சினிமா
பேட்டிகள்
கட்டுரைகள்
Published:Updated:

‘நாமே விளக்கு... நமக்குள் ஒளிச்சுடர்!’

தீபங்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
தீபங்கள்

சுவாமி விமூர்த்தானந்தர், தலைவர், ஸ்ரீராமகிருஷ்ண மடம், தஞ்சாவூர்

விகடன் 2022-ம் ஆண்டு தீபாவளி மலரின் சிறப்புக் கட்டுரை. சிறப்பிதழை வாங்கி படித்து மகிழ்ந்திடுங்கள்!

தீபாவளி என்றதுமே தீபங்களின் வழிபாடு என்பது முதலில் நம் மனத்தில் தோன்றும். தீபாவளி அன்று மட்டுமல்ல, அனைத்து நாள்களிலும் தீபங்கள் ஏற்றி வழிபடுவதே நம் சம்பிரதாயம். தீபத்தின் பணி இருளை விலக்குவது.

நம் மனங்களில் மகிழ்ச்சியும் திருப்தியும் இல்லாமல்போவதற்கு மன இருளே காரணம். நற்சிந்தனையற்ற புத்தியின் இருளே காரணம். உண்மையில் இருள் என்பது என்ன?

இருள் என்பது அன்பில்லாமை; இருள் என்பது தன்னம்பிக்கையின்மை; இருள் என்பது ஞானம் இல்லாமை; இருள் என்பது வறுமை; இருள் என்பது ஆரோக்கியமின்மை. இப்படிப் பல்வேறுவிதமான இருள்கள் நம்மைச் சூழ்ந்துள்ளன.

சுவாமி விமூர்த்தானந்தர்
சுவாமி விமூர்த்தானந்தர்

‘ஆயிரம் ஆண்டுகள் அடைபட்டுக் கிடந்த இருட்டில் ஒரு விளக்கை ஏற்றினால், அரைக் கணத்தில் அந்த ஆயிரமாண்டு இருட்டுமே ஓடிவிடும்’ என்று அபயம் அளிக்கிறார் நம் குருதேவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அதுபோல், பல பிறவிகளாகத் தொடரும் அஞ்ஞான இருள், ஒளி வடிவான ஆண்டவனின் ஒரு கிரணம் பட்டதும் விலகிப்போகும்.

தீபாவளியில் அப்படி ஒரு ஒளி நம்வாழ்வில் துலங்க வேண்டுமென்றுதான் நாம் விளக்கேற்றி வழிபடுகிறோம். நமது தர்ம சாஸ்திரம், ‘ஒரு ஸ்லோகத்தைக் கூறிவிட்டு விளக்கு ஏற்றுங்கள்' என்று கூறுகிறது.

கீடா பதங்கா: மசகாச்ச வ்ருக்ஷா:

ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா |

த்ருஷ்ட்வா ப்ரதீபம் ச ஜன்ம பாஜா

பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா ||

பொருள்: புழுக்களோ, பறவைகளோ, கொசுக்களோ, மரங்களோ, இன்னும் நீரிலும் நிலத்திலும், எத்தனை வகையான ஜீவராசிகள் இருக்கின்றனவோ, அவற்றில் எதுவானாலும் சரி, பிராமணனோ, பஞ்சமனோ யாரானாலும் சரி, இந்தப் பிரபஞ்சத்தில் உள்ள எதுவானாலும் சரி, இந்தத் தீபத்தைப் பார்த்து, அந்த ஜீவனின் சகல பாவங்களும் நிவர்த்தியாகட்டும்; நித்தியானந்தத்தில் அவன் சேரட்டும்.

எப்பேர்ப்பட்ட உயர்ந்த தத்துவங்கள் நம் சம்பிரதாயங்களில் தோய்ந்துகிடக்கின்றன பார்த்தீர்களா...

நாமே விளக்கு... நமக்குள் சுடர்!

நான் உங்களுக்கு ஒரு சிறு பயிற்சியைக் கற்றுத்தர விரும்புகிறேன். அன்பர்களே! தரையில் அமர்ந்து மெல்லக் கண்களை மூடி, உங்களை நீங்களே கவனியுங்கள். நீங்களே ஓர் அகல்விளக்கு. உங்கள் உடலின் அடிப்பகுதி விளக்கின் அடிப்பகுதிபோல் விளங்குவதாக பாவனை செய்யுங்கள். உங்களுக்குள் இருக்கும் ரத்தம், நீர், வியர்வை போன்ற திரவங்கள் விளக்கில் எண்ணெய் போன்று உள்ளதாகக் கற்பனை செய்யுங்கள். விளக்கு எரிவதற்குக் காற்று அவசியம். உங்களது அகமும் முகமும் சுடர் விட, உங்களது மூச்சுக் காற்றான பிராணன் விளங்கட்டும். உங்கள் உடலின் மேற்பகுதி விளக்கின் திரியாக இருக்கிறது. விளக்கின் சுடரே உங்களது முகம். அந்த முகத்தில் ஒளி நிலைப்பதற்கு உங்களிடமுள்ள உள்ளொளி பற்றி உணர்ந்திடுங்கள்.

‘நாமே விளக்கு... நமக்குள் ஒளிச்சுடர்!’

தீபம் தெய்வமே!

தீபமே தெய்வ வடிவு என்று நம்புங்கள். ஆம். தீபம் தெய்வமே! தீபம் தெய்வம் போல, தன்னோடு சேரும் பொருள்களைத் தூய்மையாக்கி, புனிதமாக்கிவிடும். நம்புங்கள், ‘தீ' தெய்வம் போல, தன்னிடம் சரணாகதி ஆகுபவர்களைத் தனக்குள் ஐக்கியப்படுத்திக் கொள்ளும். அந்த அக்கினியை ஆண்டவனாக, அண்ணாமலையாராகக் காணுங்கள்.

மாலும் பிரம்மாவும் அடிமுடி காண முடியாதவர் அண்ணாமலையார். அண்ணாமலை அக்னிமலை! அந்த அக்னியின் ஓர் அம்சமாக உங்களுக்கு முன் இந்த விளக்கு சுடர் விடுகிறது. இந்தச் சுடர், உங்களது இடர்களைக் களையும் விளக்கு என்று நம்புங்கள். மங்கலம் யாவும் நம்மை வந்து அடையும் பொருட்டு அருணகிரிநாதர் திருப்புகழில் காட்டியருளிய ‘தீப மங்களஜோதி நமோ நம:’ என்ற மந்திரத்தை உணர்ந்து ஓதுவோம்.

தீபத்தைப் பக்தியுடன் நோக்கினால், தேவி தெரிவாள். ‘அகத்தில் ஞானதீபம் ஏற்றி, பிரம்மமயின் (தேவியின்) முகத்தைப் பார்' என்று ஸ்ரீராமகிருஷ்ணர் ஆனந்தக் கூத்தாடுவார்.

அஸதோ மா ஸத் கமய!

தமஸோ மா ஜ்யோதிர் கமய!

ம்ருத்யோர் மா அம்ருதம் கமய!

‘பேரொளியான இறைவா! உண்மையற்றதிலிருந்து உண்மைக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்; இருளிலிருந்து ஒளிக்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்; சாவிலிருந்து, சாகா நிலைக்கு என்னைக் கொண்டு செல்லுங்கள்' என்று ஒவ்வொரு முறை தீபம் ஏற்றும் போதும் வேண்டிக்கொள்ளுங்கள். நம் வாழ்க்கை என்றும் ஆனந்தமாகவே இருக்கும். நமது அகத்திலும் புறத்திலும் திரண்டு இருக்கின்ற இருள் விலகி ஓடும். அறியாமை நீங்கும். அஞ்ஞான, தாமச குணங்கள் நம்மிடமிருந்து மறையும். நோய்கள் குணமடையும். அவநம்பிக்கை நீங்கி, புதுநம்பிக்கை பிறக்கும்.

அதுதான் தீபாவளி தரும் பாடமும் பயனும்.அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துகள்.