அரசியல்
அலசல்
Published:Updated:

உள்ளாடை அணிய மாட்டாயா... உனக்கு நான்தான் மாப்பிள்ளை...

பாலியல் டார்ச்சர்
பிரீமியம் ஸ்டோரி
News
பாலியல் டார்ச்சர்

மாணவிகளுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்த ஆசிரியர்!

கரும்பலகையில் முக்கோணம் வரைந்த மாணவியிடம் `ஏன் ‘பாகங்களை’க் குறிப்பிடவில்லை?’ என்று கேட்டதோடு, “நீ இப்படித்தான் உள்ளாடை எதுவும் போடாமல் மேலாடை அணிவாயா?” என்று இரட்டை அர்த்தத்தில் பேசியிருக்கிறார் கணித ஆசிரியர் ராஜமுத்தெழில். பேச்சில் மட்டுமல்லாமல், தொடுகை மூலமும் மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்த ஆசிரியர், இப்போது போக்சோ சட்டத்தில் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்.

கைதான ஆசிரியர்!

சென்னை, போரூர் வட்டாரத்தில் இயங்கிவரும் அரசு உதவி பெறும் பள்ளி ஒன்றில் 2,000-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியின் கணித ஆசிரியரான கும்பகோணத்தைச் சேர்ந்த ராஜமுத்தெழில், உதவி தலைமை ஆசிரியராகவும் பணியாற்றிவந்தார். மேலும் அவர், பட்டதாரி ஆசிரியர் சங்கத்திலும் பொறுப்பில் இருக்கிறார். வகுப்பறையில் கணித ஆசிரியர் ராஜமுத்தெழிலின் பாலியல் தொல்லைகளைப் பொறுக்க முடியாத சில மாணவிகள், தங்களுக்கு நடக்கும் கொடுமைகளைக் கண்ணீர்மல்க தங்கள் பெற்றோர்களிடம் விவரித்தனர்.

ராஜமுத்தெழில்
ராஜமுத்தெழில்

அதைக் கேட்டு ஆத்திரமடைந்த அந்த மாணவிகளின் பெற்றோர், சில தினங்களுக்கு முன்பு பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டனர். அதற்கு, சம்பந்தப்பட்ட ஆசிரியர் ராஜமுத்தெழில் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருப்பதாகக் கூறி பள்ளி நிர்வாகம் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஆனால் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர், போரூர் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் தைரியமாகப் புகாரளித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரீனா, போக்சோ சட்டப் பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவுசெய்து ஆசிரியர் ராஜமுத்தெழிலைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறார்.

பாலியல் டார்ச்சர்!

`என்ன நடந்தது?’ என்று மாணவிகளின் பெற்றோர்கள் சிலரிடம் பேசினோம். ``பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்கள் மீதான நம்பிக்கையில்தான் பெண் குழந்தைகளைப் படிக்க அனுப்புகிறோம். ஆனால், ஆசிரியர் ராஜமுத்தெழில், எங்கள் பிள்ளைகளுக்குச் சொல்ல முடியாத அளவுக்குப் பாலியல் டார்ச்சர் கொடுத்துவந்திருக்கிறார். இதெல்லாம் வீட்டுக்குத் தெரிந்தால் ஸ்கூலுக்குப் படிக்க அனுப்ப மாட்டார்கள் என்று பயந்தே பிள்ளைகளும் இந்த விஷயத்தை எங்களிடம் சொல்லாமல் மறைத்து வந்திருக்கிறார்கள். 9-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு கணக்குப் பாடம் எடுப்பதாகக் கூறி, இரட்டை அர்த்தத்தில் ஆசிரியர் ராஜமுத்தெழில் பேசி வந்திருக்கிறார். போர்டில் முக்கோணம் வரைந்த மாணவியிடம், `ஏன் ‘பாகங்களை’க் குறிப்பிடவில்லை?’ என்று கேட்டதோடு, ‘நீ இப்படித்தான் உள்ளாடை எதுவும் போடாமல் மேலாடை அணிவாயா?’ என்று திட்டி அந்த மாணவியைக் கூனிக் குறுகவைத்திருக்கிறார்.

இன்னொரு மாணவியின் உருவத்தை கரும்பலகையில் வரைந்த ராஜமுத்தெழில், அவள் பெயரை எழுதி, ‘இவளுக்கு மாப்பிள்ளை யார்?’ என்று சக மாணவிகளிடம் கேட்டிருக்கிறார். பிறகு, ‘இவளுக்கு நான்தான் மாப்பிள்ளை’ என்று கூறி அனைவர் முன்பும் சிரித்திருக்கிறார் ராஜமுத்தெழில். இதனால், மனமுடைந்த அந்த மாணவி, தலைமை ஆசிரியரிடம் புகாரளித்திருக்கிறார். அதற்கு பெண் உதவி தலைமை ஆசிரியர் ஒருவர், ராஜமுத்தெழிலுக்கு சப்போர்ட்டாகப் பேசியதோடு, `இதையெல்லாம் பெரிதுபடுத்த வேண்டாம்’ என்று கூறி, புகாரளித்த மாணவியிடமே மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கியிருக்கிறார்.

ஆசிரியர் ராஜமுத்தெழில் வகுப்பறையில் பாடம் நடத்தும்போது, 9, 10-ம் வகுப்பு மாணவிகளின் கையைப் பிடித்து இப்படித்தான் எழுத வேண்டும் என்று சொல்லிக்கொடுத்திருக்கிறார். அந்தச் சமயங்களில் மாணவிகளின் மீது சாய்ந்து, அவர்கள் உடலில் கைவைத்து பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டிருக்கிறார். இதை யெல்லாம் வெளியில் சொன்னால் அவமானம் எனக் கருதி பாதிக்கப்பட்ட மாணவிகள் சகித்துக்கொண்டிருந்திருக்கிறார்கள்.

மனைவியைப் பிரிந்தவர்!

வகுப்பில் லீடராக இருக்கும் மாணவி ஒருவரிடம், ‘ஏன் சக மாணவிகளின் நோட்புக்கை ஆய்வு செய்யவில்லை?’ என்று கேட்டிருக்கிறார். அதற்கு ‘சாரி சார்...’ என்று அந்த மாணவி பதிலளித்திருக்கிறார். அதற்கு அவர், ‘எங்க வீட்ல சாரியெல்லாம் கட்ட மாட்டா. வெறும் நைட்டி, பாவடையிலதான் இருப்பா’ என்று கொச்சையாகப் பேசியிருக்கிறார். அவமானத்தால் அழுத அந்த மாணவியை, தேற்றுவது போல் தனியாகத் தன்னுடைய அறைக்கு வரச் சொல்லியிருக்கிறார். இது பற்றி நாங்கள் பள்ளிக்குச் சென்று நியாயம் கேட்டபோதுதான் ஆசிரியர் ராஜமுத்தெழிலின் சுயரூபம் தெரியவந்தது. இவரிடம் படித்த முன்னாள் மாணவிகளும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அவருக்கு ஆதரவாகப் பள்ளியில் சில ஆசிரியர்கள் செயல்பட்டு, இந்த விவகாரங்களை மூடி மறைத்திருக்கிறார்கள்” என்றனர்.

உள்ளாடை அணிய மாட்டாயா... உனக்கு நான்தான் மாப்பிள்ளை...

இது குறித்து சென்னை போரூர் எஸ்.ஆர்.எம்.சி அனைத்து மகளிர் போலீஸாரிடம் விசாரித்தபோது, ``மாணவிகளின் பெற்றோர் தரப்பில் ஆசிரியர் ராஜமுத்தெழில் மீது புகாரளிக்கப்பட்டதும் உடனடியாக அவரைக் கைதுசெய்து சிறையில் அடைத்திருக்கிறோம். ராஜமுத்தெழில், ஏற்கெனவே திருமணமாகி முதல் மனைவியைப் பிரிந்து வாழ்ந்துவந்திருக்கிறார். சமீபத்தில் இரண்டாவது திருமணம் செய்திருக்கிறார். அவர் மீது புகாரளித்த மாணவிகளிடம் தனித்தனியாகவும் வாக்குமூலம் பெற்றிருக்கிறோம். தொடர்ந்து விசாரணை நடந்துவருகிறது” என்றனர்.

பள்ளித் தலைமை ஆசிரியரை செல்போனில் தொடர்புகொண்டபோது அவர் பதிலளிக்கவில்லை. அதே பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் சிலரிடம் பேசினோம். ``இந்தப் பள்ளியில் இரண்டு குரூப்புகளாக ஆசிரியர்கள் இருக்கிறார்கள். அதில் ஆசிரியர் ராஜமுத்தெழிலைப் பிடிக்காத டீம்தான் மாணவிகள் மூலம் அவரை இந்தப் பாலியல் விவகாரத்தில் சிக்க வைத்துவிட்டனர். அவர் மீதான குற்றச்சாட்டுக்களுக்கு எந்தவித ஆதாரமும் இல்லை” என்றனர்.

தொடரும் அத்துமீறல்களைப் பார்த்தால், ஆசிரியர்களுக்கும் ‘நல்லொழுக்கக் கல்வி’ தேவைப்படுவதை உணர முடிகிறது... கல்வித்துறை இதை உடனடியாகப் பரிசீலிக்க வேண்டும்!