Published:Updated:

ஈரோடு: மீண்டும் அச்சுறுத்தும் `கருப்பன்' யானை... கபில்தேவ், கலீம் கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை!

கும்கிகளின் கேப்டன் கலீம்
News
கும்கிகளின் கேப்டன் கலீம்

கருப்பன் யானையைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்காக டிரோன் மூலம் தேடும் பணி தொடங்கியிருக்கிறது.

Published:Updated:

ஈரோடு: மீண்டும் அச்சுறுத்தும் `கருப்பன்' யானை... கபில்தேவ், கலீம் கும்கிகளைக் களமிறக்கிய வனத்துறை!

கருப்பன் யானையைப் பிடித்து ரேடியோ காலர் பொருத்துவதற்காக டிரோன் மூலம் தேடும் பணி தொடங்கியிருக்கிறது.

கும்கிகளின் கேப்டன் கலீம்
News
கும்கிகளின் கேப்டன் கலீம்

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்குட்பட்ட தாளவாடி, ஜீரஹள்ளி, ஆசனூர் உள்ளிட்ட வனச்சரகங்களில் அதிகளவில் காட்டு யானைகள் வசிக்கின்றன. தாளவாடி தாலுகாவிலுள்ள ஜீரஹள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட கரளவாடி, ரங்கசாமி கோயில், மரியாபுரம், மல்லன்குழி, மெட்டல்வாடி, அருள்வாடி, சூசையபுரம், தொட்டகாஜனூர் கிராமங்களில் கூட்டமாக வரும் யானைகளும், ஒற்றை யானையும் அடிக்கடி விவசாய நிலங்களில் புகுந்து விளைநிலங்களை அழித்து நாசம் செய்கின்றன. கூட்டமாக வரும் யானைகளைவிட ஒற்றை யானையின் அட்டகாசம் அதிகமாக இருக்கிறது.

ட்ரோன் கேமரா மூலம் தேடுதல்
ட்ரோன் கேமரா மூலம் தேடுதல்

இந்த ஒற்றை காட்டு யானைக்கு அந்தப் பகுதி மக்கள் `கருப்பன்' எனப் பெயரிட்டிருக்கின்றனர். சில மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் முகாமிட்டு தொடர்ந்து பயிர்களை நாசம் செய்துவந்த கருப்பன் யானை, 2 பேரை மிதித்துக் கொன்றது. இதைத் தொடர்ந்து கருப்பன் யானையை வனத்துறையினர் பிடித்து, அடர்ந்த வனப்பகுதிக்குள் கொண்டுவிட்டனர். ஓரிரு மாதங்கள் நிம்மதியாக இருந்த நிலையில், அண்மைக்காலமாக கருப்பன் யானை மீண்டும் இந்தப் பகுதிக்குள் நுழைந்து விளைநிலங்களை நாசம் செய்து, விவசாயிகளை அச்சுறுத்திவருகிறது.

அதனால் இந்தமுறை கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்து, காலர் ஐடி பொருத்தி பண்டிப்பூர் வனச் சரணாலயத்துக்குள் விட வனத்துறையினர் முடிவுசெய்திருக்கின்றனர். இதற்காக கோவை மாவட்டம், பொள்ளாச்சி டாப்சிலிப் கோழிகமுத்தி வளர்ப்பு யானைகள் முகாமிலிருந்து முத்து, கபில்தேவ் ஆகிய இரண்டு கும்கி யானைகள் ஏற்கெனவே வரவழைக்கப்பட்டு ஜீரஹள்ளி வனப்பகுதியில் ரங்கசாமி கோயில் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருக்கின்றன. இந்த நிலையில், கருப்பன் யானையைப் பிடிப்பதற்கான ஆபரேஷன் தொடங்கியிருக்கிறது. இதற்காக டாப்சிலிப்பிலிருந்து மேலும் ஒரு கும்கி யானையான கலீம் வரவழைக்கப்பட்டிருக்கிறது. கும்கிகளின் கேப்டனாகக் கருதப்படும் கலீமுடன் சேர்ந்து முத்து, கபில்தேவ் ஆகிய மூன்று கும்கி யானைகளும் ரங்கசாமி கோயில் பகுதியில் நிறுத்திவைக்கப்பட்டிருப்பதாக வனத்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

கும்கி கபில்தேவ்
கும்கி கபில்தேவ்

இது குறித்து ஆசனூர் வனக்கோட்ட துணை இயக்குநர் தேவேந்திர மீனாள் நம்மிடம் பேசுகையில், ``ஜீரஹள்ளி வனச்சரகத்துக்குட்பட்ட கிராமப் பகுதிகளில் சுற்றித்திரியும் கருப்பன் யானையைப் பிடித்து, அதற்கு ரேடியோ காலர் பொருத்த திட்டமிடப்பட்டு ஏற்கெனவே முத்து, கபில்தேவ் ஆகிய இரண்டு கும்கி யானைகளை இங்கு அழைத்துவந்து முகாமிட்டிருக்கிறோம். தொடர்ந்து கருப்பன் யானை போக்கு காட்டி வருவதால், கும்கிகளின் கேப்டனாகக் கருதப்படும் கலீம் கும்கி யானை புதன்கிழமை அழைத்துவரப்பட்டிருக்கிறது. தற்போது மூன்று கும்கிகளின் துணையுடன் கருப்பன் யானையைப் பிடிக்கத் திட்டமிட்டிருக்கிறோம். கருப்பன் யானையின் நடமாட்டத்தை டிரோன் கேமராக்களின் உதவியுடன் கண்காணித்துவருகிறோம். இதற்காக நான்கு டிரோன் கேமரா டீம்களை களத்தில் இறக்கியிருக்கிறோம்.  

கருப்பன் யானையைப் பிடிக்க 150 பேர் கொண்ட வன பாதுகாப்புப் படையினர், வேட்டைத் தடுப்புக் காவலர்கள் குழுவினரையும் பணியில் ஈடுபடுத்தியிருக்கிறோம். ஓரிரு நாள்களுக்குள் கருப்பன் யானையின் இருப்பிடத்தைக் கண்டறிந்து மயக்கமருந்து செலுத்தி அதைப் பிடித்துவிடுவோம். பின்னர் கருப்பனுக்கு ரேடியோ காலர் ஐ.டி பொருத்தி, பண்டிப்பூர் வனச் சரணாலயத்தில் கொண்டுவிட்டுவிடுவோம். ரேடியோ காலர் பொருத்துவதன் மூலம் கருப்பன் யானையின் ஒவ்வொரு அங்குல நடமாட்டத்தையும் துல்லியமாகக் கண்காணிக்க முடியும். காலர் ஐ.டி பொருத்துவது தொடர்பாக திங்கள்கிழமையே ஆனைமலை புலிகள் காப்பகம், முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து வனத்துறை கால்நடை மருத்துவர்கள் குழு ஜீரஹள்ளி வனப்பகுதிக்கு வந்துவிட்டனர். தற்போது இவர்கள் இந்தப் பகுதியில் தீவிர ஆய்வுப் பணியில் ஈடுபட்டுவருகின்றனர்.

கும்கிகளின் கேப்டன் கலீம்
கும்கிகளின் கேப்டன் கலீம்

தற்போது கருப்பன் யானையைப் பிடிக்கும் பணி தொடங்கியிருக்கிறது. கருப்பன் யானையின் இருப்பிடத்தைத் தேடும் பணியில் வனத்துறை ஊழியர்களும் ஈடுபட்டுவருகின்றனர். கருப்பனின் இருப்பிடத்தைக் கண்டறிந்ததும் மயக்க ஊசி செலுத்தப்படும். மயக்க ஊசி செலுத்தியதும் முதலில் ஆக்ரோஷமாகக் காணப்படும், பின்னர் அதன் வேகம் மெல்ல, மெல்ல தணியும். அந்தச் சமயத்தில் கருப்பன் யானையின் நடமாட்டமுள்ள பகுதிகளில் பொதுமக்கள் நடமாடுவதைத் தவிர்க்க வேண்டும்" என்று தெரிவித்தார் விளக்கமாக.