கட்டுரைகள்
Published:Updated:

தற்கொலை டிரோன்கள்! - மிரட்டும் அர்மேனியா - அஜர்பைஜான் போர்!

அஜர்பைஜான் போர்
பிரீமியம் ஸ்டோரி
News
அஜர்பைஜான் போர்

துருக்கியின் உதவியுடன் களமிறங்கியிருக்கும் அஜர்பைஜானின் தற்கொலைப்படை டிரோன்கள், மக்களை மிரள வைத்திருக்கின்றன.

போர், என்றுமே எந்தப் பிரச்னைக்கும் தீர்வாக இருந்ததில்லை. போருக்கு நியாயங்கள், தர்மங்கள் எதுவுமில்லை. வரலாறுகள் அதைத்தான் நமக்கு அறிவுறுத்துகின்றன. தற்போது நடந்துவரும் அர்மேனியா -அஜர்பைஜான் போரும் அதைத்தான் பிரதிபலிக்கிறது.

எங்கே தொடங்கியது?

அர்மேனியா - அஜர்பைஜான் நாடுகளுக்்கு இடையிலான சச்சரவு இன்று நேற்று ஆரம்பித்தது அல்ல. 1921-ல் சோவியத் தலைவரான ஜோசப் ஸ்டாலின், நாகோர்னோ- கரபாக் என்ற சர்ச்சைக்குரிய பகுதியின் உரிமையை அஜர்பைஜானுக்குக் கொடுத்தார். இஸ்லாமிய தேசமான அஜர்பைஜானிடம் 90% கிறிஸ்தவ அர்மேனியர்கள் வாழும் நாகோர்னோ- கரபாக் பகுதியைத் தாரைவார்த்த காலத்தில் இருந்தே பிரச்னை புகையத் தொடங்கிவிட்டது.

அஜர்பைஜான் போர்
அஜர்பைஜான் போர்

அவ்வப்போது அனல் கக்கிவந்த இந்தப் பிரச்னை 1980-ல் பெரிதாக வெடித்தது. நாகோர்னோ-கரபாக் மக்கள் அர்மேனியாவுடன் இணைய விரும்பினார்கள். அது நடக்காமல் போக, அடுத்்த மூன்றாண்டுகளில் சுயாட்சி பெற்ற நாகோர்னோ- கரபாக் குடியரசு உருவானது.

சோவியத் யூனியனில் ஏற்பட்ட பிளவுக்்குப் பிறகு, 1991-ல் இந்தப் பகுதியின் உரிமையை மீட்க அர்மேனியாவுக்கும் அஜர்பைஜானுக்கும் போர் மூண்டது. 30,000 பேரை மென்று விழுங்கி, சவக்காடாக மாறிப்போனது நாகோர்னோ - கரபாக் பகுதி. ஆயிரக்கணக்காண மக்கள் அகதிகளாகி பல நாடுகளில் தஞ்சமடைந்தார்கள். மூன்றாண்டுகள் நடந்த போரில் 20% இடத்தைத்தான் அர்மேனியாவால் கைப்பற்ற முடிந்தது.

2015-ம் ஆண்டு நடந்த கணக்கெடுப்பின்படி, நாகோர்னோ - கரபாக் குடியரசின் மக்கள்தொகை எண்ணிக்கை 1.5 லட்சம். அந்த இடத்தின் மொத்தப் பரப்பளவே 11,458 சதுர கி.மீ தான். அதற்குத்தான் நூறாண்டுகளாக நடந்துவருகிறது இந்த யுத்தம்.

இப்போது என்ன நடக்கிறது?

செப்டம்பர் 27-ம் தேதி மீண்டும் அங்கு போர்ச்சூழல் உருவானது. இரண்டாம் நாகோர்னோ-கராபக் போர் என வரலாற்றாய்வாளர்களால் பதிவு செய்யப்படும் இந்த யுத்தத்தை ஆரம்பித்து வைத்திருக்கிறது அஜர்பைஜான். உலகின் பார்வையில் நாகோர்னோ - கரபாக் அஜர்பைஜானின் ஒரு பகுதியாக இருந்தாலும், அங்கு ஆள்வது அர்மேனியப் பூர்வகுடிகள்தான். போரின் குறைந்தபட்ச அறமே, மக்களின் நிலப்பரப்புகளுக்கு பாதிப்பு வராத வண்ணம் சண்டையிடுவதுதான். ஆனால், தலைநகர் ஸ்டெபனகெர்ட்டின் பொதுமக்கள் வாழும் பகுதிகளில் குண்டு மழை பொழிந்தது அஜர்பைஜான். எதிர்த்தாக்குதல் நடத்திய அர்மேனியராணுவம், இரண்டு ஹெலிகாப்டர்களையும், மூன்று டிரோன்களையும் சுட்டு வீழ்த்தியது.

அஜர்பைஜான் போர்
அஜர்பைஜான் போர்

அதற்குப் பின், பிரச்னை விஸ்வரூபமெடுத்தது. ஸ்டெபனகெர்ட்டில் இருக்கும் 50,000 மக்களைப் பற்றிக்் கவலைப்படாமல் தாக்குதல் நடத்த ஆரம்பித்தது அஜர்பைஜான். மக்களைப் பணயக் கைதிகளாக அர்மேனிய அரசு பயன்படுத்துகிறது என்பது அஜர்பைஜானின் புகார்.

துருக்கியின் உதவியுடன் களமிறங்கியிருக்கும் அஜர்பைஜானின் தற்கொலைப்படை டிரோன்கள், மக்களை மிரள வைத்திருக்கின்றன. திடீர் திடீரெனப் பறந்து வரும்் டிரோன்கள், மக்கள் நெருக்கம் மிக்க பகுதிகளில் வெடிகுண்டுகளோடு சேர்ந்து வெடித்துச் சிதறுகின்றன. இஸ்ரேலிடமிருந்து வாங்கிய `ஹரோப்’ ரக தற்கொலை டிரோன்களை இப்போரில் அதிகம் பயன்படுத்துகிறது அஜர்பைஜான். ரேடார்களின் கண்களில் மண்ணைத்தூவி, குறிப்பிட்ட இடத்தில் வெடித்துச் சிதறுவதில் சாமர்த்தியசாலிகள் இந்த டிரோன்கள். அமெரிக்காவுக்கே சவால்விடும் துருக்கியின் பைரக்தார் ரக டிரோன்களையும் களத்தில் இறக்கியிருக்கிறது அஜர்பைஜான். அர்மேனியாவின் பக்கம் ரஷ்யா நிற்கிறது. ரஷ்யாவின் ஒரு படைத்தளம் அர்மேனியாவில் இருக்கிறது.

அர்மேனியப் பிரதமரான நிகோல் பசின்யன், “அமைதிப் பேச்சுவார்த்தைக்கு நாங்கள் தயார்” என அறிவித்திருக்கிறார். அஜர்பைஜானின் அதிபரான இல்ஹம் அலியேவோ, “நாங்கள் யாரென அவர்களுக்குக் காட்டிவிட்டோம். இதுதான் இறுதி எச்சரிக்கை. அவர்களை விரட்டியிருக்கிறோம். நாகோர்னோ-கராபக் பகுதி எங்களுடையது” என கர்ஜித்திருக்கிறார்.

துருக்கியைத் தவிர அனைத்து தேசங்களுமே, போரைக் கைவிடுமாறு வலியுறுத்தி வருகின்றன. ஜார்ஜியா, கத்தார், ஈரான் போன்ற நாடுகள் மத்தியஸ்தர்களாக இருக்க விருப்பம் தெரிவித்திருக்கின்றன.

என்னதான் தீர்வு?

இரு நாடுகளுக்குமான பிரச்னையைத் தீர்க்க அமெரிக்கா, ரஷ்யா, பிரான்ஸ் நாடுகள் அடங்கிய குழுவொன்று அமைக்கப்பட்டது. இந்தக் குழு, இருநாடுகளுக்குமிடையில் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால், 2007-ம் ஆண்டுக்குப்பிறகு பெரிதாகச் செயல்படவில்லை.

தற்போது இரண்டு வார யுத்தத்தை வேடிக்கை பார்த்துவிட்டு, அக்டோபர் 8-ம் தேதியன்று ஜெனிவாவில் கூடி இந்த விவகாரம் குறித்்து விவாதித்தது அந்தக்் குழு. ‘அந்த நிலப்பரப்பின் அமைதியை இத்தகைய சண்டைகள் கேள்விக்குள்ளாக்குகின்றன. அதற்கு எங்களின் கண்டனங்கள்” எனக் கூட்டறிக்கை வெளியிட்டதோடு கடமையை முடித்துக் கொண்டது அந்தக் குழு.

அஜர்பைஜானுக்கு, ஐக்கிய நாடுகள் சபை பங்கிட்டுக் கொடுத்த நிலபரப்பு தங்களின் கட்டுப்பாட்டின்கீழ் வரவேண்டும். அர்மேனியாவைப் பொறுத்தவரை, நாகோர்னோ- கரபாக் குடியரசு மக்கள் தங்களின் விருப்பத்தின் படி முடிவெடுக்க அனுமதிக்க வேண்டும்.(அதாவது அர்மேனியாவுடன் சேர்ந்துவிடுவது). இரண்டு நாடுகளும் தங்கள் நிலையிலிருந்து இறங்ககி வருவதாகத் தெரியவில்லை.

இனி வருங்காலங்களில் நடக்கும் போர்கள், நாம் வரலாற்றில் படித்ததைப்போல் இருக்கப்போவதில்லை. விதவிதமான ஆயுதங்கள், புதுவிதமான யுக்திகள் என அழிவுக்கான பாதை விசாலமாகவே இருக்கிறது. இடையில் நின்று தீர்வுகாண வேண்டிய நாடுகள் எட்ட நின்று லாப நட்டக்் கணக்குப் பார்த்துக்கொண்டிருப்பது நிலைமையை மேலும் விபரீீதமாக்கிக்் கொண்டிருக்கிறது. டிரோன் சத்தமில்லாத, குண்டுப்புகை இல்லாத நல்வாழ்க்கை நாகோர்னோ-கராபக் பகுதியில் விரைவிலேயே அமையட்டும்!

வேண்டாம் இன்னொரு போர்!

2004-ம் ஆண்டு ஈராக்கின் மீது அமெரிக்கா போர் தொடுத்தது. இரண்டு முறை நடந்த போரில், பல்லாயிரம் டன் யுரேனியத்தையும் பிற அணுக்கழிவுகளையும் ஈராக்கில் கொட்டி அணுக்கதிர்கள் விளையும் தேசமாக அதை மாற்றியது அமெரிக்கா. ஈராக்கின் மேற்குப் பகுதியிலிருக்கும் பலூஜா மருத்துவமனையில் இன்றுவரை, பிறக்கும் குழந்தைகளின் உடலில் அதன் தாக்கம் இருக்கிறது. ஹிரோஷிமா, நாகசாகியைவிடவும், 14 மடங்கு அதிக பாதிப்பைத் தற்போது பிறக்கும் குழந்தைகள் அங்கே எதிர்கொள்கிறார்கள்.

10 ஆண்டுகளாக நீடித்துவரும் சிரியப் போரில், இறந்தவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தைத் தொடும் என்கிறது ஐக்கிய நாடுகளின் ஆய்வு. அதில் குழந்தைகள் மட்டும் 22,000 பேர்.