அவரோட டியூஷன் சென்டருக்குப் பாடம் சொல்லிக் கொடுக்க வந்த வேற சாதிப் பொண்ணைக் காதலிச்சு, கர்ப்பமாக்கிட்டார். ஊர்ல நாங்க பேசி முடிச்சு ரெண்டு பேருக்கும் கல்யாணம் பண்ணிவெச்சோம். இப்போ படிக்க வர்ற வயசு பொண்ணுங்களை, மயக்கிப் பேசி தப்பு பண்ணியிருக்காரு. இது ரொம்ப நாளா நடந்துக்கிட்டு இருந்திருக்கு. கடந்த 12-ம் தேதி விளையாட்டுப் போட்டிக்கு அழைச்சுட்டுப்போன ஒரு மாணவியைக் கட்டிப்புடிச்சு முத்தம் கொடுத்ததா பிரச்னை வந்துச்சு.
சமீபத்துல, கிளாஸ்ல சோர்வா உட்கார்ந்திருந்த ஒரு மாணவி, ‘என்கிட்ட அசோகன் சார் தப்பா நடந்துக்கிட்டாரு. கர்ப்பத்தைக் கலைச்சதால எனக்கு உடம்புக்கு முடியலை’ என்று ஆசிரியையிடம் சொல்லியிருக்கிறார். அப்புறம் வரிசையா மத்த பொண்ணுங்களும் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளைச் சொல்லியிருக்காங்க. இதையடுத்து ஊர்க்காரங்ககிட்ட எதுவும் சொல்லாம, பத்து நாளா ரகசியமா விசாரிச்சிருக்கார் தலைமையாசிரியர். அப்புறம் எஸ்.பி., கலெக்டர், மாவட்டக் கல்வி அலுவலர்கள் இவங்களுக் கெல்லாம் புகார்கள் போக.... விஷயம் வெளியே வந்துருச்சு’’ என்றார்.

பள்ளித் தலைமையாசிரியர் குமாரிடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “வெளிநபர் யார்கிட்டேயும் இந்த விஷயத்தைப் பத்திப் பேசாதீங்கன்னு எனக்கு மேலிடத்து உத்தரவு” என்று ஒற்றைவரியில் முடித்துக்கொண்டார்.
பாதிக்கப்பட்ட மாணவிகளின் குடும்பத் தரப்பில் நம்மிடம், ‘‘பட்டிமன்றம், ஆன்மிகச் சொற்பொழிவு என்று நல்லவன் வேஷம் போட்டுக்கொண்டே, அப்பாவிக் குழந்தைகளிடம் இத்தனை தப்பையும் நடத்தியிருக்கிறார் ஆசிரியர் அசோகன். சட்டம் இவருக்குச் சரியான தண்டனையைக் கொடுத்தால்தான் இது போன்ற வக்கிரபுத்திக்காரர்கள் திருந்துவார்கள்’’ என்றனர் ஆதங்கத்துடன்.
பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் ஆனந்திடம் பேசினோம். “தப்பு செஞ்ச யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிச்சே ஆகணும். அசோகன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்துட்டு வர்றாங்க” என்றார்.

இதையடுத்து, விசாரணை அதிகாரிகளிடம் பேசினோம். “மருதூரைச் சேர்ந்த அசோகன், ப்ளஸ் டூ படிக்கும்போதே சக மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டதற்காகப் பிரச்னையில் சிக்கியவர். உள்ளூரிலும் பெண்கள் மத்தியில் கெட்ட பெயர் உண்டு. இவர் ஏற்கெனவே ஒரு பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றி, அங்கும் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு, வெளியேற்றப்பட்டார். அதன் பிறகுதான் இந்தப் பள்ளியில் சேர்ந்திருக்கிறார். இங்கும் நிறைய மாணவிகளுக்கு ஆபாச எஸ்.எம்.எஸ் அனுப்பியிருக் கார். ‘நீ டிரெஸ் போட்டா அழகா இருப்பே. டிரெஸ் இல்லாம இருந்தா இன்னும் அழகா இருப்பே. மேல டிரெஸ் போடாம ஒரு செல்ஃபி எடுத்து அனுப்பு’ என்றெல்லாம்கூட மெசேஜ் அனுப்பியிருக்கிறார். இவரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் நிறைய இருக்கலாம். எதிர்காலம் பாதிக்கப்படும் என்ற பயத்தில் பலரும் புகார் சொல்லத் தயங்குகிறார்கள்” என்றனர்.

வழக்கை விசாரித்துவரும் கரியாப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளர் மலர்க்கொடி, “18 மாணவிகள் எழுத்து மூலமாகப் புகார் கொடுத்திருக்கிறார்கள். அவர்களில் இரண்டு மாணவிகள் அசோகனால் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகியிருக்கிறார்கள். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டியிருக்கிறது. அவர்களின் மனநிலையும் எதிர்காலமும் பாதிக்கப்படக் கூடாது என்பதால், ரகசியமாக விசாரணை நடத்திவருகிறோம். அசோகனை நாங்கள் விசாரித்தபோது, ‘விளையாட்டுல, படிப்புல முதலிடம் வர்ற மாணவிகளைக் கட்டிப்பிடிச்சு முத்தம் கொடுத்துப் பாராட்டுவேன். இது தப்பா?’ என்று தெனாவெட்டாகப் பேசினார். அசோகன்மீது போக்சோ சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து சிறையில் அடைத்திருக்கிறோம்” என்றார்.