மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 11 - அழுகைச் சுவர்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

மனித வரலாறு என்ற தொடர் ஓட்டத்திற்கு ஒரு சின்னஞ்சிறு புள்ளி சாட்சியமாகும் என்றால் அது ஜெரிக்கோ தான்.

பிபிசி தொலைக்காட்சியில் உலகச் செய்திகள் பார்த்துக் கொண்டிருக்கிறேன். இஸ்ரேல்-பாலஸ்தீன போர் நிறுத்தம் பற்றிய செய்தி ஆறுதலாக இருக்கிறது.

2021 ஏப்ரல் இரண்டாவது வாரம் ஏற்பட்ட பதற்றம் மே தொடக்கத்தில் சண்டையாக வெடித்தது. கிழக்கு ஜெருசலேத்தில்கூட மோதல்கள். காசா கரைப் பகுதிகளில் தொடர்ந்து குண்டுவீச்சு, காசாவிலிருந்து இஸ்ரேல் பகுதிக்குள் ஏவப்பட்ட ராக்கெட்டுகள், பெத்லகேம் வீதிகளில் வன்முறை, பெரும் உயிரிழப்புகள்.

2005 ஜனவரி முதல் வாரம். பாலஸ்தீன அதிபர் தேர்தலை இந்தியாவின் சார்பில் பார்வையிடச் சென்ற நால்வர் குழுவில் நானும். 2004 நவம்பரில் பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராபத் மறைந்ததால் புதிய அதிபருக்கான தேர்தல். ‘அராபத்திற்குப் பின் யார்’ என்ற கேள்வி உலகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது.

ஐ.நா.வின் ஒருங்கிணைப்பில் வெவ்வேறு நாடுகள், அமைப்புகளைச் சேர்ந்த 350 பார்வையாளர்கள். அமெரிக்க குழுவின் தலைவராக முன்னாள் அதிபர் ஜிம்மி கார்ட்டர் வந்திருந்தார். அப்போது செனட்டராக இருந்த ஜோ பைடனும் (தற்போது அமெரிக்க அதிபர்) அக்குழுவில் இருந்தார்.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்

உலக வரைபடத்தைக் கையில் வைத்துக் கொண்டு சில முறை யோசித்திருக்கிறேன் இதுவரை சென்ற நாடுகள், செல்ல விரும்பும் நாடுகள் என்று. ஆனால் இஸ்ரேல்-பாலஸ்தீன பகுதிக்கு ஒரு நாள் செல்வேன் என்று நினைத்ததில்லை. பரப்பளவில் சிறியதுதான்; ஆனால் நீண்ட வரலாறு. இந்த வரலாற்றின் தடங்கள் எல்லாம் ஆறாத காயங்களும் ஆழமான வடுக்களும்.

பாலஸ்தீன தேசிய அதிகாரத்தின் (Palestinian National Authority) தலைமையகமான ரமல்லா நகரம். ஓர் உணவு விடுதியின் மங்கலான விளக்கு வெளிச்சத்தில் ஒரு மேஜையில் நாங்கள்; பின்னணியில் அரேபிய இசை. பக்கத்து மேஜையில் இருந்த ஒருவர் எழுந்து வந்து கேட்டார், “நீங்கள் இந்தியாதானே... உங்கள் நாட்டு சுனாமி பற்றி டி.வி.யில் பார்த்தோம். வருத்தமாக இருந்தது. எல்லாம் சரியாகிவிடும். நாங்கள் உங்களுக்காக பிரார்த்தனை செய்கிறோம்” என்றார். இந்தியாவை சுனாமி தாக்கிய 12-வது நாள். சுனாமி பற்றிய அந்த மனிதரின் அன்பான விசாரிப்பில் ரத்த பூமியின் பதற்றத்தின் அறிகுறி கொஞ்சம்கூடத் தென்படவில்லை.

உலகின் மிகப் பழைமையான நகரங்களில் ஒன்றான ஜெருசலேம் சென்றேன். மேற்கு ஜெருசலேம், கிழக்கு ஜெருசலேம் என்ற இரு பகுதிகளுக்கு இடையே தூரம் என்று எதுவுமில்லை. ஆனால், ‘துருவ இடைவெளி.’ 1967-ல் நிகழ்ந்த இஸ்ரேல் - அரபுப் போரின்போது கிழக்கு ஜெருசலேத்தை இஸ்ரேல் கைப்பற்றியது. ஜெருசலேத்தின் ஒவ்வொரு அங்குலத்திலும் வரலாற்றை வாசிக்க முடியும்.

பழைய ஜெருசலேத்தில் கோயில் மலை (Temple Mount) என்ற பகுதியில் ‘ஜெருசலேம் கோயில் வளாகம்’ அமைந்துள்ளது. இந்தப் பகுதி யூதம், இஸ்லாம், கிறிஸ்தவம் ஆகிய மூன்று மதத்தினராலும் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது.

இப்பகுதியில் கி.மு 957-ல் மன்னர் சாலமோன் முதலாம் கோயிலைக் கட்டினார். படையெடுப்புகளால் பலமுறை அழிந்து மீண்டும் மீண்டும் இக்கோயில் கட்டப்பட்டது. இறுதியில் புதிய பாபிலோனியப் பேரரசின் முற்றுகையின்போது இந்த முதல் கோயில் முற்றிலும் இடிக்கப்பட்டது.

கி.மு 538-ல் இரண்டாவது கோயில் கட்டப்பட்டது. இந்தக் கோயிலும் பல்வேறு தாக்குதல்களுக்கு உள்ளானது. இறுதியில் கி.பி 70-ல் அழிக்கப்பட்டது. கி.பி 363-ல் நேர்ந்த நிலநடுக்கம் இக்கோயிலின் மீட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது. ஏழாம் நூற்றாண்டில் நிகழ்ந்த படையெடுப்புக்குப் பின் ‘டோம் ஆப் ராக்’ என்ற புனிதத்தலமும், ‘அல் அக்சா’ மசூதியும் இங்கே கட்டப்பட்டன என்று வரலாறு கூறுகிறது.

ஜெருசலேத்தில் எங்கு பார்த்தாலும் துப்பாக்கி ஏந்திய காவலர்கள். இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட இடம், மரணித்த இடம், உயிர்த்தெழுந்த இடம் என்று அடையாளம் காட்டப்படும் இடங்களைப் பார்த்துவிட்டு ‘அழுகைச் சுவர்’ என்று அறியப்படும் மேற்குச் சுவரின் அருகே நிற்கிறேன். கிறிஸ்து பிறப்பதற்கு 200 ஆண்டுகளுக்கு முன்பே இந்தச் சுவர் கட்டப்பட்டதாம். 160 அடி நீளமும், 60 அடி உயரமும் கொண்ட இந்தச் சுவர் அப்படியொன்றும் அளவில் பெரியதல்ல. ஆனால், எத்தனை போர்களுக்கு சாட்சியம்! அல் அக்ஸா மசூதியை ஒட்டிய பெரிய சுவரின் ஒரு பகுதியாக இந்த அழுகைச் சுவர் இருக்கிறது.

உலகெங்கிலுமிருந்து வருகிற வெவ்வேறு மதத்தினருக்கும் இந்தச் சுவர் ஒரு புனித அடையாளம். மனத்தாங்கல்களை, வேண்டுதல்களை இந்தச் சுவரிடம் சொல்லி முறையிடுகிறார்கள். அதனால்தான் இது ‘அழுகைச்சுவர்.’ வேண்டுதல்களைப் பலரும் காகிதத்தில் எழுதி சுவரின் இடுக்குகளில் செருகிவிட்டுப் போவதைப் பார்த்தபோது நமது ஊர் கோரிக்கை/நேர்த்திக்கடன் மரங்கள் நினைவுக்கு வந்தன.

கிறிஸ்து பிறந்த பெத்லகேமிற்குச் சென்றேன். இந்நகரம் ஜெருசலேத்திலிருந்து 8 கி.மீ தூரத்தில், மேற்குக் கரைப் பகுதியில் (West bank) அமைந்துள்ளது. பெத்லகேம் என்ற பெயருக்கு அரபியில் புலால் வீடு (House of Meat) என்றும் எபிரேயத்தில் அப்ப வீடு (House of Bread) என்றும் பொருள்.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

முதல் உலகப் போரின்போது ஒட்டோமான் பேரரசிடமிருந்து பெத்லகேம் நகரை பிரிட்டன் கைப்பற்றியது. 1947-ல் ஐ.நா திட்டத்தின்கீழ் பெத்லகேம் ஒரு பன்னாட்டுத் தனிப்பகுதியாக மாறுவதாக இருந்தது. ஆனால், 1948-ம் ஆண்டு அரபு-இஸ்ரேல் போரின்போது ஜோர்டான் நாடு பெத்லகேமைத் தன்னுடன் இணைத்துக்கொண்டது. 1967-ம் ஆண்டு நிகழ்ந்த 6 நாள் போரில் இஸ்ரேல் பெத்லகேமைக் கைப்பற்றியது. 1995-ல் இருந்து பெத்லகேம் பாலஸ்தீன தேசிய அதிகாரத்தின் கீழ் (Palestinian National Authority) நிர்வகிக்கப்பட்டுவருகிறது.

பணிவுக்கதவின் (Door of the Humility) வழியே நுழைந்து, இயேசு பிறந்த இடத்தில் அமைந்த வழிபாட்டுத் தலத்திற்கு (Basilica of the Nativity) சென்றேன். அங்குள்ள ஒரு குகையில் பளிங்குத் தரையில் வெள்ளியாலான ஒரு விண்மீன் வடிவில் இயேசு கிறிஸ்து பிறந்த இடம். திரும்பிப் பார்த்தால் அங்கே ஒரு கேரள கன்னியாஸ்திரி. “சுகந்தன்னே சிஸ்டர்... நாட்டில் எவிடேயா” என்று விசாரித்தேன்.

மனித வரலாறு என்ற தொடர் ஓட்டத்திற்கு ஒரு சின்னஞ்சிறு புள்ளி சாட்சியமாகும் என்றால் அது ஜெரிக்கோ தான். ஜோர்டான் பள்ளத்தாக்கில் உள்ள ஜெரிக்கோவில் நிற்கிறேன். கிழக்கே ஜோர்டான் நதி, மேற்கே ஜெருசலேம். எத்தனையோ முறை ஜெரிக்கோவைப் பற்றிப் படித்திருக்கிறேன். ஆனால் இங்கு வந்து நிற்பேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை. கடல் மட்டத்திலிருந்து 846 அடி ஆழத்தில் வித்தியாசமான புவிச்சூழல். 11,000 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட ஒரு தொல் குடியிருப்பு. இந்தச் சிறு நகரை மனிதர்கள் ஒருபோதும் கைவிட்டுச் சென்றதில்லை. அதே இடத்தில் 20 காலகட்டங்களில் தொடர்ந்து குடியிருப்புகள் அமைக்கப்பட்டன என்பதை யோசித்துப் பாருங்கள். இது கற்பனைக் கதை அல்ல, தொல்லியல் தரவுகள் நிறுவும் உண்மை.

ஜெரிக்கோவில் நிற்கும்போது வரலாற்றின் அதிர்வலைகள் மெல்ல மேல் ஏறி எனக்குள் பரவுவதுபோல ‘ஜிவ்வென்று’ உணர்ந்தேன். ஜெரிக்கோவில் இருந்து Dead Sea எனப்படும் சாக்கடல் வெகு தூரமில்லை. கடல் நீரைவிட எட்டு மடங்கு அதிகம் உப்புக்கரிக்கும் அந்த உவர்நீரைத் தொட்டுப் பார்த்தேன்.

இஸ்ரேலில் இருந்து துருக்கிக்குப் பயணம். பாலஸ்தீனத் தேர்தலின் பதற்றத்திற்கு நடுவே ஜெருசலேத்தின் அழுகைச்சுவர், ரமல்லா, பெத்லகேம், ஜெரிக்கோ என்று வரிசையாகச் சென்றது மலைப்பாக இருந்தது. பார்த்ததுபோல் தோன்றவில்லை. படித்ததுபோல் இருந்தது.

துருக்கியின் பண்பாட்டுத் தலைநகரம் இஸ்தான்புல். இதன் பழைய பெயர் கான்ஸ்டான்டினோபிள். இப்பெயரை உச்சரிக்காமல் உலக வரலாற்றைப் பேசவே முடியாது. பாஸ்பரஸ் ஜலசந்தி இந்நகரை இரண்டாகப் பிரிக்கிறது. ஒருபுறம் ஆசியா, இன்னொரு புறம் ஐரோப்பா. கருங்கடலை மத்திய தரைக்கடலுடன் இணைக்கும் ஒரே பாதை இதுதான். பாஸ்பரஸ் ஜலசந்தியைக் கடந்து நடக்கிறேன். சுற்றுலாப் பயணிகள் அமைதியாக அமர்ந்து மீன் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘பாசிலிக்கா சிஸ்டன்’ என்று அழைக்கப்படும் பழங்கால சுரங்கக் குளியல் மண்டபங்களுக்குச் சென்று பார்த்தேன். தரைக்குக் கீழே அழகான குளியல் மண்டபங்கள். ‘ஜேம்ஸ்பாண்ட் படம் ஒன்று இங்கு படமாக்கப்பட்டது’ என்று சுற்றுலா வழிகாட்டி ஒருவர் பெருமையாகக் கூறிக்கொண்டிருந்தார்.

டாப்காப்பி (Topkapi) அரண்மனை அருங்காட்சியகம். இங்கே உள்ள ஒரு புனித அறையில் இறைத்தூதர் முகமது நபியின் வாழ்க்கையுடன் தொடர்புடைய நினைவுச் சின்னங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. ஒட்டோமான் ஆட்சியாளர்கள் மத்திய கிழக்கின் பெரும் பகுதிகளைக் கைப்பற்றியபோது எகிப்தில் உள்ள கெய்ரோவிலிருந்து இந்த நினைவுச் சின்னங்களை இஸ்தான்புல் கொண்டுவந்தார்கள். இஸ்தான்புல்லில் என்னைக் குடைந்து கொண்டிருந்த ஒரு கேள்வியை ஒருவரிடம் கேட்டேன். இங்கிருந்து ‘அதியமான்’ எவ்வளவு தூரம்? “1000 கிலோ மீட்டருக்கு மேலே இருக்கும்” என்றார்.

‘அதியமான்’ (Adyaman) என்பது துருக்கியின் தென்கிழக்குப் பகுதியில் உள்ள ஒரு நகரத்தின் பெயர். மக்கள்தொகை இரண்டு லட்சத்திற்கு மேல். மனசு இன்னொரு டிராக்கில் ஓடுகிறது. 2009-ம் ஆண்டு ஸ்வீடனிலிருந்து இயங்கும் ‘இன்டர்நேஷனல் ஐடியா’ என்ற சர்வதேச அமைப்பின் சார்பில் இந்தோனேஷியாவில் தேர்தல் அதிகாரிகள் பயிற்சிப் பட்டறையில் இந்திய அனுபவம் பற்றிப் பேச அழைப்பு வந்தது. அப்போதுதான் நாடாளுமன்ற பொதுத் தேர்தலை அறிவித்திருந்தோம். தலைக்கு மேல் வேலை இருந்தாலும், அந்த அழைப்பை ஏற்க வேண்டிய சூழல். எனக்கு அழைப்பு விடுத்தவர் பெயர் அதி அமான். ஜகர்த்தாவில் அதி அமானைச் சந்தித்தபோது அவரது பெயரின் காரணத்தைக் கேட்டேன். அவர் ஒரு இந்தோனேஷியர். “ஐரோப்பாவில் நான் சந்தித்த துருக்கி நாட்டு நண்பர் ஒருவர், இது ஒரு ஊரின் பெயர் என்று எனக்குச் சொல்லியிருக்கிறார்” என்றார். எனக்குள் சிரித்துக்கொண்டேன். அதியமான் - அது ஒரு தனிக்கதை.

அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்
அருங்காட்சியகம்

இதோ இஸ்தான்புல்-டெல்லி விமானம். பதற்ற பூமிக்குச் சென்று வந்த பரபரப்பு எதுவுமே இல்லை எனக்குள். ஏதோ இனம்புரியாத ஓர் அமைதியும் நிறைவும். சில ஆண்டுகளுக்கு முன்பு வியட்நாம் சென்றபோதும் இப்படித்தான் உணர்ந்தேன். எத்தனை பெரிய வல்லரசுடன் எவ்வளவு கொடுமையான போர். ஆனால், கோசிமின் நகரிலும், ஹனோய் நகரிலும் சாலையோரக் கடைகளில், குட்டை நாற்காலிகளில் அமர்ந்து அமைதியாக காபி அருந்திக்கொண்டிருந்தார்கள் வியட்நாம் மனிதர்கள். காயங்களை எல்லாம் மன்னித்து மறந்தது போன்ற ஒரு தியான நிலையை அத்தெருக்களில் உணர்ந்தேன்.

எனக்கென்னவோ தோன்றுகிறது, நாம்தான் பாண்டி பஜாரில் எப்போதும் பதற்றமாகவே நடந்துகொண்டிருக்கிறோம், காலில் வெந்நீர் கொட்டியதுபோல.

தொலைக்காட்சியில் உலகச் செய்திகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. ரமல்லா நகரில் என்னிடம் வந்து சுனாமியைப் பற்றி விசாரித்தவரை நினைத்துக்கொள்கிறேன். அவர் முகம் இன்னும் மங்கலாக நினைவில் இருக்கிறது.

கிராண்ட் பஜார்

இஸ்தான்புல் நகரத்தின் பெருஞ்சந்தை (Grand Bazar). இதுதான் உலகின் பழைமையான, மாபெரும் வணிக வளாகம். அழகிய சுவர்கள் வளாகம் முழுவதும் ஓவியக் கூரைகள், 61 அங்காந்த் தெருக்கள், 4,000 கடைகள். மொத்தம் 3,30,500 சதுர அடி பரப்பு. நாளொன்றுக்கு 4 லட்சம் வருகையாளர்கள். ஆண்டுதோறும் சுமார் 9 கோடி சுற்றுலாப் பயணிகள் இந்த ‘கிராண்ட் பஜாருக்கு’ வருகிறார்கள். 2014-ல் உலகில் அதிகமாக சுற்றுலாப் பயணிகளைக் கவரும் இடமாக இது அறிவிக்கப்பட்டது.

19-ம் நூற்றாண்டு வரையிலும்கூட ‘லாபம் மட்டும்’ என்றில்லாமல், போட்டி பொறாமை இல்லாத, நியாயமான ஒரே விலை என்ற அறம் சார்ந்த வணிகச் சூழல் இந்த மாபெரும் வளாகத்தின் தனித்துவமாக இருந்தது. ஒட்டோமான் சமூகம் மேற்கத்திய மயமான போது இங்கே புதிய வணிக மரபுகளும், கண்ணோட்டங்களும் தலைதூக்கின. படித்து, படத்தில் பார்த்து அளவிட முடியாத பிரமாண்டம் இந்த பஜார்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது