
அந்த கறுப்பு அம்பாசிடர் காரில் பெருந்தலைவர் காமராஜர்...
வாழ்வின் ‘எதார்த்தங்களை’ உணர்த்த நமது அன்றாட உரையாடல்களில் பல உருவகச் சொற்களைப் பயன்படுத்து கிறோம். ‘ஒருவர் பயன்படுத்தும் உருவகங்களை வைத்தே அவரைப் புரிந்துகொள்ளலாம்’ என்கிறார் ஜான் கனோல்லி.
வாழ்க்கையைச் சித்திரிக்கும் உருவகங்கள் இலக்கியங்களிலும் பேச்சுவழக்கிலும் ஏராளம். அவற்றில் வாழ்க்கையை ஒரு பயணமாகச் சித்திரிக்கும் உருவகம்தான் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. அதுவே மிகப்பொருத்த மானது என்றும்கூடத் தோன்றுகிறது.

பயணங்களிலும் எத்தனையோ வகை. சிலருக்கு வரும்போதே வாழ்க்கைப் பயணம் குளிர்சாதன வசதியோடு முன்பதிவு செய்யப்பட்டிருக்கிறது; சிலருக்குப் பயணச் சீட்டே இல்லை. சிலரைச் சுமந்துசெல்லத் தோள்கள் காத்திருக்கின்றன; சிலரின் தோள்களுக்குச் சுமைகள் காத்திருக்கின்றன. அடுத்த திருப்பத்தில் என்ன இருக்கிறதென்றே தெரியாமல் இருப்பதுதான் வாழ்க்கைப் பயணத்தின் ஆகச்சிறந்த `த்ரில்.’
‘தமிழ் நெடுஞ்சாலை’ என்ற தலைப்பும்கூட ஓர் உருவகம்தான். பாதையும் பயணமுமாக மட்டுமன்றி, பயணியாகவும்கூடத் தோன்றும் இந்தத் தமிழ் நெடுஞ்சாலைதான் எனக்குத் தெரிந்த ஒரே சாலை. இதுதான் நான் கோலிக்குண்டு விளையாடிய தெரு, இதுதான் எனது தேசிய நெடுஞ்சாலை. இதுவே எனது வான்வழி, எனது உலக மேடை.
இந்தத் தமிழ் நெடுஞ்சாலைதான் என்னை உலகின் எல்லாக் கண்டங்களுக்கும் அழைத்துச் சென்றிருக்கிறது. இந்த ஒரே சாலையில் பயணித்துத்தான் இந்தியாவின் எழுநூற்றுச் சொச்ச மாவட்டங்களில் - 15, 20 மாவட்டங்கள் தவிர - எல்லாப் பகுதிகளிலும் கால் வைத்திருக்கிறேன். ஆனாலும், தமிழ் நெடுஞ்சாலை என்ற இந்தத் தொடரை இந்தப் பயணத்தின் எந்த நிறுத்தத்தில், எந்தத் திருப்பத்தில் தொடங்குவேன்!

பியூசி படித்துமுடித்த கையோடு இளம் அறிவியல் சேர்வதற்காகக் கிடைத்த வாய்ப்புகளைப் புறக்கணித்துவிட்டு, பெற்றோரிடமும் கேட்காமல் தன்னிச்சையாகத் தமிழ் இலக்கிய இளங்கலை வகுப்பில் சேர்ந்துவிட்டு பயந்துகொண்டே வீட்டுக்கு நடந்த அந்தப் புழுக்கம் நிறைந்த பிற்பகலிலா?
மதுரையில் ஒரு நாளிதழில் உதவி ஆசிரியராக இருந்த நான், ஒரு வெள்ளிக்கிழமை இரவில், டெலிபிரின்டரில் தட்டச்சாகி வந்த இந்தியக் குடிமைப்பணி தேர்ச்சிப் பட்டியலில் என் பெயரைப் பார்த்த மகிழ்ச்சியோடு அந்தத் தேர்வு முடிவுகளைப் பத்திரிகையில் அச்சடித்து, புரூஃப் பார்த்து, அச்சுக்கு அனுப்பிவிட்டு வீட்டுக்குச் சென்ற அந்த இதமான அதிகாலையிலா?
1984-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம். மதுரை ரயில் நிலையத்தில் வழியனுப்ப வந்த பெற்றோர், அண்ணன் தம்பி தங்கைகள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் பார்வையை விட்டு மறைந்த பின் என் வேர்களை விட்டு நான் விலகிச்செல்வதை ஓர் இனம்புரியாத குழப்பத்தோடு உள்வாங்கிய அந்த ரயில் பயணத்தின் துல்லிய நினைவிலிருந்தா?
எங்கே தொடங்கினால் என்ன... தமிழ் நெடுஞ்சாலை என்னை முன்னும் பின்னுமாய் அங்குமிங்குமாய் மீள்நினைவின் முதுகில் வைத்து அழைத்துச் செல்லத்தான் போகிறது.
‘எப்படி இந்தியில் பேசப் போகிறோம்’ என்பதிலிருந்து, ‘இட்லி கிடைக்குமா’ என்பது வரை சிறிதும் பெரிதுமாய் பல யோசனைகள். அறியாததைக் குறித்த அச்சம்தான் அச்சங்களுக்கெல்லாம் அச்சாரம். அப்படிப்பட்ட நிச்சயமற்ற மனநிலையில், எழும்பூர் ரயில் நிலையத்திலேயே ‘ஏழரை’ காத்திருக்கும் என்று எதிர்பார்க்கவில்லை.
அப்போது ஆந்திராவில் பெரிய வன்முறை, ரயில்கள்மீது கல்வீச்சு, ரயில்கள் ரத்து என்ற பத்திரிகைச் செய்திகள். ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் அமெரிக்காவுக்கு சிகிச்சைக்குச் சென்றபோது அவரது கட்சியில் நடந்த ‘உள்குத்து’, ஆந்திராவை உலுக்கிக் கொண்டிருந்தது.
‘‘பேசாம ஃபிளைட்ல போயிருங்க’’ என்று சென்னையில் உறவினர் ஒருவர் யோசனை கூறினார். கையில் இருந்த பணத்தை வைத்து டிக்கெட் வாங்கினோம். திட்டமிட்ட ரயில் பயணம், திட்டமிடாத எனது முதல் விமானப் பயணமாகிவிட்டது திடீரென்று. சூட்கேஸ், பெட்டிகளுடன் விமான நிலையத்துக்குச் சென்றேன்.
‘‘இவ்வளவு லக்கேஜ் கொண்டுபோக முடியாது. கூடுதலா பணம் கட்டணும்’’ என்றார்கள். ஏற்கெனவே விமான டிக்கெட் வாங்கி நொடித்துப்போயிருந்தேன் நான்.
‘முடிந்தால் பேட்மின்டன் மட்டை ஒன்றை எடுத்துவரவும்’ என்று மசூரி அகாடமியிலிருந்து வந்த கடிதக்குறிப்பை ஓர் அரசாங்க ஆணைபோல பாவித்து ஒரு பேட்மின்டன் மட்டையை வாங்கி என் பெட்டியில் திணித்திருந்தார் அண்ணன். பிரகாஷ் படுகோனேயின் மிடுக்கோடு விமான நிலையத்தில் நுழைந்த நான், பேட்மின்டன் மட்டையைத்தான் முதலில் தூக்கி எறிந்தேன். ஊறுகாய் பாட்டில், முறுக்கு பாக்கெட், எக்ஸ்ட்ரா செருப்பு, சில சட்டை துணிமணிகள், லுங்கி என்று பலவற்றை வீசி எறிந்து எடைக்குறைப்பு செய்தேன்.
பெட்டியில் இருந்த சங்க இலக்கியம் தொகுதி ஒன்று, தொகுதி இரண்டு… கையில் எடுத்துப் பார்த்தேன். கிட்டத்தட்ட இரண்டு கிலோ இருக்கும். பேச்சுப்போட்டியில் முதல்முதலாக நான் பரிசாகப் பெற்ற அந்த இரண்டு நூல்களையும் விட்டுச்செல்ல மனமில்லாமல் எடுத்துச் சென்றேன். அது ஒரு அனிச்சைச் செயல்தான். யோசித்தா சுவாசிக்கிறோம்?
இதோ, மாதங்களைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ஆண்டுகள் நடந்துவிட்டன. 2019, டிசம்பர் 16. சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் விழா மேடையில் அமர்ந்திருக்கிறேன். எனது ‘Journey of a Civilization: Indus to Vaigai’ நூல் வெளியீட்டு விழா. அது ஒரு திங்கட்கிழமை, விடுமுறை நாள் அல்ல. மாலை 5.30 மணிக்கு விழா. ஆனால், அரை மணி நேரம் முன்னதாகவே பார்வையாளர்கள் வந்து குவிந்த வண்ணம் இருந்தார்கள்.

விழா மேடையில் முக்கியமான ஆளுமைகள். திருக்குறளைப் பாடப் புத்தகங்களில் கட்டாயமாக்கிய நீதியரசர் மகாதேவன், இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் நீ.கோபாலசாமி, ‘Early Indians’ நூலாசிரியர் டோனி ஜோசப், உதயச்சந்திரன் ஐ.ஏ.எஸ், பேராசிரியர் கே.ராஜன், அகழ்வாய்வாளர் பி.ஜே.செரியன், ஒடிசா மாநில திறன் மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் சுப்ரத் பாக்சி…
அந்தப் பெரிய அரங்கம் கிட்டத்தட்ட நிரம்பியிருந்தது. அதைவிட முழுசாக நிரம்பியிருந்தது என் மனசு. வானம் வசப்பட்ட அந்த மாலையில் நூல் வெளியிடப்படுகிறது. சிறப்பு விருந்தினர்கள் ஒவ்வொருவராகப் பேசிக்கொண்டிருக்க, என்னையும் அறியாமல் எனது புத்தகத்தை மீண்டும் ஒரு முறை கையிலெடுத்துப் பார்க்கிறேன். அழகுணர்ச்சி யோடு வடிவமைக்கப்பட்ட அந்த ஆங்கிலப் புத்தகத்தின் எடை மூன்று கிலோவுக்கும் மேல் இருக்கும். சென்னை விமான நிலையத்தில் நான் விட்டுவிடாமல் எடுத்துச்சென்ற அந்தச் சங்கத் தமிழ் இலக்கியத் தொகுதிகள் நினைவுக்கு வந்தன. நனவோடையில் அந்த அழகிய முரணின் பழகிய முகம்.
கால இடைவெளிகளும் தூர இடைவெளிகளும் காணாமல் போனதைப்போல இருக்கிறது. அந்த ‘மாபெரும் சபைதனில்’ பார்வையாளர் வரிசையில் எனக்குத் தெரிந்த முக்கியமான ஆளுமைகள் சிலர்; தொல்லியல், வரலாறு, பண்பாடு போன்ற விஷயங்களில் அக்கறையும் ஆர்வமும் கொண்டவர்கள்; அறிமுகமற்ற பலர். ஒரு முறை நின்று நிதானித்து அரங்கை கவனிக்கிறேன். என் மனைவியையும், மகள்கள் இருவரையும் பார்க்கிறேன். எனக்குத் தெரியும், எனது ஆய்வுகளுக்காக நான் செலவிட்ட இரவுகளும் பகல்களும், விடுமுறை நாள்களும் பண்டிகை நாள்களும் அவர்களிடமிருந்து நான் திருடிக்கொண்ட நேரம்தான். ‘என்ன பேசப்போகிறோம்’ என்பதைவிட நான் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு உடைந்துவிடக் கூடாதென்று கவனமாக இருக்கிறேன். பேச்சின் இறுதியில் எப்போதோ எழுதிய கவிதை ஒன்றை வாசிக்கிறேன்,
‘தாயே தமிழே
தெருமுனைக்கு அப்பால்
ஒரு திசையறியாச் சிறுவனை நீ
இருதுருவம் பார்த்து வர
ஏன் பணித்தாய்?’
விட்டுவிடாமல் எடுத்துச்சென்ற அந்த இரண்டு தமிழ் நூல்கள்... அண்ணா நூலக விழா மேடைக்கு நான் எழுதி அச்சடித்து எடுத்துவந்த ஆங்கில நூல்... இந்த இரண்டு புள்ளிகளுக்கும் இடையிலான காலத்திலும் தூரத்திலும்தான் பயணிக்கப்போகிறது இந்தத் தமிழ் நெடுஞ்சாலை.
பல்வேறு பண்பாடுகளின் தனித்துவங்களை எல்லாம் உருக்கி ஒரு கலவையாக்கும் ‘உருக்குப்பானை’ அல்ல இந்தியப் பண்பாடு; உண்மையில் விழுந்ததெல்லாம் முளைக்கும் ‘மழைக்காடு’ அது என்ற புரிதல் எனக்குப் புலப்பட உதவிய பழங்குடி மக்களின் கிராமங்கள்; காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் நக்சலைட் பகுதிகளிலும், கோதுமையோடு ஊடுபயிராக வன்முறை விளையும் சில வட இந்தியப் பகுதிகளிலும் நடத்திக்காட்டிய அதிரடித் தேர்தல்கள்; நாடு சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளுக்குப் பின்பும் உத்தரப்பிரதேசத்தில் வாக்குச்சாவடிக்குச் சென்று வாக்களிக்கும் உரிமை மறுக்கப்பட்ட ஒரு பிரிவு மக்கள் வாக்குச்சாவடிக்கு முதன்முதலாகச் சென்று வாக்களித்த அந்த நாள்.
யாசர் அராபத்தின் மறைவுக்குப் பின் உலகப் பார்வையாளர்களின் கண்காணிப்பில் நடந்த பாலஸ்தீனத் தேர்தலுக்கு இந்தியாவின் சார்பில் பார்வையிடச்சென்று பயணித்த அந்தத் திகில் தினங்கள்; 300 கி.மீ வேகத்தில் வீசி 10,000 உயிர்களை பலிகொண்ட பெரும்புயல் காற்று (Supercyclone) சூழலில், பாதிக்கப்பட்ட மாவட்டம் ஒன்றின் கலெக்டராகப் பொறுப்பேற்ற களப்பணியின் அனுபவங்கள், அதன் தொடர் விளைவுகள்.
வேற்று மாநிலத்தைச் சேர்ந்தவன் என்றாலும் ஒரியா மொழி-பண்பாட்டுத் துறைக்குச் செயலரான பெருமித உணர்வு; கோனார்க் சூரியக்கோயில் சிற்பத்தில் ஒட்டகச்சிவிங்கி எப்படி வந்தது என்ற தேடுதலின் ஊடாக சிந்துவெளிப் பகுதியைக் கண்டறிந்தது; டெல்லியில் ஒரு நள்ளிரவில் கொற்கை-வஞ்சி-தொண்டி போன்ற சங்க இலக்கியப் பெயர்களை சிந்துவெளிப் பகுதியில் கண்டுபிடித்து துள்ளிக்குதித்த யுரேகா நொடிகள்; நார்வேயில் நனைந்த முதல் பனி மழை, ஆப்பிரிக்காவில் பரவசம் தந்த தொப்புள் கொடி உணர்வலை, கம்போடியாவில் பார்த்த காரைக்கால் அம்மையார் சிலை; இராவணன், கும்பகர்ணன், துரியோதனன், துச்சாதனன் போன்ற எதிர்மறைப் பெயர்கள் என்று நாம் நினைக்கும் பெயர்களோடு இந்தியாவின் எந்தப் பகுதியில் எத்தனை பேர் வாழ்கிறார்கள் என்று கணக்கெடுத்துக் கண்டறிந்த புரிதல் என்று இவற்றில் எதைத் தொடப்போகிறேன், எதை விடப்போகிறேன்.
குடிமைப்பணியாளர், இந்தியவியல் ஆய்வாளர் என்ற இரண்டு நிலைகளிலும் ஒருசேரப் பயணிக்கும் வாய்ப்பு என்னை வைகைக் கரையிலிருந்து மகாநதிக் கரைக்குக் கொண்டு சென்று அங்கிருந்து சிந்து வெளியின் வழியாக மீண்டும் வைகைக் கரையில் கொண்டுவந்து சேர்த்திருக்கிறது. தொடங்கிய இடமும், வந்தடைகிற இடமும் ஒன்றா அல்லது வெவ்வேறா? எதுவானாலும் இன்று புதிதாய் பிறந்ததைப் போலவே என்றும் தோன்றுகிறது.
இப்போதும் அந்த அண்ணா நூலக அரங்கில்தான் இருக்கிறேன். புகைப்படம் எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். நான் நனவோடையில் மீண்டும் பின்நோக்கிப் பயணிக்கிறேன்.
ஒரு நள்ளிரவு வேளையில் அந்த கறுப்பு அம்பாசிடர் காரில் பெருந்தலைவர் காமராஜர். அவரருகில் நான்.
- பயணிப்பேன்...
***
‘நான் ஒரு தமிழ் மாணவன், அதுவே எனது அடையாளம்' என்கிற ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்., திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள நத்தத்தில் பிறந்தவர். இந்திய ஆட்சிப் பணித் தேர்வை முதன்முறையாக தமிழிலேயே எழுதி முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்ற ஒரே தமிழ் இலக்கிய மாணவர். இந்தியவியல், திராவிடவியல் ஆய்வாளரான இவர், ‘சிந்துவெளி விட்ட இடமும் சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்றே' என்று தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். அண்மையில் வெளியான இவரது 'Journey of a Civilization: Indus to Vaigai' என்ற ஆங்கில ஆய்வு நூல், 30 ஆண்டுக்கால ஆய்வுகளின் பயன்.

ஒடிசா மாநில அரசில் பல முக்கியமான பொறுப்புகளை வகித்துள்ள பாலகிருஷ்ணன், இந்தியத் தேர்தல் ஆணையத்தில் துணைத் தேர்தல் ஆணையராக இரண்டு முறை பணியாற்றி 30 சட்டமன்றத் தேர்தல்களையும், இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களையும் நடத்தியவர். ‘அன்புள்ள அம்மா’, ‘சிறகுக்குள் வானம்’, ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’, ‘நாட்டுக்குறள்’, ‘பன்மாயக் கள்வன்’, ‘இரண்டாம் சுற்று’, ‘குன்றென நிமிர்ந்து நில்’, ‘கடவுள் ஆயினும் ஆக’ ஆகிய நூல்களையும் எழுதியுள்ளார். இந்திய ஆட்சிப் பணியில் 34 ஆண்டுகள் பணியாற்றி 2018-ல் ஓய்வுபெற்ற பாலகிருஷ்ணன், தற்போது ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார்.
- ஆர்.பாலகிருஷ்ணன், ஓவியம்: மருது