
அந்தக் கீழடிப் பயணம் ஒரு புதிய தேடலின் தொடக்கம் என்பதை நான் அப்போது உணரவில்லை. தொட்டுப் பார்த்ததும் தொற்றிக்கொண்டது அந்தப் பயணம்...
2016, ஜூன் 5. கீழடியில் நான். எவ்வளவு அழகான பானை!
15 அடி ஆழத்தில், காலத்தின் கருப்பையில் காயாத பனிக்குடம்போல்; இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாகத் தூங்கி இப்போதுதான் எழுந்த இலக்கியம்போல். தொட்டுப் பார்த்தேன். ஆசையாக இருந்தது, அருகே அமர்ந்து ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ள. அகழாய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணனிடம் சொன்னேன்.
ஓர் ஆங்கில நாளிதழில் (மே 30, 31) கீழடி பற்றித் தொடர் செய்திகள். ‘ஹரப்பா போன்ற அகழாய்வுத் தலம்’ என்ற தலைப்பு ஈர்த்தது. அமர்நாத் ராமகிருஷ்ணனைத் தொடர்புகொண்டேன். அடுத்த ஐந்து நாள்களில் ஒடிசாவிலிருந்து கிளம்பிவந்தேன். தஞ்சையிலிருந்து முனைவர் கு.ராஜவேலுவும் என்னுடன் கீழடியில் இணைந்தார்.

‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற எனது நூல் அப்போதுதான் (ஏப்ரல் 13, 2016) வெளியாகியிருந்தது. ‘சிந்துவெளியில் இருக்கிறது தமிழனின் வேர்கள்’ என்று இந்த நூல் பற்றி ஆனந்த விகடனில் (ஏப்ரல் 27) சங்கர சரவணனின் விரிவான கட்டுரை. நான் கீழடி விரைந்ததன் பின்னணி. அப்போது இரண்டாம் கட்ட அகழாய்வு நடைபெற்றுக்கொண்டிருந்தது.
அதுவரை கிடைத்திருந்த தடயங்களை அமர்நாத் ராமகிருஷ்ணன் விரிவாக விளக்கினார். கீழடிக்கு மேலாக, அதாவது மேற்காக அகழாய்வுக்கான வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டேன். கீழடி என்ற பெயர்தான் அதற்குத் தூண்டுதல். கீழடியில் உள்ள மேட்டை ‘பள்ளிச் சந்தைத் திடல்’ என்றும் ‘மேலப்புஞ்சை’ என்றும் உள்ளூர் மக்கள் குறிப்பிடுகிறார்கள். கீழக்குயில்குடி, மேலக்குயில்குடி, கீழராங்கியம், மேலராங்கியம், கீழநெட்டூர், மேலநெட்டூர், கீழப்பசலை, மேலப்பசலை என்று கீழ்-மேல் இணை இணையாக ஏராளமான ஊர்கள் வைகைநதிப் பகுதியில் உள்ளன.
அமர்நாத்தின் அணியில் நந்த கிஷோர் ஸ்வைன் என்ற ஒடிசாவைச் சேர்ந்த தொல்லியல் உதவிக்கண்காணிப்பாளருடன் ஒடியாவில் உரையாடிவிட்டு, அகழ்வாய்வு நடைபெறும் நிலத்தின் உடமையாளர்களான சோணை, திலீப் கான், கிருஷ்ணன், பீர்முகமது ஆகியோரையும் சந்தித்தேன். கைகூப்பி வணங்கி நன்றி சொன்னேன்.
கீழடியிலிருந்து கிளம்பி திண்டுக்கல் செல்ல காரில் அமர்ந்ததும் பானையுடன் எடுத்த அந்தப் புகைப்படத்தை என் மனைவிக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பினேன். ‘கீழடியில் கிளியோபட்ராவுடன்’ என்ற குறுந்தகவலுடன் ஒரு ‘ஸ்மைலி.’ காரணம் எல்லாம் ஒன்றுமில்லை. ‘சட்’டென்று தோன்றியது.
அந்தக் கீழடிப் பயணம் ஒரு புதிய தேடலின் தொடக்கம் என்பதை நான் அப்போது உணரவில்லை. தொட்டுப் பார்த்ததும் தொற்றிக்கொண்டது.
பல இந்திய நூலகங்களின் கதவுகளைத் தட்டினேன். சிம்லாவில் இந்திய உயராய்வு நிறுவன நூலகத்தில் மூன்று நாள்கள். க்ராமெர், ஹாலண்ட், மில்லர், சினாபொலி, அர்ச்சனா சோக்ஸி, ஜோன்ஸ், ஹேய்ஸ், க்ரஷ், ஆர்ட்டன் மற்றும் ஹீக்ஸ் ஆகியோரை வாசித்து, இணையப் பெருவெளியைச் சல்லடை போட்டுச் சலித்தேன்.
‘பண்டைய இந்தியாவின் பண்பியல்புகளை அறிந்துகொள்ள மட்பாண்டங்களைவிடவும் சிறந்த தடயங்கள் வேறு எதுவுமில்லை’ என்ற எச்.டி.சங்காலியாவின் கருத்தும், ‘தொல்பழங்கால மக்களின் புலப்பெயர்வுகளுக்கு மட்பாண்டங்கள் சாட்சியமாக நிற்கும்’ என்ற டைலானின் நம்பிக்கையும் எனக்கு உற்சாகமளித்தன.
வைத்திய நாத் சரஸ்வதியின் ‘மண்பாண்ட சமூகங்களும் இந்திய நாகரிகமும்’, என்.கே பெஹுரா எழுதிய ‘ஒடிசாவின் வேளாண் குயவர்கள்’ ஆகிய இரண்டு நூல்களும், ஸ்டீபன் ராபர்ட் இங்கிலீஸின் ‘படைப்பாளர்களும் பூசாரிகளும்: தென்னிந்தியாவின் ஒரு குயவர் சமூகம்’ என்ற முனைவர் பட்ட ஆய்வேடும் மிகவும் உதவின. கொங்குப்பகுதி மட்பாண்ட சமூகம் பற்றிய புரிதலுக்கு ப்ரெண்டா பெக்கின் ஆய்வுகள். ப்ரெண்டாவை 2019-ல் எடின்பரோவில் சந்தித்தபோதுகூட இதுபற்றிக் கலந்துரையாடியுள்ளேன்.
பானை செய்யும் சமூகங்களின் ஊடாக இந்திய நாகரிகத்தைப் புரிந்துகொள்ள முயலும் வைத்தியநாத் சரஸ்வதி, தென்னிந்திய மாநிலங்கள், ஒடிசா, மேற்கு வங்காளம், அசாம் போன்ற பகுதிகளில் வாழும் குயவர் சமுதாயங்களைக் கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை என்பது எனக்கு வியப்பையும் அதிர்ச்சியையும் அளித்தது.
இந்தியாவில் கறுப்பு சிவப்புப் பாண்டம் (BRW), சாம்பல் வண்ணம் தீட்டிய பாண்டம் (PGW) வடக்கு மெருகு கரும்பாண்டம் (NBPW) ஆகிய பாண்டங்களின் நிலப்பரவல், கால நிரல் வரிசை பற்றிய ஆகச்சிறந்த ஆய்வை அகினோரி உசேயுகி என்ற ஜப்பானிய ஆய்வாளர் செய்துள்ளார்.
மேல் கங்கை சமவெளிப் பகுதியில் சாம்பல் வண்ணம் தீட்டிய பாண்டம் (PGW) ஒரு தீவைப்போல குறிப்பிட்ட ஒரு நிலப்பகுதியில் மட்டும் நிலவியது. ஒரு கட்டத்தில் இது, நடு கங்கைச் சமவெளிக்குப் பரவி கறுப்பு-சிவப்புப் பாண்டப் பண்பாட்டைச் சந்திக்கிறது. இதன் பின்பே வடக்கு மெருகு கரும்பாண்டம் (NBPW) புதிதாக அறிமுகமாகிறது. தென்னிந்தியாவில் சாம்பல் வண்ணம் தீட்டிய பாண்டம் ஒருபோதும் வேரூன்றியது இல்லை. இதைப்போலவே வடக்கே மகதப்பேரரசின் அரசியல் எழுச்சியும், பௌத்த, சமண மதங்களின் தோற்றமும் கறுப்பு சிவப்புப் பாண்டங்களின் ஆதிக்கப்பகுதிகளில்தான் நிகழ்ந்தன என்பதும் யோசிக்கவைக்கிறது. இப்பகுதிகளிலும் சாம்பல் வண்ணம் தீட்டிய பாண்டங்கள் ஒருபோதும் தலை தூக்கவே இல்லை.
இது வெறும் பானைகளின் பயணம் போலத் தோன்றலாம். ஆனால் ஹரப்பாவின் நலிவிற்குப் பின்னர் வட இந்தியாவில் இருவேறு பண்பாடுகள் சந்தித்த சூழல்களின் ஆகச்சிறந்த தடயம் இது.
யஜூர் வேத ‘அக்னி சயனா’ சடங்கும்; சதபாத பிராமணத்தின் `மகாவீரா கலயமும்’ (Mahavira Vessel) கறுப்பு சிவப்புப் பாண்டப் பண்பாட்டின் தாக்கம் என்பது கன்வர்ஸ், ஸ்டால் போன்ற ஆய்வாளர்கள் கருத்து. இந்தப் பானையை சதபாத பிராமணம் ‘அசுரர்களின் கைவரிசை’ என்று சொல்வதில் இருந்தே இதைப் புரிந்துகொள்ளலாம். இன்னும் எழுதப்படாத இந்திய மக்களின் வரலாற்றுக்கான தடயம் இது. பாடநூல்களில் பார்க்க முடியாது.
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் குயவர் சமூகத்தினரைச் சந்தித்துப் பேசியிருக்கிறேன். ‘வாழ்ந்து கெட்டோம்’ என்பது மாதிரியான ஒரு மனத்தாங்கல் இச்சமூகத்தின் கூட்டுநினைவில் குடியேறி இருக்கிறது.
சிந்துவெளி ஏற்றுமதி வணிகத்தின் முதுகெலும்பு போன்றவர்கள் கைவினைக்கலைஞர்கள். தலைமைப் பூசாரியையும் ( எண். 347) தலைமைக் கைவினைஞனையும் (எண்.358) குறிக்கும் சிந்துவெளிக் குறியீடுகளை ஐராவதம் மகாதேவன் விளக்குகிறார். இதை விட்டால், சங்க இலக்கியம் மட்டும்தான் பானை செய்யும் குயவரை ‘முதுவாய் குயவ’, ‘கலம் செய் கோ’, ‘வேட்கோ’ என்று போற்றுகிறது. நகர வழிபாட்டு முறையில் குயவருக்குள்ள பூசாரிப் பொறுப்பையும் சங்க இலக்கியம்தான் ஆவணப்படுத்துகிறது. செட்டிநாட்டுப் பகுதியிலுள்ள கோயில்கள் பலவற்றில் குயவர் மரபினரே இன்றும்கூட பூசாரிகள். இது நகரத்தார் எனப்படும் வணிக மரபினர் வாழும் பகுதி.
சிந்துவெளிக்குப் பின், ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்!’ பண்டைய இந்தியாவின் குப்தர் காலம் என்ற ‘பொற்காலம்’ பூத்தபோதுதான் சமூகப்படிநிலையில் கைவினைக்கலைஞர்கள் கடைநிலைக்குத் தள்ளப்பட்டார்கள் என்பது ஆய்வாளர்கள் கருத்து. யாருடைய பொற்காலம்!
சங்க இலக்கியப் பெண் புலவர் வெண்ணிக்குயத்தியும், பக்தி இயக்க காலத்துத் திருநீலகண்டக் குயவனாரும் எனது மனத்திரையில் வந்துபோகிறார்கள். குலால புராணம் மீள்நினைவாகக் குறிப்பிடும் சாலிவாகனன் மரபும், திருநீலகண்டருக்கும் வேதச் சக்ரவர்த்திக்கும் நடந்ததாகக் கூறப்படும் வாக்குவாதங்களும் நினைவுக்கு வருகின்றன. பானைகளின் வயதைக் கரிம ஆய்வுகள் நிறுவும். ஆனால் கடந்துவந்த காயக்குறியீடுகளின் வயதைக் காலம்தான் சொல்ல வேண்டும்.
செப்டம்பர் 20, 2018. சென்னையில் ‘பானைத் தடம்’ (Pot Route) பற்றிய எனது ஆங்கில உரை. ஓர் ஆய்வாளன் கவிஞனாக இருப்பதில் ஒரு சிக்கல் இருக்கிறது. எத்தனை தரவுகளை அடுக்கினாலும் இன்னும் சொல்லுவதற்கு ஏதோ மிச்சம் இருப்பதுபோல தோன்றும்.
‘பானைத்தடம்’ சொற்பொழிவிற்கு இன்னும் இரண்டு நாள்களே. புவனேஸ்வரத்தில் அலுவலகம் செல்லும் வழியில் அலைபேசியில் ஒரு பாட்டு எழுதினேன். அதை இசையமைப்பாளர் தாஜ் நூருக்கு வாட்ஸ்அப்பில் அனுப்பி, வேல்முருகன் பாடி, காட்சிப்படுத்தி, படக்கோவை செய்து 36 மணி நேரத்தில் ‘கலம் செய் கோவே’ காணொளியாக. உரை தொடங்கும் முன்பு அந்தக் கற்றோர் அவையை எழுந்து நிற்கும்படி வேண்டி அந்தப் பாடலைத் திரையிட்டோம். விளக்குகள் அணைக்கப்பட்டு மங்கிய ஒளியில், முதுமக்கள் தாழிக்குள் மூச்சு விடும் தீ…
‘ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் - எங்கள்
வரலாற்றின் பாதைக்கு ஒரு பானை பதம்’ என்ற பல்லவியுடன்...
சங்க இலக்கிய காலத்திற்குப் பின் தமிழ்ச்சமூகம் தனது கைவினைத் தொன்மங்களை மீண்டும் எழுந்து நின்று வணங்குவதன் காட்சிப்படிமம்போல் நெகிழ்ந்து கரைந்தன அந்தச் சில நிமிடங்கள். அந்தக் கீழடிப்பானையின் தரிசனத்திற்கு வேறென்ன கைம்மாறு செய்துவிட முடியும் என்னால்?
2018 இறுதியில் கோவையில் எனது உரை. அரங்கில் ஓவியர் ராஜா ராமசாமி என்னைச் சந்தித்து ஒரு பரிசளித்தார். அழகிய சிறுபானை. அதில் நான்மாடக்கூடல் (மதுரை) மீன், அம்பு, சிந்துவெளிக் குறியீடுகள், பொருந்தல் அகழாய்வுக் கீறல், நான் பிறந்த ஊரான நத்தம், தந்தை ரெங்கராஜூ, அவரின் தந்தை அழகர்சாமி, என் தாய் தனலெட்சுமி, எனது பெயர், பரிசளித்த ஓவியர் பெயர் இவை அனைத்தும் அழகிய தமிழ் பிராமி எழுத்தில்.
2019-ல் ஈரோட்டு புத்தகக் கண்காட்சியில் பேசச் சென்ற போது அருகிலுள்ள எழுமாத்தூரில் கார்த்திக் வீட்டிற்கு என் மனைவியுடன் சென்றேன். அவரின் தந்தை, ‘முதுவாய் குயவர்’ வெங்கடாசலத்தையும் சந்தித்தேன். மொகஞ்சதாரோவின் பூசாரி மன்னன் சுடுமண் சிற்பத்தை எனக்குப் பரிசளித்தார்கள். அதில் ஜான் மார்ஷல், சுனிதி குமார் சட்டர்ஜி, ஹீராஸ், அஸ்கோ பர்போலா, ஐராவதம் மகாதேவன் ஆகியோர் பெயருடன் எனது பெயரும் தமிழ் பிராமியில். ரோஜா முத்தையா நூலகத்திற்கு மதுரையிலிருந்து குயவர் ஒருவர் அன்புடன் அனுப்பிய கூரியர். மொகஞ்சதாரோ சுடுமண் சிற்பம். அதில் தமிழ் பிராமியில் எனது பெயர். வேறென்ன விருதுகள் வேண்டும் எனக்கு?
2019 டிசம்பரில் வெளியான எனது ஆங்கில நூலில் ‘பானைத் தடம்’ ஒரு முக்கியத் தரவு. இதற்காக பழங்காலக் கறுப்பு சிவப்புப் பாண்டங்களின் புகைப்படங்களை இந்தியா முழுவதும் தேடிப்பிடித்தோம். இந்தியத் தொல்லியல் நிறுவன அதிகாரிகள், பீகார், ஒடிசா, மேற்கு வங்காளம், தெலங்கானா, தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அரசுகளின் அதிகாரிகள், அருங்காட்சியகக் காப்பாளர்களின் பேருதவி.
புதிய புதிய தரவுகள் கிடைத்தவண்ணம் உள்ளன. கீழடி கறுப்பு சிவப்புப் பாண்டத்தின் உட்புறத்தில் கரிம நுண்சுருள் (Nanotubes) பிரித்தறியப்பட்டதாகச் செய்தி. ஒப்பனை செய்த உறைகிணறு. ‘முதுவாய்க் குயவன்’ என்பது வெறும் கவிதை இல்லை.
கீழடியிலிருந்து திண்டுக்கல் போகும்போது எனது இருக்கைக்கு அருகே அந்தப் பானையும் இருப்பதுபோல உணர்ந்தது ஒரு மனத்தோற்றம்தான். ஆனாலும் ஒருவகையில் அது நிஜம்தான். இதோ மண் போட்டு மூடிவிட்ட அந்தக் கீழடிப்பானை இப்பவும்கூட என்னோடு தான் இருக்கிறது. அதில் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருக்கிறது சங்க இலக்கியப் பொங்கல் வாசம்.
பானையைத் தொட்டவன் பாக்கியசாலி!
எத்தனை கோடி இன்பங்கள் வைத்தாய் தமிழே!
பயணிப்பேன்...
****

கறுப்பு சிவப்புப் பாண்டங்கள்
ஹரப்பா பண்பாட்டுக் காலத்தில் குஜராத் பகுதியில் புழக்கத்தில் இருந்த கறுப்பு சிவப்புப் பாண்டம், நர்மதை நதிக்கரையோரமாகக் கிழக்கு நோக்கிச் சென்று கிழக்கு உத்தரப்பிரதேசம், பீகார் பகுதிகளிலும், மேலும் ஒடிசா, வங்காள நிலப்பகுதிகளில் பரவுகிறது.
தென்னிந்தியா முழுவதற்குமான முத்திரை மட்பாண்டம் கறுப்பு சிவப்புப் பாண்டம்தான். பொதுவாக பெருங்கற்காலப் பாண்டம் (Megalithic Pottery) என்று அழைக்கப்படுகிறது.
ஆதிச்சநல்லூர், கீழடி, பொருந்தல், கொடுமணல், சிவகளை, கொற்கை, அழகன்குளம் போன்ற அகழாய்வு இடங்களில் கறுப்பு சிவப்புப் பாண்டங்களின் ஏராளமான தடயங்கள். சிந்துவெளிக் குறியீடுகள் போன்ற கீறல்கள், தமிழ் பிராமி பொறிப்புகள் என்ற வரிவடிவ முயற்சிகளின் சாட்சியம் பெரும்பாலும் கறுப்பு சிவப்புப் பாண்டங்களே.
பானைகளைத் தலைகீழாகச் சுடும்போது ஆக்சிஜனேற்றம் (Oxidation) பானையின் உட்பகுதிகளில் மட்டுப்படுகிறது. இதனால் உட்புறம் கறுப்பு நிறமாக மாறுகிறது. வெளியே ஆக்சிஜனேற்றம் மட்டுப்படாமல் முழுமையாவதால் சிவப்பாகிறது. இதுதான் கறுப்பு சிவப்புப் பாண்டத்தின் தொழில்நுட்பம்.