
இந்தச் சேவல் கோழிகளுக்கு அப்படி என்ன சிறப்பு..?
கோழிச்சண்டையை ஹரப்பாவில் தொடங்கி ஆடுகளத்தில் முடிக்கலாம். அல்லது, ஆடுகளத்தில் ஆரம்பித்து ஹரப்பாவுக்குப் போகலாம். இரண்டும் ஒன்றுதான். ‘ஆடுகளத்தில் ஆரம்பிக்கலாம்’ என்று இயக்குநர் வெற்றிமாறனை அலைபேசியில் அழைத்தேன்.
2011-ல் பல தேசிய விருதுகள் வாங்கிய படம். சேவல் சண்டைதான் இந்தப்படத்தின் பின்புலம். ‘வேறெந்த நிகழ்காலச் சமூகத்திலும் இந்தப் படம் சாத்தியமா, பிற மொழிகளில் இந்தப் படம் டப்பிங் செய்து வெளியிடப்பட்டுள்ளதா?’ என்று கேட்டேன். “இல்லை” என்றார். ஆடுகளத்தின் தனிமனித சமூக உளவியல் பற்றிப் பேசினோம். ஆடுகளம் தனக்கென்ற ஒரு கதியில், ஒரு கட்டமைப்பில் இயங்கும் ‘ஆண்களின் தனி உலகம்’ என்று புதிய கோணத்தில் அதை விளக்கினார்.
2012-ம் ஆண்டு, ஒடிசா அரசிடமிருந்து கல்வி விடுமுறை பெற்று ரோஜா முத்தையா நூலகத்தில் ஆராய்ச்சியில் இருந்தேன். கணிப்பொறித் திரையில் மொகஞ்சதாரோ முத்திரை எண் 338- கம்பீரமான திமில் காளையின் உருவப்பொறிப்பு, நகரம் என்பதைக் குறிக்கும் ஒரு குறியீடு, அருகே இரண்டு சேவல்கள். இந்த முத்திரையை ஐராவதம் மகாதேவன் ‘சேவல் நகரம்’ (Cock-City) என்று விளக்குகிறார். கோழியூரைக் குறிக்கும் சங்ககால சோழர் நாணயத்தையும் இதனுடன் ஒப்பிடுகிறார்.

4500 ஆண்டுகளுக்கு முந்தைய சிந்துவெளியில் ஒரு முக்கிய நகரின் பெயருக்குக் காரணம் என்றால் இந்தச் சேவல் கோழிகளுக்கு அப்படி என்ன சிறப்பு? அது ‘கோழியூர்’ என்றால் ஒரு கோழி உருவம் போதுமே, ஏன் இரண்டு கோழிகள்? அந்த ஊரில் கோழிகள் மிக அதிகம் என்றால் இரண்டுக்கும் மேல் பல கோழிகளின் உருவங்கள் ஏன் பொறிக்கப்படவில்லை?
அப்போதுதான் அந்தச் சேவற்கோழிகளைக் கவனித்தேன். அவற்றின் உடல்மொழியில் இருந்தது விடை. கழுத்து நிமிர்ந்து புடைத்திருக்கிறது, வால் இறகு மேல் நோக்கி விறைப்பாக இருக்கிறது, கால்கள் தரையில் பாவாமல் மேலெழுந்து உள்ளன. இவை குப்பையை நோண்டும் சாதாரணக் கோழிகள் அல்ல, சண்டைக் கோழிகள்.
பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே பாலமேடு ஜல்லிக்கட்டு பார்த்திருக்கிறேன்; ஆனால் இன்று வரையிலும் சேவல் சண்டை பந்தயத்தை நேரில் பார்த்ததில்லை. ஞான பீட விருது, பத்ம விபூஷண் விருது பெற்ற ஒடியா கவிஞர் சீதாகாந்த மகாபாத்ராவின் ‘குக்குட லடாய்’ (கோழிச்சண்டை) என்ற ஒடியா கவிதையை 28 ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் மொழிபெயர்த்தேன். 1994-ல் நர்மதா பதிப்பகம் வெளியிட்ட நூலில் (சீதாகாந்த மகாபாத்ரா கவிதைகள்: தமிழில்- அசோகமித்திரன், ரெங்கநாயகி மகாபாத்ரா, ரெ.பாலகிருஷ்ணன்) இந்தக் கோழிச்சண்டை கவிதை இடம்பெற்றுள்ளது.
‘...அந்திச் சிவப்பின்
அழகுக் கரையில்
குருதி ஓடுகிறது.
பகல் முடிகிறது.
ஊர் திரும்புகிறது
மௌனத்தில்
இன்னும்
ஜீவன் ஒடுங்காத
இறைச்சியை
ஏந்திக்கொண்டு’
இந்தக் கவிதையை எழுதிய மகாபாத்ரா 1970களில் மயூர்பன்ஜ் மாவட்ட கலெக்டர். 1998-ல் நானும் அதே பொறுப்பில். கிழக்கிந்தியாவில் கோழிச்சண்டைகளின் முக்கியமான ஆடுகளம் மயூர்பன்ஜ். உள்ளீடான கிராமப்பகுதியில் கூட்டம் கூட்டமாக ஆண்கள் போய்க்கொண்டிருந்தார்கள். ‘‘பக்கத்தில் எங்கேயோ குக்குட லடாய்’’ என்றார் டிரைவர். தடை செய்யப்பட்ட குருதி விளையாட்டு அது. அப்போது பழங்குடிப் பகுதிகளில் ஜார்கண்ட் இயக்கம் கொஞ்சம் தீவிரமாக இருந்த காலகட்டம். நிர்வாகத்தின் முன்னுரிமைகள் வேறு. காரை நிறுத்தவில்லை.
நனவோடையில் நடந்து பழகிய மனசின் பிரச்னையே இதுதான்… காட்டுக்கோழி போல கண்டபடி திரியும். மீண்டும் மொகஞ்சதா ரோவிற்குச் செல்வோம்.
மொகஞ்சதாரோ முத்திரை ‘கோழி நகரம்’ என்பதன் குறியீடு என்றால் அந்த மரபின் தொடர்ச்சியை வரலாற்றுக் காலத்தில் எங்கே தேடுவது? அதற்கான விடை தமிழ் மரபுகளில் உள்ளது என்பது வெறும் யூகமல்ல; தரவு சார்ந்த வாதம்.
கோப்பெருஞ் சோழனை ‘கோழியோன்’ என்று அழைக்கிறது புறநானூறு. சோழ நன்னாட்டுத் தலைநகரை `கோழி’ என்று குறிப்பிடுகிறார் பிசிராந்தையார். இதை இலக்கியம் என்று கடந்து செல்ல முடியாதபடி பிடித்து இழுக்கிறது சங்ககால சோழர் நாணயம். அது என்ன கோழி? கோழி என்ற பெயருக்கும் சோழனுக்கும் அப்படி என்ன சம்பந்தம்?
ஒரு சேவற்கோழி, யானையை எதிர்த்துச் சண்டையிட்ட இடத்தில் எழுப்பப்பட்ட நகரம்தான் கோழியூர். இதை நினைவுபடுத்தும் காட்சி அந்த நாணயத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் வயது தெரிகிறது, ஆனால் நினைவின் வயது?
யானையை எதிர்த்துப் போரிட்ட கோழி பற்றிச் சிலப்பதிகாரமும் குறிப்பிடுகிறது. இது கோழியூர் தொடர்பான மீள்நினைவு என்பதை உரையாசிரியர் அடியார்க்கு நல்லாரும் விளக்குகிறார்.

தற்கால திருச்சிராப்பள்ளி நகரில் உறையூர் என்ற ஒரு பகுதி இருப்பது நமக்கெல்லாம் தெரியும். இந்த உறையூர்தான் பண்டைய சோழர்களின் தலைநகரமான கோழியூர் என்று கருதப்படுகிறது. அங்கே உள்ள பஞ்சவர்ணேஸ்வரர் கோயிலில் ஒரு சுவரில் சோழ மன்னன் யானையில் ஏறிவரும்போது ஒரு வீரச்சேவல் அந்த யானையை எதிர்த்துச் சண்டையிடும் காட்சி புடைப்புச்சிற்பமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்தச் சிற்பம் பழங்காலத்துச் சிற்பம் அல்ல. ஆனால் இந்தக் காட்சி நமக்குப் புதியதும் அல்ல. காலம் காலமாக தமிழ்ச்சமூகத்தின் கூட்டு நினைவுக்குள் குடியேறிய தொன்மம். இது கோழியூரின் தொடர்ச்சி. ஆனால் கோழிச்சண்டை?
சிந்துவெளிப் பண்பாட்டு மக்கள் இறைச்சிக்காகக் கோழி வளர்த்தார்களோ இல்லையோ, பொழுதுபோக்குப் பந்தயங்களுக்காகக் கோழிகளை வளர்த்தார்கள் என்பது நிச்சயம் என்பது ஆய்வாளர்கள் கருத்து.
சங்க இலக்கியக் குறுந்தொகையில் ஒரு கவிதை. அதில் பழக்கி சண்டைக்கு விடுபவர்களும் இல்லாமல், சண்டையிடும் கோழிகளைப் பிரித்து விலக்கி விடுபவர்களும் இல்லாமல், குப்பை மேட்டில் கோழிகள் நிகழ்த்தும் தனிப்போர்க் காட்சி உவமையாகச் சொல்லப்படுகிறது. வீரச்சேவலின் போர்க்குணம் பற்றி அகநானூறு கூறுகிறது. புறப்பொருள் வெண்பாமாலையில் கோழிச்சண்டையின் `நேரடி ஒளிபரப்பு’ போன்ற துல்லியம். ஒரு காலத்தில் சண்டைக்கோழிகள் பற்றிய ‘கோழி நூல்’ இருந்ததாக ஐராவதம் மகாதேவன் குறிப்பிடுகிறார்.
சண்டை போடும் சேவல்களைக் கீழச்சேரி சேவல் என்றும் மேலச்சேரி சேவல் என்றும் அடையாளப்படுத்தும் மரபு நெடுங்காலமாக இருந்துவந்திருக்கிறது. தொல்காப்பியத்திற்கு உரை எழுதிய இளம்பூரணரும், நன்னூல் உரையாசிரியர் சங்கர நமச்சிவாயரும் இதை உறுதிசெய்கிறார்கள்.
கீழச்சேரி சேவல், மேலச்சேரி சேவல் என்ற பெயர்கள் எப்படி வந்தன? இதற்குக் கிழக்கு மேற்காக அமைந்திருந்த ஊர்களின் அமைப்புதான் காரணம். இதுதான் சிந்துவெளி நகரமைப்பின் முழுமுதல் அடையாளம். இதை ‘இருபால் பெயரிய உருகெழு மூதூர்’ என்று சங்க இலக்கியம் கூறுகிறது. சிந்துவெளி விட்ட இடத்தைச் சங்க இலக்கியம் தொட்ட இடம் இது. ‘சேரி’ என்ற அழகிய தமிழ்ச்சொல்லின் மீது நாம் சேறு பூசியது எல்லாம் பிறகுதான். செறிந்த சேரி, செம்மல் மூதூரின் சிறப்பியல்பு. கீழடியின் உறைகிணற்றைப் பார்க்கும்போது `உறை கிணற்று புறஞ்சேரி’ என்ற சங்க இலக்கியம் நினைவிற்கு வந்தது. நட்டதும் நாட்டியதும் நாடு, ஊர்ந்தது ஊர், சேர்ந்தது சேரி, நகர்ந்தது நகரம். இதுதான் தொடர்ந்து இயங்கும் பண்பாடுகளின் ஊடாகத் துலங்கும் சொல்லாக்கப் பரிணாமம்.
விழுப்புரம் மாவட்டத்தில் அரசலாபுரம் என்ற ஊர் இருக்கிறது. அங்கே கி.பி 4-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டுடன் கூடிய கோழி நடுகல் கிடைத்துள்ளது. கம்பீரமான ஒரு சேவல் உருவப் புடைப்புச்சிற்பம். முகையூர் என்ற ஊரின் மேற்சேரி சார்பில் சண்டையிட்டு மாய்ந்த வீரச்சேவல் அது. இதைப்போலவே காஞ்சிபுரம் மாவட்டம் இந்தளூரில் கீழச்சேரியைச் சேர்ந்த சண்டைக்கோழிக்கு நடுகல் எழுப்பப்பட்டுள்ளது. இந்தச் சேவலின் செல்லப்பெயர் ‘பொற்கொற்றி.’
தமிழ்நாட்டில் இப்போதும் ‘மேல்’, ‘கீழ்’ என்று இணை இணையாக அமைந்த 333 ஜோடி ஊர்ப்பெயர்கள் உள்ளன. மேலச்சேரி, கீழச்சேரியும் இதில் அடங்கும். லட்சத்தீவுகளில் வாழும் மலையாள மொழி பேசும் ஒரு குடியினரின் பெயரே மேலச்சேரி. கோழிச்சண்டை நடைபெறும் குடகுப் பகுதியில் மேக்கேரி என்ற ஓர் ஊர் இருக்கிறது. சேரி என்ற சொல்லே கன்னடத்தில் கேரி எனப்படுகிறது.
ஆந்திராவில் 12-ம் நூற்றாண்டில் நடந்த பல்நாட்டுப் போரின் (battle of Palnadu) வெற்றி தோல்வியை முடிவு செய்ய ஒரு கோழிச்சண்டை நடத்தப்பட்டதாகக் கூறப்படுகிறது. அது ஒரு தனிக்கதை. இப்போது கோழிச்சண்டை அதிகமாக நடைபெறுவது தென்னிந்தி யாவில்தான். அதிலும் ஆந்திராவில் மிக அதிகம். தமிழ்நாடு, தெலங்கானா, கர்நாடகாவின் குடகுப்பகுதி, ஒடிசா, ஜார்கண்ட், மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளில் கோழிச்சண்டைகள் மும்முரமாக நடைபெறுகின்றன. பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் இப்போதும் கோழிச்சண்டை கொடிகட்டிப் பறக்கிறது.
இந்தியாவில் விலங்கு வதை தடுப்புச் சட்டம் 1960-ன் படி கோழிச்சண்டை தடைசெய்யப்பட்டது. 2015-ம் ஆண்டு உச்ச நீதிமன்றமும் 2016-ல் ஆந்திர உயர் நீதிமன்றமும் இத்தடையை உறுதிசெய்தன. ஆனால், கத்தி, கூர் ஆயுதங்களைச் சேவல்களின் கால்களில் கட்டிவிடாமல், பந்தயம் கட்டிச் சூதாடாமல் கோழிச்சண்டை நடத்த 2018-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது. இரண்டு லட்சம் சேவல்கள் ஆடுகளத்தில் இருப்பதாகக் கூறப்படும் ஆந்திராவில், கோழிச்சண்டைப் பந்தயங்களில் 900 கோடி ரூபாய் வரை புழங்கியதாகப் பத்திரிகைச் செய்தி.
கோழிச்சண்டை தலைகள் உருட்டப்படும் ஒரு குருதிப்பகடை. போர்க்களங்கள் பிறந்த இடம் இந்த ஆடுகளம். சண்டைக்குப் போக ஆசை என்று குதிரைகளும் யானைகளும் எந்த மன்னரிடம் எப்போது கோரின? உறங்கும் ஊர்களின் தலைகளில் வெடிகுண்டுகள் விழுந்து சிதறிய இடங்களில் ஆயிரம் ஆயிரம் ஆடுகளங்கள்.
எனக்குள் இப்போது ஒரே திரையில் மூன்று பரிமாணங்களில் மூன்று காலகட்டத்தின் குரல்கள்.
சிந்துவெளி நகரம்போலத் தெரிகிறது. கோழி நகரமாம். திறந்தவெளி ஆடுகளத்தில் பெருங்கூட்டம். மேல் - மேற்கு; கீழ் - கிழக்கு பகுதிகளின் சண்டைக்கோழிகள் மோதுகின்றன. வேடிக்கை பார்ப்பவர்கள் கத்தித் தீர்க்கிறார்கள். ‘கோழி’, ‘சேவல்’ போன்ற சொற்கள் காதில் விழுவதுபோல இருக்கிறது. ஒரே இரைச்சலாக இருப்பதால் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பது தெளிவாகப் புரியவில்லை.
இந்தளூரிலும் அரசலாபுரத்திலும் மேலச்சேரிச் சேவல்களும் கீழச்சேரிச் சேவல்களும் மோதிக்கொள்கின்றன. அதே சேவல்கள். ஆடுகளம் கொஞ்சம் சிறிதாக இருக்கிறது. போரிட்டு மாய்ந்த சேவலின் உருவத்தைச் செதுக்குகிறார் ஒரு சிற்பி சிரத்தையோடு.
ஆடுகளம் திரைப்படத்தில் அந்த ரத்தினசாமியின் அம்மா, இறந்த கணவனின் போட்டோவை நோக்கிக் கைநீட்டி முறையிடுகிறார். “ஐயா, ஒங்க மகன பாத்தீகளா. இன்னிக்கும் தோத்துட்டுவந்து நிக்கிறானே.”
பள்ளிக்கூடங்களில் இன்னும் சொல்லிக் கொடுக்கிறோம், எழுதப்பட்டது மட்டுமே வரலாறு என்று. ஆடுகளம் அதை மறுக்கிறது.
*******

சீனா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் கோழிச்சண்டை தொன்மையானது. பாரசீகர்கள் மூலம் ஐரோப்பாவில் கால்பதித்து கிரேக்கத்தை அடைந்தது. சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பு பொனீசியர்கள், ஹீப்ரு மக்களிடையே பிரபலமாக இருந்தது. எகிப்தில் மோசஸின் காலத்தில் கோழிச்சண்டை முக்கியமான பொழுதுபோக்கு.
கிரேக்கப் பண்பாட்டுக் காலத்தில் பாரசீகர்களுடன் போருக்குச் செல்லும் முதல் நாள் இரவு வீரச்சேவல்களின் சண்டையை நடத்தி, தனது படைவீரர்களுக்கு எழுச்சியூட்டினார் தெமிஸ்டோகிள்ஸ். ஜூலியஸ் சீசர் ஒரு கோழிச்சண்டை ரசிகர்.
இடைக்கால இங்கிலாந்தில் மன்னர்களால் பெரிதும் ஆதரிக்கப்பட்ட விளையாட்டு இது. 1654-ல் ஆலிவர் க்ரோம்வெல் கோழிச்சண்டைக்குத் தடை விதித்தார். இருப்பினும் 1849-ல் விலங்குகள் வன்கொடுமை தடுப்புச் சட்டம் மூலம் விக்டோரியா மகாராணி காலத்தில்தான் பகிரங்கமாக கோழிச் சண்டைகள் முடிவுக்கு வந்தன. இப்போதும்கூட பிரிட்டனில் சட்டவிரோதமாக ஆங்காங்கே நடைபெறுவதாகத் தெரிகிறது.
அமெரிக்காவில் ஐரோப்பியர் வருகைக்கு முன்பே கோழிச்சண்டைகள் இருந்தன. ஜார்ஜ் வாஷிங்டன், தாமஸ் ஜெஃபர்ஸன், ஆண்ட்ரூ ஜாக்சன், ஆபிரகாம் லிங்கன் போன்ற அமெரிக்க அதிபர்கள் அதிதீவிரமான கோழிச்சண்டைப் பிரியர்களாம்.
- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது