சினிமா
Published:Updated:

துக்கத்துக்கும் சந்தோஷத்துக்கும் தப்பாம ஒலிக்கும்!

ஜெயராம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெயராம்

மூணு தலைமுறைக்கு முன்னாடி இந்த இடத்துக்கு வந்தவங்க நாங்க. எங்க தாத்தா, பாட்டி இங்கே வரும்போது இது சாதாரண கல்லு சாலை.

பிராட்வே, நைனியப்பன் தெருவில் கடைக்கும் சாலைக்கும் இடையிலான சிறு நிலப்பரப்பில் ஓடிறக்கி உருவாக்கப்பட்டிருக்கும் குடில்தான் ஜெயராமின் வீடு. பத்துக்குப் பத்து அளவிலான அந்தச் சின்ன வீட்டில், ஒரு படுக்கைக்கும் கொஞ்சம் துணிகளுக்கும் மத்தியில் ஒன்றுக்குமேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கின்றன விதவிதமான தப்பு செட்கள்.

நொடி கவனம் பிசகினாலும் விபத்து நிகழ்ந்துவிடுகிற பரபரப்பான அந்தத் தெருவில் ஜெயராம் பற்றி எவரிடம் கேட்டாலும், ‘‘யாரு... தப்புசெட்டு ஜெயராமா?’’ என்று கேட்டு அடையாளம் காட்டுகிறார்கள்.

‘‘வா தலை... குனிஞ்சு வா... யாரு வந்தாலும் நம்ம வீட்டுக்குத் தலைவணங்கித்தான் ஆவணும்...’’ பளீரெனச் சிரித்து, கரம்பற்றி வரவேற்கிறார் ஜெயராம்.

பார்க்க சிறுபையன் போலிருக்கும் ஜெயராம், வடசென்னை இளைஞர்களின் ஹீரோ. நல்லதோ, கெட்டதோ, ஜெயராம் தப்புசெட்டு என்றால் இளசுகளுக்கெல்லாம் கொண்டாட்டமாகிவிடும். சாலையோரக் குடும்பங்களைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்குப் பயிற்சி கொடுத்து, தப்புசெட் குழு நடத்தும் ஜெயராம், திரைப்படங்களிலும் பிஸி. ‘ஜகமே தந்திரம்’, ‘சார்பட்டா பரம்பரை’, ‘பிகில்’, ‘பாரிஸ் ஜெயராஜ்’ என இசைக்காகப் பேசப்பட்ட பல படங்களில் ஜெயராமின் தப்புசெட் அனல் கிளப்பியிருக்கிறது.

துக்கத்துக்கும் சந்தோஷத்துக்கும் தப்பாம ஒலிக்கும்!

‘‘சினிமால்லாம் நமக்கு சைடு பிசினஸ்தாண்ணா... துக்கத்துக்கும் சந்தோஷத்துக்கும் தெருவுல அடிக்கிறதும் ஆடுறதும்தான் நம்ம மெயின் தொழில்’’ என்று சிரிக்கிற ஜெயராம், தெளிவான அரசியல் புரிதலோடு பேசுகிறார்.

‘‘மூணு தலைமுறைக்கு முன்னாடி இந்த இடத்துக்கு வந்தவங்க நாங்க. எங்க தாத்தா, பாட்டி இங்கே வரும்போது இது சாதாரண கல்லு சாலை. நினைச்ச இடத்துல படுத்து, படுத்த இடத்துல தூங்கி எந்திருச்சாங்க. இன்னைக்கு இந்தியாவுக்கே இந்தத் தெருவுல இருந்துதான் மருத்துவப் பொருள்கள் போகுது. கடைகளெல்லாம் வந்தபிறகு, கடைக்குக்கீழே, ரோட்டுக்கு மேலேன்னு கிடைச்ச இடத்துல செட்டு போட்டுக்கிட்டோம்... சென்னைக்கு வந்தா பிழைச்சுக்கலாம்னு நம்பி வந்தவங்க வாழ்க்கை, இந்த ரோட்டுலயே ஆரம்பிச்சு முடிஞ்சுபோச்சு. நாளைக்கு எங்க வாழ்க்கையாவது மாறணும்னுதான் போராடுறோம்...’’ ஜெயராம் ‘வானம் விடிஞ்சிடுச்சு' பாட்டில் வரும் தப்பிசையை சுருதி சுத்தமாக வாசிக்கிறார்.

ஜெயராமின் அப்பா சின்ன வயதிலேயே குடும்பத்தை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார். அம்மாதான் வளர்த்து ஆளாக்கியதெல்லாம்.

‘‘இந்தத் தம்மாத்துண்டு வீட்டுக்கு முன்னால ஒரு பெட்டிக்கடையைப் போட்டுத்தான் அம்மா எங்களை வளர்த்தெடுத்துச்சு. அண்ணங்காரன் திருநங்கையாயிட்டான். சமீபத்துல இறந்துட்டான். அக்காவுக்குக் கல்யாணம் முடிச்சுட்டோம். ஒரு தங்கச்சி மட்டும் இருக்கு. நமக்கு லவ் மேரேஜ். 4 வருஷம் ஒன்சைடு லவ்வு. ஸ்வாதி நம்மளைக் கண்டுக்கவேயில்லை. அதுக்கப்புறம் அவங்களுக்கும் பூப்பூத்து மூணுவருஷம் லவ்வு ஓடுச்சு. இப்போ ரெண்டு புள்ளைங்களாயிருச்சு...

துக்கத்துக்கும் சந்தோஷத்துக்கும் தப்பாம ஒலிக்கும்!

ஆறாப்பு வரைக்கும்தான் படிச்சேன். என் தலைமுறை வரைக்கும் பெரிசா யாரும் ஸ்கூலுக்குப் போனதில்லை. மோளத்துமேல அப்பவே பெரிய காதல். இங்கிருக்கிற கந்தசாமி கோயில்ல சூரசம்ஹாரம், கிருத்திகைன்னு தினமும் ஒரு விசேஷம் நடக்கும். விதவிதமா மோளம் அடிப்பாங்க. அந்தக் கருவிகளைத் தொட்டுப் பாக்கணும்போலிருக்கும். ஆனா கிட்ட சேர்க்கமாட்டாங்க. அப்போ எங்காளுங்க சிலபேரு தப்புசெட்டுக்குப் போவாங்க. அவங்க பின்னாடியே போக ஆரம்பிச்சேன். அவங்க கொஞ்சம் அசந்த நேரத்துல தப்பை எடுத்து அடிச்சுப்பார்ப்பேன். அடிச்சு அடிச்சு ஒருநாள் தானா கலை கைக்கு வந்திருச்சு.

இப்போ எங்க குழுவுல 35 பேர் இருக்கோம். கஷ்டம் பாத்து ஆள்களை வேலைக்குக் கூட்டிக்கிட்டுப் போவேன். தப்பு செட்டுங்கிறது தனிச்ச இசை கிடையாது. தென்னிந்தியா, வட இந்தியான்னு பல தோல்கருவிகள் சேர்ந்த கலவை. அராத்து, பேஸ், முராகோஸ், சட்டி, கட்டை, டோல்னு எல்லாத்தையும் கலந்து கட்டி அடிப்போம். அந்தக்காலத்துல தப்பு செட்னா இறப்புக்கு மட்டும்தான் அடிப்பாங்க. இப்போ கல்யாணம், பிறந்தநாள், ஊர்வலம்னு எல்லாத்துக்கும் எங்களைக் கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாத்துக்கும் ஏத்த அடிங்க தப்புல இருக்கு. பிறந்தநாள்ல நாங்க போடுற குத்தாட்டத்துல ஏரியாவே களைகட்டிரும்...’’ சிரிக்கிறார் ஜெயராம்.

சென்னையில் உதிக்கும் கானா பாடகர்கள் பலருக்கும் ஜெயராம்தான் ஏந்தல். டியூன் போட்டு இசைத்து ஆல்பம் போடுவதுவரை எல்லோருக்கும் துணை நின்றிருக்கிறார். அந்தப் பாதைதான் சினிமாவுக்கு அழைத்து வந்தது.

துக்கத்துக்கும் சந்தோஷத்துக்கும் தப்பாம ஒலிக்கும்!

‘‘இன்னைக்கு பிரபலமா இருக்கிற பல கானா பாடல்களுக்கு டியூன் போட்டிருக்கேன். அந்த வகையில பாடகர்கள், இசையமைப்பாளர் களுக்கெல்லாம் கொஞ்சம் அறிமுகம் இருந்துச்சு. நம்மள மாதிரியே தப்பு செட் வச்சிருக்கிற ஓட்டேரி ‘சட்டி சரத்'துதான் சந்தோஷ் நாராயணன் சார்கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வச்சார். சார், காட்பாதர் மாதிரி. திறமையைப் பாக்குற அதே கண்ணால நம்ம கஷ்டத்தையும் பாக்குறவர். கொரோனா நேரத்துல அரிசி, பருப்புன்னு வாங்கியாந்து இங்கேயிருக்கிற எல்லாக் குடும்பங்களுக்கும் குடுத்தாரு மனுஷன். அவரு உதவி செய்யலேன்னா பல குடும்பங்கள் பட்டினியில தவிச்சிருக்கும். அவருதான், ‘சினிமா பெரிய விஷயமில்லை... வா வந்து வாசி'ன்னு கூப்பிட்டார். ‘ஜகமே தந்திரம்’ படத்துல வர்ற ‘ரகிட ரகிட' பாட்டுக்கு வாசிச்சேன். அடுத்து ‘பாரிஸ் ஜெயராஜ்'க்குக் கூப்பிட்டார். ‘புளி மாங்கா புளிப்', ‘பச்சா பச்சிக்கே...'ன்னு ரெண்டு பாட்டுக்கும் வாசிச்சேன். அதுக்கப்புறம் சந்தோஷ் சார் நிறைய வாய்ப்பு குடுத்தார். ‘சார்பட்டா பரம்பரை’ நம்ம மண்ணோட படம். அதுலயும் வாசிக்க வச்சார். ‘வானம் விடிஞ்சிடுச்சு' பாட்டுல ஒலிக்கிற டேப் நாம வாசிச்சதுதான். ‘பிகில்’ படத்துலயும் வாசிக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. க்ளைமாக்ஸ்ல விஜய் கிரௌண்ட்டுக்குள்ள இறங்குறப்போ எங்களையே நிறுத்தி வாசிக்க வச்சாங்க. இப்போ கோபி நயினார் அண்ணா எடுத்திருக்கிற படத்துலயும் வாசிச்சிருக்கேன். நாம அடிக்கிற தப்பு, தெருவுல பாட்டுல கலந்து ஒலிக்கிறப்போ கண்ணுல தண்ணி வருது...’’ நெகிழ்ந்துபோகிறார் ஜெயராம்.