“உயிரோடு இருந்திருந்தா நிறைய பேர காப்பாத்தியிருப்பான். ஆனா, அவன காப்பாத்த முடியலயே!”

டாக்டருக்குப் படிச்சு, கிராம மக்களுக்கு சேவை பண்ணுவேன் ஜெயமோகன்
உலகம் முழுவதுமே இது மருத்துவர்களுக்கான சோதனைக் காலம். கொரோனா என்னும் மாபெரும் பேரழிவை எதிர்த்து மருத்துவ யுத்தம் நடத்தும் மானுடக் காவலர்கள் மருத்துவர்கள்.
இந்நிலையில் தெங்குமரஹாடாவில் பணியாற்றிய அர்ப்பணிப்புமிக்க ஒரு மருத்துவரின் மரணம் தமிழகத்தை இடியாய்த் தாக்கியுள்ளது.

ஜெயமோகனின் நண்பர்கள், உடன் பணியாற்றியவர்கள் தெங்குமரஹாடா மக்கள் என்று அனைவரிடமும் பேசினோம், “இவரு டாக்டர்தானாங்கற அளவுக்கு ரொம்ப எளிமையா இருப்பாரு. யார்கிட்டயும் அதிகம் பேச மாட்டாரு. பொது இடத்துல குனிஞ்ச தலை நிமிராது. மருத்துவமனைக்குப் போனா ரொம்பப் பொறுமையா, கனிவா நடந்துக்குவாரு” என்று ஒருமித்த குரலில் பேசினார்கள்.
தெங்கமரஹாடா கிராமத்தில் உள்ள விவசாயி நடராஜ், “மூணு வருஷத்துக்கு முன்னாடி அவரு எங்க கிராமத்துக்கு வந்தார். ரொம்ப இள வயசா இருக்காரேன்னு எல்லாரும் ஆச்சர்யப்பட்டோம். அளவாதான் பேசுவார். வனத்த ஒட்டியிருக்கறதால, இவருக்கு முன்னாடி இருந்த மத்த டாக்டருங்க எல்லாம் அடிக்கடி லீவ் போட்ருவாங்க. இவரு அப்படி இல்ல. இங்கயே தங்கிடுவாரு. நிறைய நோயாளிங்க இருக்கறப்ப, மத்த டாக்டருங்க எல்லாம் அவசர அவசரமாதான் பார்ப்பாங்க. ஆனா, எத்தனை நோயாளிங்க இருந்தாலும் இவரு ரொம்பப் பொறுமையாதான் பார்ப்பார். இங்க இருக்கற ஒவ்வொரு மக்களுக்கும் என்ன பிரச்னை இருக்குதுன்னு அவருக்கு நல்லாத் தெரியும்.

ரெண்டு மாசத்துக்கு முன்ன, எங்க ஊர்ல பெருமாள்னு ஒரு 71 வயசுப் பெரியவர் வீட்ல திடீர்னு மயக்கம் போட்டு விழுந்துட்டாரு. நாங்க பதறியடிச்சு அவர தூக்கிட்டுப் போனோம். டாக்டரு அப்பத்தான் எங்கயோ போயிட்டு வந்தாரு. உடனே, ‘யாரு பெருமாளா..? இவருக்கு சக்கரை அளவு ரொம்ப கம்மியாகிருக்கும்’னு சொல்லி வேகவேமாக சிகிச்சை கொடுத்தாரு. ‘அரைமணி நேரத்துல கண் முழிச்சுடுவார்’னு சொன்னாரு. அதே மாதிரி பெருமாள் அரைமணி நேரத்துல கண் முழிச்சுட்டார். பெருமாள் இப்ப நல்லாருக்கார்.
தன்கூட வேல பார்க்கறவங்களக் கூட எதுக்கும் எதிர்பார்க்க மாட்டாருங்க. ஒருமுறை நான் செக்கப்புக்காகப் போனேன். டாக்டர் மட்டும்தான் இருந்தார். எல்லா செக்கப்பும் அவரே பண்ணுனாரு. ‘அடுத்த ஒரு வருஷத்துக்கு நீங்க ஆஸ்பத்திரி பக்கம் வர வேண்டியிருக்காது’ன்னு நம்பிக்கை கொடுத்து அனுப்பி வெச்சாரு. 10, 15 நாளாவே அவருக்கு உடம்பு சரியில்லைபோல. திடீர்னு ஒரு நாள் நைட் ஆம்புலன்ஸ்ல போனாங்க. டாக்டருக்கு டெங்கு காய்ச்சல்னு சொன்னாங்க. எப்படியும் சரியாகி வந்துடுவார்னுதான் எல்லாரும் நம்பிட்டு இருந்தோம். இப்படியாகும்னு நினைக்கவே இல்ல. எங்களுக்கு இது ஈடு செய்ய முடியாத இழப்பு” என்றார் விரக்தியாக.

ஜெயமோகனுடன் பணியாற்றிய சிலருடன் பேசினோம், “தெங்குமரஹாடாவை எல்லாம் யாருமே தேர்ந்தெடுக்க மாட்டாங்க. தமிழ்நாட்டுல ரொம்ப ரிமோட் வில்லேஜ் அது. பஸ், பரிசல்னு அந்த கிராமத்துக்குப் போகவே நேரம் எடுக்கும். அங்க மூணு வருஷம் வேலை பார்க்கறது எல்லாம் சாதாரண விஷயமே இல்ல. அவரு அதை ரொம்பவே ரசிச்சு, ஈடுபாட்டோடு பண்ணிட்டு இருந்தார். வீடு, வீடா போய் மருத்துவம் பார்த்தார். யார்கிட்டயும் ஒட்ட மாட்டாரு. வெகு சிலர்கிட்ட மட்டும்தான் நெருங்கிப் பழகுவார். அவங்களுக்குத்தான் அவரு எவ்ளோ பெரிய கனவுகளோடு இருந்தார்னு தெரியும். இவரு மாதிரி சேவை மனப்பான்மையோடு ஒரு டாக்டர் கிடைக்கறது ரொம்பவே கஷ்டம்” என்றனர்.
ஜெயமோகனின் தந்தை வாசுதேவனைத் தொடர்பு கொண்டோம்.
“சின்ன வயசுல இருந்தே அவனுக்குக் கடவுள் பக்தி அதிகம். நிறைய கனவுகளோடு பயணிச்சான். ப்ளஸ் டூ தேர்வுல மாநிலத்துல மூன்றாவது ரேங்க் எடுத்தான். அப்பவே, ‘டாக்டருக்குப் படிச்சு, கிராம மக்களுக்கு சேவை பண்ணுவேன்’னு ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்தான். அப்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி சென்னைத் தலைமைச் செயலகத்துக்கு அழைச்சுப் பாராட்டினார். சொன்ன மாதிரியே, மெட்ராஸ் மெடிக்கல் காலேஜ்ல படிச்சு முடிச்சான். மூணு கிராமங்கள் சாய்ஸ் கொடுத்தாங்க. அதுல இருந்த மற்ற கிராமங்களவிட தெங்குமரஹாடால வசதி கம்மிங்கறதால அதைத் தேந்தெடுத்தான். தெங்குமரஹாடா ஆரம்ப சுகாதார நிலையத்துல பணி.

மாசத்துக்கு ஒருமுறைதான் வீட்டுக்கு வருவான். அவனே சமைச்சு சாப்பிட்டுப்பான். வேலைல ரொம்ப சின்சியரா இருப்பான். ஒருமுறை, தெங்குமரஹாடால ஒரு வயசான பெண்மணிக்கு உடம்பு சரியில்லைன்னு கோவை பெரியாஸ் பத்திரிக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. என் மகனும் கூட வந்துருக்கான். அவங்க எங்கயும் போயிரக் கூடாதுன்னு பார்த்துக்கறதுக்காக, இவனும் கோவைலயே ரூம் போட்டுத் தங்கிட்டான். இவன் ரூமுக்கு வந்த கேப்ல அந்தப் பெண் எஸ்கேப் ஆகிட்டாங்க. காலைல அவங்களே திரும்பி ஆஸ்பத்திரி வந்துட்டாங்க. கேட்டதுக்கு, ‘சாப்பிடக் காசு இல்லன்னு வெளியில போய்ட்டேன்’னு சொல்லியிருக்காங்க. உடனே அவங்க கைல ஆயிரம் ரூபாய் கொடுத்து, அவங்க உடம்பு சரியான அப்புறம்தான் இவன் ஊருக்கு வந்தான்.
கல்யாணத்துக்காகப் பொண்ணு பார்த்துட்டு இருந்தோம். நாங்க அடிக்கடி வீடியோ கால்ல பேசிப்போம். ஏப்ரல் 10-ம் தேதி நைட் வீடியோ கால்ல பேசினோம். 11-ம் தேதி காலைல அந்த கிராமத்துக்குப் போன வண்டியில, அவனுக்குப் பழங்கள் கொடுத்து அனுப்பினோம். 11-ம் தேதி இரவே அங்க இருந்து போன் வந்துச்சு. ‘சாருக்கு டெங்கு காய்ச்சல். ஆம்புலன்ஸ்ல வந்துட்டு இருக்கோம். 2, 3 மணிக்கு வந்துடுவோம். பயப்படாதீங்க’ன்னு சொன்னாங்க. 3 மணிக்கு வீட்டுக்கு வந்தாங்க. காபி குடிச்சுட்டுத் தூங்கினான். அடுத்த நாள் காலைல மேட்டுப்பாளையத்துல ஒரு மருத்துவமனைக்குப் போனோம். அவங்க கோயம்புத்தூர் பி.எஸ்.ஜி மருத்துவமனைக்குக் கூட்டிப் போகச் சொன்னாங்க.
அப்ப எல்லாம் நல்லாத்தான் இருந்தான். கொரோனா பீதியால, என் மகனுக்கும் டெஸ்ட் எடுத்துப் பார்த்தாங்க... கொரோனா நெகட்டிவ், டெங்கு பாசிட்டிவ்னு வந்துச்சு. நாங்களே சரி பண்றோம்னு டெங்குவுக்கு சிகிச்சை கொடுத்துட்டு இருந்தாங்க. நான்தான் கூட இருந்தேன். 13-ம் தேதி சாயங்காலம் என்னைப் பார்க்கணும்னு சொல்லியிருக்கான். போனேன். ‘அப்பா எனக்கு என்னமோ பயமா இருக்கு’ன்னு சொன்னான். ‘தைரியமா இரு சாமி. சரி ஆகிடும்’னு சொல்லிட்டு வந்தேன். 14-ம் தேதி காலைல பார்த்தப்ப, ‘உடம்பெல்லாம் வலிக்குது’ன்னு சொன்னான். 14-ம் தேதி சாயங்காலம், ‘உங்க மகன் நல்லாகிட்டாரு.. வார்டு மாத்திடலாம். காசு கட்டிட்டு வாங்க’ன்னு மருத்துவமனை நிர்வாகம் சொல்லுச்சு. கொஞ்ச நேரத்துலயே, ‘உங்க மகனுக்கு சீரியஸ் ஆகிடுச்சு. காப்பாத்தறது கஷ்டம். எங்களால முடிஞ்ச முயற்சிய பண்றோம்’னு சொன்னாங்க. நைட் 12.30 மணிக்கு எல்லாம் முடிஞ்சுருச்சுன்னு சொல்லிட்டாங்க” என்றவர், சற்று இடைவெளி விட்டு மீண்டும் தொடர்ந்தார்.
“நண்பர்கள், நெருங்கிய உறவினர்கள் கிட்ட மட்டும் சொன்னேன். என் மகள் அமெரிக்கால இருக்கா. இந்த நேரத்துல சொன்னா நல்லா இருக்காதுன்னு அவகிட்டயும், என் மனைவிகிட்டயும் விஷயத்த சொல்லல. ஆம்புலன்ஸ் ஏறிட்டு மனைவிகிட்ட விஷயத்த சொல்லிக்கலாம்னு இருந்தேன். அதுக்குள்ள விஷயம் தெரிஞ்சு, அவ சாணிப்பவுடர் கலந்து குடிச்சுட்டா. அக்கம் பக்கத்துக்காரங்க உடனடியா மருத்துவமனைக்குக் கூட்டிப் போய் காப்பாத்திட்டாங்க. பொண்ணு அமெரிக்கா, மனைவி ஆஸ்பத்திரில இருந்தாங்க. கடைசி நேரத்துல அவன் முகத்தக்கூட அவங்களால பார்க்க முடியல. உயிரோடு இருந்திருந்தா நிறைய பேர காப்பாத்தியிருப்பான். ஆனா, அவன காப்பாத்த முடியலயே. இது எங்களுக்குப் பேரிழப்பு. இதுல இருந்து எப்படி மீண்டு வரப்போறோம்னு தெரியல” என்று முடித்தார், உடைந்த குரலில்.