
சம்பல் பகுதி கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் தேர்தல் அரசியலைத் தங்களது உள்ளங்கையில் எப்படிக் கட்டுப்படுத்துகிறார்கள் தெரியுமா...?
1984-ம் ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி. பிரதமர் இந்திராகாந்தி படுகொலை செய்யப்பட்டார் என்ற செய்தி காட்டுத்தீயாய்ப் பரவத்தொடங்கிய போது எங்களது பேருந்து, பழைய டெல்லி ரயில் நிலையம் அருகே நின்றுகொண்டிருந்தது. ஆபத்தான நிலையில் பிரதமர் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வானொலிச் செய்தி கூறினாலும் ‘அவர் சுட்டுக் கொல்லப்பட்டார்’ என்ற தகவல் ஏற்கெனவே கசிந்துவிட்டது. ரயில்நிலையப் பகுதியில் இருந்த கடைகளருகே பதற்றம் பரவத்தொடங்கியது. அங்குமிங்கும் போலீஸ் வாகனங்கள்.
நாங்கள் மசூரி அகாடமியிலிருந்து டேராடூன் வந்து, அங்கிருந்து ரயிலில் டெல்லி வந்து சேர்ந்திருந்தோம். குளித்து ரெடியாகி, உத்தரப் பிரதேசத்திலுள்ள பாந்தா என்ற மாவட்டத்திற்கு கிராமப்புறப் பயிற்சிக்காக (village attachment) பேருந்தில் செல்வது பயணத் திட்டம். அது ஒரு மறக்கமுடியாத பயணம்.
டெல்லியிலிருந்து பாந்தா 600 கி.மீ; கான்பூர் வழியாகப் போக வேண்டும். வழியெல்லாம் சிறுசிறு ஊர்களிலும் பதற்றத்தின் முகம். பல இடங்களில் கடைகள் மூடப்பட்டிருந்தன. “கட்டாயம் கலாட்டா, கல்வீச்சு இருக்கும்” என்று இடையிடையே டிரைவரும் பீதியைக் கிளப்பிக்கொண்டிருந்தார்.
கான்பூரில் பதற்றம் உச்சக்கட்டத்தில் இருந்தது. உள்ளூர் அதிகாரிகள் ஒரு கடையில் இரவு உணவு ஏற்பாடு செய்திருந்தார்கள். சீக்கியர்களின் கடைகள் தாக்கப்பட்டதாகக் கேள்விப்பட்டோம். எங்கள் குழுவில் இரண்டு சீக்கியர்கள் இருந்தது எங்களுக்குக் கூடுதல் கவலை. அன்று மட்டும் 14 மணி நேரம் தொடர்ந்து பயணம் செய்தோம்.
பாந்தா சென்றதும் மாவட்ட அதிகாரிகள் இரவோடு இரவாக எங்களை சிறுசிறு குழுக்களாக ஜீப்களில் ஏற்கெனவே திட்டமிட்டபடி பல்வேறு கிராமங்களுக்கு அனுப்பிவைத்தார்கள். எங்களை ஒரு கிராம வருவாய் ஊழியரிடம் நள்ளிரவில் ஒப்படைத்துவிட்டுக் கிளம்பியது ஜீப். அது ஒரு கூட்டுறவுச் சங்க அலுவலகம். அதுதான் நாங்கள் தங்க வேண்டிய இடம். எங்களின் ஐவர் குழுவில் ஒருவர் சீக்கியர்.
குடிமைப் பணிப் பயிற்சி அதிகாரிகளுக்கு கிராம வாழ்க்கையை அறிமுகம் செய்வதற்காக இந்தப் பயணம். பெருநகரங்களில் கான்வென்டுகளில் படித்துவந்தவர்களுக்கு, “ஓ இதுதான் குளமா!” “ஓ இதுதான் எலந்தை மரமா!” என்று புதுமையாக இருக்கும். என்னைப் போன்றவர்களுக்குப் பழகியதாக இருக்கும்.
மறுநாள், விடிந்து வெளியே வந்த போதுதான் அது எப்படிப்பட்ட ஊர் என்று தெரிந்தது. அந்தத் தண்ணி இல்லாக் காட்டில் காலைக்கடன் கழிக்கச் செல்லும் கிராம மக்களில் சிலர் செம்பில் தண்ணீர் கொண்டு செல்வதோடு இன்னொரு கையில் பெரிய துப்பாக்கியைக் கொண்டு செல்வதைப் பார்த்ததும் தூக்கிவாரிப் போட்டது. உத்தரப்பிரதேசத்தின் புந்தேல்கண்ட் பகுதி அது. அண்டை மாநிலமான மத்தியப் பிரதேசத்தின் சம்பல் பள்ளத்தாக்கு போலவே கரடுமுரடான வறண்ட பூமி. துப்பாக்கி என்பது உரலும் உலக்கையும் போல ஒரு வீட்டு உபயோகப்பொருளாக இருந்தது.
மரியாதை நிமித்தமாக ஊர்த்தலைவரைச் சந்தித்தோம். அவருக்குப் பக்கத்தில் இரண்டு பேர் துப்பாக்கியோடு நின்றார்கள். ஒரு நிமிடம் மதுரையில் எப்போதோ பார்த்த ‘ஷோலே’ படம் நினைவுக்கு வந்தது. அப்படியே அதே காட்சி. மாலையில் அந்த ஊரிலுள்ள ராதாகிஷன் (ராதாகிருஷ்ணன்) கோயிலுக்குப் போகலாம் என்று உள்ளூர் ஆர். ஐ ஐடியா கொடுத்தார். ஊர்க்காரர்களையும் சந்திக்கலாம் என்று நினைத்து கோயிலுக்குப் போனோம். ஆரத்தி காண்பித்தார்கள். அப்போது எங்களது குழுவிலிருந்த சீக்கிய நண்பரும், இன்னொருவரும் கோயிலில் விற்கப்பட்ட ‘பேடா’ எனப்படும் பிரசாதத்தை வாங்கி சாமிக்குப் படைத்துவிட்டு அங்கிருந்தவர்களுக்கும் வழங்கினார்கள். நானும் சாப்பிட்டேன்.
பிறகு அனைவரும் நாங்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்துவிட்டோம். இரவு 11 மணிக்கு மேல் திடீரென்று யாரோ கதவைத் தட்டும் சத்தம். திறந்து பார்த்தால் உள்ளூர்ப் பள்ளி ஆசிரியர். ஏற்கெனவே கோயிலில் எங்களைச் சந்தித்தவர். அவர் கொண்டு வந்தது செய்தி அல்ல, குண்டு!
‘எங்களுடன் இருந்த சீக்கியரை எப்படியாவது உடனே வேறு இடத்திற்கு அனுப்ப வேண்டும்’ என்றார். ஏன் என்று கேட்டோம். ‘ஊர்க்காரர்கள் நள்ளிரவில் வந்து அவரைத் தாக்கப்போகிறார்கள். இந்திராகாந்தி கொலை செய்யப்பட்டதை கோயிலில் அவர் இனிப்பு வழங்கிக் கொண்டாடினாராம். அதனால் ஊர்க்காரர்கள் கோபமாக இருக்கிறார்கள்’ என்றார் அவர். பெரிய ஆபத்து வருகிறது என்று அவர் பீதியைக் கிளப்பினார்.
ஊர்க்காரர்கள் இங்கு வருவதற்கு முன்பு நாங்களே ஊருக்குள் போய் அவர்களைச் சந்திக்கலாம் என்று முடிவு செய்தோம். சீக்கிய நண்பரை யார் கண்ணிலும் படாதபடி அவருக்குக் காவலாக ஒருவரை வைத்துவிட்டு ஆசிரியருடன் நானும் என் நண்பர்கள் இருவரும் கிளம்பினோம்.
கும்மிருட்டாக இருந்தது சம்பல் பள்ளத்தாக்கு. சுட்டுப் போட்டாலும் இந்தியில் நாலு வார்த்தைகூடப் பேசத் தெரியாதவன் நான். என்னுடன் வந்த இருவரும் நன்றாக இந்தி பேசுபவர்கள். நேராக ஊர்த்தலைவரின் வீட்டுக்குப் போனோம். வாசலுக்கு வெளியே கட்டிலில் உட்கார்ந்திருந்தார். அப்போதும் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நின்றார்கள்.
ஊரில் நடக்கும் பேச்சு பற்றி ஆசிரியர் சொன்னார். அது அந்த ஊர்த்தலைவருக்கு ஏற்கெனவே தெரிந்திருந்தது. “அந்த சர்தார் ஏன் இனிப்பு கொடுத்தார்” என்று அவர் கேட்டார்.
என்னுடன் வந்தவர்களுக்கு நன்றாக இந்தி தெரிந்தாலும் அவர்கள் இறங்கியடித்துப் பேசாமல் இருப்பதுபோல் தோன்றியது. அவர்களை மொழிபெயர்க்கும்படி கேட்டுக்கொண்டு படபடவென்று ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தேன்.
அந்தச் சீக்கிய பயிற்சி அதிகாரியின் அப்பா பஞ்சாபில் பிரபலமான காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ; பஸ்ஸில் வரும்போது இந்திராகாந்தியின் மரணம் குறித்து அதிகம் வருந்தியவர் அவர்தான்; அந்த பேடாவுக்குக் காசு கொடுத்தது நாங்கள் தான், அவர் சும்மா வழங்கியிருக்கிறார் என்று கற்பனையாக வாய்க்கு வந்ததையெல்லாம் சொன்னேன். நண்பர்கள் அதை ஊர்த்தலைவருக்கு இந்தியில் சொன்னார்கள். எத்தை தின்னால் பித்தம் தெளியும் என்ற நிலை. பொய்மையும் வாய்மைதானே, நன்மை பயக்கும் எனில்.
பேசிக்கொண்டு இருக்கும்போதே ஊர்க்காரர்கள் அறைக்குப் போய் எதுவும் செய்துவிடுவார்களோ என்று பயம் வந்தது. எனது இரு நண்பர்களையும் ஆங்கிலத்தில் அலர்ட் ஆக்கிவிட்டு திடீரென்று ஊர்த்தலைவரின் காலைத் தொட்டு வேண்டுகோள் விடுத்தேன். என் நண்பர்களும் அவரின் காலைத் தொட்டு ஆசீர்வாதம் கேட்டார்கள். கடைசியில் அதுதான் ஒர்க் அவுட் ஆனது.
அந்த ஆசிரியரும் தைரியமாகப் பேசினார். “அதிகாரிகள் சம்பந்தப்பட்ட விஷயம் இது. பெரிய பிரச்னை ஆகிவிடும்” என்று அவர் எடுத்துச் சொன்னார். காதைத் திருகிக்கொண்டே யோசித்த ஊர்த்தலைவர், “அப்படியானால் அந்த சர்தாரை இந்த ஊரிலிருந்து உடனே அனுப்பிவிடுங்கள். இங்கே இருப்பவர்கள் ஒரு மாதிரியானவர்கள்” என்று அனுமதி கொடுத்தார்.
நாங்கள் தலைதெறிக்க அறைக்கு ஓடி வந்தோம். சீக்கியர் பயத்தில் உறைந்துபோய் இருந்தார். ஆசிரியர் தனது மோட்டார் சைக்கிளில் அவசரமாக அந்தப் பகுதியின் தாசில்தார் இருக்கும் சிறுநகருக்கு அவரை அழைத்துச் சென்றார். அவர் தாசில்தாரைப் பார்த்து அங்கிருந்து மாவட்டத் தலைநகருக்கு ஜீப்பில் சென்று கலெக்டரிடம் தஞ்சம் புகுந்த செய்தியெல்லாம் மறுநாள்தான் தெரியவந்தது. இரவெல்லாம் தூக்கம் இல்லை.
ஐந்தாறு நாள்கள் கழித்து பாந்தாவிலிருந்து நாங்கள் கிளம்பியபோது எனக்குத் தெரியாது, இந்தத் ‘தமிழ் நெடுஞ்சாலை’ 23 ஆண்டுகளுக்குப் பின் ஒருநாள் அதே மாவட்டத்தில் என்னை ஹெலிகாப்டரில் கொண்டுவந்து இறக்கிவிடும் என்பது.

டெல்லியிலும் இன்னும் பல இடங்களிலும் அப்போது நடந்த வன்முறைகள் பற்றி ரேடியோ மூலம் அறிந்ததுதான். நாங்கள் மசூரி அகாடெமிக்குத் திரும்பியபோது மற்ற குழுக்களில் வெவ்வேறு மாநிலங்களுக்கு / மாவட்டங்களுக்குச் சென்ற பயிற்சி அதிகாரிகளும் இதுபோன்ற பல அதிர்ச்சி அனுபவங்களுடன் வந்து சேர்ந்தார்கள்.
சில இடங்களில் சீக்கிய பயிற்சி அதிகாரிகள் தாக்கப்பட்டிருந்தார்கள். அவர்கள் பயணம் செய்த பஸ்கள், ஜீப்கள் தாக்கப்பட்டுள்ளன. சிலர் துரத்தியவர்களிடமிருந்து ஓடித் தப்பியிருந்தனர். அனைவரின் முகத்திலும் அச்சமும் அதைவிட அதிகமாகக் கோபமும்.
மனசே சரியில்லை. அப்போதுதான் சீக்கியர் தலைப்பாகை அணிந்து வகுப்பிற்குச் செல்வது; மசூரியின் சுற்றுலாப் பயணிகள் நிறைந்த ‘மால்’ வீதியில் நடப்பது என்ற அந்த யோசனை எனக்குத் தோன்றியது. கர்நாடகத்தைச் சேர்ந்த எனது இன்னொரு நண்பரும் இதில் சேர்ந்து கொண்டார்.
2007-ம் ஆண்டு ஏப்ரலில் ஒருநாள். சட்டமன்றத் தேர்தல் ஏற்பாடுகளைக் கண்காணிப்பதற்காக உத்தரப்பிரதேசத்தின் 75 மாவட்டங்களுக்கும் தொடர் பயணம். எனது ஹெலிகாப்டர் பாந்தா நகரில் மெல்லத் தரையிறங்குகிறது. என்னுடன் மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரியும், மத்தியத் துணை ராணுவப் படைகளின் ஒருங்கிணைப்பாளரும்.
மாவட்ட ஆட்சித்தலைவராக இருந்த பெண் அதிகாரியும் மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளும் வன்முறையற்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை விளக்குகிறார்கள். சம்பல் பகுதி கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் தேர்தல் அரசியலைத் தங்களது உள்ளங்கையில் எப்படிக் கட்டுப்படுத்திவந்தார்கள் என்பது பற்றி விவரித்தார்கள். அந்தப் பகுதி மக்கள் யாருக்கு ஓட்டு போடுவது என்பது பற்றிக் கொள்ளைக்கூட்டத் தலைவர்கள் ‘ஃபிர்மான்’, அதாவது ‘கட்டளை’ வெளியிட்டு, தேர்தலைக் கேலிக்கூத்தாக்கிய சம்பவங்கள் பற்றி உயரதிகாரிகள் விளக்கினார்கள். நானும் அதுபற்றிப் பல செய்திகளை விரிவாகப் படித்துவிட்டுதான் அங்கே சென்றிருந்தேன்.
மான் சிங், லாலா ராம், விக்ரம் மல்லா, பாக்காட் போன்ற கும்பல் தலைவர்களின் வரிசையில் கடைசிப் ‘பெரிய தல’ நிர்பய குஜ்ஜர். எட்டவா பகுதியில் கோலோச்சிவந்த இந்த ஆசாமி போலீஸிடம் ஹெலிகாப்டரில் வந்துதான் சரண்டர் ஆவேன் என்று அடம்பிடித்தாராம். கடைசியில் 2004-ம் ஆண்டு ‘போலீஸ் என்கவுன்டருக்கு’ பலியானார். அதற்குப் பின்பு கொஞ்சம் நிலைமை மாறியது. இருந்தாலும் பாந்தா மற்றும் அண்டை மாவட்டங்களில் தாதுவா என்ற கொள்ளைக்காரனின் அடாவடித்தனம் தொடர்ந்துவந்தது. 2007 தேர்தலில் எந்த கும்பலையும் வாலாட்ட விடக்கூடாது என்பதில் உறுதியாக இருந்தோம்.
பாந்தா போலீஸ் மைதானத்திலிருந்து மேலெழும்பிப் பறக்கும்போது ஹெலிகாப்ட ரிலேயே மதிய உணவைச் சாப்பிட்டோம். அப்போது என்னுடன் பயணித்த சக அதிகாரிகளிடம் 1984 பாந்தா அனுபவத்தைச் சொன்னேன். “மசூரியில் நீங்கள் தலைப்பாகை அணிந்திருந்த போட்டோ இருக்கிறதா?” என்று கேட்டார் மத்தியத் துணை ராணுவ ஒருங்கிணைப்பாளர் கரம்வீர் சிங். “இருக்கிறது, அனுப்பிவைக்கிறேன்” என்றேன்.
கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளாலும் நம்பிக்கையூட்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளாலும் 2007 பொதுத் தேர்தல் ஒரு துளி வன்முறையுமின்றி நடந்து முடிந்தது. தேர்தல் முடிவுகள் வெளிவந்து இரண்டே மாதங்களில் தாதுவாவும் அவனின் ஐந்து கூட்டாளிகளும் சிறப்புக் காவல் படையின் வேட்டைக்கு இரையானதைத் தொலைக்காட்சிச் செய்தியின் மூலம் தெரிந்துகொண்டேன். அத்துடன், அப்பகுதிகளில் கொள்ளைக் காரர்களின் ‘தேர்தல் பணிகள்’ முடிவுக்கு வந்தன.
வாழ்க்கை மிகவும் விநோதமானது. குறிப்பெழுதி வைக்காவிட்டாலும் துல்லியமாகத் துலங்குகின்றன மீள் நினைவுகள். இதோ, பாந்தாவில் கலந்தாய்வு செய்துவிட்டுக் கிளம்பும் போது அந்த அலுவலகத்தின் வராண்டாவில் சில உள்ளூர்ப் பத்திரிகையாளர்கள் என்னை வழிமறித்து மைக்கை நீட்டுகிறார்கள்... அவர்களில் ஒருவர், என்னிடம் `வணக்கம், வணக்கம்’ என்று மீண்டும் மீண்டும் தமிழில் சொல்கிறார். “நல்லாருங்க” என்று தனக்குத் தெரிந்த இன்னொரு தமிழ் வார்த்தையையும் அவர் பயன்படுத்துகிறார். எப்படி தமிழ் தெரியும் என்று அவரிடம் ஆங்கிலத்தில் கேட்கிறேன். ஒரு முறை வேலூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகச் சொன்னார். நலம் விசாரித்தேன். ‘மதராசிகள் நல்லவர்கள்’ என்று அவராகவே இந்தியில் தன்னுடன் இருந்தவர்களிடம் சொன்னார். நான் சிரித்து விடைபெற்றேன்.
- பயணிப்பேன்...
*****
அரசியல் வரைபடங்களில் மாநிலங்கள், மாவட்டங்கள் என்ற வரையறைகள் இருந்தாலும் நில அமைப்பின் தொடர்ச்சி மற்றும் வட்டாரப் பண்பாட்டின் அடிப்படையில் சில பகுதிகளை அடையாளப்படுத்துகிறோம். அப்படிப்பட்ட ஓர் அடையாளம்தான் புந்தேல்கண்ட். மத்திய மற்றும் வட இந்தியாவிலுள்ள சில மலைப் பகுதிகள், விந்திய மலைத்தொடரை ஒட்டிய சமவெளிப்பகுதி ஆகியவை புந்தேல்கண்டில் அடங்கும். உத்தரப்பிரதேசத்தின் ஏழு மாவட்டங்களும் மத்தியப்பிரதேசத்தின் ஆறு மாவட்டங்களும் சேர்ந்த பகுதி. யுனெஸ்கோவின் உலக பாரம்பரியங்களில் ஒன்றான கஜுராஹோ சிற்பக் கோயில்கள் புந்தேல்கண்ட் மலைப் பகுதியில் மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ளது. இந்தியாவின் முக்கியமான வரலாற்றுத் தளமான கலிஞ்சர் கோட்டை மற்றும் மகோபா சூரிய கோயில் உத்தரப்பிரதேசத்தில் உள்ளது. புந்தேல்கண்டில் பல சமண புனிதத் தலங்களும் உள்ளன. வறண்ட நிலப்பகுதியான புந்தேல்கண்ட் வளர்ச்சியில் பின்தங்கிய பகுதியாகவே இருக்கிறது.
- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது