மற்ற எபிசோடுகள்
Published:Updated:

தமிழ் நெடுஞ்சாலை - 5 - ‘வாக்குரிமை’ என்ற சமத்துவம்

தமிழ் நெடுஞ்சாலை
பிரீமியம் ஸ்டோரி
News
தமிழ் நெடுஞ்சாலை

‘கனவுத் தேர்தலை’ நான் காலமெல்லாம் மறக்கமாட்டேன்...

போபால் நகரம். இரவு மணி 11. அந்த அச்சுக்கூடத்தின் கதவுகளை ஒரு அரசு ஊழியர் பரபரப்பாகத் தட்டுகிறார். தனது அடையாள அட்டையைக் காட்டிய அவர் “எனது பகுதியில் வாக்காளர் ஒருவர் இன்று மாலை இறந்துவிட்டார். அவரது பெயரை பட்டியல் அச்சாகும் முன்பு நீக்க வேண்டும்” என்று ஒற்றைக் காலில் நிற்கிறார். வந்தவர் ஒரு ‘பூத் லெவல் ஆபீசர்’, அதாவது B.L.O. குறிப்பிட்ட ஒரு வாக்குச்சாவடியின் வாக்காளர் பட்டியலுக்கு அவர்தான் பொறுப்பு. 

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

அது 2008 மத்தியப்பிரதேச சட்டமன்றத் தேர்தல் நடந்துகொண்டிருந்த நேரம். போபாலில் நடந்த கலந்தாய்வின்போது, மாவட்ட கலெக்டர் இந்தச் சம்பவத்தைத் தேர்தல் ஆணையத்திடம் விவரித்தார். ‘இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இல்லை’ என்று ஒவ்வொரு  B.L.O-வும் கையெழுத்திட வேண்டும் என்ற தேர்தல் ஆணையத்தின் கட்டளையின் தாக்கம் அது.

வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்திற்கு தனிப்பட்ட யாரும் பொறுப்பில்லை என்றிருந்த எதார்த்தத்தை உள்வாங்கி அதற்கு நடைமுறைத் தீர்வாக B.L.O என்ற ‘கதாபாத்திரத்தை’ உருவாக்கி, செயல்வடிவம் கொடுக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

இந்தியத் தேர்தல் சட்ட விதிகளில் B.L.O என்ற வார்த்தையே கிடையாது. ஆனால், தேர்தல் மேலாண்மையின் ஓர் உத்தியாக, தேவை கருதி 2005-2007 காலகட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த ‘பொறுப்பு’, இந்தியத் தேர்தல்களின் தவிர்க்கமுடியாத கலைச் சொல்லாகிவிட்டது. இப்போது இந்தியாவில் 10 லட்சத்துக்கும் அதிகமான B.L.O-க்கள் இருக்கிறார்கள்.

தென்னிந்தியாவின் ஒரு பெரு நகரத் தொகுதியில் மக்கள் தொகையைவிட அதிகமானோர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருந்தார்கள். ஒரு வட இந்திய மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரியின் பெயர் அவர் சப்-கலெக்டராக வசித்த பங்களாவிலேயே 27 ஆண்டுகளாகத் தங்கிவிட்டது. கள்ள ஓட்டுகளைத் தடுக்கும் முயற்சியாக அறிமுகம் செய்யப்பட்ட புகைப்பட வாக்காளர் பட்டியல்களில் எதிர்பாராத புதிய சிக்கல்கள். இது ஒரு வில்லங்கமான பூமி. ஒரு வாக்காளரின் பெயருக்கு எதிரே அவரது வளர்ப்பு நாயின் படம். அது அவருக்கு வேண்டாத பக்கத்து வீட்டுக்காரரின் கைங்கரியம். இன்னொரு இடத்தில் வாக்காளர் பட்டியலில் ஒரே கதவு எண்ணில் பல உலகத் தலைவர்களின் பெயர்களும் படங்களும். வேறொரு ஊரில் ஒரு வாக்காளரின் வயது 1,20,000. இதுபோன்ற விபத்தான, விஷமத்தனமான குளறுபடிகளுக்கெல்லாம் B.L.O முறைதான் வைத்தியம் பார்த்தது.

‘அனைவருக்கும் வாக்குரிமை’ என்பது பல உலக நாடுகளில் தட்டுத் தடுமாறி, தவணை முறையில் வந்தது. ஆனால் இந்தியர்களுக்கு மட்டும் அது ஒரே எட்டில் வந்தது. ஆண்டான்-அடிமை அழுக்கில் கிடந்த இந்தியச் சமூகத்தை நிமிர்த்தி நேர்செய்த நெற்றியடி, இந்திய அரசியல் சாசனத்தின் 326-ம் விதி.

ஒவ்வொரு வாக்கும் முக்கியம் என்பது அறிந்த உண்மைதான். ஆனாலும் சில நேரம் பொட்டில் அடித்துப் பொறி பறக்கும்போதுதான் அதன் நிஜம் உறைக்கும். 2008-ம் ஆண்டு மத்தியப் பிரதேசத் தேர்தலில் ‘தர்’ என்ற தொகுதியில் வெற்றி தோல்வியின் வித்தியாசம் ஒரே ஒரு ஓட்டு. அதே ஆண்டில் ராஜஸ்தானில் ‘அடுத்த முதல்வர்’ என்று கருதப்பட்ட ஒரு முக்கியமான தலைவர் ஒரே ஒரு ஓட்டு வித்தியாசத்தில் தோற்றுப் போனார். மீண்டும் மீண்டும் சரி பார்த்தாலும் அதே முடிவுதான். வாக்குப்பதிவு நாளில் அந்த வேட்பாளரின் மனைவியும் மகளும் கோயிலுக்குச் சாமி கும்பிட போய்விட்டதால் வாக்களிக்கப் போகவில்லை என்று கசிந்த தகவல், வேட்பாளரின் வெந்த புண்ணில் பாய்ச்சிய வேல். சில நேரங்களில் ஒரு ஓட்டில் மாறிவிடுகிறது வரலாறு.

கேரளாவின் காக்கயம் அணைப்பகுதி. அந்த அடர்காட்டில் ஒரு எஸ்டேட் காலியானபோது சரங்காட்டு தாசன் என்பவர் மட்டும் அங்கிருந்து வெளியேற மறுத்துவிட்டார். 2004-ம் ஆண்டு பொதுத் தேர்தலின் போது ஆறு அரசு ஊழியர்கள் ஒரு மின்னணு இயந்திரத்தோடு காட்டுக்குள் சென்று ஒரு வாக்குச்சாவடியை அமைத்து அவரது வாக்கை முறைப்படி பதிவுசெய்து திரும்பினார்கள். 2007-ம் ஆண்டு சரங்காட்டு தாசன் இறந்தபோது ‘ஒரு வாக்குச்சாவடியின் மரணம்’ என்ற தலைப்பில் செய்தி வெளியானது.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

‘பாராளுமன்றங்களின் தாய்’ என்று அழைக்கப்படும் இங்கிலாந்தில் இனம், ஆண்-பெண் ஆகிய பாகுபாடுகளைக் கடந்து அனைவருக்கும் வாக்குரிமை கிடைக்க 137 ஆண்டுகள் தேவைப்பட்டன. வல்லரசான அமெரிக்காவில் ‘சொத்துடைய வெள்ளை ஆண்களுக்கு மட்டும்’ என்ற நிபந்தனையோடு கிடைத்த வாக்குரிமை பெண்களுக்கும் கிடைத்து, கடைசியில் கறுப்பின மக்கள் உட்பட அனைவருக்குமான வாக்குரிமை ஆனது 1965 வாக்கில்தான். ‘உலகின் மிகப் பாதுகாப்பான நாடு’ என்று அறியப்படும் சுவிட்சர்லாந்தில் பெண்களுக்கான வாக்குரிமை 1971-ல்தான் தரப்பட்டது என்பதை நம்ப முடியுமா? அப்போது ‘அனைவருக்கும் வாக்குரிமை’ என்ற அடிப்படையில் இந்தியாவில் ஐந்து பொதுத்தேர்தல்கள் நடந்து முடிந்திருந்தன.

இந்தப் பெருமிதங்களைத் தாண்டி, சட்டத்தில் இருக்கும் அனைத்தும் நடைமுறையில் சமர் இன்றி அவ்வளவு எளிதில் சாத்தியமாகிவிடுவதில்லை என்பதுதான் எதார்த்தம்.

தமிழ் நெடுஞ்சாலைக்காக சில பழைய ஆவணங்களையும் மின்னஞ்சல்களையும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். 2007-ம் ஆண்டு உத்தரப்பிரதேசத் தேர்தலின்போது பல்லியா மாவட்டத்தில் கலெக்டராக இருந்த ரஞ்சன் குமார் ஐ.ஏ.எஸ் எழுதிய கடிதம் கண்ணில் பட்டது.

பல்லியா மாவட்டத்தில் கள ஆய்வு செய்தபோது தேர்தல் பார்வையாளர் ஒருவர் என் காதுகளில் கிசுகிசுத்தார். “துவாபா என்ற சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட சில இடங்களில் பட்டியல் இன மக்கள் ஒருபோதும் வாக்களிக்க அனுமதிக்கப்பட்டதில்லை; அவர்களின் வாக்குகளையும் ‘ஆதிக்க சக்திகளே’ சட்டவிரோதமாகப் போட்டு வருகிறார்கள்.”

இதுபற்றி நேரடி விசாரணை நடத்தும்படி கலெக்டர் ரஞ்சன் குமாரிடம் கூறினேன். போலீஸ் எஸ்.பி யுடன் அந்தப் பகுதிக்குச் சென்ற அவரிடம் உண்மையை வெளிப்படையாகச் சொல்லுவதற்குக்கூட பயந்தார்கள். அவர்களின் பாதுகாப்புக்கு மாவட்ட நிர்வாகம் உத்தரவாதம் அளித்த பின்பு விவரம் கிடைத்தது. சுதந்திரம் வாங்கி 60 ஆண்டுகள் ஆன பின்னும் அவர்கள் ஒருமுறைகூட ஓட்டு போட்டதில்லை. ‘முப்பது கோடி ஜனங்களின் சங்கம் முழுமைக்கும் பொதுவுடமை; ஒப்பிலாத சமுதாயம் உலகத்துக்கொரு புதுமை’ என்ற பெருமிதத்தின் கள நிலவரம் முகத்தில் ஓங்கி அறைந்ததுபோல இருந்தது.

அந்த ஊரின் ‘மோசமானவர்களில் முக்கியமான’ 12 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்தது காவல்துறை. தேர்தல் ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பில் நவ்கா காம் கிராமவாசிகள் முதல்முறையாக வாக்களித்ததை நேரடி ஒளிபரப்பு செய்தது ஒரு தேசிய ஊடகம்.

ரஸ்கின் பாண்டின் மொழியில் ‘உத்தரப் பிரதேசம் என்பது ஒரு தனி உலகம்’. அதனால், 2007 சட்டமன்றத் தேர்தல் ஒரு ‘தனி உலக அனுபவம்.’ தேர்தலுக்கான கால அட்டவணையை அறிவித்த அடுத்த ஏழு மணி நேரத்திற்குள் மாநிலத்தின் தலைமைச் செயலாளர், போலீஸ் டி.ஜி.பி., உள்துறைச் செயலாளர் ஆகிய மூவரையும் அடுத்தடுத்து மாற்றி புதிய அதிகாரிகளை நியமித்தது தேர்தல் ஆணையம். இது முன்னர் எப்போதும் நிகழ்ந்திராத அதிரடி. மத்திய அரசுப் பணியில் டில்லியில் பணிபுரிந்த உத்தரப்பிரதேச கேடரின் ஓர் உயர் அதிகாரியை புதிய தலைமைச் செயலா ளராக நியமித்து, அவரை ஒரு தனி விமானத்தில் லக்னோவுக்கு அனுப்பி அவர் பொறுப் பேற்றதை உறுதிசெய்த பின் நள்ளிரவு ஒரு மணிய ளவில் தேர்தல் ஆணையத் திலிருந்து வீட்டிற்குக் கிளம்பிச் சென்ற அந்த நாளின், அந்த இரவின் பரபரப்பு அப்படியே நினை விருக்கிறது எனக்குள். உத்தரப் பிரதேசத்தில் அனைத்து மாவட்டங் களுக்கும் ஒரு நாளைக்கு 5 மாவட்டங்கள் என்று மாநில தலைமைத் தேர்தல் அதிகாரி அனுஜ் பிஷ்னோய், மத்திய காவல் படை ஒருங்கிணைப்பாளர் கரம்வீர் சிங் ஆகியோருடன் சேர்ந்து சென்ற ஹெலிகாப்டர் பயணங்கள். மொத்தம் வானில் பறந்த நேரம் மட்டும் 65 மணி நேரம்… ஒரு முறை சூறாவளியில் சிக்கியது ஹெலிகாப்டர், இன்னொரு முறை எரிபொருள் தீரும் நிலையில் ஒரு அவசர லேண்டிங். அப்போது தெரியவில்லை. இப்போது நினைத்தால் மலைப்பாக இருக்கிறது.

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

அது ஏழு கட்டத் தேர்தல், 11.34 கோடி வாக்காளர்கள், வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்ட பெயர்கள் 78 லட்சம், புதிதாகச் சேர்க்கப்பட்டவை 61.69 லட்சம், 82,000 B.L.O களப்பணியாளர்கள், 403 தொகுதிகள், 6,086 வேட்பாளர்கள், 1,10,763 வாக்குச்சாவடிகள், 4.85 லட்சம் தேர்தல் பணியாளர்கள், 65,500 துணை ராணுவத்தினர், 25,000 மாநிலக் காவலர்கள்...

தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் 0; வாக்குச்சாவடியைக் கைப்பற்றும் சம்பவங்கள் 0; கள்ள ஓட்டு அடாவடித்தனங்கள் 0.

அந்த ‘கனவுத் தேர்தலை’ நான் காலமெல்லாம் மறக்கமாட்டேன். வாராதுபோல வந்த மாமணியைத் தோற்போமோ.

தேர்தல் முடிவுகள் வெளிவந்து உத்தரப்பிரதேசத்தில் புதிய அரசு பதவியேற்றது. லக்னோவில் அம்பேத்கர், பெரியார், கான்ஷிராம் ஆகியோருடன், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் ‘கட்அவுட்’ வைத்திருந்தார்கள்.

கட்டாய விடுமுறை அளித்து ‘எங்கேயாவது சென்று ஒரு வாரமாவது ஓய்வெடு’ என்று என்னை நாடு கடத்தியிருந்தார் தலைமைத் தேர்தல் ஆணையர் நீ.கோபாலஸ்வாமி. அன்று எனது கைப்பேசியில் அவரது அழைப்பு வந்தபோது நான் மலேஷியாவில் இரட்டைக் கோபுரத்தின் முன்னே நின்று எனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.

“உ.பியின் புதிய முதல்வர் மாயாவதி இப்போதுதான் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் வந்து நன்றி சொன்னார். உங்களையும் பார்க்க விரும்பினார். ‘அவரை விடுமுறையில் அனுப்பியிருக்கிறேன், அனேகமாக அவர் இன்று மலேஷியாவில் இருப்பார்’ என்று சொன்னேன்” என்றார் அவர்.

கோபால கிருஷ்ண காந்தி இப்படிக் கூறுகிறார்: “இந்த உலகம் இந்தியாவைப் பல்வேறு காரணங்களுக்காக மதிக்கிறது. ஆனாலும், அந்த எல்லாக் காரணங்களையும்விட முக்கியமான மூன்று காரணங்கள்: தாஜ்மஹால், மகாத்மா காந்தி, இந்தியாவின் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி.” 

உண்மைதானே!

- பயணிப்பேன்...

முதல் தேர்தல்... முதல் தேர்தல் ஆணையர்... முதல் வாக்காளர்..!

இந்தியத் தேர்தல் ஆணையத்தின் வயது, இந்தியக் குடியரசின் வயதை விட ஒரு நாள் அதிகம். முதல் பொதுத் தேர்தல் நடத்தும் பொறுப்பை பிரதமர் ஜவஹர்லால் நேரு, சுகுமார் சென் என்ற முன்னாள் ஐ.சி.எஸ் அதிகாரியிடம் ஒப்படைத்தார். இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டின் முதல் வாக்காளர் பட்டியலைத் தயாரிக்கும் பணி அசாத்தியமானது. சில மாநிலங்களில் பெண்கள் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்கள் அச்சடிக்கப்படுவதை விரும்பவில்லையாம். அநேகமாக அது குடும்ப ஆண்களின் நிர்பந்தமாகவும் இருந்திருக்கக்கூடும். அதனால், பெண் வாக்காளர்களின் பெயர்களை குறிப்பிடாமல் இன்னாரது மனைவி, அம்மா, மகள் என்று பதிவு செய்தார்களாம். இது பிற்போக்குத்தனமானது என்று கருதிய சுகுமார் சென், இவ்வாறு பதிவுசெய்யப்பட்ட லட்சக்கணக்கான பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கினார். ‘அனைவருக்குமான வாக்குரிமை’ என்ற முன்னெடுப்பில் பெண்ணுரிமைக்கான அடிப்படையும் அடங்கியிருக்கிறது. தற்போது ஜனவரி 2021 கணக்கின்படி இந்தியாவின் 93.65 கோடி வாக்காளர்களில் 45.15 கோடி பெண்கள். எல்லோருக்கும் சொந்தப் பெயர் இருக்கிறது!

தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை
தமிழ் நெடுஞ்சாலை

இந்தியாவின் முதல் தேர்தல் பெரும்பாலும் 1952 ஜனவரி, பிப்ரவரி மாதங்களில்தான் நடைபெற்றது. ஆனால், அச்சமயத்தில் இமாச்சல பிரதேசத்தில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்பதால் அப்பகுதியில் மட்டும் 1951-ம் ஆண்டு அக்டோபர் 25-27, நவம்பர் 19-25 ஆகிய தேதிகளில் தேர்தலை நடத்தினார் சுகுமார் சென். இதனால் இமாச்சல பிரதேசத்தில் உள்ள கின்னொர் பகுதியில் கல்பா என்ற கிராமத்தில்தான் இந்தியாவின் முதல் வாக்குப்பதிவு நடந்தது. அந்த கிராமத்தில் பள்ளி ஆசிரியராக இருந்த ஷியாம் சரண் நெகி, சுதந்திர இந்தியாவின் முதல் தேர்தலில் முதன் முதலில் வாக்களித்தார். இவர் தான் சுதந்திர இந்தியாவின் முதல் வாக்காளர். 2010 ஜனவரி 25-ம் தேதி, தேர்தல் ஆணையத்தின் 60-வது ஆண்டு விழாவில் ஷியாம் சரண் நெகி குடியரசுத் தலைவரால் கௌரவிக்கப்பட்டார்.

- ஆர்.பாலகிருஷ்ணன் - ஓவியம்: டிராட்ஸ்கி மருது