அரசியல்
Published:Updated:

மதம் மாற சொன்னதா கிறிஸ்தவ பள்ளி? - தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை!

தஞ்சாவூர்
பிரீமியம் ஸ்டோரி
News
தஞ்சாவூர்

ஸ்கூல்ல மத மாற்றம் செய்தது உண்மையா, இல்லையான்னு எங்களுக்குத் தெரியாது. இன்னும் சில பிள்ளைகளையும் மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினதா சொல்றாங்க.

தஞ்சாவூரில் பள்ளி மாணவி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியிருக்கிறது. ‘அந்த மாணவி படித்த பள்ளியில், அவரை மதம் மாறச் சொல்லிக் கட்டாயப்படுத்தியதால்தான் அவர் தற்கொலை செய்துகொண்டார்’ என்று இந்து அமைப்புகளும், பா.ஜ.க-வும் போராட்டத்தில் குதித்திருக்கின்றன. பள்ளி நிர்வாகம் அதை மறுக்கிறது. `விசாரணையிலும் வாக்குமூலத்திலும் மத மாற்றம் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை’ என்கிறது காவல்துறை!

அரியலூர் மாவட்டம், வடுகப்பாளையம், கீழத்தெருவைச் சேர்ந்த மாணவி அவர். தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகே மைக்கேல்பட்டியிலுள்ள தூய இருதய மேல்நிலைப்பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்தார். களைக்கொல்லி மருந்தைக் குடித்து, தற்கொலைக்கு முயன்ற மாணவி, மருத்துவமனையில் சிகிச்சை பலனளிக்காமல், கடந்த 18-ம் தேதி உயிரிழந்தார். மாணவியின் உயிரிழப்புக்கு, விடுதி வார்டனின் டார்ச்சர்தான் காரணம் எனச் சொல்லப்பட்ட நிலையில், மருத்துவமனை படுக்கையிலிருந்தவாறு மாணவி பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பானது.

மதம் மாற சொன்னதா கிறிஸ்தவ பள்ளி? - தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை!

அந்த வீடியோவில், தன் அப்பா பெயரைச் சொல்லிவிட்டு, ‘இரண்டு வருடங்களுக்கு முன்பு தனது பெற்றோரிடம் கிறிஸ்தவ மதத்துக்கு மாறச் சொல்லி ஒரு சிஸ்டர் கேட்டதாகச் சொல்கிறார் மாணவி. “மாறததனாலதான் உன்னைத் தொந்தரவு பண்ணாங்களா?’’ என்று கேட்கிறார் ஒருவர், அதற்கு அந்த மாணவி “இருக்கலாம்” என்கிறார். இந்த வீடியோவை முன்வைத்து பா.ஜ.க., விஷ்வ ஹிந்து பரிஷத் என இந்துத்துவா அமைப்பினர், இவ்விவகாரத்தைக் கையிலெடுத்துத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

சம்பவம் குறித்து விசாரிக்க, வடுகப்பாளையம் கிராமத்துக்குச் சென்றோம். ஊர் முழுவதும் போலீஸ் குவிக்கப்பட்டிருந்தனர். வருவோர் போவோரையெல்லாம் போலீஸார் விசாரித்துக்கொண்டிருந்தனர்.

ஊர்த் தலைவர்கள் சிலரிடம் பேசினோம். “அந்தப் பொண்ணோட அப்பா முருகானந்தம் பால் வியாபாரி. அவரோட முதல் மனைவிக்குப் பிறந்த பெண்தான் இறந்துபோன மாணவி. முதல் மனைவி இறந்துட்டதால ரெண்டாவதா திருமணம் செய்துக்கிட்டார். இறந்துபோன அந்த மாணவிக்கு உடலில் வெண்குஷ்டம் மாதிரி வெள்ளைத்திட்டுக்கள் இருக்கும். அதனால, அந்தப் பொண்ணை யார்கூடவும் விளையாட விட மாட்டார், அந்தப் பொண்ணோட சித்தி. திருக்காட்டுப்பள்ளியில ஹாஸ்டல்ல தங்கிப் படிச்ச அந்தப் பொண்ணுக்குக் குடும்பத்தோட பெருசா அட்டாச்மென்ட் இல்லை.

மதம் மாற சொன்னதா கிறிஸ்தவ பள்ளி? - தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை!
மதம் மாற சொன்னதா கிறிஸ்தவ பள்ளி? - தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை!

இந்த விவகாரத்தைப் பெரிசாக்கியதே விஷ்வ ஹிந்து பரிஷத்தைச் சேர்ந்த முத்துவேல்தான். அவர்தான் சோஷியல் மீடியாவுல பரவுற அந்த வீடியோவை எடுத்தவர். இதே பகுதியில் வசிக்கிற பா.ஜ.க-வைச் சேர்ந்த சுரேஷ் மூலமாகத்தான் கட்சித் தலைமைக்கு விஷயத்தைக் கொண்டுபோயிருக்காங்க. அந்தக் குடும்பத்தைக் கையில்வெச்சுக்கிட்டு விஷயத்தைப் பெரிசாக்குறாங்க. இறந்துபோன ஆன்மாவுக்கு மரியாதை கொடுக்காம, மதத்தை முன்வெச்சு அரசியல் செய்றாங்க. ஊர்க்கட்டுப்பாட்டை மீறிச் செயல்படுறாங்க.

ஸ்கூல்ல மத மாற்றம் செய்தது உண்மையா, இல்லையான்னு எங்களுக்குத் தெரியாது. இன்னும் சில பிள்ளைகளையும் மத மாற்றம் செய்ய கட்டாயப்படுத்தினதா சொல்றாங்க. இதுல உண்மை என்னான்னு போலீஸ் கண்டுபிடிச்சு நடவடிக்கை எடுக்கணும்” என்றனர்.

மாணவியின் தந்தை முருகானந்தத்திடம் பேசினோம். “ஊர்க்காரங்க சொல்றதெல்லாம் பொய். எனக்குத் தெரியும், என் பொண்ணை எப்படி வளர்த்தேன்னு. எங்க கிராமத்துல மேல்நிலைப்பள்ளி கிடையாது. எல்லாருமே பிள்ளைகளை அந்த ஸ்கூல்லதான் சேர்ப்பாங்க. ஸ்கூல்ல நல்லாப் படிக்கக்கூடிய பொண்ணு அவ. பத்தாவது வகுப்புல 487 மார்க். ஸ்கூல்ல முதல் மாணவியும்கூட. ஸ்கூல்ல என் பொண்ணுகிட்டதான் எல்லா வேலையும் வாங்கியிருக்காங்க. ஊரடங்கு நேரத்துலகூட வீட்டுக்கு அவளை அனுப்பலை. பலமுறை வார்டன் சகாயமேரிகிட்ட கேட்டும், அனுப்ப மறுத்துட்டாங்க. கிறிஸ்துமஸ் லீவுக்குக்கூட பிள்ளையை அனுப்பலை. ஸ்கூல்ல பிரச்னை பண்ண வேண்டாம்னு நான் விட்டுட்டேன்.

கருப்பு முருகானந்தம்
கருப்பு முருகானந்தம்

வார்டன் சகாயமேரி கிறிஸ்துவ மதத்துக்கு மாறச் சொல்லி என் பொண்ணுக்கு டார்ச்சர் கொடுத்துருக்காங்க. அந்த மன உளைச்சல்ல, போன 9-ம் தேதி, விடுதியிலேயே விஷம் குடிச்சிருக்கா. அவ வாந்தி எடுத்ததைப் பார்த்துட்டு, ‘உங்க பொண்ணுக்கு வயித்துவலினு சொல்றா... வந்து கூட்டிட்டுப் போங்க’னு எங்களுக்குத் தகவல் கொடுத்தாங்க. நாங்க அழைச்சுட்டு வந்து மருத்துவம் பார்த்தோம். போன 15-ம் தேதி திரும்பவும் உடல்நிலை மோசமாகவும், தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கு அழைச்சுட்டுப் போனோம். அங்கே சோதனை செஞ்ச டாக்டர்கள்தான், அவ விஷம் குடிச்ச விஷயத்தையே எங்ககிட்ட சொன்னாங்க. ஸ்கூல்ல கமுக்கமா இருந்துக் கிட்டாங்க. பா.ஜ.க-வைச் சேர்ந்த சுரேஷ், முத்துவேல் ரெண்டு பேரும் எங்களுக்குத் தெரிஞ்ச வுங்கதான். அவங்ககிட்டதான் என் பொண்ணு உண்மையைச் சொல்லியிருக்கா. முன்னாடியே விஷம் குடிச்ச விஷயத்தை எங்ககிட்ட சொல்லியிருந்தா காப்பாத்தியிருக்க முடியும். ஹாஸ்டல்ல தங்கியிருக்குற மத்த பிள்ளைகள்கிட்ட விசாரிச்சா உண்மை தெரியும்” என்றார்.

பா.ஜ.க மாநிலத் துணைத் தலைவர் கருப்பு முருகானந்தத்திடம் பேசினோம். “மாணவியின் இறப்பைவைத்து அரசியல் செய்ய வேண்டும் என்கிற கீழ்த்தரமான எண்ணம் எங்களுக்கு இல்லை. அந்தக் குடும்பத்தினரை இயக்கவேண்டிய அவசியம் எங்களுக்கு என்ன இருக்கிறது? தமிழகத்தில் இந்துக்கள் திட்டமிட்டு மத மாற்றம் செய்படுகிறார்கள் என்பதைப் பல ஆண்டுகளாகச் சொல்லிவருகிறோம். பல கிறிஸ்தவப் பள்ளிகளில் திருநீறு, பொட்டு, பூ வைக்கத் தடைவிதிக்கப்படுகிறது. அந்த மாணவியே, மரண வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். நடந்த விஷயங்கள் அத்தனையையும் தெளிவாகச் சொல்கிறார். அதை வீடியோவாக எடுத்து சோஷியல் மீடியாவில் போட்டதும்தான் இந்த விவகாரம் வெளியில் தெரிந்தது.

ரவளி பிரியா
ரவளி பிரியா

ஆனால், அந்த மாணவி பேசியது பொய் என மறுக்கிறது காவல்துறை. அதே பள்ளியில் படித்த இன்னொரு மாணவியும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். தற்போது இறந்த மாணவியை, பள்ளி நிர்வாகம் பல தேவாலயங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. அதன் நோக்கம் என்ன என்பதுதான் எங்கள் கேள்வி. யாருக்கோ சாதகமாகச் செயல்பட்டு இவ்வழக்கை திசைதிருப்பப் பார்க்கிறது காவல்துறை. இவ்வழக்கில் சம்பந்தப்பட்டவர்களைக் கைதுசெய்யும் வரையிலும் நாங்கள் விட மாட்டோம்” என்றார்.

தற்கொலைக்கு முயன்றதாகச் சொல்லப்படும் இன்னொரு மாணவியின் தந்தை இலங்கேஷ்வரனிடம் பேசினோம். “என் பொண்ணும் அந்த ஸ்கூல்லதான் படிச்சா. ஸ்கூல்ல பொட்டு வெக்கிறதுக் கெல்லாம் கட்டுப்பாடு விதிச்சுருக்காங்க. ஜெபமாலையைக் கழுத்தில் போடணும்னு கட்டாயப்படுத்தியிருக்காங்க. ஹாஸ்டல்ல என் பொண்ணை அதிகமா வேலை செய்யச் சொல்லி டார்ச்சர் பண்ணி, கடுமையா திட்டினதுல, அவ தற்கொலைக்கு முயற்சி பண்ணிட்டா. அவளைக் காப்பாத்தி, திரும்பவும் ஸ்கூல்ல சேர்த்தோம். இதுவரை நான் இந்த விஷயத்தை வெளிய சொல்லலை. இப்போ ஒரு உயிரு போயிட்டதால உண்மையைச் சொல்றேன். அந்த ஸ்கூல்ல மத மாற்றம் செய்யச் சொல்லி டார்ச்சர் பண்றது உண்மைதான்” என்றார்.

மதம் மாற சொன்னதா கிறிஸ்தவ பள்ளி? - தஞ்சாவூர் பள்ளி மாணவி தற்கொலை!

சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் அப்போலியாவிடம் இது பற்றிக் கேட்டோம். “வார்டன் சகாயமேரி, அந்த மாணவியைத் தன்னோட பொண்ணு மாதிரி பார்த்துக்கிட்டார். எதுக்காக அந்தப் பொண்ணு அப்படிச் சொன்னான்னு தெரியலை. வழக்கு விசாரணை நடந்துக்கிட்டிருக்கிறதால இதுக்கு மேல நான் பேச விரும்பலை” என்று சொல்லி இணைப்பைத் துண்டித்தார்.

தஞ்சாவூர் மாவட்ட எஸ்.பி ரவளி பிரியா, “இது சென்சேஷனல் பிரச்னை என்பதால், தீவிரமாக விசாரிக்கிறோம். மாணவியிடம் போலீஸார் நடத்திய விசாரணையிலும், மாணவி மாஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்குமூலத்திலும் மத மாற்றம் தொடர்பாக எந்தத் தகவலும் இல்லை. அதுபோலவே அவரது பெற்றோரும் சொல்லவில்லை. அதனால், முதல் தகவல் அறிக்கையில் மத மாற்றம் குறித்துக் குறிப்பிடவில்லை. மத மாற்றம் தொடர்பாக அந்த மாணவியிடம் ஒரு நபர் பேசும் வீடியோ, மாஜிஸ்ட்ரேட்டிடம் அளித்த வாக்குமூலம் கிடையாது. அந்த வீடியோ, சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது, இது சிறார் சட்டப்படி குற்றம். வீடியோ எடுத்தவர்மீது வழக்கு பதிவு செய்திருக்கிறோம். இப்போது மாணவியின் பெற்றோர் அளித்த மற்றொரு புகாரில், மத மாற்றம் தொடர்பாகக் குறிப்பிட்டிருக் கிறார்கள். அதன் அடிப்படையில் விசாரணை நடத்திவருகிறோம்” என்றார்.

மாணவியின் வலிக்கும் உயிருக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்!