சினிமா
கட்டுரைகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 33 - மதிப்புறு முனைவர்!

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
பிரீமியம் ஸ்டோரி
News
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்

பெரியார் மீது அவருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. சொல்லிச் சொல்லி அடித்த பிரம்படியில் உள்ளங்கை பழுத்தது...

2017 ஆகஸ்டு 28. திருச்சியிலிருந்து வல்லம். என்னுடன் நண்பர்கள் துளசிதாசன், சங்கர சரவணன், ‘துகில்’ ராஜேந்திரன், ராஜன், விஸ்வேஷ். பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் 25வது பட்டமளிப்பு விழாவிற்குத் தலைமை விருந்தினராகச் செல்கிறேன். அதுமட்டுமல்ல, சிந்துவெளிப்பண்பாடு பற்றிய எனது ஆய்வுகளுக்காக, குறிப்பாக 2016-ல் வெளிவந்த ‘சிந்துவெளிப் பண்பாட்டின் திராவிட அடித்தளம்’ என்ற நூலிற்காக மதிப்புறு முனைவர் பட்டம் வழங்க பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் முடிவு செய்திருந்தது.

நெடுஞ்சாலையில் கார் விரைகிறது. மனசு நத்தம், மதுரை, மணிப்பால் என்று எங்கெங்கோ வட்டமடிக்கிறது. மாதங்களைத் தூக்கி இடுப்பில் வைத்துக்கொண்டு ஆண்டுகள் நடந்தன. நேற்றுப்போல் இருக்கிறது. நெடுங்காலம் ஆகிவிட்டது.

1980-ம் ஆண்டில் ஒருநாள். நத்தம் மாரியம்மன் கோயில் அருகே இருக்கும் எங்கள் வீட்டிற்கு அஞ்சல் அலுவலக ஊழியர் ஒருவர் வந்தார். மதுரைப் பல்கலைக்கழகத்திலிருந்து டிரங்க்கால். அவரது சைக்கிளின் பின்சீட்டில் அமர்ந்து விரைந்தேன். தமிழியல்துறை ஊழியர் ஒருவர் பேசினார். ‘கடிதம் அனுப்பியிருக்கிறோம், கிடைத்ததா’ என்றார். ‘இல்லை’ என்றேன். துறைத்தலைவரை உடனே வந்து பாருங்கள் என்றார். அன்றே அஞ்சல் அட்டையும் வந்து சேர்ந்தது. மதுரை சென்றேன்.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

“பாலகிருஷ்ணன், நீங்கள் ஏன் எம்.பில் படிக்க விண்ணப்பிக்கவில்லை? கடைசி நாள் நெருங்குகிறது” என்றார் பேராசிரியர் முத்து சண்முகம்.

“விரும்பவில்லை சார்… நான் சென்ற ஆண்டு (1979) மு.வ அரங்கில் நடந்த ஒரு விவாதத்தின் போது ‘முனைவர் பட்டத்திற்காக ஆராய்ச்சி செய்ய மாட்டேன்’ என்று அறிவித்தேன். அதன்படி நிற்கவிரும்புகிறேன்” என்றேன்.

“அது ஒரு காரணமா? ஏதோ உணர்ச்சி வசப்பட்டுச் சொன்னது. இளங்கலை, முதுகலை இரண்டிலும் முதலிடம் பெற்ற மாணவர். கட்டாயம் நீங்கள் மேற்படிப்பு படிக்கவேண்டும். அதனால்தான் கூப்பிட்டேன்.”

“என்னை மன்னித்துவிடுங்கள் சார். நான் அந்தக் கூட்டத்தில் இன்னொன்றையும் அறிவித்தேன். ‘எனக்கு வேறு வேலை கிடைக்கவில்லை என்றால் பால்பண்ணை தொடங்கி, பால்விற்பேன்’ என்று. அதன்படி மதுரை ஆவின்பால் மேலாளரை சென்ற வாரம் சந்தித்தேன். அவரும் வங்கிக் கடனுக்கு ஏற்பாடு செய்வதாகச் சொல்லியிருக்கிறார்” என்றேன். என் பேராசிரியர் அதிர்ச்சியடைந்தார்.

``நான் தமிழை விட்டு விலகமாட்டேன். வேறு வேலைக்குப் போனாலும், வேறு தொழில் எதுவும் தொடங்கினாலும் உறுதியாக ஆய்வுகள் செய்வேன். அது துறைசாராத சுயேச்சையான ஆய்வாக இருக்கும்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பினேன்.

சிலவாரங்களில் தினமணி நாளிதழிலிருந்து கடிதம் வந்தது. ஆசிரியர் ஏ.என்.சிவராமனைச் சந்தித்தேன். உதவி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். நான்கு ஆண்டுகள் கழித்து, குடிமைப்பணியில் ஒடிசாவுக்குச் சென்றேன்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம்

1997-ம் ஆண்டில் ஒருநாள். பேராசிரியர் முத்து சண்முகத்தை மீண்டும் சந்தித்தேன். அப்போது சென்னையில் ஒன்றிய அரசுப்பணியில் நான். சனிக்கிழமைகளில் செம்மஞ்சேரியிலுள்ள ஆசியவியல் நிறுவனத்திற்குச் செல்வேன். நிறுவனத் தலைவர் ஜி.ஜான் சாமுவேல், நான் அமெரிக்கன் கல்லூரியில் புகுமுகவகுப்பு படிக்கும்போது தமிழ்த்துறையில் பணியாற்றியவர். பணி ஓய்விற்குப் பின்பு பேராசிரியர் முத்துசண்முகம் ஆசியவியல் நிறுவனத்தின் ஆய்விதழ் ஆசிரியராகச் செயல்பட்டார். தமிழ் என்ற சொல்லை இடப்பெயர் தரவுகளின் ஊடாகப் புலன்விசாரிக்கும், எனது முதல் ஆங்கில ஆய்வுக்கட்டுரை அந்த இதழில் வெளியானது. “இந்த ஒரு கட்டுரைக்காகவே டாக்டர் பட்டம் கொடுக்கலாம்” என்றார் என் பேராசிரியர். 1980 உரையாடலை இருவரும் நினைவுகூர்ந்தோம்.

2002 -2003 வாக்கில் எனது கோனார்க் ஆய்வுகள் கவனம் பெற்றபோது, ‘முனைவர் பட்ட ஆய்வு செய்தால் என்ன’ என்று வரலாற்றாளரும் பல்கலைக்கழகத் துணைவேந்தருமான கே.எஸ்.பெஹரா கேட்டார். பழைய உறுதிமொழியைச் சொன்னேன். 2003-ல் வரலாற்றுப் பேராசிரியர் ரொமிலா தாப்பரை டில்லியில் அவரது வீட்டில் சந்தித்தேன். ஒருமணிநேரத்திற்கும் மேல் அவரிடம் பேசினேன். அதுவரை சிந்துவெளிப் பண்பாடு குறித்த எனது புரிதல்களை தரவுகளைக் கூறி ஆலோசனை கேட்டேன். ‘‘நீங்கள் இறங்கியிருப்பது ஒரு பல்துறை ஆய்வு (Multidisciplinary Research). எனவே இதில் வரலாறு, மொழியியல், மானுடவியல் என்ற ஏதேனும் ஒரு களத்தை மட்டும் முன்னிலைப்படுத்தினால் உங்களது ஆய்வின் தனித்தன்மையை பாதிக்கும். சரியான தேடலில் ஒரு புதியபாதையில் நீங்கள் போகிறீர்கள். இப்படியே தொடருங்கள்’’ என்றார். அந்த வார்த்தைகள் எனக்குத் தெம்பளித்தன.

தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தரான வ.ஐ.சுப்பிரமணியம் திருவனந்தபுரத்தில் திராவிட மொழிகள் ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவி நடத்திவந்தார். அவரது நேரடி அறிமுகம் கிடைத்தது பெரும்பேறு. அந்நிறுவனத்தின் IJDL (International Journal of Dravidian Linguistics) ஆய்விதழில் எனது இரண்டு ஆய்வுக்கட்டுரைகள் வெளியாகின. இரண்டுமே ஒடிசா பற்றியவை. ஒரு மொழியியல் கருத்தரங்கிற்காக புவனேஸ்வரம் வந்த அவரை வீட்டிற்கு அழைத்தேன். “முனைவர் பட்டம் பெறுவது முக்கியமில்லை. ஆனால் கட்டுரைகள் தொடர்ந்து எழுதுவது முக்கியம்” என்றார். “ஆட்சிப்பணியின் அழுத்தத்திற்கிடையே இவர் தொடர்ந்து எழுவது உங்கள் கைகளில்தான் இருக்கிறது அம்மா. எனக்கு நீங்கள் உறுதியளிக்கவேண்டும்” என்று அவர் என் மனைவியிடம் சொன்னபோது இரண்டுபேருமே நெகிழ்ந்துபோனோம். என் கண்முன் நிற்கிறது அந்தக்காட்சி.

 முத்து சண்முகம்
முத்து சண்முகம்
வ.ஐ.சுப்பிரமணியம்
வ.ஐ.சுப்பிரமணியம்

2007-ம் ஆண்டு. இந்திய இடப்பெயர் ஆய்வுச் சங்கம் மற்றும் கல்வெட்டியல் சங்கத்தின் ஆண்டு நிகழ்வு கர்நாடக மாநிலம் மணிப்பாலில் நடந்தது. நான் தலைமையுரை ஆற்ற டில்லியிலிருந்து வந்திருக்கிறேன். ‘பணிச்சூழல் கருதி, பயணம் செய்ய இயலாது’ என்று நான் தெரிவித்ததைத் தொல்லியலாளர் டி.சத்தியமூர்த்தி மூலம் அறிந்த தலைமைத் தேர்தல் ஆணையாளர் கோபாலஸ்வாமி என்னை வலுக்கட்டாயமாக மணிப்பால் அனுப்பிவைத்தார். ``எத்தனை பேருக்கு இப்படி வாய்ப்பு கிடைக்கும் பாலா” என்றார்.

மணிப்பால் பல்கலைக்கழகத் துணைவேந்தர் தனது உரையில் என்னை ‘டாக்டர் பாலகிருஷ்ணன்’ என்று குறிப்பிட்டார். நான் நெளிந்தேன். எனது உரையின்போது அதைச் சுட்டிக்காட்டி ``நான் டாக்டர் இல்லை” என்றேன். எனது உரை முடிந்ததும், துணைவேந்தர் மீண்டும் ஒருமுறை என்னை ‘டாக்டர் பாலகிருஷ்ணன்’ என்று அழைத்துவிட்டு, ‘இந்த உரைக்காக மட்டும் ஒரு டாக்டர் பட்டம் தரலாம்’ என்றார். புன்னகைத்தேன். கிளைட் அகமத் விண்டர்ஸ் போன்ற ஆய்வாளர்களின் கட்டுரைகளிலும் ‘டாக்டர் பாலகிருஷ்ணன்’ என்று குறிப்பிடப் பிட்டிருந்ததை ஓரிரு முறை மின்னஞ்சலில் சுட்டிக்காட்டியுள்ளேன்.

இந்தியா முழுவதும் எத்தனையோ பல்கலைக்கழகங்கள், உயர் கல்விக்கூடங்கள், மேலாண்மை நிறுவனங்களில் பேசியிருப்பேன். என்னவோ தெரியவில்லை, நான் தமிழ் படித்த மதுரை காமராசர் பல்கலைக்கழகத் தமிழ்த்துறைக்குச் சென்று பேசும் வாய்ப்பு ஒருமுறைகூட நேர்ந்ததில்லை. முரண்தான்.

2012-ம் ஆண்டு. 32 ஆண்டுகள் கழித்து செம்மொழி சங்க இலக்கியப் பயிலரங்கைத் தொடங்கிவைத்து ஆய்வுரை நிகழ்த்த தமிழ்த்துறையின் அழைப்பு. அதே இடம். அதைவிட வியப்பு, மேடையில் பேராசிரியர் தமிழண்ணல். முன்வரிசையில் ஓய்வுபெற்ற மற்றும் பணியாற்றும் பேராசிரியர்கள். “பால் வியாபாரம் செய்வேன்” என்ற என்னை சமாதானப்படுத்திய அதே பேராசிரியர். தமிழண்ணல் தலைமையில் பேசப்போகிறேன். காலம் எவ்வளவு வியப்பானது. உடன்பட்டு நடந்த இசைவுகளாலும், முரண்பட்டுக் கடந்த அசைவுகளாலும் ஆன பழைய நினைவுகள். மேடையில் பேசும் அதே நேரத்தில் தன்னைப் பார்வையாளனாகவும் உணர முடியுமா? அன்று உணர்ந்தேன். ஜன்னல் வழியே எட்டிப்பார்த்தேன். தோழன் முருகேச பாண்டி யனுடன் அந்த மரச்சாலையில் `மாமா’ என்று கதைபேசி நடந்து கொண்டி ருப்பதும் நான்தான். அது ஒரு காலம்.

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தின் மதிப்புறு முனைவர் பட்டம்

பெரியார் மணியம்மை பல்கலைக்கழகம் வந்து விட்டது. 1988-ல் மகளிருக்கான பொறியியல் கல்லூரியாகத் தொடங்கியது. அப்போது அது உலகிற்கொரு புதுமை. பின்னர் இருபால் மாணவர் பயிலும் பல்கலைக்கழகமாக வளர்ந்தது. பெண் கல்வியும் பெண்ணுரிமையும் சுயமரியாதை இயக்கத்தின் முன்னுரிமைகள். அதைப்போலவே ‘கிராமம்’ என்ற அடையாளம், வேற்றுமையை வளர்க்கும் குறியீடாக இருக்கக்கூடாது என்ற பெரியாரின் கருத்தியலை உள்வாங்கி கிராமியச் சூழலில் நவீனத் தொழில்நுட்பத்துடன் கட்டமைக்கப்பட்ட அந்த வளாகம் ஓர் உருவகம்போலத் தோன்றியது.

‘மதிப்புறு முனைவர்’ பட்டம் எனக்கு அளிக்கப்படுவதன் காரணம் பற்றி, பல்கலைக்கழகத்தின் வேந்தர் கி.வீரமணி பேசுகிறார். இன்று முதல் பாலகிருஷ்ணன், ‘டாக்டர் பாலகிருஷ்ணன்’ என்று அவர் மகிழ்ச்சியுடன் அறிவித்தார். பல்கலைக்கழகத் துணைவேந்தர் தகுதியுரையை வாசித்தளித்தார்.

இங்கும் அங்கும் அலைந்து திரிந்து கடைசியில் பெரியார்- மணியம்மையின் பெயரில் அமைந்த பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா உரையை நிகழ்த்தி, எனது ஆய்வு நூலிற்காக மதிப்புறு முனைவர் பட்டம் பெற்று மகிழ்வதற்காகத்தான் முனைவர் பட்டம் பெற ஆய்வு செய்யமாட்டேன் என்று அடம்பிடித்தேனோ!

காமராஜர் பல்கலைக்கழகத்திற்கும் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான இந்தப் பயணத்தை நான் நெஞ்சார நேசிக்கிறேன். அவ்வளவெல்லாம் பெரிய தூரம் இல்லை; அவ்வளவு எளிதான பயணமும் இல்லை.

தந்தை பெரியாரை ஒரே ஒருமுறை அருகில் இருந்து பார்த்திருக்கிறேன். அவரது உரையைக் கேட்டிருக்கிறேன். தல்லாகுளத்தில் கருப்பணசாமி கோயில் அருகே ஒரு நூலகம் இருந்தது. எனது பள்ளிக்கூடத்திற்கு அருகேதான். பெரியார் வேனிலிருந்து இறங்குகிறார். `மணி அடித்துவிட்டது’ என்று என் நண்பர்கள் ஓடுகிறார்கள். நான் அங்கேயே நின்று விட்டேன். மிகத்தாமதமாக பயந்துகொண்டே வகுப்பிற்குச் சென்றபோது, நான் பெரியார் பேச்சைக் கேட்டுக்கொண்டு இருந்தது ஆசிரியருக்குத் தெரிந்திருந்தது. பெரியார் மீது அவருக்கு அப்படி என்ன கோபமோ தெரியவில்லை. சொல்லிச் சொல்லி அடித்த பிரம்படியில் உள்ளங்கை பழுத்தது.

அது எந்த ஆண்டு? எந்த மாதம்? அப்போது நான் ஆறாவது வகுப்பா, ஏழாவது வகுப்பா? மதுரையிலிருக்கும் என் பள்ளித்தோழன் ராஜனை அலைபேசியில் அழைத்தேன். அடுத்த அரை மணிநேரத்தில் அந்த இடத்தில் ராஜனின் களவிசாரணை. நூலகம் இடம் மாறிவிட்டதாம். தற்போதைய புகைப்படங்கள் வாட்ஸ்அப்பில். பெரியார் வந்ததாகச் சொல்கிறார் ஒரு பெரியவர். ஆனால் ஆண்டு தெரியவில்லை.

திராவிடர் கழக அமைப்புச் செயலாளர் வீ.அன்புக்கு வாட்ஸ்அப் அனுப்பினேன். மதுரை தல்லாகுளத்தில் பெரியார் ஒரு நூலகத்தில் பேசிய நாள், விவரம் கண்டுபிடிக்க முடியுமா? சில மணி நேரங்களில் பதில் வருகிறது ‘16.02.1970 காலை 9.30 மணிக்கு’ என்று. அதற்கு ஆதாரமாக 11.03.1970 தேதியிட்ட விடுதலை இதழ்.

பட்டமளிப்பு விழா உரை
பட்டமளிப்பு விழா உரை

உலகளாவிய பொது உண்மை களுக்கு வெளியே ஒவ்வொருவருக்கும் ஒரு சொந்த உண்மையும் இருக்கிறது. அதற்கு வடிவம் கொடுப்பதும் அவரவர்தான். சொந்த உண்மை திரிக்கப்படாதது; அதனால் இயல்பானது. அதற்கான அளவுகோலும் அங்கீகாரமும் வெளியில் இல்லை. சுயத்தை நிறுக்க கையில் இருக்கிறது ஒரு சொந்தத் தராசு. எனது மகிழ்ச்சி எனது சொந்தப் பொறுப்பாக இருக்கிறது. அதை நான் எப்போதும் என் இயல்பில் பின்தொடர்ந்து போகிறேன். உண்மையில் சொந்த உண்மை என்பது வேறொன்று மில்லை, மனசுதான்.

இப்போதெல்லாம் மேடைகளிலோ பதிவுகளிலோ ‘டாக்டர் பாலகிருஷ்ணன்’ என்று யாரும் கூறிவிட்டால் நான் நெளிவதில்லை. விளக்கம் கொடுப்பதையும் விட்டுவிட்டேன்.

- பயணிப்பேன்