மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 18 - வடகிழக்கில் ஓர் உலகம்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

இந்த மடாலயங்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே இருப்பதால் எல்லைகளுடன் கூடிய வரைபடம் கிடையாது.

2017 செப்டம்பர் 30. அருணாசலப் பிரதேசத்தில் பொம்டிலாவில் இருந்து தவாங் செல்லும் மலைச்சாலை. திராங்கை அடைவதற்கு முன்னால் பெரும் நிலச்சரிவு. முதல் நாள் பெய்த பேய்மழையால் கவிழ்ந்து கிடக்கும் மலை; காணாமல்போன சாலை, அடிவேர்கள் நிலைகுலைந்து சில மரங்கள், பாறைக்குவியல். சீரமைக்கும் பணியில் இயந்திரங்களும் எல்லைச் சாலை வீரர்களும். காத்துக்கிடந்தன ஏராளமான கார்கள், லாரிகள். காரிலிருந்து இறங்கிச் சென்று டிரைவர்களிடம் பேசினேன். ஏழுமணி நேரமாகக் காத்திருக்கிறார்களாம்.

வடகிழக்கில் எட்டு மாநிலங்கள், 121 மாவட்டங்கள். 1985-ல் முதன்முறையாக அசாம், மேகாலயா, நாகாலாந்து, மணிப்பூர், மிசோரம் ஆகிய மாநிலங்களுக்குச் சென்றேன். தேர்தல் ஆணையத்தில் பணியாற்றியபோது வடகிழக்கு முழுவதும் பயணித்துவிட்டேன். விரல்விட்டு எண்ணக்கூடிய சில மாவட்டங்கள் தவிர.

ஏற்கெனவே இரண்டுமுறை மோசமான வானிலையால் தவாங் பயணம் தடைப்பட்டது மனக்குறையாகவே இருந்தது. தலாய் லாமா தவாங் செல்கிறார், அதற்கு சீனா எதிர்ப்பு என்ற செய்தி (ஏப்ரல் 4, 2017) என்னை உசுப்பிவிட்டது. பணி ஓய்வுக்கு முன்பு பார்த்துவிடவேண்டும் என்று குடும்பத்துடன் கிளம்பினால், வழியில் இவ்வளவு பெரிய மலைச்சரிவு.

வடமேற்கிலிருந்து வடகிழக்கு நோக்கி விரிந்து பரந்த இமயமலைத்தொடர். பேரா இயற்கையின் பெருமிதமாய். இந்த இமயமலையை லடாக், காஷ்மீர், இமாசலப்பிரதேசம், உத்தரகாண்ட், நேபாளம், சிக்கிம், பூடான் என்று எத்தனை இடங்களில் நின்று, எத்தனை விதங்களில் பார்த்துவிட்டேன். நினைத்தால் போகும் இடமா லாகுல்-ஸ்பிட்டி?

1989-ல் தேசிய பழங்குடியினர் விழாவில்...
1989-ல் தேசிய பழங்குடியினர் விழாவில்...

இமயமலையையே அசைத்துப் போடும் மாமழை என்று அவ்வளவு நுட்பமாக குறுந்தொகையில் ஔவையார் எப்படி எழுதினார் என்று யோசனை போகிறது. ஓங்கிய மலைகளின் கம்பீரத்தின் முன்னால் `கறுப்பு பேன்ட்’ போட்டு நிற்கும் ஒரு கட்டெறும்பைப்போல என்னை உணர்கிறேன்.

அருணாசலப்பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் சகுந்தலா கேம்லின் எனது பேட்ச். அசாமின் மிசிங் பழங்குடியின் முதல் ஐ.ஏ.எஸ் அதிகாரி. “இப்போது எங்கே பாலா?” என்று கேட்டார். லொகேஷன் அனுப்பினேன். மாவட்ட கலெக்டர் பேசினார். எல்லைச் சாலைகள் பராமரிப்புப் படையின் கமாண்டெண்ட் சி.எஸ் ராவ் தொடர்பு கொண்டார். இன்னும் மூன்று மணி நேரம் ஆகுமாம்.

இந்தியா சுதந்திரம் அடைந்தபோது வடகிழக்கு இந்தியா என்பது ஒருங்கிணைந்த அசாம் மாகாணமும் மணிப்பூர், திரிபுரா பகுதிகளும்தான். நாகாலாந்து, மேகாலயா, அருணாசலப்பிரதேசம், மிசோரம் மாநிலங்கள் அசாமிலிருந்து பின்னர் பிரிக்கப்பட்ட பகுதிகளே. தனிநாடாக இருந்த சிக்கிம் 1975-ல் இந்தியாவுடன் இணைந்தது. வடகிழக்கின் நிலப்பகுதியில் 99 சதவிகிதம் சர்வதேச எல்லை. சீனாவின் திபெத் தன்னாட்சிப்பகுதி, மியான்மர், வங்காளதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளோடு 5,182 கி.மீ எல்லைப் பகிர்வு.

தேசிய பழங்குடியினர்
தேசிய பழங்குடியினர்

கால்நடை மருத்துவரின் உலகம் நான்கு கால்களில் நடக்கும்; தோட்டவியலாளரின் பூமியில் காய்கறிகள் மட்டும்தான் கண்ணில் படும். அதைப்போல தேர்தல்களில் உருண்டு புரண்ட எனக்கு இந்திய வரைபடத்தை நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளாகவே பார்த்துப் பழகிப்போய்விட்டது. அருணாசலப் பிரதேசத் தேர்தலில் 650 வாக்குச்சாவடிகளில் ஹெலிகாப்டர் உதவியில்லாமல் தேர்தல் பணியாளர்களைக் கொண்டுசேர்ப்பது கடினம். நான்கே வாக்காளர்களைக் கொண்ட நான்கு வாக்குச்சாவடிகள் உள்ளன. நடந்து மட்டும்தான் செல்லமுடியும். போக நான்கு நாள்கள், வர நான்கு நாள்கள்.

அசாம் தேர்தலின் அதிர்வுகள் தனி ரகம். போடோ பகுதிகள், சமவெளிகள், கார்பி அங்லாங், வடக்கு கச்சார் மலைகள், வங்கதேச எல்லைப்பகுதிகள் என்று பல விதமான சவால்கள். ஒருமுறை மேற்கு வங்காளத்தின் அலிப்பூர் துவார் வழியாக அசாம் எல்லையில் நுழைந்து, மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி ஜெ.பி.பிரகாஷுடன் போடோ பகுதிகள் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இரண்டு நாள்கள் தொடர் பயணம் செய்தது மறக்கமுடியாத அனுபவம். தேர்தல் அலுவலர்களிடம் நான் ஒடியாவில் பேசுவேன், புரிந்துகொள்வார்கள். அவர்கள் அசாமியில் பேசுவார்கள், நான் புரிந்துகொள்வேன்.

மணிப்பூர்த் தலைநகர் இம்பால். ஆளுநர் மாளிகையில் கலந்தாய்வு முடிந்தது. தலைமைத் தேர்தல் அதிகாரியுடன் அவரது அலுவலகத்திற்குச் செல்ல விரும்பினேன். அதிகாரிகள் கொஞ்சம் தயங்கினார்கள். நகருக்குள் செல்லும்போதுதான் காரணம் புரிந்தது. வழிநெடுகிலும் அவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடு. திரும்பி வரும்போது வேறொரு பாதையில் அழைத்து வந்தனர். `அன்னையர் சந்தைக்குப் போகமுடியுமா’ என்று கேட்டேன். பதறிப்போன பாதுகாப்பு அதிகாரி “நோ சான்ஸ் சார்” என்றார். தேர்தல் பணியில் இதுதான் பிரச்னை.

அதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பு சுற்றுலா பண்பாட்டுத் துறையில் இருக்கும்போது சத்தமில்லாமல் இம்பால் சென்று உலகப்புகழ் பெற்ற நாடக மேதையான ரத்தன் தியாமின் நாடகக் கலைக்குழு அரங்கிற்கே போய் வந்திருக்கிறேன்.

இம்பால் நகரின் ‘இமா கெய்த்தல்’ என்ற அன்னையர் சந்தையில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள். அனைத்தையும் பெண்களே நடத்துகின்றனர். சமூக அரசியல் பிரச்னைகளைக் கையிலெடுக்கும் தாய்மையின் குரலாகவும் அன்னையர் சந்தை உருவெடுத்துள்ளது.

திரிபுரா தேர்தலில் எப்போதும் கடும் போட்டி. வங்க தேச எல்லையோர கிராமங்களின் வாக்காளர் பட்டியலைப் பற்றிய புகாரை விசாரிக்க வீடுவீடாகச் சென்றேன். சிலருக்கு வீடு இந்தியாவில், வயற்காடு வங்க தேசத்தில். அகர்தலா விமான நிலையத்தில் சற்றுத் தடுமாறினாலும் வங்க தேசத்தில் விழுந்து விடுவோம். எல்லையைத் தொட்டுக் கொண்டிருக்கும் காம்பவுண்ட் சுவர். திரிபுராத் தேர்தல் காரசாரமாக இருந்தாலும் காசு, பணம் புழங்குவதில்லை. சிக்கனமான பிரசாரங்கள். மரங்களில் பறக்கும் கட்சிக்கொடிகள்.

நாகாலாந்தின் மாவட்டத் தலைநகரங்கள் அனைத்திற்கும் ஹெலிகாப்டரில் சென்றிருக்கிறேன். நாகா பழங்குடி மக்கள் என்று நாம் பொத்தாம் பொதுவாகப் புரிந்துகொண்டாலும் கள நிலவரம் வேறு. முக்கியமான 20 பழங்குடிகள். அவர்களுக்குள் பல உட்பிரிவுகள். 60க்கும் மேற்பட்ட வட்டார வழக்கு மொழிகள். குறிப்பிட்ட மலைக்கும் குறிப்பிட்ட பழங்குடிக்கும் உள்ள தொடர்பு அவ்வளவு நெருக்கமானது. அவரவர் மலை, அவரவர் உலகம்.

தேர்தல் அரசியல் பழங்குடிகளின் ஒற்றுமையை பாதிக்கும் என்ற உணர்வு நாகா பழங்குடிகளுக்கு உண்டு. அதனால் யாருக்கு ஓட்டு போடுவது என்று பழங்குடிகள் கூட்டத்தில் பேசி முடிவுசெய்து அதன்படி அனைவரும் ஆடிப்பாடியபடி வாக்குச்சாவடிக்குச் செல்வதும், அங்கே அனைவரின் சார்பில் பழங்குடித் தலைவர் மட்டும் உள்ளே போய் ஓட்டுபோட்டுவிட்டு வருவதும் வாக்குப்பெட்டி காலத்து வாடிக்கை. இதை மாற்றவேண்டும் என்று விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்தோம். அதே நேரத்தில் `வளர்ந்த மாநிலங்களில்’ ஜாதிச் சங்கங்களும் பல்வேறு சமய அமைப்புகளும் தேர்தல் அரசியலில் புகுந்து விளையாடுவது இல்லையா என்ற கேள்வி என்னை உறுத்தும்.

சிக்கிம் ஓர் அமைதிப்பூங்கா. தேர்தல் தொடர்பாகவும், சுற்றுலாப் பயணியாக குடும்பத்துடனும் இந்திய-சீன எல்லை வரைக்கும் போயிருக்கிறேன். தேர்தல் ஆணையத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல் கால அட்டவணை தயாரிக்கும் பணிகள். அப்போது GIS வரைபடத் தொழில்நுட்ப உதவியாளர் ஒரு குண்டைத் தூக்கிப்போட்டார். “சார், சிக்கிமில் ஒரு சட்டமன்றத் தொகுதியைக் காணவில்லை.” கிணறு காணாமல்போன ‘வடிவேலு காமெடி’ அது. ஒரு கணம் திகைத்துப்போனேன். பிறகு தான் நினைவுக்கு வந்தது, சங்கா தொகுதி. இந்தத் தொகுதியை வரைபடத்தில் காட்டமுடியாது. ஏனென்றால் இந்தியாவின் நிலம் சாராத் தொகுதி இது ஒன்றுதான். சிக்கிமில் உள்ள 51 புத்த மடாலயங்களைச் சேர்ந்த துறவிகள் மட்டுமே இந்தத் தொகுதியில் போட்டியிட முடியும், வாக்களிக்கவும் முடியும். இப்போது இந்தத் தொகுதி வாக்காளர் பட்டியலில் 3224 ஆண் துறவிகளும் 69 பெண் துறவிகளும் உள்ளனர். இந்த மடாலயங்கள் மாநிலம் முழுவதும் ஆங்காங்கே இருப்பதால் எல்லைகளுடன் கூடிய வரைபடம் கிடையாது.

திராங் சாலையில் நிலச்சரிவுகள் அகற்றப்பட்டன. கார்களும் லாரிகளும் நகரத் தொடங்கின. கமாண்டர் ராவ் தொலைபேசியில் ‘கிரீன் சிக்னல்’ கொடுத்தார். நிலச்சரிவின் மறுபகுதியில் நேரிலும் சந்தித்தார். அவரது முகாமில் தேநீர், பிஸ்கட்.

திராங்கில் உள்ள `துப்சுங் தர்கியே லிங்’ என்ற புத்தமதக் கோயில், பாடசாலைக்குச் சென்றோம். தலாய் லாமா சூட்டிய பெயர். ‘புத்தரின் சொல் செழிக்கும் இடம்’ என்று பொருள். அவ்வளவு அமைதியாக இருந்தது அந்தச் சூழல். சீலா கணவாய், சீலா ஏரி அழகோ அழகு. ஜஸ்வந்தகார் போர் நினைவுச்சின்னம். சீனர்களுடன் 72 மணி நேரம் போரிட்டு மடிந்த மாவீரன் நினைவாக. தவாங் மடாலயத்திற்குச் சென்றோம். தலாய் லாமா 1959-ல் திபெத்திலிருந்து இந்தியாவிற்கு வந்த காலகட்டத்தின் காட்சி ஆவணங்கள்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

தவாங் போர் நினைவுச்சின்னத்தில் இந்தியா சீனா போரில் இன்னுயிர் ஈந்த 2,420 வீரர்களின் பெயர்கள் பொன் எழுத்துகளால். பரம்வீர் சக்ரா விருது பெற்ற சுபேதார் ஜோகிந்தர் சிங்கின் உருவச்சிலை. போர்க்களக் காட்சிகள், வீரர்களை எல்லையில் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு சந்திக்கும் உணர்ச்சிமிகு புகைப்படங்கள். மௌனம் கவ்விக்கொண்டது மனசை.

வடகிழக்கை எனக்குள் மீண்டும் அசை போடுகிறேன். 1985 ஜனவரியில் மிசோரம் தலைநகர் ஐசோலில். அப்போதுதான் மிசோரம் அமைதிப் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்தது. பேருந்திலிருந்து இறங்கியவுடன் அங்கு நின்றுகொண்டிருந்த சில இளைஞர்கள் ‘`இந்தியர்கள், இந்தியர்கள்” என்றார்கள். மறுநாள் முடிவெட்டும் கடையொன்றில் “நீங்கள் இந்தியாவா” என்று கேட்டார் கடைக்காரர். இந்த 36 ஆண்டுகளில் எவ்வளவு மாறிவிட்டது. வடகிழக்கின் மிக அமைதியான மாநிலங்களில் மிசோரமும் ஒன்று.

சென்னையில் பல உணவு விடுதிகளில் வடகிழக்குப் பெண்களும் ஆண்களும் பணிபுரிகிறார்கள். அவர்களிடம் எந்த மாநிலம், எந்த மாவட்டம் என்று நான் தவறாமல் கேட்பேன். `உங்கள் ஊருக்குப் போயிருக்கிறேன்’ என்று நான் சொல்லும்போது அவ்வளவு மகிழ்ச்சி அடைவார்கள். சென்னையில் பாதுகாப்பாக உணர்வதாகச் சொல்வார்கள். இந்தியா என்பது நான்கு பெருநகரங்களும் கங்கைச் சமவெளியும் மட்டுமல்ல. பிரம்மபுத்திராவைச் சுற்றியும் இருக்கிறது இன்னும் எழுதப்படாத பன்முக வரலாறு.

தவாங்கிலிருந்து திரும்பி வரும்போது நுராநங் அருவி. காணக் கண் கோடி வேண்டும். வழி நெடுகிலும் மழையோ மழை. புதிய பாதையில் சென்றார் டிரைவர். கண்ணெதிரே சிறு சிறு கற்கள் மலைச்சரிவில் உருள்வதைப் பார்த்தபடி முன்சீட்டில் நான். டிரைவர் கண்ணசந்து விடுவாரோ என்ற பயம். அப்போது காருக்கு 20 அடி முன்பு திடீரென்று மலையிலிருந்து சாலையில் விழுந்து உருண்டு கீழே சென்றது ஒரு பெரிய பாறை. பீதியில் உறைந்தேன். பின் சீட்டைத் திரும்பிப் பார்த்தேன். பயணக்களைப்பில் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

மலைப்பகுதி முடிந்ததும் காரிலிருந்து இறங்கி நின்றேன். ஜில்லென்று வீசிய காற்று உயிரையும் உடலையும் வருடியது.

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகிருஷ்ணா!

- பயணிப்பேன்

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

மணிப்பூர்த் தமிழர்கள்

மணிப்பூர்-மியான்மர் (பர்மா) எல்லையில் உள்ளது மோரே என்ற நகரம். இங்கே ஏராளமான தமிழர்கள் வசிக்கிறார்கள். பர்மாவிலிருந்து தமிழ்நாடு திரும்பிய தமிழர்களில் பலர் அகதிகளாக வாழப்பிடிக்காமல் மீண்டும் மியான்மர் போய்விடலாம் என்று மணிப்பூர் வந்து சேர்ந்தார்கள். அவர்களை மியான்மர் ராணுவம் பிடித்துத் திருப்பி அனுப்பியதால் மோரே நகரில் தங்கிவிட்டார்கள். மியான்மர் - இந்திய எல்லைப்பகுதி வணிகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.

மனிதர்கள் புலம்பெயரும்போது அவர்கள் கும்பிடும் தெய்வங்களும் உடன் நடப்பார்கள். மோரே நகரில் முனீஸ்வரர் கோயில், அங்காளபரமேஸ்வரி, பெரியபாளையத்தம்மன், பத்ரகாளி கோயில்கள், தமிழர்களின் மசூதி, தமிழ் கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவை உள்ளன. மோரே வீதிகளில் தேர்த்திருவிழா நடத்துகிறார்கள். அலகு குத்தி காவடி சுமக்கிறார்கள், தீ மிதிக்கிறார்கள். 1967-ல் மோரேவில் தமிழ்ச்சங்கம் தொடங்கப்பட்டது.

‘பெரிதே உலகம்; பேணுநர் பலரே’ - புறநானூறு 207

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது