மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 2

தமிழ் நெடுஞ்சாலை
News
தமிழ் நெடுஞ்சாலை

“பத்தாம் வகுப்பு படிக்கும் பயலுக்கு நடுராத்திரியில என்ன அரசியல்?”

மெரினா கடற்கரைக்குப் போகும் போதெல்லாம் காந்தி சிலை அருகேயுள்ள பெருந்தலைவர் காமராஜர் சிலையை நின்று வணங்காமல் செல்லமாட்டேன். பள்ளிக்குழந்தைகள் இருவரை அவர் பரிவுடன் தொட்டு நிற்கிறார். அது வெறும் சிலையல்ல; செயல்வடிவம்.

காமராஜர் மறைந்த 1975 அக்டோபர் 2-ம் நாள் வீட்டில் யாரிடமும் சொல்லாமல், லாரி ஏறி வந்து ராஜாஜி அரங்கில் நின்று அழுதபோது வழிந்த கண்ணீர் இன்னும் காயாமல் இருக்கிறது எனக்குள்.

இந்தச் சிலையில் இருப்பதைப் போலவே காமராஜர் என்னைத் தொட்டு வாழ்த்தி திசை காட்டினார் என்பதே எனது வாழ்வின் உயரங்களின் சிகரம். கனவுபோல் இருக்கிறது அந்த நிஜம். எனது தமிழ் நெடுஞ்சாலையின் மிக முக்கியமான மைல்கல் அந்தக் குறும்பயணம்.

தற்போதைய நகடா
தற்போதைய நகடா

1969-ல் அரசியல் மேடையேறி 1970 நகராட்சித் தேர்தல், 1971 பொதுத்தேர்தல் என்று நூற்றுக்கணக்கான பொதுக்கூட்ட மேடைகளில் பேசிமுடித்திருந்தேன். 1973-ம் ஆண்டு மே மாதம். தமிழக அரசியலைப் புரட்டிப்போட்ட திண்டுக்கல் நாடாளுமன்ற இடைத்தேர்தல். அக்னிநட்சத்திரமாய் களம். அரசியலில் அப்போது எனக்கு வயது நான்கு. காலண்டர் வயது 14 ஆண்டுகள் ஐந்து மாதங்கள். 10-ம் வகுப்புத் தேர்வு எழுதியிருந்தேன்.

அலங்காநல்லூரில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்து சுற்றுவட்டாரப்பகுதிகளில் தீவிரப் பிரசாரம். தினமும் மாலையிலிருந்து நள்ளிரவு வரை ஆறேழு கூட்டங்கள். இதற்காக எனக்கு கார் வசதியும் தரப்பட்டிருந்தது.

இரவு 11 மணி, பாலமேடு பக்கமுள்ள மாணிக்கம்பட்டி கிராமத்தில் சாலையையொட்டி கொஞ்சம் உள்ளடங்கிப் போடப்பட்டிருந்த ஒரு கீற்றுக் கொட்டகையின் கீழ் நின்று பேசிக்கொண்டிருந்தேன். சாலையில் சென்ற ஒரு அம்பாசிடர் கார் மெதுவாக வந்து நின்றது. காரிலிருந்து திடீரென்று காமராஜர் இறங்கி வந்தார்.

காமராஜரைப் பார்த்த உற்சாக மிகுதியில் நான் ‘வசன நடையில்’ அவரது ஆட்சிக்காலச் சாதனைகளையெல்லாம் பட்டியலிடத் தொடங்கினேன். வந்து அமர்ந்தவர் ‘சைகை’ காட்டி எனது பேச்சைப் பாதியில் நிறுத்தினார். அவர் பேசத்தொடங்கியதுமே மைக் சரியாக வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்தார். ஒலிபெருக்கிக்காரரைக் கூப்பிட்டு, ``என்ன மைக் இது. இதை இந்தச் சின்னப் பையன் கையில் கொடுத்திருக்கிறாயே” என்று கோபித்தார். ஊர் மக்களைப் பார்த்து ஓரிரு வார்த்தைகளில் வாக்கு கேட்டுவிட்டுக் கிளம்பினார்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

அருகில் நின்ற என்னிடம் எந்த ஊர் என்று விசாரித்துவிட்டு, “மதுரைக்குத்தான் போகிறேன், வழியில் இறக்கிவிடுகிறேன்” என்றார். ``கார் இருக்கிறது” என்றதும் என்னை ஏற இறங்கப் பார்த்தவர், “அது பின்னால் வரட்டும். நீ என்னோட வா” என்றார்.

பெருந்தலைவரின் கேள்விகளும், வியப்பும் பயமும் கலந்த எனது பதில்களுமாக காரில் உரையாடல்...

``என்ன படிக்கிறாய்?”

“பத்தாம் வகுப்பு.”

“பத்தாம் வகுப்பு படிக்கும் பயலுக்கு நடுராத்திரியில என்ன அரசியல்?”

“பத்து வயதிலேயே கட்சியில் சேர்ந்து விட்டேன். நீங்கள் இடைத்தேர்தலில் போட்டியிட்டபோது என் தந்தைதான் மேடையில் ஏற்றிப் பேசவைத்தார்” என்றேன்.

“அப்ப நான்தான் இதற்கு காரணமா... உனக்குத் தனியாக கார் எல்லாம் கொடுத்துக் கெடுத்துவிட்டார்களா? படிப்பைக் கெடுத்துக்கொண்டு நீ தெருவுக்கு வர, இப்போது என்ன சுதந்திரப் போராட்டமா நடக்கிறது? தேர்தல் அரசியலில் யார் ஜெயித்தால் உனக்கு என்ன? படிக்கிற வேலையைப் பார். என்னால்தான் அரசியலுக்கு வந்தேன் என்கிறாய். உன்னைப் போன்றவர்களை சரியாக வழிநடத்த வில்லையோ என்று எனக்கு வருத்தமாக இருக்கிறது.”

அவர் என்னிடம் பேசுகிறாரா அல்லது தனக்குள் பேசிக்கொள்கிறாரா என்பதுகூட எனக்குப் புரியவில்லை. எதுவும் தப்பாகப் பேசிவிட்டோமோ என்று பயமாகவும் இருந்தது. ‘அடைமழை’ போல் பேசினால் பாராட்டுவார் என்று நினைத்துப் பேசியவனை இப்படித் திட்டுகிறாரே என்று ஏமாற்றமாக இருந்தது.

காரின் பின்னிருக்கையில் காமராஜருடன் என்ன பேசுவது என்று தெரியாமல் இருட்டில் முழித்தேன். சில விநாடிகள்தான் உரையாடலற்ற அந்த உறைநிலை. தலைவர்தான் மீண்டும் மௌனம் கலைத்தார்.

``உனக்குப் பொதுவாழ்க்கை என்றால் ரொம்பவும் பிடிக்குமோ?”

``ஆமாம்” என்று வார்த்தையில் சொன்னேனா, வெறுமனே தலையை ஆட்டினேனா என்று நினைவில் இல்லை.

“அப்படியென்றால் நன்றாகப் படி. பெரியவன் ஆனதும் ஐ.ஏ.எஸ் பரீட்சை எழுது. கலெக்டர் ஆகிவிடு. நிறைய நல்லது செய்யலாம்.”

‘கலெக்டர்’ என்ற வார்த்தையை என்னிடம் அதுவரை யாரும் உச்சரித்ததே இல்லை. நான் எதுவும் பேசவில்லை. அவரே தொடர்ந்தார்.

“நீ அந்த மேடையில் வீராவேசமாகச் சொன்னாயே, அந்தத் திட்டங்களை எல்லாம் நான் நாலு ஐ,ஏ.எஸ் அதிகாரிகளிடம் கலந்து பேசித்தான் செய்திருக்கிறேன். ஒரு நல்ல ஐ.ஏ.எஸ் அதிகாரியும் பொதுவாழ்க்கையில்தான் இருக்கிறார். அதற்காக அரசியலுக்கு வரத்தேவையில்லை.”

காமராஜர்
காமராஜர்

அப்போதே பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் சிலர் ‘எம்.எல்.ஏ வந்துவிட்டாரா?’ என்று கிண்டலாக விசாரிக்கும் அளவுக்கு மதுரையில் தெருத்தெருவாக மேடைகளில் பேசியிருந்தேன். ஆனால் காமராஜர் இப்படிச் சொன்னது அதுவரை நான் கேட்டிராத புதிய அறிவுரை.

அலங்காநல்லூர் வந்ததும் எனது கார் வந்துவிட்டதா என்று உறுதிசெய்துகொண்டபின் என்னை இறக்கிவிட்ட அந்த மாபெரும் தலைவரின் கார் நடுநிசியில் மதுரை நோக்கி விரைந்தது. நான் உறைந்துநின்றேன்.

காமராஜர் இப்படிச்சொல்லி 11 ஆண்டுகளுக்குப் பின் ஐ.ஏ.எஸ் தேர்வில், அதிலும் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றபோது மனசெல்லாம் அவர். மசூரிக்குப் பயிற்சிக்குச் சென்றபோதுகூட சென்னையில் திருமலை பிள்ளை சாலைக்குச் சென்று அவர் வசித்த வீட்டை வணங்கிவிட்டுத்தான் சென்றேன்.

1986-ம் ஆண்டு ஒடிசாவில் சப் கலெக்டராகப் பொறுப்பேற்ற கையோடு முதல் கள ஆய்வுச் சுற்றுப்பயணம். எனது தலைமையிடத்தில் இருந்து நெடுந்தூரத்தில் இருந்த ‘நகடா’ என்ற மலைக்கிராமத்தை வரைபடத்தைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தேன். அந்தப் பழங்குடி கிராமம் சுதந்திரம் பெற்று 40 ஆண்டுகளான பின்பும் அதுவரை எந்த அதிகாரியும் ஒருமுறைகூடச் சென்றிராத ஒரு ‘கடைசி மைல்’ என்பதை அறிந்ததும், அங்கே சென்றே தீரவேண்டும் என்பது எனக்குள் ஒரு வெறியாக மாறியது.

பல மலைகளைத் தாண்டி, 10 மணி நேரம் நடந்து சென்று திரும்பிய அந்த நெடும்பயணத்தில் தொடங்கிய எனது குடிமைப்பணியை (காமராஜரின் வார்த்தையில் சொல்வதென்றால் எனது ‘பொதுவாழ்க்கையை’) 2018-ல் அதே கிராமத்துக்குச் சென்றுதான் நிறைவுசெய்தேன். முதல்முறை சென்றபோது மருத்துவர் குழு மற்றும் சில அரசு ஊழியர்களுடன் சென்று அங்குள்ள மக்களுக்கு வெறும் வேட்டி, சேலை, சட்டை துணிமணிகளை மட்டும் கொடுத்துவிட்டு வந்தோம். அந்த நிலையில் செய்யமுடிந்தது அதுதான். 32 ஆண்டுகளுக்குப் பின் ஓய்வுபெறும் முன், கடைசிக் களப்பணியாக அந்த ஊருக்கு மீண்டும் சென்றபோது பல கோடி செலவில் மலைகளின் ஊடாக சாலை போட்டு, சூரியவிசை விளக்கு, குடிநீர் வசதி, புதிய பள்ளிக்கூடம் என்ற அடிப்படை வசதிகள் அனைத்தையும் செய்துமுடித்திருந்தோம். அரை மணி நேர இனோவா பயணம்தான். அங்கே பள்ளிக்கூடத்தைத் திறந்துவைக்கும்போது விழிகளில் நீர். மனசெல்லாம் காமராஜர்.

குடிமைப்பணிகளின் தேவை அதிகம் உணரப்படுவது பேரிடர்களின்போதுதான். பேரிடர் மேலாண்மை, தேர்தல் மேலாண்மை, நிதித்துறை, வளர்ச்சித்துறைகள், சுற்றுலா, பண்பாடு, பழங்குடி மக்களின் வளர்ச்சி என்று பல்வேறு களங்களில் பணியாற்றிப் புதிய புதிய சவால்களை எதிர்நோக்கும் ஒவ்வொரு முறையும் எனக்குள் நான் கேட்டுக்கொள்ளும் ஒரு கேள்வி உண்டு. ‘எனது இந்தச் செயல்பாடு காமராஜருக்குப் பிடிக்குமா?’

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

தொடக்க ஆண்டுகளில் காமராஜர் கைராட்டினத்தில் நூல் நூற்கும் ஒரு கறுப்பு வெள்ளைப் புகைப்படத்தை எனது அலுவலக மேஜையில் வைத்திருந்தேன். இப்போது அந்தப் படம் எங்கள் வீட்டில் இருக்கிறது. இதற்கிடையில் பல்வேறு துறைகளிலும், குறிப்பாகத் தேர்தல் ஆணையப் பணிகளின்போது இந்தியாவின் மிக முக்கியமான தலைவர்கள் பலரையும் சந்திக்கும், உரையாடும் வாய்ப்பு கிடைத்தபோதெல்லாம் ஏதோ ஒரு வகையில் ‘காமராஜர்’ என்ற அந்த மந்திரச்சொல்லை எப்படியோ உச்சரித்துவிடுவேன்.

1991-ல் அன்றைய ஒடிசா முதல்வரும், காமராஜரின் நெருங்கிய நண்பருமான பிஜூ பட்நாயக்கை முதல்முதலாக சந்தித்தபோது, “நான் காமராஜர் சொல்லி ஐஏஎஸ் எழுதியவன்” என்று பெருமையுடன் சொன்னேன். அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். ‘காமராஜர் திட்டம்’ என்று அறியப்படும் ‘கே-பிளான்’ பற்றியும் குறிப்பிட்டார்.

2016-ம் ஆண்டு பிஜூ பட்நாயக்கின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. அப்போது அவரது வாழ்க்கை வரலாறு பற்றி ‘Tall Man’ (உயர்ந்த மனிதன்) என்ற பெயரில் ஆவணப்பதிவு ஒன்றை நூல் வடிவில் தொகுத்து வெளியிட்டார்கள். சாகசங்களாலும் சாதனைகளாலும் நிறைந்த பிஜூ பட்நாயக் பற்றிய பல அரிய தகவல்களையும், புகைப்படங்களையும் ஆவணங்களையும் வெளிக்கொணர்ந்த அந்த நூலின் உருவாக்கத்தின் போது ‘காமராஜ் திட்டம்’ என்று அழைக்கப்படும் K-Plan நூலின் பிரதி தேவைப்பட்டது.

புவனேஷ்வர், கொல்கத்தா, டெல்லி, சென்னை என்று எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியில் அதன் பிரதி ஒன்றை கனடாவிலுள்ள டொரன்டோ நூலகத்தின் ஆவணங்களில் கண்டறிந்து வரவழைத்தார், ஆவணத் தொகுப்பாசிரியர் சுந்தர் கணேசன். காமராஜர் திட்டத்தின் அட்டையிலேயே பிஜூ பட்நாயக்கின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அப்போதுதான் அந்தத் திட்டத்தை ஆங்கில வரைவாகப் பதிப்பித்தவர் பிஜூ பட்நாயக் என்பது தெரிந்தது.

2019 ஜூலை 15. சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்த காமராஜர் பிறந்தநாள் நிகழ்விற்கு நான் அழைக்கப்பட்டிருந்தேன். கிட்டத்தட்ட 44 ஆண்டுகளுக்குப் பின் அந்தக் கட்டடத்தில் நான் நுழைகிறேன். காமராஜர் பற்றிப் பேசி முடித்ததும் புவனேஷ்வரில் இருந்து கொண்டுவந்திருந்த காமராஜர் திட்டத்தின் ஒரு பிரதியை சத்தியமூர்த்தி பவன் நூலகத்தில் வைக்கும்படி கொடுத்துவிட்டு வந்தேன்.

இப்போதும் யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்... அரைக்கால் டவுசருடன் அரசியல் மேடையில் பேசிக்கொண்டிருந்தவனை முதுகில் தட்டிக்கொடுத்துவிட்டுக் கடந்து போகாமல்; பேச்சைப் பாதியில் நிறுத்தி, அந்த நள்ளிரவில் காரில் அழைத்துச் சென்று ‘ஐ.ஏ.எஸ்’ என்ற வார்த்தையை எனது காதுகளில் காமராஜர் ஏன் உச்சரித்தார்? என்ன மனநிலையில், யாராக இருந்து அப்படிப் பேசியிருப்பார்?

தலைமைப் பண்பைச் சொல்லாற்றல், செயலாற்றல், முன்னின்று வழிநடத்தும் தெளிவு, துணிவு, முடிவெடுக்கும் திறன், அணி சேர்ந்து உழைத்தல் என்று அக்குவேறு ஆணிவேறாக அலசி ஆராய்கிறோம். ஆனால், எனக்கென்னவோ காமராஜர் அந்தப் பதினைந்து, இருபது நிமிடப் பயணத்தில் ஒரு தாயாக இருந்து பேசினார் என்று தோன்றுகிறது. ஒரு தாய்தான் அப்படிப் பேச முடியும். தாயுமானவர் காமராஜர்.

பேரறிஞர் அண்ணா ஒருமுறை காமராஜரை ‘குணாளா மணாளா குலக்கொழுந்தே’ என்று அன்புடன் அழைத்து எழுதினார். அதன் காரணத்தைத் தமிழகம் நன்கு அறியும். அதைவிட நான் எழுத என்ன இருக்கிறது. இருந்தாலும் கேட்க விரும்புகிறேன்.

குணாளா,

கோடிச் சிறுவர்களில்

இந்தக்

கோடிச் சிறுவனை

எப்படி நீ குறித்தெடுத்தாய்!

***

காமராஜர்
காமராஜர்

இந்திய அரசியல் வரலாற்றில் கே-பிளான் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. 1962 சீனப் போரின் தாக்கம் ஆட்சியமைப்பின் எல்லா மட்டங்களிலும் உணரப்பட்டது. மக்களிடமிருந்து தலைவர்கள் அந்நியப்பட்டுவிட்டதாக ஒரு கருத்து நிலவியது. அனுபவமிக்க தலைவர்கள் ஆட்சிப்பொறுப்பிலிருந்து களப்பணிக்குச் செல்வது நல்லது என்று கருதிய காமராஜர், முன்மாதிரியாக 1963 அக்டோபர் 2-ம் தேதி, தமிழக முதல்வர் பதவியிலிருந்து விலகினார். தனது நிலைப்பாட்டை பிரதமர் நேருவிடமும் காமராஜர் முன்மொழிந்தார். அதனடிப்படையில் பல தலைவர்கள் ஆட்சிப்பொறுப்பிலிருந்து விலகினர். காமராஜர் பதவி விலகிய அதேநாளில் பிஜூ பட்நாயக் தனது பதவியை ராஜினாமா செய்தபோது அவரது வயது 47தான். காமராஜர் பதவியைத் துறந்த நாளும் இறுதியில் மறைந்த நாளும்கூட காந்தியின் பிறந்தநாள்தான்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது