தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகேயுள்ள ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்தவர் முத்து. இவர் கூலி வேலை செய்துவந்தார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் செல்வதற்காக ஆழ்வார்திருநகரியிலிருந்து ஏரலுக்கு பைக்கில் சென்றிருக்கிறார். அப்போது திருநெல்வேலியிலிருந்து ஏரலுக்கு உரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்திருக்கிறது. அந்த லாரியை கருப்பசாமி என்பவர் ஓட்டிவந்திருக்கிறார். ஏரல் பஜார் பகுதியில் லாரி வந்தபோது லாரியிலிருந்த ஓர் உரமூட்டை கீழே விழுந்தது. இதனால் உரமூட்டை கட்டப்பட்டிருந்த கயிறு அவிழ்ந்து சாலையில் விழுந்தது.

அந்த நேரத்தில் லாரியின் இடப்புறம் வழியாக பைக்கில் முத்து வந்துகொண்டிருந்தார். அப்போது அந்தக் கயிறு அவரின் கழுத்தில் விழுந்திருக்கிறது. இதில் முத்து, பைக்கிலிருந்து சாலையில் தூக்கி எறியப்பட்டார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைகாக அனுப்பிவைத்தனர். இது குறித்து ஏரல் காவல் நிலைய போலீஸார் விசாரணை நடத்திவருகின்றனர்.
முதற்கட்ட விசாரணையில் போலீஸாரிடம் பேசிய லாரியின் ஓட்டுநரும், கிளீனரும், ``பக்கத்து ஊரிலிருக்கும் ஒரு தனியார் உரக்கடையில் உர மூட்டைகளை இறக்கிவைத்துவிட்டு, ஏரலில் உள்ள ஓர் உரக்கடையில் உர மூட்டைகளை இறக்கி வைப்பதற்காக லாரியில் வந்தோம். கயிற்றைச் சரியாகத்தான் கட்டினோம். எப்படியோ ஒரு மூட்டை சாலையில் கீழே விழுந்திருக்கிறது. உர மூட்டை கீழே விழுந்த அதிர்வில் கயிறு எதிர்பாராமல் சாலையில் தொங்கியது. அப்போது யதேச்சையாக வந்த முத்துவின் கழுத்தில் கயிற்றின் சுருக்குப்பகுதி மாட்டி, முத்து நிலைதடுமாறி கீழே விழுந்துவிட்டார்" எனத் தெரிவித்திருக்கின்றனர்.
``அவிழ்ந்து விழுந்த கயிறு, லாரி சென்ற வேகத்தில் முத்துவின் கழுத்தில் சுருக்காக மாட்டி அவர் இழுத்துச் சென்று கீழே விழுந்ததைப் பார்த்தோம்.

அவர் கழுத்தில் இறுகிய கயிற்றின் இறுக்கமான சுருக்கத்தில் கழுத்து இறுகி உயிரிழந்துவிடுவார் என்றுதான் நினைத்தோம். ஆனால், அதிர்ஷடவசமாக காயத்துடன் பிழைத்துக்கொண்டார். இது போன்ற மூட்டைகளை ஏற்றிவருபவர்கள் மிகுந்த கவனத்துடன் அவற்றை அடுக்கி முறையாகக் கட்டினால் மட்டுமே இது போன்ற விபத்துகளைத் தடுக்க முடியும்” என்றனர் விபத்தை நேரில் பார்த்தவர்கள். நெஞ்சைப் பதைபதைக்க வைக்கும் இந்தக் காட்சிகள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டுவருகின்றன.