அலசல்
அரசியல்
Published:Updated:

“எங்க ஏரியாவுல, பெரியார் பெயரில் கடையா?” - கொலைவெறித் தாக்குதலில் கோவை இந்து முன்னணி!

தந்தை பெரியார் உணவகம்
பிரீமியம் ஸ்டோரி
News
தந்தை பெரியார் உணவகம்

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரையும் எனக்கு முன் பின் தெரியாது. ‘தந்தை பெரியார்’ என்ற இந்தப் பெயர்தான் அவர்களுக்கு உறுத்தியிருக்கிறது

தமிழ்நாட்டைப் ‘பெரியார் மண்’ என்று சொல்லி பெருமைகொள்ளும் தி.மு.க ஆட்சியில் ‘தந்தை பெரியார் உணவகம்’ மீது ‘இந்து முன்னணி’ அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல் நடத்தியிருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

கோவை மாவட்டம், காரமடை கண்ணார்பாளையம் பகுதியில், ‘தந்தை பெரியார் உணவகம்’ என்ற பெயரில் புதிதாகக் கடை ஒன்றைத் திறக்கும் முயற்சியில் இறங்கினார் அதே பகுதியைச் சேர்ந்த பிரபாகரன். திறப்புவிழாவுக்கு முந்தைய நாளான 13-9-2022 அன்று கடைக்குள் புகுந்த இந்து முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிலர், கடையை அடித்து நொறுக்கியதோடு அங்கிருந்த பணியாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதையடுத்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

“எங்க ஏரியாவுல, பெரியார் பெயரில் கடையா?” - கொலைவெறித் தாக்குதலில் கோவை இந்து முன்னணி!

இந்த விவகாரம் குறித்து நம்மிடம் பேசிய உணவக உரிமையாளர் பிரபாகரன், “கடையைத் திறப்பதற்கான வேலைகளில் நான் வெளியே பிஸியாக இருந்ததால், சம்பவத்தன்று நான் கடையில் இல்லை. அந்தச் சமயத்தில், கடைக்குள் புகுந்தவர்கள், ‘இது எங்க கோட்டை. இங்கே எப்படி பெரியார் பெயரில் நீங்கள் கடையைத் திறக்கலாம்?’ எனக் கூறி கடையை அடித்து நொறுக்கியதோடு, அங்கிருந்த பணியாளர்கள் மீதும் கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அருண் என்ற ஊழியருக்கு 36 தையல்கள் போடப்பட்டிருக்கின்றன. எலும்பு முறிவும் ஏற்பட்டிருக்கிறது.

“எங்க ஏரியாவுல, பெரியார் பெயரில் கடையா?” - கொலைவெறித் தாக்குதலில் கோவை இந்து முன்னணி!
“எங்க ஏரியாவுல, பெரியார் பெயரில் கடையா?” - கொலைவெறித் தாக்குதலில் கோவை இந்து முன்னணி!

தாக்குதலில் ஈடுபட்டவர்கள் யாரையும் எனக்கு முன் பின் தெரியாது. ‘தந்தை பெரியார்’ என்ற இந்தப் பெயர்தான் அவர்களுக்கு உறுத்தியிருக்கிறது. இங்கே இது போன்ற சம்பவங்கள் நிறைய நடக்கின்றன. ஆனாலும் தொழில் பாதிக்கக் கூடாது என்று பலரும் வெளியே சொல்லாமல் அமைதி காக்கின்றனர். யாருடைய தனிப்பட்ட நம்பிக்கையிலும் தலையிடும் உரிமை தனிப்பட்ட நபருக்கோ, இயக்கத்துக்கோ இல்லை. எனக்குப் பிடித்த தலைவரின் பெயரை நான் கடைக்குப் பெயராக வைக்கிறேன். இதில் அவர்களுக்கு என்ன பிரச்னை... எங்களுடைய முடிவில் எந்த மாற்றமும் இல்லை. இதே பெயரில்தான் கடை தொடர்ந்து இயங்கும்’’ என்றார் உறுதியாக.

பிரபாகரன்
பிரபாகரன்
காடேஸ்வரா சுப்பிரமணியம்
காடேஸ்வரா சுப்பிரமணியம்

‘இந்து முன்னணி’யின் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியத்திடம் இந்த விவகாரம் குறித்துக் கேட்டபோது, “அப்படியா... இப்படியொரு செய்தியை நான் இதுவரை கேள்விப்படவேயில்லையே?’’ என்று அதிர்ச்சி(?!) காட்டியவர், ‘‘ஆமாம்... பெரியார் பெயரில் எதற்காகக் கடை வைக்கிறார்கள்... இது காழ்ப்புணர்ச்சிதானே. இது அரசாங்கம் திறந்ததா... தனியாரா?” எனத் திகைக்கவைக்கும் கேள்விகளை நம்மிடம் கேட்டார். நாம் பொறுமையாக பதிலளிக்கவும், “எனக்குத் தெரியவில்லை. நான் என்னவென்று தெரிந்துகொண்டு சொல்கிறேன்” என்று அழைப்பைத் துண்டித்தவர், சற்று நேரத்தில் மீண்டும் இணைப்பில் வந்து, “சம்பந்தப்பட்ட பொறுப்பாளர் இணைப்பில் கிடைக்கவில்லை. அவரை என்னிடம் பேசச் சொல்லியிருக்கிறேன். அவர் பேசியதும் உங்களை அழைக்கிறேன்” என்றார். பிறகு பேசவில்லை.

‘பெயர் பிடிக்கவில்லை’ என்று எல்லோரும் இப்படி வன்முறையில் இறங்கினால் நாடு தாங்குமா?