Published:Updated:

இடம், பொருள், ஆவல்: ஆங்கிலேயர் கட்டிய மெட்ராஸ் பாலங்களின் இரு நூற்றாண்டு வரலாறு!

மெட்ராஸின் பாலங்கள்
News
மெட்ராஸின் பாலங்கள்

மெட்ராஸின் பாலங்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை மட்டும் இணைக்கவில்லை; அவை கடந்த காலத்தை, நிகழ்காலத்துடன் இணைக்கின்றன.

Published:Updated:

இடம், பொருள், ஆவல்: ஆங்கிலேயர் கட்டிய மெட்ராஸ் பாலங்களின் இரு நூற்றாண்டு வரலாறு!

மெட்ராஸின் பாலங்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை மட்டும் இணைக்கவில்லை; அவை கடந்த காலத்தை, நிகழ்காலத்துடன் இணைக்கின்றன.

மெட்ராஸின் பாலங்கள்
News
மெட்ராஸின் பாலங்கள்

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி 1639-ல் வந்திறங்குவதற்கு முன்பாக, சென்னை மிகச் சிறிய மீனவ கிராமமாக இருந்தது. சிறு சிறு துண்டுகளாக இருந்த மெட்ராஸ் நிலப்பகுதி, ஐரோப்பிய வணிகர்களின் வருகைக்குப் பிறகு ஒரு நகரமாக உருப்பெறத் தொடங்கியது.

மெட்ராஸின் மையத்தில் கூவம், அடையாறு என்ற இரண்டு நதிகள் ஓடிக்கொண்டிருந்தன. மழைக் காலங்களில் மட்டுமே பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரில் ஆற்றைக் கடக்க, மக்கள் படகுகளைப் பயன்படுத்திவந்தனர். கோடை காலங்களில் குறைவாகச் செல்லும் முழங்கால் அளவுத் தண்ணீரில் நடந்தே மறுகரைக்குச் சென்றனர்.

கூவம்
கூவம்

மெட்ராஸ் வணிக மையமாக வளரத் தொடங்கிய பிறகு, கூவத்தின் இரு கரைகளிலும் இருந்த கிராமங்கள் ஒவ்வொன்றாக மெட்ராஸுடன் இணைக்கப்பட்டன. அன்றைக்கிருந்த தொழில்நுட்பத்தின் மூலம் சிறு மரப்பாலங்கள் கூவத்தின் மீது கட்டப்பட்டன. ஆனால் அவ்வப்போது ஏற்படும் வெள்ளம் அவற்றையெல்லாம் அடித்துச் சென்றுவிட வணிகமும் போக்குவரத்தும் தடைபட்டன.

பெரும் தலைவலியாக இது உருவெடுக்க, பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் முதல் இயக்குனராக புனித ஜார்ஜ் கோட்டையை நிர்வகித்துவந்த எலுஹு யேல், கூவம் நதியில் தீவுத்திடலையும் திருவல்லிக்கேணியையும் இணைத்து ஒரு பாலம் கட்டுவதற்கான யோசனையை 1690-களில் முன்வைத்தார். ஆனால் அது அவ்வளவு எளிதில் சாத்தியப்படவில்லை. பல காரணங்களால் அந்தத் திட்டம் தள்ளிப்போய்க்கொண்டே இருந்தது.

எலுஹு யேல்
எலுஹு யேல்

25 ஆண்டுகளுக்குப் பிறகே அந்தப் பாலம் கட்டும் திட்டம் உயிர்பெற்றது. 1805-ல் லெப்டினண்ட் தாமஸ் ஃப்ரேசர் என்பவரால் 11 வளைவுகளோடு மறுநிர்மாணம் செய்யப்பட்ட இந்தப் பாலம் திருவல்லிக்கேணி பாலம், செயிண்ட் ஜார்ஜ் பாலம், லார்டு விலிங்டன் பாலம், அரசினர் தோட்ட பாலம் என்று வெவ்வேறு காலக்கட்டங்களில் அழைக்கப்பட்டது. இன்று இதன் பெயர் பெரியார் பாலம்.

அதைத்தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டையுடன் தீவுத் திடலை இணைக்கும் பாலம் ஒன்றை கட்ட பிரிட்டிஷ் நிர்வாகம் முடிவுசெய்தது. அதன்படி, கோட்டையின் வாலாஜா கேட் பகுதியிலிருந்து, 1755-ல் வாலாஜா பாலம் என்ற பெயரில் புதிய பாலம் கட்டப்பட்டது. இன்று காயிதே மில்லத் பாலம் என்றழைக்கப்படும் இந்தப் பாலத்திலிருந்துதான் நகரின் முதன்மைச் சாலையான அண்ணா சாலை தொடங்குகிறது.

பெரியார் பாலம்
பெரியார் பாலம்

கூவத்தின்மேல் பாலங்கள் கட்டப்பட்ட இதே காலகட்டத்தில்தான், தெற்கில் அடையாற்றிலும் பாலங்கள் உருவாகின. ஆர்மேனிய வணிகர் கோயஸ் பெட்ரூஸ் உஸ்கான், தன்னுடைய சொந்தப் பணத்தைக் கொண்டு சைதாப்பேட்டையையும் பரங்கிமலையையும் இணைக்கும் பாலத்தை 1726-ல் அடையாற்றின் குறுக்கே கட்டினார். அருகிலிருந்த மாம்பலம் கிராமத்தின் பெயரைத் தழுவி மர்மலாங் பாலம் என்று பெயரிடப்பட்ட இந்தப் பாலத்தைப் பற்றிய ஆர்மேனிய மொழிக் கல்வெட்டைத் தவிர உஸ்கான் கட்டிய பாலத்தின் எந்தத் தடமும் இப்போது எஞ்சியிருக்கவில்லை; இன்று இதன் பெயர் மறைமலையடிகள் பாலம்.

மர்மலாங் பாலத்தைத் தொடர்ந்து, தென் சென்னையை சாந்தோம்-மயிலாப்பூருடன் இணைக்கும் பாலம் ஒன்று, அடையாற்றின் முகத்துவாரம் அருகே கட்டப்பட்டது. லார்டு எல்பின்ஸ்டோன் மெட்ராஸின் கவர்னராக இருந்த 1840-களில் கட்டப்பட்ட இந்தப் பாலத்துக்கு அவர் பெயரே சூட்டப்பட்டது. 18 வளைவுகளுடன் அமைந்த பிரமாண்டமான இந்தப் பாலம் காலப்போக்கில் கைவிடப்பட்டு, அதன் அருகே இன்று பயன்பாட்டில் இருக்கும் திரு.வி.க பாலம் கட்டப்பட்டது. அடையாற்றின் மற்றொரு பாலம் மேற்கே மணப்பாக்கத்தில் அமைந்திருக்கிறது.

மர்மலாங் பாலம்
மர்மலாங் பாலம்

மெட்ராஸ் வளர வளர, நகரில் புதிய புதிய பாலங்களும் உருவாகின. அதனால் போக்குவரத்து மேம்பட்டு, நகரம் மேலும் வளர்ந்து விரிவடையத் தொடங்கியது. இந்தப் பின்னணியில், மெட்ராஸின் ஆரம்ப காலப் பாலங்களில் ஒன்றாக, 1825-ல் உருவானது, பின்னி சாலையில் அமைந்திருக்கும் பாலம். அந்தக் காலகட்டத்தின் மிகப் பெரிய வியாபாரியான ஜான் பின்னியின் நினைவாக இதற்கு பின்னி பாலம் என்று பெயர் சூட்டப்பட்டது; இது கமாண்டர்-இன்-சீஃப் பாலம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஆண்ட்ரூஸ் பாலம்
ஆண்ட்ரூஸ் பாலம்

ஒரு நதி, சாலை ஒன்றின் இரண்டு முனைகளையும் தொட்டுச் செல்வது பாந்தியன் சாலையின் சிறப்புகளில் ஒன்று. அந்த வகையில், எழும்பூர் பகுதியில் தாவரவியல் பூங்காவை உருவாக்கிய டாக்டர் ஜேம்ஸ் ஆண்டர்சனின் நினைவாக பாந்தியன் சாலையின் ஒரு முனையில் 1829-ல் கட்டப்பட்டது ஆண்டர்சன் பாலம்.

பாந்தியன் சாலையின் மறுமுனையில், புதுப்பேட்டையிலிருந்து சிந்தாதிரிப்பேட்டை நோக்கிக் கூவம் திரும்பும் இடத்தில், அருணாசலா சாலையில் 1855-ல் கட்டப்பட்டது இன்னொரு பாலம்; இங்கிருந்து கூப்பிடு தூரத்திலிருக்கும் ஆண்ட்ரூஸ் கிர்க் சர்ச்சின் பெயரால் இது ஆண்ட்ரூஸ் பாலம் என்று அழைக்கப்பட்டது.

மவுண்ட் ரோட்டையும், புதுப்பேட்டையையும் இணைக்கும் பாலம், ஹாரிஸ் ரோடு என்றழைக்கப்பட்ட இன்றைய ஆதித்தனார் சாலையில் 1854-55-ம் ஆண்டுகளில் கட்டப்பட்டது. திட்டமிடப்பட்ட பாலம், கோவிலை நோக்கி வருவதால், மக்களிடம் எதிர்ப்பு நிலவியது. இதனால் பத்தாண்டுகள் வரை பணிகள் தடைபட்டன. பொறுமையிழந்த பிரிட்டிஷ் நிர்வாகம், நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தைக் கொண்டுவந்தது. கோவிலுக்கு எந்த இடையூறுமின்றி, மெட்ராஸின் அப்போதைய கவர்னர் ஜார்ஜ் ஹாரிஸ் மேற்பார்வையில், இந்தப் பாலம் கட்டப்பட்டது; வழக்கப்படி கவர்னர் பெயரே பாலத்துக்குச் சூட்டப்பட்டது.

ஆண்ட்ரூஸ் பாலம் இன்று
ஆண்ட்ரூஸ் பாலம் இன்று

19-ம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில், மெட்ராஸில் ஒரு தொங்கு பாலம் இருந்தது இன்று நம்பமுடியாத ஆச்சரியம். சிந்தாதிரிப்பேட்டையையும் ரிப்பன் மாளிகையை ஒட்டிச் செல்லும் சிடென்ஹாம்ஸ் சாலையையும் இணைத்த இந்தப் பாலத்துக்குக் கட்டுமானப் பொருட்கள் அனைத்தும் லண்டனிலிருந்து கொண்டுவரப்பட்டன. பிரிட்டிஷ் படைகளின் அணிவகுப்பு ஏற்படுத்திய அதிர்வு, இந்தப் பாலத்தைத் தரைமட்டமாக்க, இதுவே மெட்ராஸின் முதலும் கடைசியுமான தொங்கு பாலமாக அமைந்தது. இதைத் தொடர்ந்து, 1854-ல் இங்கு புதிதாகக் கட்டப்பட்ட லாஸ் பாலத்தில் 19-ம் நூற்றாண்டு உறைந்து நிற்க, பாலத்திலிருந்து தெரியும் படகுத்துறையின் எச்சங்களோ நம்மில் பெருமூச்சை எழுப்புகின்றன.

லாஸ் பாலம்
லாஸ் பாலம்

இதுவரையிலான பாலங்களில் வளைவுகள் பாலத்தின் கீழே அமைந்திருந்தன; ஆனால், கூவம் கடலில் சேரும் இடத்தில் அமைந்திருக்கும் நேப்பியர் பாலம் அழகிய வளைவுகளைப் பாலத்தின் மேலே தாங்கியிருக்கிறது. 19-ம் நூற்றாண்டின் தொடக்க ஆண்டுகளில் மரப்பாலமாக இருந்த இது, 1869-ல் கவர்னர் ஃபிரான்சிஸ் நேப்பியர் காலகட்டத்தில் இருப்புப் பாலமாக மேம்படுத்தப்பட்டது. 1943-ல் இன்றைய வடிவத்துக்குத் திருத்தி அமைக்கப்பட்ட நேப்பியர் பாலம், சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக நிற்கிறது.

நேப்பியர் பாலம்
நேப்பியர் பாலம்

1840-களில் மெட்ராஸில் 15 பாலங்கள் இருந்ததாக ஆவணங்கள் கூறுகின்றன. இந்தப் பாலங்கள் எல்லாம் அன்றைய வாகனங்களான மாட்டு வண்டி, குதிரை வண்டிகளுக்கானவை. ஆனால், நூற்றாண்டுகளைக் கடந்து நிற்கும் அவை, இன்று எண்ணற்ற கனரக வாகனங்களையும் தாங்கி உறுதியாக நிற்கின்றன.

மெட்ராஸில் இயற்கையாக அமைந்த இரண்டு நதிகளின் மீதும் கட்டப்பட்ட பாலங்களைத் தொடர்ந்து, செயற்கையாக உருவாக்கப்பட்ட நீர்வழிப் பாதைகளான பக்கிங்ஹாம் கால்வாய், ஓட்டேரி நல்லா ஆகியவற்றின் மீதும் பிரிட்டிஷார் பாலங்களைக் கட்டத் தொடங்கினர்.

அதன்படி பேசின் பாலம் தொடங்கி, இன்றைய மத்திய கைலாஷ் வரை பக்கிங்ஹாம் கால்வாய் நெடுக பல பாலங்கள் அழகிய வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டன.

கிராண்ட் டஃப் பாலம்
கிராண்ட் டஃப் பாலம்

சென்ட்ரல் ரயில் நிலைய பக்கிங்ஹாம் கால்வாய் மீது 1807-ல் நேர்த்தியாக பாலம் ஒன்று கட்டப்பட்டது. நீண்ட படகுகள் சரக்குகளைக் கொண்டு செல்வதற்கு வசதியாக பெரிய வளைவுகளுடன் அமைந்த இந்தப் பாலத்துக்கு, அருகேயிருந்த அரசுப் பொது மருத்துவமனையின் பெயரால் ‘ஹாஸ்பிடல் ஷிப்’ என்று பெயரிடப்பட்டது. அந்தப் பாலத்தின் ஒரு சுவடுகூட இன்று எஞ்சியிருக்கவில்லை.

இதைத் தொடர்ந்து பக்கிங்ஹாம் கால்வாயின் போக்கில் சென்னைப் பல்கலைக்கழகத்தையும், அதன் பின்புறம் கால்வாயின் மறுகரையில் அமைந்திருக்கும் ஆடம்ஸ் தெருவையும் இணைக்கும் பாலம் ஒன்று 1878-ல் கட்டப்பட்டது. மெட்ராஸின் கவர்னராக இருந்த கிராண்ட் டஃப்-ன் பெயரால், அழகிய வேலைப்பாடுகளுடன் 3 வளைவுகளால் அமைந்த இப்பாலத்தின் மீது இன்று வீடுகள் கட்டப்பட்டு, பாலத்தின் தன்மையும், பயன்பாடும் அழிக்கப்பட்டிருக்கின்றன.

தெற்கு நோக்கி ஓடும் பக்கிங்ஹாம் கால்வாயில் அடுத்த பாலம், மவுண்ட் ரோட்டிலிருந்து மெரினாவை இணைக்கும் வாலாஜா சாலையில், சேப்பாக்கம் அரண்மையை ஒட்டி அமைந்திருக்கிறது. 1878-ல் கட்டப்பட்டு தொடர்ச்சியாகப் பல்வேறு வேலைப்பாடுகளைத் தாங்கி, மெட்ராஸின் அழகியப் பாலமாகப் உருவான இது, இன்று இடிபாடுகளுடன் சிதைந்து நிற்கிறது.

வாலாஜா பாலம்
வாலாஜா பாலம்

பக்கிங்ஹாம் கால்வாய் நெடுகிலும் கட்டப்பட்ட பாலங்களில் பெரும்பாலானவை இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன; 80 அடி நீளமுள்ள, 23 டன் எடையுள்ள சரக்குளை ஏற்றிச் செல்லும் பெரிய படகுகள் பக்கிங்ஹாம் கால்வாயின் பால வளைவுகளுக்குள் சென்றுவந்துள்ளன. ஆனால், இந்தப் பாலங்களின் வரலாற்று முக்கியத்துவம் உணரப்படாமல், முறையான பராமரிப்பு இல்லாததால், அடையாளம் தெரியாத அளவுக்கு அவை இன்று சிதைந்து நிற்கின்றன.

கெல்லீஸ் பகுதியின் ஓட்டேரி நல்லா ஓடையில் அமைந்திருக்கும் பாலம் எந்தப் பக்கமிருந்தும் அணுக முடியாத அளவுக்குப் செடியும் புதரும் மண்டிக் கிடக்கிறது; ஓட்டேரி நல்லாவில் கட்டப்பட்ட மற்ற பாலங்களின் சுவடுகள்கூட இப்போது எங்குமே இல்லை.

பிரிட்டிஷ் பாலம்
பிரிட்டிஷ் பாலம்
மெட்ராஸின் பாலங்கள் ஒரு பகுதியிலிருந்து மற்றொரு பகுதியை மட்டும் இணைக்கவில்லை; அவை கடந்த காலத்தை, நிகழ்காலத்துடன் இணைக்கின்றன. மெட்ராஸ் என்ற மீனவ கிராமம் நகரமாக உருப்பெறத் தொடங்கிய காலம்தொட்டு உருவான பாலங்கள் வெவ்வேறு வடிவம் பெற்று, வெவ்வேறு பெயர்களைத் தாங்கி இன்றும் பயன்பாட்டில் இருக்கின்றன; முறையான பரமரிப்பின்றி எஞ்சி நிற்கும் இந்தப் பாலங்களின் தூண்களில் மெட்ராஸின் நூற்றாண்டு வரலாறு உறைந்திருக்கிறது!

மெட்ராஸை உருவாக்கிய பாலங்களில் கதை!