
கல்விச் சுற்றுலா என்ற பெயரில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்குத் தெரியாமல், மாணவிகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ரமேஷ்.
மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில் கைதாகியிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமையாசிரியரான ரமேஷ்!
வேதியியல் ஆசிரியரான இவர், ப்ளஸ் டூ படிக்கும் மூன்று மாணவிகள், இரண்டு மாணவர்கள் உட்பட ஐந்து பேரை, கடந்த 7-ம் தேதி பள்ளி நிர்வாகத்துக்குத் தெரியாமல் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கு, மாணவி ஒருவரைத் தனது அறைக்கு அழைத்து பாலியல் தொந்தரவு கொடுத்த புகாரில்தான் ரமேஷ் கைதுசெய்யப்பட்டார்.

பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்க மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செல்வா நம்மிடம், “சபலபுத்திகொண்ட ஆசிரியர் ரமேஷ், ஒவ்வொரு வருடமுமே பள்ளியில் ப்ளஸ் டூ படிக்கும் ஏதாவது ஒரு மாணவியோடு நெருக்கமாகப் பழகுவதை வாடிக்கையாகக்கொண்டிருக்கிறார். வேதியியல் ஆசிரியர் என்பதால், வகுப்பறையைத் தாண்டி ஆய்வக வகுப்பு நேரத்தைப் பயன்படுத்தியும் சம்பந்தப்பட்ட மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுவந்திருக்கிறார்.
மேலும், ‘கடைசியாக நாம் அனைவரின் நினைவாக கல்விச் சுற்றுலா சென்று வரலாம்’ என்று கூறி சம்பந்தப்பட்ட மாணவியை அழைத்திருக்கிறார். ஒரு மாணவியுடன் மட்டும் சென்றால், சந்தேகம் வரும் என்பதால், மாணவியுடன் சேர்த்து மேலும் நான்கு பேரைத் தன்னுடைய சொந்த காரிலேயே அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே, அந்த மாணவிக்குப் பாலியல் தொந்தரவும் கொடுத்திருக்கிறார். அன்னவாசல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் சிலரும், தற்போது ஆசிரியர் ரமேஷ் மீது சில புகார்களைத் தெரிவித்துவருகின்றனர்.
ஆசிரியர் ரமேஷ் அன்னவாசல் பள்ளிக்கே பனிஷ்மென்ட்டில்தான் வந்திருக்கிறார். ஏற்கெனவே, அரிமளம் பள்ளியில் வேலை பார்த்தபோது, அங்கு இவரின் டார்ச்சரால் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்டு இறந்துபோயிருக்கிறார்’’ என்றார்.

மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரி மணிவண்ணனிடம் விளக்கம் கேட்டபோது, “கல்விச் சுற்றுலா என்ற பெயரில் மாவட்ட பள்ளிக் கல்வித்துறைக்குத் தெரியாமல், மாணவிகளைச் சுற்றுலாவுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் ரமேஷ். எனவே, அவரைப் பள்ளியிலிருந்து சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டிருக்கிறேன். பாலியல் தொல்லை புகார் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்” என்றார்.

ஆசிரியர் ரமேஷின் மனைவியான ஆசிரியை பிரியாவிடம் பேசினோம். “20 வருடங்களாக ஆசிரியராக இருக்கும் என் கணவர்மீது இது போன்ற குற்றச்சாட்டுகள் எதுவும் வந்ததில்லை. இந்த விவகாரத்தில், மாணவிகள் விருப்பப்பட்டுக் கேட்டதால்தான் என் கணவர் சுற்றுலாவுக்குக் கூட்டிச் சென்றிருக்கிறார். கல்வித்துறைக்குத் தெரியாமல் கூட்டிச் சென்றது தவறுதான். அதற்கு தண்டனையாக என் கணவரை சஸ்பெண்ட் செய்துவிட்டனர். மற்றபடி மாணவிக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகக் கூறுவதெல்லாம் பொய்யான குற்றச்சாட்டு. அரிமளத்தில் இறந்துபோன பள்ளி மாணவிக்கு ஏற்கெனவே இவர் கிளாஸ் எடுத்திருக்கிறார்... அவ்வளவுதான். மாணவி இறப்புக்கும், என் கணவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. என் கணவருக்கு வேண்டாத சில நபர்கள்தான் பிரச்னையைப் பெருதாக்கியிருக்கின்றனர்” என்றார்.