மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 16 - சான்சிபார் தேர்தல்

சான்சிபார் தேர்தல்
பிரீமியம் ஸ்டோரி
News
சான்சிபார் தேர்தல்

கிழக்கு ஆப்பிரிக்காவின் ஆகச்சிறந்த சுற்றுலாத் தீவு...

ஆப்பிரிக்கா போனதே இல்லை என்ற குறை இன்றுடன் தீர்ந்தது. தன்சானியா - சான்சிபார் பொதுத் தேர்தலைப் பார்வையிடச் செல்கிறேன். மால்ட்டா நாட்டின் முன்னாள் அதிபர் கைடோ டி மார்கோ தலைமையிலான 16 பேர் கொண்ட காமென்வெல்த் பார்வையாளர் குழுவில் பிரிட்டன், கனடா, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், நைஜீரியா, செசெல்ஸ், சியாரா லியோன், பெலீஸ், லெசோத்தோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள். இந்தியாவிலிருந்து நான்.

2005 அக்டோபர் 20, மாலை டில்லியிலிருந்து புறப்பட்டு எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் இறங்கினேன். அங்கிருந்து தான்சானியாவின் வணிகத் தலைநகரான தார்-எஸ்-ஸலாம் செல்ல இன்னொரு விமானம். விடியற்காலை 6 மணியளவில் தன்சானியாவிலுள்ள கிளிமாஞ்சரோ விமானநிலையத்தில் ஒரு இடை நிறுத்தம். பயணிகள் பலர் இறங்குகிறார்கள். ஜன்னல் வழியே பார்த்தேன், வெளியே கிளிமாஞ்சரோ. விமானப் பணியாளரிடம் கீழே இறங்கி நிற்கலாமா என்று கேட்டேன். மகிழ்வுடன் இசைந்தார்.

தமிழ் நெடுஞ்சாலை - 16 - சான்சிபார் தேர்தல்

அப்பழுக்கற்ற நீலவசியம் போல் வானம். அட்டகாசமான கம்பீரப் பெருமலை. உறைபனி மூடிய உச்சத்தின் கீழ் இன்னும் உறங்கும் எரிமலை. கிளிமாஞ்சரோவைப் பார்க்க என்னைப்போல இறங்கியவர்களில் ஒருவர் தமிழர். மென்பொருள் நிறுவன `ஆன்சைட்’ பணியில். இரண்டு சீக்கியர்கள். தன்சானியாவிலேயே பிறந்துவளர்ந்தவர்கள் என விசிட்டிங்கார்டு கொடுத்தார்கள்.

1961 வரை ஜெர்மனியின் காலனி ஆதிக்கத்தின் கீழ் இருந்த நாடு தாங்கனீகா; சான்சிபார் 1963-இல் பிரிட்டிஷ் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை பெற்றது. 1964இல் ஆப்பிரிக்கப் பெரும் பான்மையினர் ஆயுதப்புரட்சி செய்து சான்சிபாரை மக்கள் குடியரசாக அறிவித்தனர். அப்போது தாங்கனீகாவும் சான்சிபாரும் ஒருங்கிணைந்து தன்சானியா என்று புதிய நாடானது. ஜூலியஸ் நைரரே இதன் முதல் அதிபர். இந்தக் கூட்டமைப்பில் சான்சிபாருக்குச் சில தன்னாட்சி உரிமைகள் உண்டு.

தார்-எஸ்-ஸலாமில் மோவன்பிக் நட்சத்திர விடுதியின் உணவுக்கூடம். உலகமெங்கும் கிடைக்கிற வாடிக்கை உணவுகளுடன் கூடுதலாக இட்லி, சாம்பார், சட்னி, வடை, பூரி. தன்சானியாவா தஞ்சாவூரா! உணவு மேஜையில் அமர்ந்தால் எதிரே இருந்தவர், ‘ஹலோ ஐ எம் முட்டு’ என்றார். அவரது மூதாதையர்கள் 150 ஆண்டுகளுக்கு முன்பு தென்னிந்தியாவிலிருந்து தென்-ஆப்பிரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தவர்கள். இப்போது ஐரோப்பாவில் இருக்கிறார். உங்களின் பெயர் பற்றித் தெரியுமா என்று கேட்டேன். கடலில் கிடைக்கும் Pearl தான் ‘முட்டு’ என்று கேள்விப்பட்டேன் என்றார். ஐ.நா நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கும் அவரிடம் ‘கொற்கை முத்து’ பற்றிக் கொஞ்சம் சொன்னதும்தான் நிம்மதியாக இருந்தது.

யாரோ பார்க்க வந்திருப்பதாக, ஹோட்டல் வரவேற்பிலிருந்து அழைப்பு. அந்த இரண்டு சீக்கியர்கள்தான் வந்திருந்தார்கள். இங்கே தங்கியிருப்பது எப்படித் தெரியும் என்று கேட்டேன். “இது எங்கள் ஊர் சார்” என்று சிரித்தார்கள். குருத்வாராவில் ஒரு விசேஷம் என்று விரும்பி அழைத்தார்கள். காரில் போகும் போது யாரிடமோ சகஜமாக ஸ்வாஹலியில் ஏதோ பேசிவிட்டு “மந்திரி, குளோஸ் பிரெண்டு” என்றார். இருவரும் தன்சானியாவில் நெடுஞ்சாலைகள் போடும், பாலங்கள் கட்டும் காண்டிராக்டர்கள். குருத்வாராவில் சீக்கிய இளைஞர்கள் வாள் சண்டை, கம்பு விளையாட்டு என்று தூள் கிளப்பினார்கள். குருத்வாராவுக்குச் சென்றால் லங்கரில் சாப்பிடாமல் வரமுடியுமா!

தன்சானியா அதிபர் தேர்தல், தேசிய சபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்களை தன்சானியா தேர்தல் ஆணையம் திடீரென்று தள்ளிவைத்துவிட்டது. ஆனால் சான்சிபார் அதிபர் தேர்தல், பிரதிநிதிகள் சபைத் தேர்தல், உள்ளாட்சித் தேர்தல்கள் திட்டமிட்டபடி நடைபெற்றன. அதனால் காமன்வெல்த் அணியைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் சான்சிபார் தேர்தலை மட்டுமே பார்வையிட நேர்ந்தது.

கறுப்பின மக்கள்
கறுப்பின மக்கள்

நீலம் போர்த்தி நெளியும் இந்தியப்பெருங்கடலின் அழகுப்பெருவெளியில் சான்சிபார். கிழக்கு ஆப்பிரிக்காவின் ஆகச்சிறந்த சுற்றுலாத் தீவு. கடலோரத்தில் ஒரு பிரெஞ்சு விடுதியில் தங்கியிருந்தோம்.

சான்சிபார் தேர்தல் ஒரு பெருந்திருவிழா. பேரணிகள், பிரசார முழக்கங்கள், ஆட்டம், பாட்டம், அமர்க்களம். ஒரு பிரசாரக் கூட்டத்தில் தலைப்பாகை அணிந்த சீக்கியர் ஒருவர் ஸ்வாகிலி மொழியில் வெளுத்துவாங்கினார். தாடிவைத்துத் தலைப்பாகை அணிந்ததால் அவர் தான்சானியர் இல்லையா? திசைகள் என்பவை நேற்று வந்தவை; தேடல்கள் மனிதனின் உடன்பிறந்தவை. நட்டுவைத்த இடத்தில் நட்டமாய் நிற்க மனிதன் என்ன மரமா? கால்களால் உலகை அளந்தவன்.

அக்டோபர் 30ஆம் தேதி சான்சிபாரில் தேர்தல் நடந்தது. இரண்டு இரண்டு பேர் கொண்ட எட்டுக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வொரு குழுவிற்கும் ஒரு மொழி பெயர்ப்பாளர்.

நான் உங்குஜா தீவில் பல வாக்குச்சாவடிகளைப் பார்வையிட்டேன். பெண்களும் ஆண்களும் பெருந்திரளாக வாக் களித்தனர். எனது சகபார்வை யாளர் செசில்ஸ் நாட்டைச் சேர்ந்த சிமோன் டி கொமர் மோண்ட் என்ற பெண்மணி. இவர் செசில்ஸ் அரசில் அமைச்சராகப் பொறுப்பு வகித்தவர். மொழி பெயர்ப்பாளரின் உதவியுடன் வாக்காளர்களுடன், வாக்குச்சாவடி ஊழியர்களிடம் பேசினோம். வாக்குப்பதிவு முடிந்ததும் அங்கேயே வாக்குகளை எண்ணுவதையும் பார்வை யிட்டோம். நெட்டையோ குட்டையோ, மக்களாட்சியை விடச் சிறந்த ஆட்சிமுறை இல்லை. வாக்குச்சீட்டைவிட வலுவான ஆயுதமும் வேறெதுவும் இல்லை.

எனது வெளிநாட்டுப் பயணங்களில் ஆற அமர பார்த்து, படித்து, உணர்ந்து உள்வாங்கிய சில பயணங்களில் இதுவும் ஒன்று. சான்சிபாரில் உங்குஜா, பெம்பா என்ற இரண்டு பெரிய தீவுகள். மற்றவை குட்டிக் குட்டித் தீவுகள். தலைநகரமான சான்சிபார் உங்குஜா தீவில் அமைந்துள்ளது.

சான்சிபார்
சான்சிபார்

ஏலக்காய், மிளகு, கிராம்பு, மஞ்சள், மிளகாய்த் தோட்டங்கள். எங்கு பார்த்தாலும் தென்னை, வாழை. கடைத்தெருவில் குவிந்துகிடக்கிறது செவ்வாழை, நேந்திரம் பழம், கொப்பரைத் தேங்காய், கஸ்ஸவா என்று அழைக்கப்படும் மரவள்ளிக் கிழங்கு. கேரளாவில் இருப்பதுபோலத் தோன்றியது. தினமும் பசுமைச்சாலைகளில் நீண்ட நடை, இன்னும் நினைவில் இருக்கிறது.

வாஸ்கோட காமா ஐரோப்பாவிலிருந்து 1498இல் கேரளாவிலுள்ள கோழிக் கோட்டிற்கு வரும்வழியில் கென்யாவிலுள்ள மொம்பாஸா, மாலிண்டி போன்ற இடங்களில் தங்கினார். மொம்பாஸாவிலிருந்து சான்சிபார் 240 கி.மீ தூரம்தான். அப்போதிருந்தே சான்சிபாரில் ஐரோப்பியர்களின் தாக்கம் தொடங்கியது.

சான்சிபார் நகரின் ‘ஸ்டோன் டவுன்’ பகுதி ஸ்வாஹிலி, அரேபிய, பாரசீக, இந்திய, ஐரோப்பியப் பண்பாடுகளின் கலவை. இது யுனெஸ்கோவின் `உலக மரபுத்தலம்.’ ஒரு காலகட்டத்தில் சான்சிபார் வணிகம் இந்தியர்களின் கட்டுப்பாட்டில் இருந்ததாம். ‘ஸ்டோன் டவுன்’ பகுதியிலுள்ள முக்கியமான கட்டடங்கள் எல்லாம் இந்தியர்கள் கட்டியவை; ஒரு சக்தி கோயிலும் இருக்கிறது என்றார் கடைக்காரர். குறுகலான சந்துகளில் புகுந்து நடந்தேன். 1906ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஆரிய சமாஜ கோயில் பெயர்ப்பலகை ஆங்கிலம், ஹிந்தி, குஜராத்தி மொழிகளில். நின்று கவனித்தேன்.

சான்சிபாரின் பெரும்பான்மை மக்கள் கொடுமையான வறுமையில் உழலும் போது பொருளாதாரம் முழுவதும் வெகுசிலரின் கைகளில் இருந்ததே சான்சிபாரின் கடந்த கால அரசியல் கொந்தளிப்புகளுக்கும் ஆயுதப் புரட்சிக்கும் காரணம் என்பதை புரிந்துகொள்ள முடிந்தது. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சான்சிபாரில் ஏலக்காய், கிராம்பு வணிகம் போலவே அடிமை வணிகம் கொடிகட்டிப் பறந்ததாக அறிந்தேன். மறுநாள் அது தொடர்பான இடங்களுக்குச் சென்று பார்த்தேன்.

சான்சிபாரில் இந்தியத் தூதரகத்தின் கான்சுலேட் ஜெனரல் பொறுப்பு வகித்தவர் என்.பாலசுப்ரமணியன் என்ற தமிழர். அவரது வீட்டிற்கு அழைத்திருந்தார். அருமையான தமிழ்ச்சாப்பாடு.

ஆர்.பாலகிருஷ்ணன்
ஆர்.பாலகிருஷ்ணன்

பாகிஸ்தானின் பிரதிநிதியான ஓய்வுபெற்ற நீதிபதி மஜிடா ரஜ்வியிடம் எனது சிந்துவெளி ஆராய்ச்சி பற்றிக் கூறினேன். பாகிஸ்தானில் உயர் நீதிமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் நீதிபதி. சிந்து மாகாணத்தில், கராச்சி உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர். ``பாகிஸ்தான் வாருங்கள் நானே உங்களை ஹரப்பா, மொகஞ்சதாரோ அழைத்துச் செல்கிறேன்” என்றார்.

தேர்தல் முடிந்ததும் தார்-எஸ்-ஸலாம் திரும்பினோம். பார்வையாளர்கள் தொடர் கூட்டம் நடந்தது. குழுவின் கூட்டறிக்கையில் நவம்பர் 6 ஆம் தேதி கையெழுத்திட்டோம். இணையத்தில் இந்த அறிக்கை இப்போதும் இருக்கிறது.

இந்தியத் தூதரை மரியாதை நிமித்தம் சந்தித்தேன். தார்-எஸ்-ஸலாமில் இந்தியர்கள் வாழும் பகுதிகளைப் பார்தேன். இந்தியா சாலை, தாகூர் சாலை, இந்திரா காந்தி சாலை, இந்தியப் பள்ளிக்கூடங்கள், இந்தியாவைச் சேர்ந்த சில வங்கிகளின் கிளைகள் என்று ஆங்காங்கே இந்திய முத்திரைகள்.

அந்தச் சீக்கியர்கள் இருவரும் சற்று தொலைவிலுள்ள கடலோரச் சுற்றுலாத் தலத்திற்கு என்னை அழைத்துச் சென்றார்கள். அது ஒரு கறுப்பு வரலாற்றின் காய வடு. கிழக்கு ஆப்பிரிக்காவின் பல்வேறு பகுதிகளிலு மிருந்து கொண்டு வரப்பட்ட மக்களை இங்கேதான் சங்கிலியில் கட்டிப்போட்டு வைப்பார்களாம். இங்கிருந்து சான்சிபார் கொண்டு சென்று சிறைவைத்திருந்து அடிமைச் சந்தையில் விற்பார்களாம்.

வாக்குச்சாவடி
வாக்குச்சாவடி

கிளம்புவதற்கு முன் ஆப்பிரிக்கா பற்றிய சில அருமை யான ஆங்கிலப் புத்தகங்களை வாங்கினேன். ஒரு கடையில் ஒட்டகச்சிவிங்கியின் அற்புதமான மரச்சிற்பம். ஒடிசாவில் கோனார்க் சூரியன் கோயிலில் துல்லியமாகச் செதுக்கப்பட்டுள்ள இரண்டு ஒட்டகச்சிவிங்கிகள் நினைவுக்கு வந்தன. இது எப்படி என்ற கேள்விக்கு ஆய்வாளர்கள் எழுதியிருந்த எந்த விளக்கத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் நான் எனது பாதையில் தேடி, கோனார்க்கின் சந்திரபாகா நதித்தடத்தின் வேர்பிடித்து அது நடந்த நாளங்களைக் கண்டறிந்தேன்.

ஒருவகையில் என் ‘கொற்கை-வஞ்சி-தொண்டி’யின் மீது எனக்கு நம்பிக்கை அளித்தது சந்திரபாகாவுக்கான அந்தத் தேடல்தானே.

“பத்திரமாக பேக்கிங் செய்து தருகிறேன்” என்றார் கடைக்காரப் பெண்மணி. இப்போதும் எங்கள் வீட்டில் வரவேற்பறையில் அந்த ஒட்டகச்சிவிங்கி.

விமானத்தில் வரும்போது யோசித்தேன். சகமனிதர் களைச் சங்கிலியில் கட்டிவைத்து அடிமைகளாய் விற்று, கண்காணாத தூரதேசத்திற்கு எப்படி அனுப்பிவைத்தார்கள்? கூட்டுமனநிலையில் கோளாறா?

நாட்டை நினைப்பாரோ? - எந்த
நாளினிப் போயதைக் காண்பதென்றே அன்னை
வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங் குரல்
கேட்டிருப்பாய் காற்றே!

என்று பிஜி தீவின் கரும்புத்தோட்டத் தமிழர்கள் பற்றிய பாரதியின் வரிகள் என் நினைவில்.

நம் நாட்டில் மட்டும் என்ன வாழுகிறது? தீண்டாமை வன்கொடுமை வக்கிரங்கள். மனித மலக்கழிவை மனிதன் அள்ளித் தலையில் சுமக்கும் கொடுமைக்கு என்ன பெயர்? பாதாளச் சாக்கடையில் கவசமற்ற மனிதன், செங்கல் சூளை கொத்தடிமைகள் போல பெண்களும் ஆண்களும். நமது இந்தியச் சமூகம் பார்க்காத, இன்னும் பார்த்து வருகிற கொடுமைகள் கொஞ்சமா நஞ்சமா?

‘மனிதன் ஒரு மகத்தான சல்லிப்பயல்’ என்று ஜி.நாகராஜன் சொன்னது நூற்றில் ஒரு வார்த்தை.

எனது விமானம் தரை இறங்கியது டில்லியில்.

- பயணிப்பேன்

அடிமை மக்கள்
அடிமை மக்கள்

அடிமை வணிகம்:

மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவிற்கும் பிரேசில் போன்ற நாடுகளுக்கும் அடிமைகளாக மனிதர்களை `ஏற்றுமதி’ செய்த `டிரான்ஸ் அட்லாண்டிக் அடிமை வணிகம்’ ஒரு வரலாற்றுத் துயரம். 16ஆம் நூற்றாண்டில் தொடங்கி 19ஆம் நூற்றாண்டு வரை இது தொடர்ந்தது. கப்பல் உரிமையாளர்கள் அடிமைகளை ‘கார்கோ’ அதாவது `சரக்கு’ என்றே அழைத்தார்கள். 18ஆம் நூற்றாண்டில் அமெரிக்கச் செய்தித்தாள்களில் அடிமைகள் விற்பனை பற்றிய விளம்பரங்கள் சர்வசாதாரணம்.

சான்சிபார் அடிமைச் சந்தையில் விற்கப்பட்ட மனிதர்கள் ஏலம், கிராம்புத் தோட்டங்களில் கட்டாய வேலைக்குப் பயன்படுத்தப்பட்டனர். மேலும், எகிப்து, பெர்சியா, அரேபியா, மொரீசியஸ் போன்ற நாடுகளுக்கு அடிமைகளாக அனுப்பப்பட்டனர்.

அமெரிக்காவில் 1778இல் தாமஸ் ஜெபர்சன் தலைமையில் வெர்ஜீனியா மாநிலம் தடை விதித்தது. ஆனால் அமெரிக்காவின் பலபகுதிகளில் இது 1859 வரை தொடர்ந்தது. 1807இல் அட்லாண்டிக் அடிமை வணிகத்திற்கு எதிராக பிரிட்டிஷ் பாராளுமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.

சான்சிபார் அடிமைச் சந்தை 1873ஆம் ஆண்டு ஜூன் 5ஆம் தேதி பிரிட்டிஷ் நிர்பந்தத்தால் மூடப்பட்டது. பிறகு அந்த இடத்தில் ஒரு தேவாலயம் கட்டப்பட்டது.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது