சமூகம்
Published:Updated:

ஒன் டைம் கொள்ளையடித்தால், லைஃப் டைம் செட்டிலாகிவிடலாம்! - சிலைகளைத் திருடி சிக்கிக்கொண்ட பூசாரி!

சிலைகள்
பிரீமியம் ஸ்டோரி
News
சிலைகள்

‘உங்க தொல்லை தாங்க முடியலை...’ என்று மறுபடியும் கண்களை மூடியவன், ‘வடக்கு திசையில் சிலை இருக்கு போய் எடுத்துக்கங்க’ என்றான்.

கோயில் சிலைகளைத் திருடுவது, பின்னர் அதே சிலைகளைக் குறி சொல்லிக் கண்டுபிடிப்பது என அப்பாவி மக்களை ஏமாற்றி, காசு பார்த்த பூசாரியை, கூட்டாளிகளோடு கொத்தாகத் தூக்கியிருக்கிறது பட்டுக்கோட்டை போலீஸ்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணியைச் சுற்றியிருக்கும் பிரபல கோயில்களில், சமீபத்தில் அடுத்தடுத்து சிலைத் திருட்டுச் சம்பவங்கள் நடந்தேறின. ஆனாலும் கொள்ளையர்கள் குறித்து போலீஸாருக்கு எந்தவொரு துப்பும் கிடைக்கவில்லை. சிலை காணாமல்போனதை அபசகுனமாகக் கருதிய மேற்குடிக்காடு கிராமத்தினர், சிலையைக் கண்டுபிடித்துத் தரச்சொல்லி எட்டிவயலைச் சேர்ந்த இளம் பூசாரி சரவணனை அணுகியிருக்கின்றனர்.

ஒன் டைம் கொள்ளையடித்தால், லைஃப் டைம் செட்டிலாகிவிடலாம்! - சிலைகளைத் திருடி சிக்கிக்கொண்ட பூசாரி!

இதையடுத்து சிலைகளைக் கண்டுபிடித்துத் தருவதற்கு ரூ.7 லட்சம் பேரம் பேசி, 2 லட்ச ரூபாயை அட்வான்ஸாக வாங்கியிருக்கிறார் சரவணன். பின்னர், ‘காளி கோயிலுக்கு எதிரேயுள்ள பெரிய ஏரிக்குள் சிலை கிடக்கிறது’ என்று குறி சொன்னதோடு, ஏரியில் இறங்கி சிலைகளையும் எடுத்துக் கொடுத்திருக்கிறார். தந்திரமாக, ‘காளியின் அருளால்தான் இந்தச் சிலையைக் கண்டுபிடித்திருக்கிறோம். இது குறித்து வெளியில் சொன்னால், உங்கள் குடும்பம் விருத்தி அடையாது’ எனச் சொல்லி கிராமத்தினர் வாயையும் அடைத்திருக்கிறார்.

அதன் பிறகு நடந்தவையெல்லாம் ‘பிளாக் ஹியூமர்’ ரகம். இது குறித்துப் பேசிய தனிப்படை போலீஸார், ‘‘பகலில் கோயிலில் பூஜை செய்து குறி சொல்லிவந்த பூசாரி சரவணன், இரவில் கூட்டாளிகளுடன் சேர்ந்து பழைமையான கோயில்களில் சிலைகளைக் கொள்ளையடித்து வந்திருக்கிறான். இந்தக் கொள்ளைக் கும்பலிடமிருந்து ஒரு வெள்ளி, ஐந்து வெண்கலம் என ஆறு சாமி சிலைகளைப் பறிமுதல் செய்திருக்கிறோம். கைதுசெய்யப்பட்டிருக்கும் ஒன்பது பேருமே 28 வயதுக்கு உட்பட்டவர்கள்’’ என்றவர்கள் சரவணனைக் கைதுசெய்தவிதம் பற்றியும் நம்மிடையே பகிர்ந்துகொண்டனர்.

ஒன் டைம் கொள்ளையடித்தால், லைஃப் டைம் செட்டிலாகிவிடலாம்! - சிலைகளைத் திருடி சிக்கிக்கொண்ட பூசாரி!

‘‘பூசாரி சரவணனின் டீம்தான் சிலைகளைக் திருடியிருக்கிறது என்பதை நாங்கள் ஏற்கெனவே கண்டுபிடித்துவிட்டோம். ஆனாலும் அவனிடமிருந்து உண்மையை வரவழைப்பதற்காக, சிலை திருட்டுப்போன ஊர்க்காரர்கள்போல மாறுவேடத்தில் சென்ற நாங்கள், எங்கள் கோயிலில் காணாமல்போன சாமி சிலையைக் கண்டுபிடித்துத் தரும்படி கேட்டோம். ‘நினைத்த நேரத்திலெல்லாம் காளிகிட்ட பேச முடியாது. மீறினால் காளியின் கோபத்துக்கு ஆளாகிவிடுவீர்கள்’ என முதலில் பயமுறுத்தினான். பின்னர், ‘பணம் எவ்வளவு கேட்டாலும் தருகிறோம்’ என்றதும் கற்பூரத்தை ஏற்றி, எங்களை முன்னால் உட்காரவைத்தான். பின்னர் கண்களை மூடியவாறே ரொம்ப நேரம் முணுமுணுத்தவன், ‘காளி தூங்குற நேரம் வந்துவிட்டது. போயிட்டு அப்புறம் வாங்க’ என்றான்.

‘சாமி நீங்க மலையேறிட்டா, திரும்ப எப்ப வருவீங்கன்னு தெரியாது. அதனால பிரேக் எடுத்துக்காம கண்டுபிடிங்க’ எனச் சிரிக்காமல் சொன்னோம். ‘உங்க தொல்லை தாங்க முடியலை...’ என்று மறுபடியும் கண்களை மூடியவன், ‘வடக்கு திசையில் சிலை இருக்கு போய் எடுத்துக்கங்க’ என்றான். ‘சாமி நீங்க காட்டுற திசையில் சிங்கப்பூர், மலேசியா எல்லாம் இருக்கு... எந்த ஊர்னு கரெக்டா சொல்லுங்க’ என்றோம் விடாப்பிடியாக.

சரவணன்
சரவணன்

கடுப்பானவன், எங்கள் கையில் எலுமிச்சைப்பழத்தைக் கொடுத்துவிட்டு, படகில் கடலுக்குள் அழைத்துச் சென்றான். பின்னர் ‘கடலுக்கு அடியில்தான் சிலை இருக்குனு காட்டுது. ஆனா, என்னால இறங்கி எடுக்க முடியாது’ என்றான். ‘சாமி, அப்படியெல்லாம் சொல்லாதீங்க... நாங்க உங்களை நம்பி வந்துட்டோம். உங்க உடம்புல கல்லைக்கட்டி கடலுக்குள் இறக்கிவிடுறோம். நீங்களே சிலைகளை எடுத்துட்டு வாங்க’ என்று நாங்கள் கிடுக்கிப்பிடி போட்டதும் அவனுக்குச் சந்தேகம் வந்துவிட்டது. சிலை கிடைக்காமல் நம்மை விடவே மாட்டார்கள் என்று உணர்ந்ததும், ‘உங்களுக்கு சிலை வேணுமா, ஆள் வேணுமா?’ என்றான். ‘ரெண்டுமே வேணும்’ என்றோம். பீதியான சரவணன், ‘ஆளைக் காட்ட மாட்டேங்குது, சிலையை மட்டும்தான் காட்டுது’ என்றவன், ‘காளி சிலையை எடுத்துக் கொடுத்த பிறகு என்னை விட்டுவிட வேண்டும்’ என டீல் பேசி கருவைக்காட்டில் புதைத்துவைத்திருந்த சிலைகளை எடுத்துக் கொடுத்தான். பிறகு, எங்கள் ஸ்டைலில் விசாரித்தோம். கூட்டாளிகளுடன் சேர்ந்து சிலைகளைக் கொள்ளையடித்ததை ஒப்புக்கொண்டான்’’ என்றனர்.

சந்திரசேகரன்
சந்திரசேகரன்

தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் நம்மிடம், ‘‘கைதான ஒன்பது பேரில் ஒருவனான, வினோத் கொலை வழக்கில் சிறையில் இருந்தவன். ‘ஒன் டைம் சாமி சிலைகளைக் கொள்ளையடித்துவிட்டால், லைஃப் டைம் செட்டிலாகிவிடலாம்’ என அவன் கொடுத்த ஐடியாவால்தான் பூசாரி சரவணன் இந்தக் காரியத்தில் இறங்கியிருக்கிறான். இதையடுத்து பூசாரி போர்வையில் கோயில்களை நோட்டமிட்டு ஸ்கெட்ச் போட்டுக் கொடுத்ததுடன், சிலைத் திருட்டுக்கும் தலைமை தாங்கியிருக்கிறான் சரவணன். ஆனால், கொள்ளையடித்த சாமி சிலைகள் பெரிய அளவில் விலை போகவில்லை. எனவே, சிலையை மறைத்துவைத்துவிட்டு, அதைக் கண்டுபிடித்துத் தருவதாக ஊர் மக்களை நம்பவைத்து பணம் பறித்திருக்கிறான். சிலைகளைக் கொள்ளையடிக்கச் செல்லும்போது போலீஸில் சிக்காமல் இருக்க, சம்பவ இடத்திலிருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலேயே தங்களது செல்போனை வைத்துவிட்டுச் சென்றிருக்கிறார்கள். கோயிலுக்குள் இருக்கும் சிசிடிவி காட்சிகள் பதிவாகக்கூடிய ஹார்டு டிஸ்கையும் உடைத்து எடுத்த பிறகே சிலைகளைக் கொள்ளையடித்திருக்கிறார்கள்’’ என்றார்.

ஜெயிலுக்குள் போயும் குறி சொல்வாரா இந்தத் திருட்டுப் பூசாரி?!