மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: ஆக்கிரமிப்பு அபாயத்தில் நந்தவனம்!

நந்தவனம்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தவனம்

படங்கள்: கௌசல்யா

கையில் விபூதிப் பிரசாதம் மற்றும் ருத்ராட்ச மணியுடன் அறைக்குள் நுழைந்தார் நாரதர். பக்தியுடன் எழுந்து நின்றோம். திருநீற்றை நம் நெற்றியில் பூசி ஆசீர்வதித்தவர், “திருவண்ணாமலை, கார்த்திகை தீப விழாவில் 108 மூலிகைகளால் ஆன க்ஷணிக லிங்கம் வைத்து பக்தர்களைப் பரவசப்படுத்தி விட்டீர்களே... சபாஷ்” என்றார்.

அவருடைய வாழ்த்தையும் பாராட்டையும் பணிவோடு நாம் ஏற்றுக்கொள்ள, நாரதர் தாம் கொண்டு வந்த தகவல்களைக் கொட்டத் தொடங்கினார்.

“திருச்சி மலைக்கோட்டை தாயுமான ஸ்வாமி கோயிலுக்குப் போய் வந்தேன். அந்தக் கோயிலின் நந்தவனத்தின் மகிமையை அறிவீரா?''

``சொல்லுங்கள் ஸ்வாமி... தெரிந்துகொள்கிறோம்''

நாரதர் விவரித்தார்: “பழம்பெருமை வாய்ந்த, சோழர்களின் முற்காலத் தலைநகரான உறையூர் அழிவதற்கே காரணமான நந்தவனம் அது. பன்னிரு திருமுறைகளில் பாடல் பெற்றுள்ள ஒரே நந்தவனமும்கூட.

சேரமான் பெருமாள் நாயனார் திருவாரூர் மும்மணிக்கோவை எனும் பதினோராவது திருமுறையில், திருச்சி தாயுமான ஸ்வாமி கோயில் நந்தவனத்தைப் பாடியிருக்கிறார். வேறு எந்தக் கோயிலின் நந்தவனத்துக்கும் இந்தப் பெருமை கிடைக்கவில்லை.

இந்தக் கோயில் நந்தவனத்தில் உள்ள குளக் கரையில்தான் அம்பாள் ஊசி முனையில் தவமிருந்தாள். அதை நினைவுபடுத்தும் விதமாகவே வருடத்துக்கு ஒருமுறை தீர்த்தவாரி கொண்டாடப்படுகிறது. இந்த நந்தவனத்தின் மூலமாகவே நாக கன்னியர்கள் பாதாள உலகத்திலிருந்து வந்து சிவபெருமானை பூஜை செய்வார்களாம். அதனாலேயே இங்கு நாக கன்னிகளுக்கு மரத்தடியில் சிலைகள் உண்டு.

நந்தவனம்
நந்தவனம்

இப்படிப் பல்வேறு சிறப்புகள் வாய்ந்த நந்த வனத்தில் பூக்கும் செவ்வந்தி மலர்களைக் கொண்டுதான் சாரமாமுனிவர், தாயுமான ஸ்வாமியை வழிபட்டு வந்தார். அதனால், ஈசனுக்கு செவ்வந்தி நாதர் என்ற திருப்பெயரும் உண்டு.

உறையூர் சோழ மன்னன் தாயுமான ஸ்வாமி கோயில் நந்தவனத்தில் உள்ள மலர்களைப் பறித்து பயன்படுத்திவந்தான். சாரமா முனிவரும் மன்னரிடம் சென்று, `சிவன் சொத்தை அபகரித்தால் குலநாசம் ஏற்படும்' என்று எச்சரித்தார். மன்னன் கேட்பதாகயில்லை. சாரமாமுனிவர், தாயுமான ஸ்வாமியை வேண்டினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்கிய தாயுமான ஸ்வாமி, மேற்குப் புறத்தில் திரும்பி ஒருமுறை உறையூரை நோக்கினார். அவ்வளவுதான் உறையூரை மணற்புயல் அழித்தது. அதற்குப் பிறகுதான் சோழர்கள் வேறு தலைநகரைத் தேடி செல்லும் நிலை ஏற்பட்டது” என்றார்.

``நந்தவனத்தைப் பற்றி தாங்கள் இவ்வளவு விவரிக்கிறீர்கள் எனில், நந்தவனத்துக்கு ஏதோ ஆபத்து இருக்கும் போலிருக்கிறதே?”

``சரியாகக் கணித்துவிட்டீர். அற்புதமான அந்த நந்தவனம் ஆக்கிரமிப்பு அபாயத்தில் இருக்கிறது'' என்ற நாரதரிடம், ``விவரமாகச் சொல்லும்'' என்று கேட்டுக்கொண்டோம்.

``தற்போது நந்தவனம் தருமபுரம் மௌன மடத்தின் கீழ் உள்ளது. மிக பரிதாபமான நிலையில் திகழ்கிறது. வருடத்துக்கு ஒரு முறை தீர்த்தவாரி மட்டும் நடைபெறுகிறது. போதிய பராமரிப்புகள் இன்றி புதர்மண்டி, காடுபோல் காட்சியளிக்கிறது நந்தவனம். போதிய பராமரிப்பும் கவனிப்பும் இல்லாமல் இருப்பதால், அருகிலுள்ள தனியார் நிறுவனம் ஒன்று, சொந்த பயன்பாட்டுக்காக இந்த நந்த வனத்துக்குள் ஆழ்துளைக் கிணறு அமைத்து தண்ணீர் எடுக்க முயற்சி செய்ததாம்.

நந்தவனம்
நந்தவனம்

கடவுள் சித்தமோ என்னவோ, அவர்களுக்கு அங்கே நீர் கிடைக்கவில்லை. ஆனால், தற்போது அதே நிறுவனத்துக்கு நந்தவனத்தின் ஒரு பகுதியை 99 வருடங்களுக்குக் குத்தகைக்கு விடுவதற்கு, மடத்தின் சார்பில் முடிவு செய்திருப்பதாக செய்திகள் கசிகின்றன.”

“இதுகுறித்து கோயில் நிர்வாகத்தின் தரப்பில் பேசினீர்களா...”

“பேசாமல் இருப்பேனா! மலைக்கோட்டை கோயில், தருமபுரம் மௌன மடம் மற்றும் இந்து அறநிலையத்துறை என்று இரண்டு நிர்வாகத்தின் கீழ் செயல்படுகிறது. ‘நந்த வனத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தருமபுரம் மௌன மடத்துக்குத்தான் உண்டு. அதனால், நந்தவனத்தை நிர்வகிப்பது தொடர்பாக எவ்வித முடிவையும் எங்களால் எடுக்க முடிய வில்லை’ என்கிறார்கள் அறநிலையத் துறை அதிகாரிகள்.

நாம், மலைக்கோட்டையில் செயல்படும் தருமபுரம் மௌன மடத்தை அணுகினோம். அங்கிருப்பவர்களோ, ‘எந்தவித ஆக்கிரமிப்பும் நிகழவில்லை. குத்தகைக்கு விடப்போவது பற்றி எங்களுக்கு எதுவும் தெரியாது’ என்று கூறிவிட்டார்கள்” என்றார் நாரதர்.

“செவ்வந்தி மலர்களை மன்னன் பறித்த தற்கே சிவகோபத்துக்கு உள்ளானது உறையூர். ஆனால், இப்போது நந்தவனத்தையே ஆக்கிரமிக்க முயற்சி நடக்கிறது எனில், இறைவனின் கோபம் எப்படி இருக்கப் போகிறதோ...'' என்று நாம் ஆதங்கப்பட, அதை ஆமோதித்த நாரதர், “அரசும் பொதுமக்களும் இதுபோன்ற ஆலயச் சொத்துகள் தனியார் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும்'' என்றவர், அடுத்த தகவலுக்குத் தாவினார்.

“தென்னகத்து கோகுலம் என்று பக்தர்களால் போற்றப்படும் தலம் சென்னை - திருவல்லிக் கேணி. எம்பெருமான் குடும்ப சமேதராய் அருளும் அல்லிக்கேணி ஆலயத்தைச் சுற்றிலும் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன என்று நண்பர்கள் போனில் அழைத்து ஆதங்கப் பட்டார்கள். நானும் அல்லிக்கேணிக்கு நேரில்

சென்றேன். நண்பர்கள் சொன்னது உண்மை தான். ஆலய சுற்றுவட்டாரப் பகுதிகளில் குவிந்துகிடக்கின்றன குப்பைகள். சமந்தப்பட்ட துறையினர், விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றவர், ``தென் மாவட்டத்தில் ஒரு பெருமாள் கோயிலில் பிரச்னை என்று நம் வாசகர் ஒருவர் தகவல் தெரிவித்திருக்கிறார். விசாரித்து வந்து விவரம் சொல்கிறேன்'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...