காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டுவருகிறார். இந்த யாத்திரை தற்போது மகாராஷ்டிராவை முடித்துக்கொண்டு இன்று மத்தியப் பிரதேசத்துக்குள் நுழைந்திருக்கிறது. குஜராத் தேர்தலுக்காக ராகுல் காந்தி இரண்டு நாள்கள் பிரேக் எடுத்துக்கொண்டார். இந்தப் பயணத்தில் சில நடிகர், நடிகைகள் ராகுல் காந்தியுடன் சிறிது தூரம் நடப்பதுண்டு. இந்த நிலையில், அந்த நடிகர்கள் நடிகைகள் பணம் கொடுத்து அழைத்துவரப்பட்டதாக பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது. பூஜா பட், அமோல் பாலேகர், ரியா சென், ரேஷ்மி தேசாய் போன்ற நடிகர், நடிகைகள் ராகுல் காந்தியின் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றனர். இந்த நடிகர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாகவும், `மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தியுடன் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் நடிகர்களுக்குப் பணம் கொடுக்கப்படும்' என்றும் வாட்ஸ்அப் உரையாடல் செய்தி ஒன்று வைரலாகப் பரவி வருகிறது. ஆனால், அந்த வாட்ஸ்அப் செய்தியில் போன் நம்பர் இல்லை. `நவம்பர் மாதம் மத்தியப் பிரதேசத்தில் ராகுல் காந்தியுடன் 15 நிமிடங்கள் ஜோடோ யாத்திரையில் பங்கேற்கும் நடிகர், நடிகைகள் தாங்களே நேரத்தை முடிவு செய்துகொண்டு பங்கேற்கலாம். அதற்கு தகுந்த ஊதியம் கிடைக்கும்' என்று அந்த வாட்ஸ்அப் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது. மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.எல்.ஏ நிதேஷ் ரானே இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

ஆனால் இதை காங்கிரஸ் கட்சி மறுத்திருக்கிறது. `ராகுல் காந்தியின் யாத்திரையை பா.ஜ.க களங்கப்படுத்த முயற்சிக்கிறது. ராகுல் காந்தியுடன் யாத்திரையில் பங்கேற்றவர்கள் நாட்டிற்காக பங்கேற்றனர். இந்த யாத்திரையை களங்கப்படுத்தவேண்டும் என்பதில் பா.ஜ.க தீவிரமாக இருப்பது தெளிவாக தெரிகிறது. போலி வாட்ஸ்அப் செய்தியை ஆதாரமாக எடுத்துக்கொள்ள முடியுமா? அதில் போன் நம்பரோ, பெயரோ இல்லை. காங்கிரஸ் கட்சிக்கு பிரபலங்கள் ஆதரவை காட்டுவதை செயற்கையானது என்று காட்டுவதில் பா.ஜ.க-வுக்கு கைவந்த கலையாகும்' என்று காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சச்சின் சாவந்த் வெளியிட்டுள்ள ட்விட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இது பா.ஜ.க ஐ.டி பிரிவு நிர்வாகி அமித் மால்வியா வெளியிட்டுள்ள செய்தியில், `ஒரு தலைவராக ராகுல் காந்தியை புதுப்பிக்கவும், சுய சேவைக்கூட்டத்தை உருவாக்கவும் இந்த யாத்திரை உதவியது. ஆனால் சிறிது பணத்திற்காக ராகுலுடன் பழகுவதற்கு யார் தயாராக இருக்கிறார்கள்?' என்று தெரிவித்துள்ளார். ஆனால் பணம் கொடுக்கப்பட்டதாக வெளியாகியிருக்கும் செய்தியை நடிகை பூஜா பட் மறுத்துள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் செய்தி வெளியிட்டிருக்கிறார். பூஜா பட் ஹைதராபாத்தில் ராகுல் காந்தியுடன் 15 கிலோமீட்டர் ஜோடோ யாத்திரையில் பங்கேற்றார்.