மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 20 - கற்பனைக்கு அப்பால்... காஷ்மீர் நினைவுகள்

காஷ்மீர் நினைவுகள்
பிரீமியம் ஸ்டோரி
News
காஷ்மீர் நினைவுகள்

காஷ்மீரைப் புரிந்துகொள்ளப் பல நூல்களைத் தேடித்தேடிப் படித்தேன்...

2009 மே 16 நள்ளிரவு. நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிந்து பெரும்பாலான முடிவுகள் வெளியாகிவிட்டன. அழுத்தம் குறைந்து இலகுவாய் இருந்தது உடலும் உள்ளமும். NDTV தொலைக்காட்சியின் நிறுவனர், ஊடகவியலாளர் பிரணாய் ராயிடமிருந்து ஒரு குறுந்தகவல். ‘வரலாறு காணாத தேர்தல், அருமை. 714 மில்லியன் நன்றிகள்.’ அன்றைய தேதியில் அதுதான் இந்தியாவின் வாக்காளர் எண்ணிக்கை. ஆனாலும், அந்த 37 வாக்காளர்களை நினைத்து நிலைக்குத்தி நின்று நெகிழ்ந்தது மனசு.

லடாக் நாடாளுமன்றத் தொகுதி, இமயப் பனிமலையில் 13,800 அடி உயரத்தில் கார்கிலில் இருந்து 45 கி.மீ தொலைவில் பேமா, ரலாகுங் என்ற இரண்டு கிராமங்கள். மே 13, ஐந்துகட்டத் தேர்தலின் கடைசி நாள் வாக்குப்பதிவு. மிக மோசமான வானிலையால் தேர்தல் ஊழியர்களை அங்கே இறக்கிவிட விமானப்படை ஹெலிகாப்டர் பலமுறை முயன்றும் முடியவில்லை. அதனால் வாக்குப்பதிவு நடைபெறவில்லை. ரலாகுங் - 23, பேமா - 14 என மொத்தம் 37 வாக்காளர்கள்.

சட்ட விதிகள் வேறு; தார்மிகம் வேறு. தலைமைத் தேர்தல் அதிகாரி பிரஜ்ராஜ் சர்மா எனது பேட்ச். இருவரும் பேசினோம். பனிமலை ஏறும் தெம்புடைய சில அரசு ஊழியர்கள், ஒரு போலீஸ்காரர், சுமைதூக்கிகள் சிலர் கொண்ட இரண்டு குழுக்கள். சாட்டிலைட் தொலைபேசி, ஆண்டெனா, வாக்குப்பதிவு இயந்திரங்களுடன் 13-ம் தேதி பிற்பகல் நடக்கத் தொடங்கினார்கள். கோடைக்காலத்தில் வெண்பனிப் பரப்பில் வெயிலில் நடப்பது கடினம். இரவில் நடந்தனர். 15-ம் தேதி காலை வாக்குச்சாவடிகளை அடைந்தனர். அங்கிருந்த 37 வாக்காளர்களும் ஒருவர்கூடத் தவறாமல் வாக்களித்தனர்.

 காஷ்மீர்த் தேர்தல் வாக்குச்சாவடி (மே, 7 2009)
காஷ்மீர்த் தேர்தல் வாக்குச்சாவடி (மே, 7 2009)

மறுநாள் காலை இந்தியா முழுவதும் வாக்கு எண்ணிக்கை. அதற்குள் கார்கில் திரும்ப முடியாது. ‘வரும்போது வரட்டும்; வெற்றி பெறுபவர் வாக்கு வித்தியாசம் அதிகம் என்றால் இந்த வாக்குகளை எண்ணத் தேவையில்லை’ என்றார்கள். ஆனால் அது எளிய ‘எஸ்கேப்.’ நாங்கள் விடவில்லை. வாக்குச் சாவடி அதிகாரிகள் இருவரில் ஒருவரை வாக்கு எண்ணும் அதிகாரம் கொண்ட ஏ.ஆர்.ஓ-வாகத் தேர்தல் ஆணையம் நியமித்தது. வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடத்தினர். சாட்டிலைட் தொலைபேசி வழியாக முடிவுகளைத் தெரிவித்தார்கள்.

இந்தியாவில் கடைசியாக வாக்களித்து முதலாவதாக முடிவை அறிவித்த அந்த இரண்டு கிராமங்களும் மக்களாட்சி என்ற மகத்துவப் பெருமையின் புதிய உச்சம். லடாக் தொகுதியில் வெற்றிபெற்ற வேட்பாளரின் வாக்கு வித்தியாசம் 3,708. எனவே இந்த இரண்டு கிராமங்களில் வாக்குப்பதிவு நடத்தாமலே, வாக்குகளை எண்ணாமலேகூட முடிவுகளை அறிவித்திருக்க முடியும். ஆனால், 2009-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்காக நாங்கள் கொட்டிய மாபெரும் உழைப்பின் பெருமிதம் , 37 வாக்கு வித்தியாசத்தில் என் மனசுக்குள் தோற்றிருக்கும். இந்திய மக்களாட்சி முறையின் ஆணிவேர் சாமானிய மக்கள். முகநூல் போராளிகள் அல்ல! இந்தியாவின் பொருளாதாரத் தலைநகரமான மும்பையில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடந்து சில மாதங்கள் கழித்து நடந்த தேர்தலிலேயே 46 விழுக்காடுதான் வாக்குப்பதிவு.

வாக்கு இயந்திரங்களுடன் தேர்தல் அலுவலர்கள்
வாக்கு இயந்திரங்களுடன் தேர்தல் அலுவலர்கள்

இந்தியா ஒரு துணைக்கண்டம். ஒவ்வொரு மாநிலத் தேர்தலும் ஒவ்வொரு விதமான ஆடுகளம். உத்தரப்பிரதேசத் தேர்தல் களம் சடுகுடு போல, பீகார்த் தேர்தல் மல்யுத்தம் போல தோன்றும். மேற்கு வங்காளத்தில் தேர்தல் நடத்தும்போது சடுகுடு ஆடிக்கொண்டே சதுரங்கம் ஆடுவதுபோல இருக்கும். ஆனால் காஷ்மீர்த் தேர்தல் என்னவென்று உருவகப்படுத்த முடியாத தோராயப் புதிர். காய்கள் நகரும்; யார் நகர்த்துகிறார்கள் என்று தெரியாது.

2008 காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல். முன்னேற்பாடுகளுக்குக் குறைந்தபட்சம் ஆறு மாதங்களாவது தேவை. ஆனால் அந்த அவகாசம் கிடைக்கவில்லை. மே 26 கையொப்பமான அமர்நாத் கோயில் நில ஒதுக்கீட்டு ஒப்பந்தத்தை எதிர்த்து காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் தினம்தோறும் போராட்டங்கள், துப்பாக்கிச்சூடு, உயிரிழப்புகள். ஒப்பந்தத்தை ஆதரித்து ஜம்மு பகுதியில் போராட்டங்கள். காஷ்மீர் எத்தனையோ பிரச்னைகளைச் சந்தித்திருக்கிறது. ஆனால், பேரணியொன்றில் ஐந்து லட்சம் பேர் திரண்டது வரலாறு காணாதது. ஜம்மு ஒருபுறமும் காஷ்மீர் ஒரு புறமும் களமிறங்கியது தீவிரவாதத்திற்குத் தீனி போட்டது.

கூட்டணியில் பிளவு. மாநில அரசு கவிழ்ந்தது. ஜூலை 11 முதல் குடியரசுத்தலைவர் ஆட்சி. அதனால் ஆறு மாதத்திற்குள், அதாவது 2009 ஜனவரி 10க்கு முன்பு தேர்தலை நடத்தியாக வேண்டும். அரசியல் சாசனம் விதித்த கெடுவுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க இந்தியத் தேர்தல் ஆணையம் ஒருமுறைகூடத் தவறியதில்லை.

ஜேம்ஸ் மைக்கேல் லிங்தோ
ஜேம்ஸ் மைக்கேல் லிங்தோ
நீ.கோபாலஸ்வாமி
நீ.கோபாலஸ்வாமி

காஷ்மீரைப் புரிந்துகொள்ளப் பல நூல்களைத் தேடித்தேடிப் படித்தேன். 1977, 1987, 1996 தேர்தல்கள் பல்வேறு காரணங்களால் குறிப்பிடத்தக்கவை. ஆனாலும் 2002 பொதுத்தேர்தல்தான் அதுவரை நடைபெற்ற தேர்தல்களிலேயே மிகவும் பாராட்டப்பட்டது. இந்தத் தேர்தலை நடத்திய முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஜேம்ஸ் மைக்கேல் லிங்தோ எழுதிய Chronicles of an Impossible Election என்ற புத்தகத்தை வரிவிடாமல் படித்தேன்.

டெல்லியில் பலமுறை கலந்தாய்வுகள் நடந்தன. அக்டோபர் 7, 8 தேதிகளில் தேர்தல் ஆணையம் காஷ்மீர் சென்றது. நானும் சென்றேன். “அவசரப்பட்டுத் தேர்தல் நடத்த வேண்டாம்; சூழ்நிலை சரியில்லை” என்று காஷ்மீரின் முக்கியமான இரண்டு அரசியல் கட்சிகள் வலியுறுத்தின. அக்டோபர் 14, டெல்லியில் தேர்தல் ஆணையத்தின் செய்தியாளர் கூட்டம். சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், டெல்லி ஆகிய ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் தேதிகள். காஷ்மீர் பற்றிய அறிவிப்பு இல்லை. “காஷ்மீர்” “காஷ்மீர்” என்று குரல் எழுப்பி னார்கள் செய்தி யாளர்கள். “இந்த நிமிடம் வரை இன்னும் முடிவு செய்யப்பட வில்லை” என்றார் தலைமைத் தேர்தல் ஆணையாளர்

நீ.கோபாலஸ்வாமி. ``குளிர்காலம் வருகிறது; அதனால் காஷ்மீர்த் தேர்தல் 2009 மார்ச் வரை நடைபெறாது என்று எடுத்துக்

கொள்ளலாமா?” என்று கேட்டார் ஒரு மூத்த பத்திரிகையாளர். “அந்த முடிவை எங்களிடம் விடுங்கள்” என்றார் கோபாலஸ்வாமி.

காஷ்மீர்த் தேர்தல் `ஒத்திவைப்பு’ என்று ஊகித்த காஷ்மீரின் முக்கியக் கட்சிகள் இரண்டும் ‘இந்த முடிவை’ வரவேற்றன. ஆனால் தேர்தல் ஆணையத்தின் செங்கல் சுவர்களுக் கிடையே வேறொரு வியூகம். ஐந்தோடு ஆறு அல்ல காஷ்மீர்த் தேர்தல், அது வேறு.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

அக்டோபர் 15-ம் தேதி தேர்தல் ஆணையத்தில் இறுதிக்கட்ட ஆலோசனை. காஷ்மீர் உள்ளிட்ட 6 மாநிலங்களின் தேர்தல் திட்டமிடல், பாதுகாப்புப் படைகள் ஒருங்கிணைப்பு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் போன்ற பணிகள் எனது பொறுப்பில். காஷ்மீர்த் தேர்தலை உடனே அறிவித்து நடத்துவது; 2009-ல் நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது ஆகிய இரண்டு சாத்தியங்களின் சாதக பாதகங்கள் பற்றிய கருத்துகளை ஆணையத்திடம் சமர்ப்பித்தேன். சட்ட வல்லுநர் மெந்திரத்தா, காஷ்மீர் மாநில களப்பொறுப்பாளர் துணை தேர்தல் ஆணையர்கள் ராஜ பட்டாச்சார்யா, ஜெ.பி. பிரகாஷ் ஆகியோரின் கருத்தையும் ஆணையம் கேட்டறிந்தது. அதன் பின்னர் தேர்தல் ஆணையம் தனது இறுதி முடிவை எடுத்தது. 19-ம் தேதி தேர்தல் அறிவிப்பு. ஏழுகட்டத் தேர்தல்.

அது ஒரு அதிரடித் தேர்தல். கட்சி சார்பு காட்டிய அதிகாரிகள் பந்தாடப்பட்டார்கள். பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் எல்லையோர கிராமத்தில் தேர்தல் நடத்தப்போன இடத்தில் வேட்பாளர் ஒருவரின் உறவினர் வீட்டில் படுத்துத் தூங்கிய தேர்தல் ஊழியர்கள், விடியும் முன் கைதுசெய்யப்பட்டார்கள்.

இதற்கிடையே மும்பையில் நவம்பர் 26-ம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலால் டெல்லியிலும் காஷ்மீரிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள். காஷ்மீர்த் தேர்தலில் அனைத்துக்கட்சிகளும் காட்டிய ஆர்வம் வியப்பளித்தது. பெரிதும் சிறிதுமாக 43 அரசியல் கட்சிகள். 87 தொகுதிகளில் மொத்தம் 517 சுயேச்சைகள் உட்பட மொத்தம் 1,354 வேட்பாளர்கள். 862 பிரசாரக் கூட்டங்கள். வரலாறு காணாத வகையில் 61.5 விழுக்காடு வாக்குப்பதிவு. பதற்றம் உச்சத்தில் இருந்த காஷ்மீர்ப் பள்ளத்தாக்குப் பகுதியிலேயே 45 விழுக்காடு வாக்குப்பதிவு. 2002-ம் ஆண்டுத் தேர்தலைவிட 18 விழுக்காடு அதிகம். தீவிரவாதத்தின் மையப்பகுதிகளான குப்வாராவில் 68.22 விழுக்காடு, பண்டிபோராவில் 59.66 விழுக்காடு வாக்குப்பதிவு.

உண்மை வாய் மூடினால் வதந்திகள் மாநாடு நடத்தும். எனவே தகவல் மேலாண்மையில் சிறப்புக் கவனம். வாக்குப்பதிவு அன்று அங்கீகரிக்கப்பட்ட செய்தியாளர்களை வாகனங்களில் மட்டுமன்றி ஹெலிகாப்டரிலும் அழைத்துச் சென்று காட்டினார்கள் காஷ்மீர் அதிகாரிகள். ‘1947 முதல் 2008 வரை காஷ்மீரில் மக்களாட்சி’ என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரை எழுதிய கருணா தாக்கூர் 2008 தேர்தலை ‘நம்பகத்தன்மையின் புதிய எல்லை’ என்று வர்ணித்தார். ‘மக்களாட்சி முறை பற்றிய புதிய நம்பிக்கை’ என்றார் அமிதாப் தாக்கூர்.

முதற்கட்டத் தேர்தலின்போது 40-க்கும் மேற்பட்ட வெளிநாட்டுத் தூதர்கள், தூதரக அதிகாரிகள் வாக்குப்பதிவை நேரில் பார்க்கச் சென்றார்கள். வாக்குச்சாவடிகளின் முன்பு திரண்டிருந்த கூட்டத்தைப் பார்த்து மலைத்துப் போனார்கள். அடுத்தடுத்த கட்டங்களில் தூதர்கள் செல்வது மிகவும் குறைந்தது. என்னுடன் தொடர்பிலிருந்த ஒரு முக்கியத் தூதரகத்தின் தகவல் தொடர்பு அதிகாரியிடம் கேட்டேன். ‘‘என்ன, போகவில்லையா?” ‘‘தொலைக் காட்சியிலேயே பார்க்கிறோம். ஹேட்ஸ் ஆஃப். வாழ்க இந்திய ஜனநாயகம்” என்றார்.

இந்த எழுச்சிமிக்க வாக்குப்பதிவால் எந்தக் கட்சி வென்றது, எந்தக் கட்சி தோற்றது என்பதைவிட, அமர்நாத் போராட்டத்தின் போது பெரும் கேள்விக்குறியான தேர்தல் அரசியல் 2008 காஷ்மீர்த் தேர்தலில் புத்துயிர் பெற்றது மாபெரும் சாதனை. வரைபடங்களில் மட்டும் பார்த்திருந்த காஷ்மீரின் எல்லை யோரப்பகுதிகளில் 2008, 2009 தேர்தல்களின் போது பறந்து பறந்து பயணம். பெரும்பாலும் ஹெலிகாப்டர் இறங்கும் இடத்திலேயே கலந்தாய்வுக்கூட்டம்.

2018 செப்டம்பர். 9 நாடுகளைச் சேர்ந்த 18 தன்னார்வலர்கள் (7 பேர் பெண்கள்) 4 நாள்கள் நடந்து ரலாகுங் கிராமத்தில் சூரிய விசைப்பலகைகளை நிறுவி வீடுகளில் மின்விளக்கு ஏற்றினார்கள். உலகின் ஒரு கடைசி மூலையை யோசித்த மூளைகளையும் நடந்த கால்களையும் வணங்குகிறேன்.

‘இரும்புச் சட்டகம்’ (Steel Frame) என்று வர்ணிக்கப்பட்டாலும் ஆட்சிப்பணி என்பது மாபெரும் அரசு இயந்திரத்தின் முக்கியமான ஓர் உதிரிபாகம்தான். அதன் இருப்பை நியாயப்படுத்துவது கோப்புகள் அல்ல; கூடுதல் மைல்கள்.

- பயணிப்பேன்

*****

காஷ்மீர்த் தேர்தல்கள் (1951 முதல்)

ஜம்மு காஷ்மீருக்குச் சிறப்பு அந்தஸ்து வழங்கும் இந்திய அரசியல் சாசன சட்டத்தின் 370வது பிரிவை 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5-ம் தேதி இந்திய அரசு ரத்துசெய்தது. அதைத் தொடர்ந்து ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஜம்மு & காஷ்மீர், லடாக் என்ற இரண்டு ஒன்றிய ஆளுகைப் பிரதேசங்களாகப் (Union Territories) பிரிக்கப்பட்டன. 1995 தொகுதி சீரமைப்பின்படி ஜம்மு & காஷ்மீரில் (பிரிக்கப்படுவதற்கு முன்பு) 111 சட்டமன்றத் தொகுதிகள். ஆறு நாடாளுமன்றத் தொகுதிகள். இவற்றில் 87 தொகுதிகளுக்கு ஆறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும். மீதமுள்ள 24 தொகுதிகள் பாகிஸ்தான் வசமுள்ள காஷ்மீர்ப் பகுதிகளுக்காக (POK) ஒதுக்கீடு செய்யப்பட்டவை.

1951-ம் ஆண்டு நடந்த அரசியல் நிர்ணய சபைத் தேர்தலில் ஷேக் அப்துல்லாவின் JKNC கட்சி அனைத்து இடங்களிலும் போட்டியின்றி வென்றது. 1956 நவம்பரில் ஜம்மு & காஷ்மீர் அரசியல் சாசனம் ஏற்கப்பட்டு 1957-ல் முதல் சட்டமன்றத் தேர்தல். அப்போது ஷேக் அப்துல்லா சிறையிலிருந்தார். அவரது கட்சி வென்றது. பக்‌ஷி குலாம் முகமது முதல் அமைச்சரானார். 1962 தேர்தலில் முறையீடுகள் நடந்ததாகப் புகார்கள் எழுந்தன. 1967, 1972 தேர்தல்கள் பற்றியும் புகார்கள். ஆனால் 1977 தேர்தல் நியாயமான தேர்தல் என்ற பொதுக்கருத்து நிலவுகிறது. இந்தத் தேர்தலில் ஷேக் அப்துல்லா வென்று மீண்டும் முதலமைச்சர் ஆனார். 1987 பொதுத்தேர்தல் - பலத்த புகார்கள் எழுந்தன. இடையில் குடியரசுத் தலைவர் ஆட்சி நடந்ததால் 1996-ல் தேர்தல் நடந்தது. 2002 தேர்தல் மிகுந்த பாராட்டு பெற்றது. PDF கட்சியின் தலைவர் முக்தி முகமது சையது முதல்வரானார். வரலாற்றுச் சிறப்புமிக்க 2008 தேர்தலுக்குப் பின் 2014 சட்டமன்றத் தேர்தலும். 2019 நாடாளுமன்றத் தேர்தலும் நடைபெற்றன. இப்போது ஜம்மு காஷ்மீர் ஒன்றியப் பிரதேசத்தின் தொகுதிகளை மறுவரையறை (Delimitation) செய்வதற்கான ஆணையத் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் நியமிக்கப்பட்டுள்ளார்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது