கட்டுரைகள்
Published:Updated:

கொரோனாவை வெல்லும் வரை குடும்பத்துடன் நெருக்கமில்லை!

மருத்துவ ஊழியர்கள்
பிரீமியம் ஸ்டோரி
News
மருத்துவ ஊழியர்கள்

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை

கொரோனாவுக்கு எதிரான போரில் முன் வரிசையில் நிற்கிறார்கள் மருத்துவத்துறையினர். தமிழகத்தின் மிகப்பெரிய அரசு மருத்துவமனையான சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையும் ஜனவரி மாதத்தின் மூன்றாம் வாரத்திலேயே இந்த யுத்தத்துக்குத் தன்னைத் தயார்படுத்திக்கொள்ளத் தொடங்கியது.

ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் 900 மருத்துவர்கள், 500 ஹவுஸ் சர்ஜன்கள், 1000 அண்டர் கிராஜுவேட் ஸ்டூடன்ட்ஸ், 800 செவிலியர்கள், 1,200 இதர ஊழியர்கள் பணிபுரிகிறார்கள்.

கொரோனாத் தொற்று உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், துணைச் செவிலியர்கள் உள்ளிட்டவர்கள் PPE பாதுகாப்புக் கவசத்துடன்தான் இருப்பர். PPE பாதுகாப்புக் கவசத்தை ஒருமுறை அணிந்து விட்டால் 6 முதல் 7 மணி நேரம் வரையில் அந்தக் கவசத்தைக் கழற்ற முடியாது. சிறுநீர் கழிப்பதோ, உணவு உண்பதோ, கைகளால் கிளவுஸ் அட்ஜஸ்மன்ட் உள்ளிட்ட எதுவும் செய்யவியலாது. புழுக்கம் ஏற்பட்டு வியர்க்கும். தாகமெடுத்தால் தண்ணீர் குடிக்க முடியாது. நோய்த் தொற்று உள்ளவரைக் கண்காணிப்பது மட்டும்தான் பணி.

மருத்துவ ஊழியர்கள்
மருத்துவ ஊழியர்கள்

நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுபவருக்கு, தனக்கு வைத்தியம் பார்த்தவரின் முகம்கூடத் தெரியாது. முழுக்க PPE கவசத்தால் மூடியிருப்பார். மருத்துவர்கள் மட்டுமல்ல, செவிலியர்கள், நுண்ணுயிரியல் ஆய்வாளர்கள், லேபில் பணிபுரிபவர்கள், சிகிச்சை பெறுபவர்களுக்கு உணவு தயாரிப்பவர்கள், மருத்துவமனையைச் சுத்தம் செய்யும் பணியாளர்கள், ஆம்புலன்ஸ் டிரைவர்கள் என ஒரு பெருங்குழுவே இந்த மகத்தான பணியில் ஈடுபட்டிருக்கிறது. அவர்களைச் சந்தித்துப் பேசினோம்.

டாக்டர் ஜெயந்தி, முதல்வர், சென்னை மருத்துவக் கல்லூரி, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை

“கொரோனாவுக்கு எதிராக எங்கள் குழுவை சமூக நோயியல்துறை, பொது மருத்துவத்துறை, நுண்ணுயிரியியல் துறை என மூன்று பிரிவாகப் பிரித்துத் தயார் செய்தோம். நோய்த் தொற்று பரவத் தொடங்கிய பிறகு, தினம் தினம் நெருப்போடு போரிடுவது போலத்தான். ராஜீவ்காந்தி மருத்துவமனைக்குத் தமிழகம் மட்டுமன்றி, அண்டை மாநிலங்களான கேரளா, தெலங்கானா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மக்கள் மருத்துவம் பார்க்க வந்து செல்கிறார்கள். தினமும் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதச்சுவடுகள் மருத்துவமனை வளாகத்துக்குள் பதிந்துகிடக்கும். இந்தச் சூழலில்தான் கொரோனாவுக்காகத் தனிமைப்படுத்தப் பட்ட வார்டுகள் (Isolation Wards) தயார்படுத்தப்பட்டன. அது அவ்வளவு எளிதான காரியமல்ல. சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகளுக்கும், மருத்துவர்கள், செவிலியர்கள், மற்ற ஊழியர்கள் உட்பட யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

டாக்டர் ஜெயந்தி (முதல்வர்)
டாக்டர் ஜெயந்தி (முதல்வர்)

மருத்துவமனையின் ‘டவர்-2’ல் முதற்கட்டமாக ஆறு வார்டுகள் தயார்செய்யப்பட்டன. சிகிச்சை பெறுபவருக்கான தனிக் கழிவறை, வென்டிலேட்டர் வசதி கொண்ட அறைகள் தயாராகின. அந்த அறைக்கு மூன்றடுக்கில் பாதுகாப்பு, அந்த வார்டுகளுக்கெனத் தனி லிப்ட் வசதி உள்ளிட்டவை தயாராகின. ஆறு வார்டுகள் தொடங்கி 200 வார்டுகள்வரை தயார் செய்யப்பட்டன. நோய்த்தொற்று ஏற்பட்டவர்களின் உணவுக்காக சமையலறைகள் ஏற்பாடு செய்யப்பட்டன. மருத்துவர்களுக்கு, செவிலியர்களுக்கு, துணைச் செவிலியர்களுக்கு, லிஃப்ட் ஆபரேட்டர்களுக்கு PPE - Personal Protective Equpiment எனப்படும் பாதுகாப்புக் கவசம் வழங்கப்பட்டது. எங்கள் மருத்துவமனையில் வேலை செய்யும் நான்காயிரத்துக்கும் அதிகமானோர் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிகிச்சை பெற வருபவர்களுக்கான கிச்சன், மருத்துவர்கள், செவிலியர்களுக்கான உணவு, தங்குமிடம் எனத் தயார் செய்தோம். பலரும் மூன்று மாதங்களுக்கு மேலாகக் கடுமையாக உழைத்துவருகின்றனர். தங்கள் குடும்பத்தினரைப் பிரிந்து, அவர்களுடன் நேரம் செலவிட முடியாமல் இருக்கிறார்கள். சோர்வுறாமல் எங்கள் குழு இயங்கிவருகிறது. 81 வயதான என் அம்மாவை நான் சந்தித்து மூன்று மாதங்களாகின்றன. அவருக்குத் தொற்று வரக்கூடாது என விலகியே இருக்கிறேன். அம்மாவும் புரிந்துகொண்டு என்னைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு நலம் விசாரிக்கிறார். பலருக்கும் தனிப்பட்ட முறையில் இப்படிப் பல கதைகள் உண்டு. அவற்றைக் கடந்தே கொரோனாவை எதிர்த்துக் களத்தில் நிற்கிறோம்.”

டாக்டர் எஸ்.ரகுநந்தனன், பொது மருத்துவத்துறைப் பேராசிரியர், சென்னை மருத்துவக் கல்லூரி

“நான் சென்னைப் பெருவெள்ளம், டெங்கு பரவல் போன்ற சமயங்களிலேயே களத்தில் வேலை செய்திருக்கிறேன். அதனால கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்கு எளிதில் தயாராக முடிந்தது. கொரோனா அறிகுறிகள் தமிழகத்துக்கு வருவதற்கு முன்னாடியே அதைப் பத்திப் படிச்சு, நிறைய ஆலோசனை செய்திருந்தோம். கொரோனா தமிழ்நாட்டுல பரவ ஆரம்பிச்சவுடனே, சிகிச்சையைத் தாண்டி நிறைய வேலைகள் வர ஆரம்பிச்சது. சீனா, பூட்டான் போன்ற நாடுகளைச் சேர்ந்தவங்க சிகிச்சைக்கு வந்தப்போ அந்த நாட்டுத் தூதரகத்துடன் தகவல் பரிமாற்றத்தில் இருக்கணும். ட்ரெயின் மூலமா வெளிமாநிலத்துல இருந்து வந்தவருக்குத் தொற்று இருந்தா, ரயில்வே துறைல பேசி என்ன கம்பார்ட்மென்ட்ல அவர் பயணம் செஞ்சாருங்கற தகவல்களைக் கொடுக்கணும். WHO, இந்தியன் மினிஸ்ட்ரி, தமிழக அரசு எல்லாம் என்ன முடிவு எடுக்குதுன்னு ‘ஃபாலோ அப்’லேயே இருக்கணும். வெளிநாடுகளில் இருக்கிற தமிழ் மருத்துவர்களோடு நிறைய டிஸ்கஸ் பண்ணி அப்டேட் பண்ணிப்பேன்.

டாக்டர் எஸ்.ரகுநந்தனன்
டாக்டர் எஸ்.ரகுநந்தனன்

காலை 8 மணிக்குத் தொடங்கி இரவு 9 மணிக்குத்தான் வீட்டுக்கே போக முடியும். சில இரவுகள் இங்கேயே தங்கிடுவோம். வீட்டுக்குப் போனாலும் என்னைத் தனிமைப்படுத்திப்பேன். தினமும் வேலை, அது குறித்த திட்டமிடல்னுதான் மூணு மாசம் கழியுது. உறவினர்கள், நண்பர்கள், தெரிந்தவர்கள்னு நிறைய பேர் போன் பண்ணி ‘பத்திரமா இருங்க’ன்னு சொல்லுவாங்க. ரொம்ப ஆறுதலா இருக்கும். என் பொண்ணு இங்க அடையாறுல இருக்காங்க. அவங்களைப் போய்ப்பார்த்து மூணு மாசம் ஆச்சு. அவங்க சமைக்கிறதையெல்லாம் போட்டோ அனுப்புவாங்க. இன்னும் மூணு மாசம் கழிச்சுகூட அவங்களைப் போய்ப் பார்த்து அவங்களோடு சாப்பிட்டுக்கலாம். பெரிய திட்டமிடலோடு மிகப்பெரிய குழு உழைக்குறப்போ இது பெரிய விஷயமில்ல. கொரோனாவைக் கட்டுப்படுத்துறதுதான் முக்கியம்.”

டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி - துணைப் பேராசிரியர், பொது மருத்துவத் துறை, ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை

“முதல்ல அறிகுறியோடு பேஷன்ட் வந்தப்போ டீன் மேடமும், ரகுநந்தனன் சாரும் அடுத்து என்ன பண்ணணும்னு ஆலோசனைகள் கொடுத்தாங்க. வார்டுல பேஷன்டோட ரிலேட்டிவ்ஸ் யாரையும் அனுமதிக்காததால, அவங்க தகவல் தெரிஞ்சுக்க முடியாம ரொம்பப் பதறுவாங்க.

டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி
டாக்டர் சாய் லட்சுமிகாந்த் பாரதி

போகப் போகதான் அவங்க சூழலைப் புரிஞ்சுகிட்டாங்க. பேஷன்ட்ஸ் பத்தி அடுத்த ஷிப்ட் டாக்டர்ஸ் கிட்ட வாட்ஸப்ல கேட்டுக்கிட்டே இருப்போம். எங்க குடும்பம் கூட்டுக்குடும்பம். என் மனைவியும் மருத்துவரா இருக்காங்க. கொரோனா வார்டுல வேலை செய்றதால, நானும் மனைவியும் பக்கத்துல இன்னொரு வீட்டுக்குத் தனியா வந்து தங்கிக்கிட்டோம். கேட்டுக்கு வெளில நான் நின்னுப்பேன். அப்பா, அம்மா கேட்டுக்குள்ள இருந்தே வழியனுப்புவாங்க. அப்பாவும் டயாபடிஸ் பேஷன்ட்தான். 3, 4 வாரமாச்சு அவங்களைப் பக்கத்துல இருந்து பாத்துக்க முடில. நான் சின்னதா இருமினாக்கூட அப்பாவும் அம்மாவும் பதறிடுவாங்க. சமீபத்துல அம்மா பர்த்டே வந்தது. வீட்லயே நானும் மனைவியும் கேக் செஞ்சு எடுத்துக்கிட்டுப் போய் கேட் பக்கத்துலயே நின்னு கேக் வெட்டிக் கொண்டாடினோம்.”

டாக்டர் கிஷோர் குமார் - முதுநிலை பயிற்சி மருத்துவர்

“கொரோனா பற்றி நிறைய படிச்சிருந்தாலும் ஒரு பேஷன்ட் அட்மிட்டாயிருந்தப்போ நான் கூட இருந்தது கொஞ்சம் புது அனுபவமா இருந்தது. முதல் தடவையா PPE கிட் போட்டப்போ பத்து நிமிசம் ரொம்ப வியர்வையா கஷ்டமா இருந்தது. ஆறு மணி நேரம் கழிச்சு வெளிய வந்தப்போ கொஞ்சம் பயமாயிருந்தது. எதையாவது தொட்ருப்பமா, வைரஸ் நமக்கு வந்துருக்குமான்னு யோசனையா இருந்தது. வார்டை விட்டு வெளிய வந்தப்போ நிறையபேர் `பத்திரமா இரு, பத்திரமா இரு’ன்னு சொன்னாங்க அவங்க ஆறுதலுக்காகச் சொன்னாலும் மேலும் பயமாயிருந்தது. எங்க அண்ணன் வீடு சென்னைலதான் இருக்கு. அவர் வீட்டுக்குக்கூட நான் போகல. எங்க அப்பா, அம்மாவுக்கு நான் கொரோனா வார்டுல வேலை பாக்குறேன்னு சொல்லவே இல்ல. அவங்க பதற்றப்படுவாங்கன்னு மறைச்சுட்டேன். ஹாஸ்டல்ல என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன். நியூஸ்ல இத்தாலி பத்திப் பாத்துட்டு வீட்ல இருந்து போன் வரும். பதறுவாங்க. நான் வார்டுக்கே போகலன்னு சொல்லிருவேன். எல்லோருமே PPE கிட் போட்டிருக்கறதால பேஷன்ட் எங்ககூட பேசவே தயங்குவாங்க. அந்தத் தயக்கத்தை உடைச்சு அவங்களுக்கு நம்பிக்கை தரணும். அதுக்காக அவங்ககிட்ட நிறைய பேசினோம். பேஷன்ட் அவங்க குடும்பத்தைப் பாக்காம மன அழுத்தமா இருப்பாங்க. பேசி அவங்களுக்கு தைரியம் குடுக்கணும்.

டாக்டர் கிஷோர் குமார்
டாக்டர் கிஷோர் குமார்

அவங்க குணமானவுடனே கிளம்பிடுவாங்க. ஆனா , நாங்க அடுத்த வார்டுக்குப் போயிருவோம். டாக்டர் சில பேர் கொரோனாவால பாதிக்கப்பட்டிருக்காங்க. அதை நிறையபேர் ட்ரோல் பண்றாங்க. நாங்களும் மனுசங்கதான்னு புரிய மாட்டிங்குது. ‘We are not careless, we care less for ourself’.

டாக்டர் U. உமாதேவி - நுண்ணுயிரியியல் துறைப் பேராசிரியர் , ராஜீவ் காந்தி அரசுப் பொது மருத்துவமனை

“நுண்ணுயிரியியலாளரின் பணி கொஞ்சம் சவாலானது. நோய்த் தொற்று இருங்கவங்களோட மாதிரியைப் பரிசோதிக்கணும். மக்களுக்கு எப்படிப் பரவுதுங்கிறதைக் கண்டறியணும். குடும்பத்தைப் பிரிஞ்சு வேலை செய்கிற எங்களுக்கு எங்கள் குழுதான் குடும்பமானது. எங்களுக்கு நாங்களே ஆறுதல். இந்த வைரஸ் குறித்து அனுதினமும் ஏதாவது புதிதாகக் கற்க வேண்டியிருந்தது. வீட்டுக்கு வந்து தூங்குறப்போகூட அடுத்தநாள் எப்படி இருக்கப்போகுதுன்ற யோசனைதான் ஓடும். வீட்டில் இருக்கவங்களுக்கு நோய்த்தொற்று வராமல் பாதுகாக்க வேண்டிய கடமை எனக்கு இருக்கு. அதனால வீட்ல எப்பவும் என்னைத் தனிமைப்படுத்திக்கிட்டேன்.

டாக்டர் U. உமாதேவி
டாக்டர் U. உமாதேவி

என் பையனும் மங்களுர்ல கொரோனா ட்யூட்டிலதான் இருக்காரு. இந்த வேலையின் கஷ்டம் தெரிந்ததால, ஒரு அம்மாவா எனக்கு என் பையனைப் பத்தின கவலை இருக்கும். என் பையன் எனக்கு ஆறுதல் சொல்ல ஆரம்பிச்சாரு. கணவரும் குடும்பத்தாரும் என் சூழலைப் புரிஞ்சுக்கிட்டாங்க. ‘பாசிட்டிவ்’னு வந்த நோயாளிக்கு, சில நாளுக்கப்புறம் ‘நெகட்டிவ்’னு ரிசல்ட் வர்றப்போ, ஒருவித நம்பிக்கையும், சந்தோஷமும் கிடைக்கும். அதை வார்த்தைகளால விவரிக்க முடியாது.’’

P. சாந்தி கிரேஸ் , செவிலியர்

``15 வருஷமா ஸ்டாப் நர்ஸா இருக்கேன். கொரோனா வார்டுல இருக்கப்போறேன்னு சொன்னதும், ஹாஸ்டல் எங்களுக்கு ரெடி பண்ணிருந்தாங்க. நானும் இங்கயே தங்கணும்தான் யோசிச்சிருந்தேன். எங்க அப்பா, அம்மா படிச்சதில்ல. என் குடும்பத்துலேருந்து M.Sc படிச்சு, அரசு வேலைக்கு வந்த முதல் ஆள் நான்தான். அப்பா, அம்மாவுக்கு மனசுக்குள்ள பயம் இருந்தாலும் என்னை நினைச்சு பெருமைதான் பட்டாங்க. மாமனார், மாமியார், என் கணவர் மூணு பேரும், ‘பொண்ணையும், பையனையும் பாத்துக்கறோம் நீ பத்திரமா போயிட்டு வாம்மா’ன்னு சொல்லி அனுப்பி வெச்சாங்க. கொரோனா ட்யூட்டிக்கு வர்றதுக்கு முன்னாடி வீட்ல எல்லாரும் பிரார்த்தனை பண்ணி வழியனுப்பி வச்சாங்க. பொதுவா நோய்வாய்ப் பட்டவங்ககூட அவங்க குடும்பத்தைச் சேர்ந்த ஒருத்தவங்க இருப்பாங்க. கொரோனா வார்டுல அப்படி யாரும் கூட இருக்க மாட்டாங்க. நர்ஸஸ் நாம கொஞ்சம் கூடுதல் கவனம் எடுத்துக்கணும்னு மனசுல ஓடுச்சு.

P.சாந்தி கிரேஸ்
P.சாந்தி கிரேஸ்

10 நாளுக்கு ஒருதடவை பசங்கள போய்ப் பார்க்க முடியும். போன்ல குழந்தைங்க கிட்ட பேசுறப்போ போய்ப் பாக்கணும்னு ஆசையா இருக்கும். ஆனா, யூனிபார்ம் மாட்டி வார்டுக்குள்ள போனப்புறம், அட்மிட்டான பேஷன்ட் குணமாகணும்னு மட்டும்தான் மனசுல ஓடுச்சு. PPE கிட் அணிந்திருக்கறதால எங்க முகம்கூட அட்மிட் ஆனவங்களுக்குத் தெரியாது. எங்க குரலை வச்சு அடையாளம் கண்டுபிடிச்சு சிலர் நன்றி சொன்னாங்க.’’

ராஜேஸ்வரி, உதவி செவிலியர்

“என் வீடு திருத்தணிலதான் இருக்கு. பத்து வருசமா இதே ஹாஸ்பிடல்லதான் வேலை பாக்குறேன். பையன் B.Sc ( nursing ) படிக்கிறான். பொண்ணு +2 படிக்கிறா. இங்க ஹாஸ்டல்ல தங்கிதான் வேலை பாக்குறேன். ஹாஸ்டல்ல எல்லா வசதியும் இருக்கு, பிரச்னையில்ல. என்னோட வேலை வார்டுக்குள்ள இருக்குறது. அதனால எங்க வீட்ல கொஞ்சம் பயந்தாங்க. ஆனாலும் அவங்கதான் தைரியம் சொல்லி அனுப்பி வச்சாங்க. பாதுகாப்புக் கவசம் இருக்குன்னு நான் வீட்ல தைரியம் சொல்லிப்பேன். ஆரம்பத்துல எனக்குக் கொஞ்சம் பயமாதான் இருந்தது. ஆனா முதல் நோயாளி குணமாகிப் போறப்போ அவ்ளோ சந்தோசமா இருந்துச்சு. வீட்ல எல்லார்கிட்டயும் சொல்லி சந்தோசப்பட்டேன். என் தம்பியும் இங்கதான் வேலை பாக்கறார். மருத்துவத்துறைல இருக்குறது சந்தோசமா இருக்கு. அதுனாலதான் என் பையன் இந்த வேலைக்குப் படிக்குறப்போ, படிடான்னு சொல்லி அனுப்பினேன். இப்படி ஏதாவது ஒரு நோய் வரவே கூடாது. ஒருவேளை வந்தா அப்போ என் பையன் வேலை செய்யத் தயாரா நிப்பான்.’’

ராஜேஸ்வரி
ராஜேஸ்வரி

தங்களின் குடும்பத்தினருக்கு நோய்த் தொற்று பரவாமலிருக்க வீட்டிற்குச் செல்லாமல் விடுதிகளில் தங்கிக்கொண்டவர்கள்; வீட்டிற்குச் சென்றாலும் குடும்பத்தினருடன் பேசாமல், ஒன்றாக உணவு சாப்பிடாமல் தனிமைப்படுத்திக் கொண்டவர்கள்; தங்களின் வயதான அப்பா, அம்மாவை, தம் குழந்தைகளை மாதக் கணக்கில் சந்திக்காமல், முகம் பார்த்துப் பேச முடியாமல் பலரும் கொரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் களத்தில் நின்று போராடிவருகிறார்கள். சொந்தக் குடும்பத்திலிருந்து தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக்கொண்டு, தள்ளி நின்று பணிபுரியும் இவர்களும் நம் குடும்ப உறுப்பினர்கள்தாம்.