அரசியல்
அலசல்
Published:Updated:

பொங்கல் முறைகேடு நிறுவனங்களுக்கு டெண்டர்! - என்னவானது முதல்வரின் ‘பிளாக் லிஸ்ட்’ வாக்குறுதி?

ரேஷன் கடை
பிரீமியம் ஸ்டோரி
News
ரேஷன் கடை

இந்தப் புகார்களுக்குக் காரணமான அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்

உருகி வழிந்த வெல்லம், சூம்பிப்போன கரும்பு, வண்டுகள் மொய்த்த அரிசி, தரமற்ற புளி, கலப்படம் செய்யப்பட்ட மிளகு... என தி.மு.க ஆட்சிமீது முதல் கறையை வீசியது பொங்கல் பரிசுத்தொகுப்பில் நடந்த குளறுபடிகள்தான். பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் மீதுமே புகார்கள் எழ, ‘தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்’ என்று அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அவரது அறிவிப்பையே புறந்தள்ளிவிட்டு தடைசெய்யப்பட வேண்டிய நிறுவனங்களிடமிருந்தே, ரேஷன் கடைகளுக்கான பருப்பு, பாமாயிலை தமிழ்நாடு அரசு மீண்டும் கொள்முதல் செய்திருப்பது பெரும் சர்ச்சையாகியிருக்கிறது.

பொங்கல் முறைகேடு நிறுவனங்களுக்கு டெண்டர்! - என்னவானது முதல்வரின் ‘பிளாக் லிஸ்ட்’ வாக்குறுதி?

கறுப்புப் பட்டியலில் நிறுவனங்கள்!

கடந்த ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையையொட்டி, 21 வகையான பொருள்கள் அடங்கிய ‘பொங்கல் பரிசுத் தொகுப்பை’ வழங்கியது தி.மு.க அரசு. தமிழ்நாட்டின், 2.15 கோடி குடும்பங்களுக்கு ரூபாய் 1,269.88 கோடி செலவில் வழங்கப்பட்ட இந்தத் தொகுப்பில், சந்தை விலையைவிட கூடுதல் விலைக்குப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தரமற்ற பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அடுக்கடுக்காகப் புகார்கள் எழுந்தன. மேலும், ரேஷன் அட்டைதாரர்கள் பலருக்கு 21 பொருள்களும் முழுமையாகக் கிடைக்கவில்லை என்பதும் குற்றச்சாட்டானது.

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21-ம் தேதி, துறைரீதியிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின், “இந்தப் புகார்களுக்குக் காரணமான அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்” என்றும் அறிவித்தார். அதன்படி, தரமில்லாத 12 பொருள்களை வழங்கிய ஐந்து நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. எனினும், அதே நிறுவனங்களிடமிருந்து ரேஷன் கடைகளுக்குப் பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியிருக்கிறது.

பொங்கல் முறைகேடு நிறுவனங்களுக்கு டெண்டர்! - என்னவானது முதல்வரின் ‘பிளாக் லிஸ்ட்’ வாக்குறுதி?
பொங்கல் முறைகேடு நிறுவனங்களுக்கு டெண்டர்! - என்னவானது முதல்வரின் ‘பிளாக் லிஸ்ட்’ வாக்குறுதி?

அபராதம் மட்டும்தானா?

ஆர்.டி.ஐ தகவல்களின்படி, பொங்கல் பரிசுத்தொகுப்பில், தரமில்லாத 12 மளிகைப் பொருள்களை வழங்கியதற்காக, அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்துக்கு 60.62 லட்சம் ரூபாயும், இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட் நிறுவனத்துக்கு 85.62 லட்சம் ரூபாயும், கேந்திரிய பந்தர் (மத்திய அரசு நிறுவனம்) நிறுவனத்துக்கு 51.11 லட்சம் ரூபாயும் என மொத்தம் 1.97 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது. அதேபோல, தரமில்லாத வெல்லம், உப்பு வழங்கியதற்காக நேச்சுரல் ஃபுட் கமர்ஷியல்ஸ் நிறுவனத்துக்கு 56.84 லட்சம் ரூபாயும், மகாத்மா காந்தி சால்ட் மண்டிக்கு 77.54 லட்சம் ரூபாயும், அருணாச்சலா இம்பெக்ஸுக்கு 44.18 லட்சம் ரூபாய் என 1.78 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டிருக்கிறது.

மொத்தம் 3.75 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்ட இந்த நிறுவனங்களிடமிருந்து, ஜனவரி 21, 2022-க்குப் பின்னர், ரேஷன் கடைகளுக்குத் தேவையான பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டிருக்கின்றன. அதாவது, நேச்சுரல் ஃபுட் கமர்ஷியல்ஸ் நிறுவனத்திடமிருந்து மார்ச் 9-ம் தேதியிலும், இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட் நிறுவனத்திடமிருந்து மே 30-ம் தேதியிலும், அருணாச்சலா இம்பெக்ஸ் நிறுவனத்திடமிருந்து செப்டம்பர் 5-ம் தேதியிலும் பல மெட்ரிக் டன் பருப்பு கொள்முதல் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், இன்டகிரேட்டடு சர்வீஸ் பாயின்ட் நிறுவனத்திடமிருந்து மார்ச், ஜூன், ஆகஸ்ட் மாதங்களில் பல லட்சம் லிட்டர் பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டிருப்பது ஆர்.டி.ஐ மூலம் அம்பலமாகியிருக்கிறது.

சக்கரபாணி
சக்கரபாணி

இது தொடர்பாக ஆர்.டி.ஐ மூலம் தகவல்களைப் பெற்ற பொள்ளாச்சி யுவராஜ் ராமலிங்கம் பேசும்போது, “தரமில்லாத பொருள்கள் வழங்கப்பட்டதை முதல்வரே ஒப்புக்கொண்டு, அந்த நிறுவனங்களை கறுப்புப் பட்டியலில் சேர்க்க உத்தரவிட்டார். ஆனால், இதுவரை அவை கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அந்த நிறுவனங்களிடமிருந்தே மீண்டும் பருப்பு, பாமாயில் வாங்கவேண்டிய அவசியம் என்ன... இந்த விவகாரத்தில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, இது குறித்து விரிவான விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

அரசுக்கு அவமானம்!

இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல்துறை அமைச்சர் சக்கரபாணியிடம் பேசினோம். “பொங்கல் பரிசுத்தொகுப்பில் வழங்கப்பட்ட பொருள்களில் தரமில்லையென்று பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட புகார்கள் அடிப்படையில், நுகர்பொருள் வாணிபக் கழகத் தரக்கட்டுப்பாட்டு முதுநிலை மேலாளர், ஆய்வாளர், கிடங்கு பொறுப்பாளர் ஆகியோர் மீது சஸ்பென்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட அந்த நிறுவனங்கள் மீது ரூபாய் 7.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையே, இந்த நிறுவனங்கள் தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தனிநபர் ஒருவர் வழக்கு தொடுத்திருக்கிறார். அந்த வழக்கின் காரணமாக, கறுப்புப் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கை நிறைவடையவில்லை. தீர்ப்பு வெளியாகும்பட்சத்தில் எந்தப் பாரபட்சமும் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த ஆட்சியில் ரேஷன் பொருள்களைக் கொள்முதல் செய்ய ‘சிண்டிகேட்’ அமைத்து ஒருசில நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுத்துவந்தனர். ஆனால், தற்போது 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வகையில் டெண்டர் கொடுத்திருக்கிறோம். மேலும், சர்ச்சையில் சிக்கிய நிறுவனங்கள், டெண்டரில் பங்கேற்பதைத் தடுக்க விதிகள் இல்லை. விதிமுறைகளில் திருத்தம் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்” என்றார்.

யுவராஜ்
யுவராஜ்

மக்களின் உயிரோடு தொடர்புடைய உணவுக் கலப்பட முறைகேட்டை மற்ற முறைகேடுகளைப்போல சாதாரணமாகக் கடந்து போய்விட முடியாது. தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்களே மீண்டும் டெண்டர் பெறுவதையும், ரேஷன் பொருள்களை வழங்குவதையும் தடுக்க முடியவில்லை என்று சொல்வது இனிமேல் ரேஷன் கடைகளில் தரமற்ற உணவுப் பொருள்கள் மட்டுமே விநியோகம் செய்யப்படும் என்று அறிவிப்பதற்கு ஒப்பானது!