
கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது. உயிருக்கு பயந்து குழந்தைகளும் பெண்களும் இஷான் ஜாஃப்ரியின் பங்களாவில் அடைக்கலமாகினர்
சமூகச் செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் மீதான கைது நடவடிக்கை, பல விவாதங்களைக் கிளப்பியிருக்கிறது. மேலும், இருபது ஆண்டுகளுக்கு முன்பு குஜராத்தில் நிகழ்ந்த வன்முறைகள் குறித்த கோர நினைவுகளையும் அது கிளறிவிட்டிருக்கிறது!
2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் வன்முறை தொடர்பாக, அன்றைக்கு முதல்வராக இருந்த நரேந்திர மோடிக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை 2022, ஜூன் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அதற்கு மறுநாளே, அந்த வழக்கைத் தொடர்ந்த தீஸ்தா சீதல்வாட் குஜராத் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். தீஸ்தாவின் கைது நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள், மனித உரிமை ஆர்வலர்களிடமிருந்து கடும் கண்டனம் எழுந்திருக்கிறது.
குஜராத் முதல்வராக நரேந்திர மோடி இருந்த காலத்தில், அங்கு நிகழ்ந்த வன்முறைகளும் படுகொலைகளும் இந்திய வரலாற்றின் கறுப்பு அத்தியாயங்கள். அயோத்தியிலிருந்து கரசேவகர்களை ஏற்றிவந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு கோத்ரா ரயில் நிலையத்தில் பிப்ரவரி 27-ம் தேதி ஒரு கும்பல் தீவைத்தது. அதில், கரசேவகர்கள் 59 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். அந்தச் சம்பவம்தான், குஜராத் முழுவதும் முஸ்லிம்களைக் குறிவைத்து நிகழ்த்தப்பட்ட கொலைவெறித் தாக்குதல்களுக்கு வழிகோலியது.

கோத்ராவில் ரயில் எரிக்கப்பட்டதற்கு மறுநாள் (பிப்ரவரி 28), குல்பர்கா சொசைட்டி கொடூரத் தாக்குதலுக்கு ஆளானது. அகமதாபாத் நகரின் சமன்புராவில் அமைந்திருக்கும் குல்பர்கா சொசைட்டி, வசதிபடைத்த முஸ்லிம்கள் வாழும் பகுதி. 29 பங்களாக்களையும், 10 அடுக்குமாடிக் குடியிருப்புகளையும்கொண்ட அந்தப் பகுதியில்தான் தொழிற்சங்கத் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான இஷான் ஜாஃப்ரியின் இல்லமும் இருந்தது.
குல்பர்கா சொசைட்டி, பிப்ரவரி 28-ம் தேதி வன்முறையாளர்களால் சூழப்பட்டது. கல்வீச்சுத் தாக்குதல் நடைபெற்றது. உயிருக்கு பயந்து குழந்தைகளும் பெண்களும் இஷான் ஜாஃப்ரியின் பங்களாவில் அடைக்கலமாகினர். வெளியே வந்த இஷான் ஜாஃப்ரி, ‘என்னை எடுத்துக்கொள்ளுங்கள்... மற்றவர்களை எதுவும் செய்யாதீர்கள்’ என்று வன்முறைக் கும்பலிடம் கெஞ்சினார். அவர்மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தப்பட்டது. ‘என்னைக் கொலை செய்யுங்கள். ஆனால், எரித்துவிடாதீர்கள். இஸ்லாமிய வழக்கப்படி புதைக்கத்தான் வேண்டும்...’ என்று கெஞ்சினார். ஆனால், அந்தக் கும்பல் அவரை உயிருடன் எரித்தது. அவர் மட்டுமல்ல, குழந்தைகள், பெண்கள் உட்பட 69 பேர் எரித்துக் கொல்லப்பட்டனர். அதே போன்ற வன்முறை வெறியாட்டம் குஜராத் முழுவதும் அரங்கேறியது. வன்முறை நிகழ்ந்த பகுதிகளைப் பார்வையிட்ட அன்றைய பிரதமர் வாஜ்பாய், “உயிருடன் ஒருவர் எரிக்கப்படுவது என் கற்பனைக்கு அப்பாற்பட்டது. மனித குணங்களை நாம் மறந்துவிட்டோமா... நாம் மனிதர்களா... வெட்கமற்றவர்களாக மாறிவிட்டோமோ?” என்று வேதனைப்பட்டார்.

குஜராத் வன்முறைச் சம்பவத்தில் மோடிக்குத் தொடர்பு இருப்பதாக அகமதாபாத் குற்றவியல் நீதிமன்றத்தில் இஷான் ஜாஃப்ரியின் மனைவி ஜாகியா ஜாஃப்ரி வழக்கு தொடர்ந்தார். ஆனால், குஜராத் வன்முறையில் மோடிக்குப் பங்கு இல்லை என்று உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக்குழு அளித்த அறிக்கையைக் குற்றவியல் நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. அதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி மனு செய்தார். அதுவும் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த வழக்குகளில், மும்பையைச் சேர்ந்த சமூகச் செயற்பாட்டாளர் தீஸ்தா சீதல்வாட் தன்னையும் இணைத்துக்கொண்டிருந்தார். பிறகு, உச்ச நீதிமன்றத்தில் ஜாகியா ஜாஃப்ரி மனுத்தாக்கல் செய்தார். அதிலும் தீஸ்தா தன்னை இணைத்துக்கொண்டார். ஒட்டுமொத்தமாக 20 ஆண்டுகளாகத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட வழக்கில், ‘மோடி உட்பட 64 பேர் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த ஆதாரமும் இல்லை’ என்று கூறி, அந்த வழக்கை 2022, ஜூன் 24-ம் தேதி உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அப்போது, “சிலருக்கு எதிராகச் செயல்பட, இந்த வழக்கை தீஸ்தா சீதல்வாட் பயன்படுத்தியிருக்கிறார். ஜாகியா ஜாஃப்ரியின் உணர்வோடு அவர் விளையாடியிருக்கிறார். இந்தப் பின்னணி குறித்து விசாரிக்கப்பட வேண்டும்” என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதன் பிறகு, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அளித்த ஒரு பேட்டியில், “2002 குஜராத் கலவரங்கள் குறித்து ஆதாரமற்ற தகவல்களை தீஸ்தா சீதல்வாட் அளித்தார்” என்று குற்றம்சாட்டினார்.

அதையடுத்து, மும்பையில் தீஸ்தா சீதல்வாட் கைதுசெய்யப்பட்டார். தவறான தகவல்களை அளித்தல், போலியான ஆவணங்களைப் பயன்படுத்துதல், தவறான சாட்சியங்களை வழங்குதல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர்மீது வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றன. இதே வழக்கில், குஜராத் கலவரம் குறித்து நானாவதி கமிஷனிடம் வாக்குமூலம் அளித்த முன்னாள் டி.ஜி.பி ஸ்ரீகுமாரும் கைதுசெய்யப்பட்டிருக்கிறார். ‘முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல்களைத் தடுக்க வேண்டாம்… தாக்குதல் நடத்துபவர்கள் மீது மென்மையான போக்கைக் கடைப்பிடியுங்கள்’ என்று மோடி கூறியதாக வாக்குமூலம் அளித்த முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டும், இந்த வழக்கில் சேர்க்கப்பட்டிருக்கிறார். இதை ஒரு பழிவாங்கும் நடவடிக்கை என்று எதிர்க்கட்சிகளும் மனித உரிமை செயற்பாட்டாளர்களும் விமர்சிக்கிறார்கள்.
தீஸ்தா சீதல்வாட் தவறிழைத்தாரா... மோடி குற்றமற்றவரா என்ற கேள்விகள் ஒருபுறமிருக்க... ‘குஜராத் படுகொலைகளுக்கு உரிய நீதி வேண்டும்...’ என்ற முழக்கம் கடந்த இருபது ஆண்டுகளைக் கடந்து தற்போது உரக்க ஒலிக்க ஆரம்பித்திருக்கிறது.
நீதி கிடைக்குமா?