மதுரை மாவட்டம், செக்கானூரணி - காமராசர் பல்கலைக்கழகம் - பெரியார் நிலையம் வழியாக விக்ரமங்கலம் செல்லும் `61B' என்னும் அரசுப் பேருந்தில் இருக்கைகள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன. அந்தப் பேருந்தின் எண் `தநா - 58 , நா - 1114' ஆகும். இந்தப் பேருந்தில் ஓர் இருக்கையின் கம்பி முற்றிலுமாக உடைந்து கீழே விழுந்தபடி காட்சியளிக்கிறது.

மற்றொரு இருக்கை பின்புறம் படுமோசாக கிழிந்த நிலையில் காட்சியளிக்கிறது. மேலும், பேருந்தின் மேற்கூரையும் ஆங்காங்கே சேதமடைந்து காணப்படுகிறது. பேருந்தின் பெரும்பாலான இருக்கைகள் கழன்றும், சாய்ந்தும் பயணிகள் உட்கார முடியாத நிலையில் இருக்கின்றன. அதனால், இருக்கைகள் காலியாக இருந்தும், பயணிகள் முகம்சுளித்தபடி, நின்றவாறே பயணித்தனர்.

``இந்தப் பேருந்து மட்டுமல்லாமல் மதுரையில் பல பேருந்துகள் இந்த நிலையில்தான் இருக்கின்றன. சவுகரியமாக அரசுப் பேருந்துகளில் பயணிக்க முடிவதேயில்லை. மேலும், மழை பெய்தால் பேருந்துக்குள்லேயே குடைபிடிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது.

எனவே, போக்குவரத்துக் கழகம் இந்தப் பிரச்னையைக் கவனத்தில்கொண்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்" என வலியுறுத்துகின்றனர் பயணிகள்.