Published:Updated:

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 2 - “உள்ளே போனா பொணம்... வெளியே வந்தா பணம்!”

தங்கமலை ரகசியம்
பிரீமியம் ஸ்டோரி
News
தங்கமலை ரகசியம்

நடக்க நடக்க தேயிலைத் தோட்டங்கள் கண்ணிலிருந்து மறைய ஆரம்பித்தன. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப் புல்வெளிகளும், சோலை மரங்களும் அடர்ந்திருந்தன.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 2 - “உள்ளே போனா பொணம்... வெளியே வந்தா பணம்!”

அதிகாலையிலேயே அந்த டீக்கடையில் புகைப்படக் கலைஞருடன் சென்று காத்திருந்தோம். தூரத்தில் பனி போர்த்தியிருந்தன தங்கமலைச் சிகரங்கள். பெரியவரின் அலைபேசிக்கு அழைத்தோம். ரிங் சென்றுகொண்டேயிருந்தது. அரை மணி நேரம் தாண்டியும் நம்மை அழைத்துச் செல்ல யாரும் வருவதாகத் தெரியவில்லை... சற்றே பனி விலகியிருந்த தங்கமலையைப் பார்த்தபோது, சமீபத்தில் பார்த்த வீடியோ ஒன்று நினைவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஃப்ரீலான்ஸ் பத்திரிகையாளர் அகமது அல்கோபரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட வீடியோ அது... தென்னாப்பிரிக்கா, காங்கோ லுஹிஹி மலைப்பகுதியில் திரளாகக் குவிந்த கிராம மக்கள், அங்கு பெரும் பள்ளம் தோண்டி மூட்டை மூட்டையாக மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அந்த மண்ணை அவர்கள் தண்ணீரில் சலித்தபோது கைநிறைய தங்கத்துகள்கள் மின்னின... அவர்களுடைய முகங்களும்தான். அந்த மண்ணில் கிட்டத்தட்ட 60 சதவிகிதம் வரை தங்கம் கலந்திருப்பதாகத் தகவல்கள் அடிபட்டன. தங்கம் மட்டுமா தருகிறது இந்த பூமி? தண்ணீரிலிருந்து பெட்ரோல் வரை பூமிப்பந்து நமக்கு அளிக்கும் கொடைகள் ஏராளம்! மீண்டும் பெரியவருக்கு அழைத்தோம்... இப்போதும் எடுக்கவில்லை. மணி காலை 8. நாம் வந்து இரண்டு மணி நேரம் தாண்டியிருந்தது. சலிப்பாகக் கிளம்ப எத்தனித்தபோது தென்பட்டது அவரது தலை.

நைந்துபோன சட்டையை முழங்கைக்கு மேல் மடித்துவிட்டிருந்தார். மடித்துக் கட்டிய லுங்கி, அதே நரை அப்பிய தாடியுடன் வந்தவர், “முன்னமே உங்களைப் பார்த்துட்டேன். ஒரு சின்ன வேலை... அதான் போயிட்டு வந்தேன்” என்றபடி சட்டைப்பையில் வைத்திருந்த சிறிய பட்டன் போனை எடுத்து, “ஒண்ணும் பிரச்னையில்லை. பயப்படாம வாங்க” என்றார். அப்போதுதான் தெரிந்தது, நம்மை அவர்கள் ஆழம் பார்த்திருக்கிறார்கள் என்று. சற்று நேரத்தில் வெவ்வேறு வயதுடைய ஆறு பேர் வந்து சேர்ந்தனர். அனைவருக்கும் கட்டஞ்சாயாவும் பழம்பூரியும் சொன்ன பெரியவர், அவர்களிடம் நம்மை அறிமுகம் செய்துவைத்தார். அவர்களின் பார்வையே நம் வருகையை விரும்பவில்லை என்பதைக் காட்டியது. சிலர் பெரியவரின் காதில் முணுமுணுக்க ஆரம்பித்தனர். “நான்தான் சொன்னேன்ல... நம்ம பாய் சொல்லி அனுப்புனவங்க இவங்க. அவருக்கு ஒரு மரியாதை இருக்குல்ல... எல்லா வெவரமும் சொல்லித்தான் கூட்டிட்டுப் போறோம்” என்று அதட்டலோடு அவர்களைச் சமாதானப்படுத்தினார்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 2 - “உள்ளே போனா பொணம்... வெளியே வந்தா பணம்!”

“சரி, அடுத்து ஆகவேண்டிய வேலையைப் பாருங்க” என்ற பெரியவர்,‌ தான் கொண்டுவந்த நான்கைந்து சுமைப்பொதிகளை அவர்களிடம் கொடுத்தார். அவற்றில் இரண்டு மூன்று நாள்கள் சாப்பாட்டுக்குத் தேவையான அரிசி, தக்காளி, வெங்காயம், மிளகாய்‌த்தூள், கருவாடு, பீடி, சிகரெட், சமையல் எண்ணெய் ஆகியவை இருந்தன. ஆளுக்கொரு பொதியைத் தூக்கிக்கொண்டு கிளம்பினார்கள். நாடுகாணியை நோக்கி நீண்டது நடை. அரை மணி நேரத்தில் பிரதான சாலையிலிருந்து விலகி தேயிலைத் தோட்டத்தின் நடுவே பிரியும் சிறிய ஒற்றையடிப் பாதைக்கு மாறினோம்.

நடக்க நடக்க தேயிலைத் தோட்டங்கள் கண்ணிலிருந்து மறைய ஆரம்பித்தன. கண்ணுக்கெட்டும் தூரம் வரை பச்சைப் புல்வெளிகளும், சோலை மரங்களும் அடர்ந்திருந்தன. அடர்வனத்துக்குள் நுழைந்திருந்தோம். மஞ்சள் நிற வண்ணத்துப் பூச்சிகள் எதன் மீதோ குவியலாக மொய்த்திருந்தன. பெரிய பூப்பந்துபோல இருந்தது அந்தக் காட்சி. திடீரென்று நடையின் வேகத்தைக் குறைத்த பெரியவர், நாசியில் காற்றை உறிந்தபடி, “யானைங்க கடந்துபோய் அரை மணி நேரம்தான் ஆகியிருக்கு... பட்டாம்பூச்சிங்க யானை சாணத்து மேலதான் உக்கார்ந்திருக்கு. சாணம் போட்டு அரை மணி நேரம் இல்லை ஒரு மணி நேரத்துக்குள்ள அதுல இருக்குற சாற்றை மொத்தமா உறிஞ்சிடும் பட்டாம்பூச்சிங்க. அதுக்கப்புறம் காடு பூராவும் பறந்து மகரந்த சேர்க்கையை ஆரம்பிச்சிடுங்க. இந்தக் காடு இவ்வளவு வளமா இருக்குன்னா அதுக்குக் காரணம் யானைங்களும் பட்டாம்பூச்சிங்களும்தான்...” பெரியவர் தனது அனுபவங்களைச் சொல்லிக்கொண்டே வந்தபோது நடையின் களைப்பே தெரியவில்லை.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நீண்டது நடை. மரங்களின் அடர்த்தி குறைந்து ஆளுயர பரந்த புல்வெளியை அடைந்தோம். ஆளை விழுங்கும் புல்வெளி அது. அருகே ஓடிக்கொண்டிருந்த தெளிந்த நீரோடைக் கரையில் பைகளை இறக்கிவைத்து இளைப்பாறினோம். திடீரென்று பெண்கள் சிலரது சிரிப்பொலி கேட்டது. துணுக்குற்று மெல்ல நடந்து சென்று பார்த்தோம். அந்த நீரோடையின் ஒரு திருப்பத்தில் பெண்கள் சிலர் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருந்தனர். அதிர்ச்சியும் ஆச்சர்யமுமாகப் பெரியவரிடம் வந்து சொன்னபோது அவர் இயல்பாகச் சிரித்தார்... “மலைமேல சுரங்கத்துல தங்க மண்ணைக் கழுவி பிரிச்சு எடுக்கும்போது கொஞ்சம் நழுவி தண்ணியில வரும். அதை இந்தப் பொம்பளைங்க நாள் முழுக்கத் தேடுவாங்க. சுரங்கத்துக்குப் போறவங்களோட சில பொம்பளையாளுங்க வந்து இப்படி வேலை பார்த்துட்டு, சாயங்காலம் வீட்டுக்குப் போயிருவாங்க. சலிச்ச குண்டுமணி தங்கத்தை டவுன்ல இருக்கிற நகைக் கடையில குடுத்தா நூறோ இருநூறோ கிடைக்கும்... சோறு திம்பாங்க‌. சுரங்கம் பக்கமெல்லாம் வர மாட்டாங்க... பாவம்” என்று அந்தப் பெண்களின் வயிற்றுப் பாட்டை விவரித்தார். புல்வெளியில் தொடர்ந்தது நடை. ஆங்காங்கே யானை லத்திகள். திடீரென்று கரையான் புற்றுகளைப்போல மண் குவியல்கள் மேடிட்டிருந்தன... அவற்றின் அருகிலேயே ஆள் இறங்கும் அளவுக்கு 40 அடி, 50 அடி ஆழக் குழிகள்.

“இதைத்தானே பார்க்க ஆசைப்பட்டீங்க... எங்க பாஷையில் இதுக்குப் பேரு டோனா (தங்கச்சுரங்கக் குழி). இங்க இருக்குற ஒவ்வொரு டோனாவும் ஒவ்வொருத்தரோடது. ஒருத்தர் தோண்டிவெச்ச டோனாவுல வேற யாரும் இறங்கக் கூடாது, இறங்க மாட்டோம். தப்பித் தவறி உள்ள எறங்கினா குழிக்குள்ளேயே கொன்னு பொதைச்சிருவாங்க. உசுரைப் பணயம் வெச்சு செய்யுற தொழிலுங்கிறதால யாருமே அடுத்தவங்க குழி மேல ஆசைப்பட மாட்டாங்க. ஒருகாலத்துல இந்த மலை பூராவும் மூவாயிரம் பேருக்கு மேல நைட்டு பகலா குழிக்குள்ள இறங்கி தங்கம் அடிப்பாங்க. இப்போ அப்படியே பாதிக்கு மேல குறைஞ்சு போயிருச்சி. நெத்தியில டார்ச் லைட்டைக் கட்டிக்கிட்டு குழிக்குள்ள போயிட்டா நைட் எது, பகல் எதுன்னு தெரியாது. காத்து, மழை, வெயில் எதுவுமே வெளியே வந்தாத்தான் தெரியும்.

தங்கமலை ரகசியம் - மினி தொடர் - 2 - “உள்ளே போனா பொணம்... வெளியே வந்தா பணம்!”

40 அடி ஆழக் குழிக்குள்ள இறங்கி பக்கவாட்டுல ரீப் (தங்கப் படிமங்கள் இருக்கும் பாறை இடுக்குகள்) புடிச்சு படுத்துக்கிட்டே பாம்பு மாதிரி ஊர்ந்து போகும்போது பின்னாடி மண்ணு மூடுனா சோலி முடிஞ்சுது. எவ்வளவு கத்துனாலும் வெளியே கேக்காது. அப்படியே சமாதியாகவேண்டியதுதான். அப்படி எத்தனையோ சாவைப் பார்த்துட்டேன். எத்தனையோ சாவு என்னையும் கிட்ட தொட்டுட்டுப் போயிருச்சு. மலைமூப்பன் அருளால பொழைச்சுக் கிடக்கேன். சில சமயத்துல ரீப்பைப் புடிச்சுப் போகும்போது தங்கம் கெடைச்சுக்கிட்டே இருக்கும். ஆனா, மூச்சு காத்து கெடைக்காது... மூச்சுத் திணற ஆரம்பிக்கும். அதுக்கு அந்தப் பக்கம் எவ்ளோ தங்கம் இருந்தாலும் தொடர்ந்து போக மாட்டோம். வெளியே திரும்பி வந்துருவோம். வேற வழியா திரும்பவும் ரீப் அடிச்சு மூச்சுக் காத்து கெடைக்க ஏற்பாடு செஞ்சு பார்ப்போம். இங்க எல்லாருக்கும் ஒரே விதிதான்‌. உள்ள போனா பொணம், வெளிய வந்தா பணம்! இதுதான் எங்க தலைவிதி. நீங்க நெனைக்கிற மாதிரி சாதாரண வேலையில்லை தம்பி. கூட வந்து பார்க்கத்தானே போறீங்க... கொஞ்ச தூரம் நடந்தா நம்ம டோனா வந்துரும்” என்று தங்கமலை ரகசியங்களை விவரித்தபடியே நடந்தார் பெரியவர்.

நண்பகல் வேளையில் அந்தப் பெரியவரின் சுரங்கக்குழி இருக்கும் பகுதியை அடைந்தோம். சுமைப்பொதிகளை இறக்கிவைத்தபடி அனைவரும் ஒரு மரத்தடியில் சாய்ந்தோம். நம்முடன் வந்திருந்த முதியவர் ஒருவர் மட்டும் எழுந்து, காய்ந்த சுள்ளிகளைச் சேகரித்து வந்து கற்களில் அடுப்பு ஒன்றைக் கட்டினார். தீ மூட்டி சிறிது நேரத்திலேயே வரகாபியைத் தயார் செய்து அனைவருக்கும் கொடுத்தார். நடந்துவந்த களைப்புக்கு அருமருந்தாக இருந்தது அது.

காட்டு விலங்குகள் மற்றும் வனத்துறையினரின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் மலையுச்சியில் இருந்தது பெரியவரின் சுரங்கம். மண்திட்டு ஒன்றைப் பக்கவாட்டில் குடைந்து 10 அடி நீளத்தில் குகையைப்போல சுரங்கத்தை அமைத்திருந்தனர். குகைக்குள் சுமார்‌ மூன்றடி விட்டத்தில் 40 அடி ஆழத்தில் சுரங்கம் தோண்டியிருக்கிறார்கள். சுரங்கக்குழியின் இருபக்கமும் படிக்கட்டுகளைப்போல செதுக்கப்பட்டிருந்த மண்திட்டுகளைப் பற்றிக்கொண்டு ஒவ்வொருவராக இறங்கத் தொடங்கினார்கள்... நாமும்தான். திடீரென்று அடியாழத்துக்குச் சென்றிருந்தவர் பதற்றத்துடன், “எல்லாரும் மேல ஏறுங்க... வராதீங்க...” என்று கத்திக்கொண்டே மேலே அவசரமாக ஏறத் தொடங்கினார்!

(தோண்டுவோம்)