Published:Updated:

நூற்றாண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட குர்னே பிடா... மீண்டும் அழியும் ஆபத்து! ஏன்?

குர்னே பிடா (Gurney's Pitta)
News
குர்னே பிடா (Gurney's Pitta)

தாய்லாந்தில் கறுப்பு தொப்பை பறவை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அழிவுக்கு முக்கியக் காரணம், காடழிப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

Published:Updated:

நூற்றாண்டுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட குர்னே பிடா... மீண்டும் அழியும் ஆபத்து! ஏன்?

தாய்லாந்தில் கறுப்பு தொப்பை பறவை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அழிவுக்கு முக்கியக் காரணம், காடழிப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள்.

குர்னே பிடா (Gurney's Pitta)
News
குர்னே பிடா (Gurney's Pitta)

குர்னே பிடா என்னும் பறவை, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குர்னே பிடா அளவில் சிறியதாகவும், வண்ணமிகு நிறங்களைக் கொண்டதாகவும் இருக்கும். இது 1875-ல் முதன்முதலில் மியான்மரில் உள்ள தனின்தார்யி என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் நூறு ஆண்டுகளாக இந்தப் பறவையைக் கண்டுபிடிக்க இயலாததால் ஆய்வாளர்கள் இவை அழிந்துவிட்டன எனக் கருதினர். ஆனால், 1986-ம் ஆண்டு மீண்டும் குர்னே பிடா இனம் தாய்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது. இயற்கையைப் பாதுகாக்கும் சர்வதேச ஒன்றியம் (IUCN) 2003-ம் ஆண்டு இப்பறவையை மிகவும் அருகிவரும் உயிரினமாக அறிவித்தது. அப்போது மியான்மரில் இதன் எண்ணிக்கையானது இரண்டு மடங்காக உயர்ந்து காணப்பட்டது.

Palm Plantations
Palm Plantations

இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான குர்னே பிடா இனப் பறவைகள் மியான்மரிலிருந்து காணாமல் போய்விட்டன. தாய்லாந்தில் கறுப்பு தொப்பை பறவை என்று உள்ளூர் மக்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அழிவுக்கு முக்கியக் காரணம் காடழிப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள். ஆண் பறவைக்குக் கூடுதலாக உடம்பின் பக்கவாட்டில் எலுமிச்சை மஞ்சள் நிறமும் தலையில் நீல வண்ண மகுடமும் உள்ளது. இத்தகைய சிறப்பான அம்சங்களே 2008-ம் ஆண்டு பறவை நோக்கர்களால் தாய்லாந்தின் மிகவும் விரும்பப்பட்ட பறவையாக குர்னே பிடாவை மாற்றியது.

குர்னே பிடாவின் நீல நிற மகுடமே சர்வதேச செல்லப் பிராணிகளில் ஒன்றாக இதை மாற்றியது. அறிவியல் ஆய்வாளர்களால் 1980-ம் ஆண்டு அருகிவரும் பறவை இனமாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அப்போதே விலங்கு விற்பனையாளர்கள் ஐம்பது பிடா பறவைகளை விற்றதாக ஆய்வாளர்களிடம் தெரிவித்தனர். இந்தத் தகவலைப் பயன்படுத்தியே 1986-ம் ஆண்டு இந்தப் பறவை இனம் கணக்கிடப்பட்டது.

பிரிட்டனைச் சேர்ந்த சர்வதேசப் பறவை வாழ்வு (Birdlife international) நிறுவனத்தின் தெற்காசிய ஒருங்கிணைப்பாளர் அனுஜ் ஜெயின், ``இந்தப் பறவைகள் அருகி வருவதற்கு வேட்டையாடுதல் மிக முக்கியக் காரணமாக உள்ளது. உள்ளூர்வாசிகள் பிழைப்புக்காக இதை வேட்டையாடுகின்றனர். ஆனால், ஆயுதங்கள் தாங்கிய தாய்லாந்து வேட்டையாளர்கள் பாகுபாடின்றி இந்தப் பறவையை வேட்டையாடுகின்றனர். பெரும்பாலும் வேட்டையாடுபவர்களின் முக்கிய இலக்காக குர்னே இருப்பதில்லை. ஆனால், இவை பூமியில் உள்ள புழுக்களை உண்டு வாழ்வதால் எறும்புத் தின்னிகளுக்காக வைக்கப்படும் தரை வலைகளில் இவையும் சிக்கிக் கொள்கின்றன" என்றார்.

ஆனால், வேட்டையாடுதல் மட்டுமே இந்தப் பறவையினம் அருகி வருவதற்குக் காரணமல்ல. தாய்லாந்தின் மியான்மர் பகுதியில் 10 சதவிகிதத்துக்கும் மேலான பகுதிகள், பனை எண்ணெய்க்கான தோட்டங்களுக்குப் பயன்படுத்தப்பட்டதும் காரணமாகக் கூறப்படுகிறது.

சமீபத்திய ஆய்வு முடிவுகளில்,1999-ம் ஆண்டு பனை எண்ணெய் தோட்டங்கள் தொடங்கப்பட்டபோது பறவைக்கான வாழ்விடமாக 1,245 சதுர மைல் நிலப்பரப்பு இருந்துள்ளது. பிறகு, 2017-ல் 80 சதவிகிதம் சுருங்கி 253 சதுர மைல்களாக ஆகிவிட்டது. இதைப்பற்றி மூத்த ஆய்வாளரான நேய் ம்யோ ஸ்வே கூறுகையில், ``குர்னே பறவையினங்கள் அழிவதற்கு முக்கியக் காரணம் பனை எண்ணெய் தோட்டங்களின் விரிவாக்கமே ஆகும். இவை வியாபார நோக்கிற்காகக் காடுகளில் இப்பறவை வாழும் தாழ்நிலப் பகுதியையே அழித்துவிடுகின்றன. மேலும், இவை எளிதில் தப்பித்துவிடக்கூடிய ஒன்று. அதனால் இவற்றை ஆய்வு செய்வது கடினமான வேலை. தெற்கு தனிந்தார்யை பகுதியில் 2015 மற்றும் 2016-ம் ஆண்டு ஆய்வு செய்தபோது பெருவாரியான குர்னே பிடா இனப் பறவைகள் மற்ற பறவையினங்கள்போல காணாமல் போய்விட்டன" என்றார்.

இந்த ஆய்வுமுடிவுகளில் தேர்தெடுக்கப்பட்ட காட்டின் பகுதிகளில் 41 இடங்களில் மட்டுமே குர்னே பிடா இனப் பறவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும், 101 இடங்களில் இவற்றின் சுவடே தென்படவில்லை. இந்தப் பறவை இனம் முன்னர் இருந்த 71 சதவிகித இடங்களில் இப்போது காணவில்லை.

மியான்மரின் தெற்கு தனிந்தார்யைப் பகுதி குர்னே பிடா இனப் பறவையைத் தவிர மலாய் தபிர், சுன்டா எறும்புத்தின்னி, லார் கிப்பன் ஆகிய உயிரினங்களுக்கும் வாழ்விடமாக உள்ளது. காடழிப்பு தொடர்ந்தால் இவையும் பாதிப்புள்ளாகும். இந்தக் காட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக வெளிநாட்டு அரசு சாரா அமைப்பான தநாத்வாரியின் பாதுகாப்புக் கூட்டமைப்பு (conservation alliance of tanawthari -CAT) பொறுப்பேற்றுள்ளது. இது காரென் சமுதாய அமைப்பின் கூட்டணி அமைப்பாகச் செயல்படுகிறது.

குர்னே பிடா பறவை
குர்னே பிடா பறவை

``இங்குள்ள உள்ளூர் சமுதாய மக்கள் இல்லையெனில் உலகளவில் முக்கியமான தனிந்தார்யை காட்டுப் பகுதி எப்போதோ அழிந்திருக்கும்" என இந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2018-ல், அந்நாட்டின் சுற்றுச்சூழல் மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு அமைப்பான பான்கா (banca) மற்றும் சூழலியல் அமைப்பான `Bird life' ஆகியவை குர்னே பிடா இனப் பறவையைப் பாதுகாப்பதற்கான திட்டங்களை வகுத்துள்ளன. இது மூன்று வருட காலம் லென்யா காட்டுப் பகுதியை நிர்வகிக்கும் கூட்டுத் திட்டமாகும். இந்த அமைப்புகள் மியான்மர் அரசுடனும் காரேன் தேசிய ஒன்றியத்துடனும் (knu) இணைந்து செயல்படவுள்ளன.

தற்போது பான்காவும் பறவை வாழ்வு மையமும் (bird life) தங்களது திட்டங்களைச் செயல்படுத்தவுள்ள நேரத்தில் பிடா இனப் பறவையின் எண்ணிக்கையை உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என்கிறார் ஸ்வே. இவரது குழு அடுத்த இனப்பெருக்க காலத்தில் (மார்ச் முதல் மே 2020 வரை) கணக்கெடுப்பை நடத்தவுள்ளது. இதில் பங்கேற்க உள்ளூர் வாசிகள், பறவை ஆர்வலர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Plantations
Plantations

தொடர்ச்சியாக மனிதனால் பல்வேறு சுற்றுச்சூழல் மாற்றங்கள் ஏற்படுகின்றன. இவ்வாறு அரிதாகி வரும் உயிரினங்களை அழிவிலிருந்து காப்பது இயற்கைக்கு நாம் செய்யும் கைமாறாகும். அடுத்த தலைமுறைக்கு இப்படிப்பட்ட உயிரினங்களை அறிமுகப்படுத்த வேண்டியது நமது கடமையாகும். மனிதன் தனது சுயநலத்துக்காகக் காடுகளை அழிப்பதை நிறுத்த வேண்டும். பூமி என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவான ஒன்று என்பதை எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியம்.