தமிழகம் மட்டுமின்றி, பக்கத்து ஆந்திராவிலிருந்தும் ஷாப்பிங் செய்ய மக்கள் தேடிவரும் நகரம் சென்னை.
பாண்டி பஜார், பர்மா பஜார், ரட்டன் பஜார், ஈவ்னிங் பஜார், சைனா பஜார், செங்கம் பஜார், ஜாம் பஜார் என நகரம் முழுவதும் பரவியிருக்கும் பஜார்கள் மெட்ராஸின் வரலாற்றில் தனிச் சிறப்பான இடத்தைப் பெற்றிருக்கின்றன.

இந்த பஜார்களின் முன்னோடி, மூர் மார்க்கெட். ஆரம்பத்தில் இது பிராட்வே பகுதியில் இருந்தது. அதை உருவாக்கிய ஸ்டீபன் பாப்ஹேம் பெயரில் இது 'பாப்ஹேம் சந்தை’ என்று அழைக்கப்பட்டது. வணிகப் பெருநகரமாக வளர்ந்த மெட்ராஸின் மக்கள்தொகை 1790-களில் 3 லட்சத்தை எட்டியது. உள்ளூர் மக்கள் மற்றும் வணிகத்துக்காகக் குடியேறிய ஐரோப்பியர்களின் அன்றாடத் தேவைகளை நிறைவேற்றும் நோக்கில் காய்கறிகள், இறைச்சிக் கடைகளை உள்ளடக்கிய சந்தையை பாப்ஹேம் உருவாக்கினார்.
காலப்போக்கில், மக்கள்தொகை தாறுமாறாக அதிகரிக்கவே, சந்தையைப் பராமரிக்க முடியாத நிலை ஏற்பட்டது. சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டதால், 1860-களின் பிற்பகுதியில் இதை இடமாற்றம் செய்ய அரசு முடிவெடுத்தது. மெட்ராஸ் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் பிரமாண்டமாக அப்போது இருந்த பீப்புள்’ஸ் பார்க் வளாகத்தில் புதிய சந்தையை நிர்மாணிக்கத் தீர்மானித்தது பிரிட்டிஷ் நிர்வாகம்.

சென்ட்ரல் ரயில் நிலையம் அருகில் பக்கிங்ஹாம் கால்வாயின் மறுகரையில் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாய் அமைந்திருந்தது பீப்புள்ஸ் பார்க்; மை லேடீஸ் கார்டன் என்ற பூங்காவும் இதன் ஓர் அங்கமாக இருந்துவந்தது. மெட்ராஸின் நுரையீரல் என்று போற்றத்தக்க வகையில் மரங்கள் அடர்ந்து செழித்திருந்தது இந்தப் பூங்கா. சென்னை அருங்காட்சியக வளாகத்தில் இயங்கி வந்த உயிரியல் பூங்கா முதலில் இங்கு இடமாற்றம் செய்யப்பட்டது. அருங்காட்சியகத்துக்கு ‘செத்த காலேஜ்’ என்றும், புதிய உயிரியல் பூங்காவுக்கு ‘உயிர் காலேஜ்’ என்று செல்லப் பெயர்களைச் சூட்டி மகிழ்ந்தார்கள் மெட்ராஸ்வாசிகள்.

சென்ட்ரல் ரயில் நிலையம், பீப்புள்ஸ் பூங்கா, அல்லிக்குளம், விக்டோரியா பப்ளிக் ஹால் - இவற்றுக்கு இடையே காலியாக இருந்தது கொஞ்சம் இடம்... அங்குதான் ‘குஜிலி பஜார்’ இயங்கிவந்தது; பழைய, புதிய பொருள்களின் ஒட்டுமொத்தச் சந்தையாக அந்தக் காலகட்டத்தில் இது விளங்கியிருக்கிறது. மெட்ராஸ் நகரின் அன்றாடச் செயல்பாடுகள், ‘குஜிலிப் பாடல்கள்’ என்ற பெயரில் புத்தகங்களாக அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டன. அதுவே குஜிலி பஜார் என்று பெயர் வரக் காரணமானது; இங்கு திருட்டுப் பொருள்களின் வரவும் அதிகம் என்பதால், இதற்கு ‘தீவ்ஸ் பஜார்’ என்று செல்லப் பெயரும் வைக்கப்பட்டிருந்தது.

பாப்ஹேம் சந்தை இங்குதான் மாற்றப்பட்டது. மெட்ராஸ் மாநகராட்சியின் அப்போதைய தலைவராக இருந்த லெப்டினன்ட் ஜெனரல் சர் ஜார்ஜ் மூர் இதைச் செய்தார். அவர் பெயரால் உருவானதுதான் புகழ்பெற்ற மூர் மார்க்கெட்!
1898 ஏப்ரல் 29 அன்று இதற்கு அடிக்கல் நாட்டித் தொடங்கிவைத்தார் ஜார்ஜ் மூர். அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் கட்டடக் கலையின் பிரதான வடிவமாக விளங்கிய இந்தோசராசெனிக் பாணியில், 40 ஆயிரம் சதுர அடிகளில் பிரமாண்டமாக உருவானது சந்தை. 1900 நவம்பர் 30 அன்று அப்போதைய கவர்னர் சர் ஆர்தர் ஹேவ்லாக் இதைத் திறந்து வைத்தார்.

“நாற்கோண வடிவத்தில் அமைந்திருக்கும் இந்தக் கட்டடம், மேலே மூடப்பட்டு நீண்ட வரிசைத் தூண்கள் உடைய நடைபாதைகளைக் கொண்டிருக்கிறது. நான்கு மூலைகளிலும் கோபுரங்களை போன்ற அமைப்புகள் அமைந்திருந்தன. நுழைவாயில்களில் கருங்கற்களாலான வளைவுகளும், கூரைக் கைப்பிடிச்சுவர்களில் இடம்விட்டு இடமாய், கோயில் கலசங்களின் வடிவில் கலசங்களும் இருந்தன. இந்த வளாகத்தின் மையத்தில் திறந்தவெளி இருக்கிறது. மரங்களுக்கிடையில் அழகிய நீரூற்று ஒன்றும் அமைக்கப்பட்டிருக்கிறது. ஒட்டுமொத்த வளாகமும் நல்ல காற்றோட்டம் பெற்று, தூய்மையான நிலையில் இருக்கிறது” என்று மூர் மார்க்கெட் பற்றிய ஆரம்ப காலக் குறிப்புகள் சொல்கின்றன.
பழைய, புதிய புத்தகங்கள்; வளர்ப்புப் பிராணிகள், பேனா, கைக்கடிகாரம், கிராமஃபோன் இசைத்தட்டுகள், சினிமா புரொஜெக்டர்கள், பழங்காலக் கலைப் பொருள்கள், பல்வேறு நாடுகளின் நாணயங்கள், பொம்மைகள், துணிகள், சாமான்கள் மற்றும் ரிப்பேர் கடைகள் என காண்போரைத் திகைக்கச் செய்யும் அளவுக்கு பொருள்களைத் தன்னகத்தே கொண்டு ஒரு நிரந்தர அதிசயமாக மூர் மார்க்கெட் இயங்கிக் கொண்டிருந்தது.

மெட்ராஸின் அன்றைய பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் தீவிர வாசகர்களின் புத்தகத் தேவையை மூர் மார்க்கெட் நிறைவேற்றியிருக்கிறது; பல்துறை புத்தகங்கள் குறித்த புத்தக வியாபாரிகளின் அறிவு பிரமிக்கத்தக்கதாய் இருந்திருக்கிறது; அவர்களில் பெரும்பாலானோர் பள்ளிப் படிப்பைக் கூட முடித்திராதவர்கள் என்பது மேலும் பிரமிப்பைத் தரவல்லது.
“புத்தகக் கடைகளில் புத்தகம் வாங்க வேண்டும் என்றில்லை. நின்றபடியே படிக்கலாம். விடுபட்ட பகுதிகளை அடுத்த நாள் போய்ப் படிக்கலாம். இந்தத் தொடர் வாசிப்புக்கு ஒரு நாளைக்கு இரண்டணா வாங்கினார்கள். படிக்கும் புத்தகங்கள் தவிர பார்க்கும் புத்தகங்களும் உள்ளே ரகசியமாக வைக்கப்பட்டிருக்கும். அந்த நாளில் போலீஸ் அதிகம் கண்ணில் படாதிருந்தாலும் பயப்படுவார்கள். ஆதலால் இந்தப் புத்தகங்கள் விற்கப்படாது. கட்டணம் அதிகம்” என்று மூர் மார்க்கெட்டின் புத்தகக் கடைகள் பற்றி அசோகமித்திரன் எழுதுகிறார்.

காலப்போக்கில் மெட்ராஸின் முதன்மைச் சுற்றுலாத் தளமாக மூர் மார்க்கெட் மாறியது. மெட்ராஸுக்கு வரும் எவரும், ஒருவித கொண்டாட்ட மனநிலையைத் தரும் மூர் மார்க்கெட்டைப் பார்வையிடாமல் திரும்பிச் செல்ல முடியாத நிலை உருவானது.
மெட்ராஸ் விரிவடையத் தொடங்கியபோது இங்கும் இடப்பற்றாக்குறை மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்தது. உயிரியல் பூங்காவில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டதால், வண்டலூருக்கு அது இடமாற்றம் செய்யப்பட்டது; அருகில் புதிய விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்பட, பூங்காக்களின் பரப்பளவு வெகுவாகக் குறையத் தொடங்கியது. மெட்ராஸின் நுரையீரல் என்று போற்றப்பட்ட இந்தப் பூங்கா, சிறிய பகுதியாக சுருங்கிப் போனது. பூங்காவை வைத்து 'பூங்கா நகர்' என்று பெயரிடப்பட்ட இந்தப் பகுதியில், ஒரு கட்டத்தில் பெயரில் மட்டுமே பூங்கா தங்கிவிட்டது.
இந்தப் பின்னணியில்தான் தென்னக ரயில்வே சென்ட்ரல் ரயில் நிலையத்தையும் விரிவுபடுத்தி, புதிய ரயில் பாதைகளை அமைத்து நவீன புறநகர் முனையத்தை உருவாக்கும் திட்டத்தை முன்னெடுத்தது. இதற்கு நிறைய இடம் தேவைப்பட்ட நிலையில், தென்னக ரயில்வே கைநீட்டிய இடம் மூர் மார்க்கெட் வளாகம்!

தென்னக ரயில்வேயின் இந்தக் கோரிக்கை மூர் மார்க்கெட் வளாக வியாபாரிகளிடையே மிகப்பெரிய கொந்தளிப்பை உண்டு பண்ணியது. சுமார் 800 கடைகளைக் கொண்டு நகரின் முக்கிய வணிக மையமாக இயங்கிவந்த மூர் மார்க்கெட், ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக விளங்கியது. இந்தப் பின்னணியில்தான், மூர் மார்க்கெட் வியாபாரிகளோ, மெட்ராஸ்வாசிகளோ எதிர்பாராத நிலையில், அந்தக் கோரம் அரங்கேறியது. ஆம், மூர் மார்க்கெட் பற்றி எரிந்தது.
1985 மே 29 அன்று இரவு, மூர் மார்க்கெட் வளாகக் கடை ஒன்றில் ஏற்பட்ட மின் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ, வேகமாக மற்ற கடைகளுக்கும் பரவியது. இரவு நேரம் என்பதால் தீ பிடித்த விவரம் கடைக்காரர்கள் யாருக்கும் உடனடியாகத் தெரியவில்லை. கட்டடம் முழுவதும் கொழுந்துவிட்டு எரியும் போதுதான் தெரியவந்தது. தீயணைப்பு படையினர் 11 மணி நேரம் போராடி தீயை அணைத்தார்கள்; இடையில் தண்ணீர் பற்றாக்குறையால், அருலிருந்த பக்கிங்ஹாம் கால்வாயிலிருந்து தண்ணீர் எடுத்துவந்த அவலமும் அரங்கேறியது.

விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்கு ஒன்றிரண்டு கடைகளே தப்பின. படையெடுப்பிற்குப் பிறகு அழிந்து போன நகரம் போல மூர் மார்க்கெட் காட்சி அளித்தது என எரிந்து முடிந்த மூர் மார்க்கெட்டை நேரில் பார்த்தவர்கள் கூறினர். 85 ஆண்டுகால பாரம்பர்யமிக்க, மெட்ராஸ்வாசிகளின் வாழ்வோடும் உணர்வோடும் இரண்டறக் கலந்துவிட்ட, ஆயிரமாயிரம் குடும்பங்களுக்கு வாழ்வாதாரமாக விளங்கிய மூர் மார்க்கெட் அழிந்தது தாள முடியாத சோகத்தை நகரில் பரவச் செய்தது.
“மின்சார வயர்கள் கருகி, உருகித் தொங்கியும் ஜவ்வு ஜவ்வாய் ஒட்டிக் கொண்டிருந்தன. இனம் தெரியாத என்னென்னமோ வஸ்துகள் எரிந்து இன்னும் அகற்றப்படாது யார் வரவையோ எதிர்நோக்கியும் எரித்ததற்கான சாட்சியாகவும் கிடந்தன. நாசம் - சர்வ நாசம்” என்று எழுத்தாளர் விட்டல் ராவ் மூர் மார்க்கெட் எரிந்ததைப் பதிவு செய்திருக்கிறார்.

இந்தத் தீவிபத்தில் ஏற்பட்ட சேதம் சுமார் 12 கோடி என்று அப்போது மதிப்பிடப்பட்டது. ஆனால், காலத்தையும் மீறி நின்ற அந்தக் கட்டடத்தில் இருந்த பொருள்களின் உண்மையான மதிப்பு உண்மையில் பல நூறு கோடிகளைத் தாண்டும். மின்சாரக் கசிவினால் ஏற்பட்ட விபத்து என்று அப்போது காரணம் கூறப்பட்டாலும், அதன் உண்மையான காரணம் என்ன என்பது முழுமையாக வெளிவராமலேயே போனது. அந்தக் காலத்தில் சென்னையின் வரலாற்றில் மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்ட சம்பவங்களில் ஒன்றாக இது மாறியது.
“மூர் மார்க்கெட்டினுள் கடை வைத்திருந்த ஒவ்வொருவரின் குடும்பமும், எரிந்து போய்ப் பரிதாபமாய் நிற்கும் தங்கள் கடைகள் முன்பு வாயிலும், வயிற்றிலுமாக அடித்துக் கண்ணீர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு பெண்மணி அங்கு கிடக்கும் சாம்பலை வெறிபிடித்தாற் போல அள்ளி, அள்ளித் தின்று கொண்டிருக்கிறார். அவரிடம், “ஏனம்மா... இப்படி..?” என்று கேட்டதற்கு அழுதபடி, “இனி இதுதான்யா எங்களுக்குச் சாப்பாடு...” என்கிறார்! “இனி என்ன பண்ணப் போறோம்னு தெரியலைங்க... கடையைப் பூட்டிட்டுக் கொணாந்த சாவியைத் தவிர எதுவுமே மிஞ்சலைங்க...” என்று கண்ணீர் விடுகிறார்கள்.
- என மூர் மார்க்கெட் எரிந்த கோரத்தை 05-06-1985 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழ் பதிவு செய்திருந்தது; ‘ஆனந்த விகடன்’ தலையங்கம், அரசு இயந்திரத்தின் அலட்சியப் போக்கினை மிகக் கடுமையாகச் சாடியிருந்தது.
பழைய மூர் மார்க்கெட் கட்டடத்தை மீண்டும் உருவாக்கித் தர வேண்டும் என்ற வியாபாரிகளின் கோரிக்கை வைத்தனர். அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, அருகிலிருந்த அல்லிக்குளத்தில் புதிய மூர் மார்க்கெட் கட்டித் தரப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. அந்த வியாபாரிகளுக்கு நிவாரணமாக அப்போது 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.
கலைநயமும், கம்பீரமும், பாரம்பர்யமும் கூடி நின்ற மூர் மார்க்கெட் கட்டடத்தில், அதன் தடமே இன்றி, தட்டையான ஒரு கட்டடமாக நவீன புறநகர் ரயில் முனையத்துக்கான கட்டடம் உருவாக்கப்பட்டது.

அரசு அறிவித்தபடி, புதிய மூர் மார்க்கெட் அருகிலிருந்த அல்லிக்குளத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டது. பழைய மூர் மார்க்கெட்டின் இடிபாடுகளும் இங்கு கொட்டப்பட்டு, புதிய மூர் மார்க்கெட்டின் அடித்தளமாகப் பயன்படுத்தப்பட்டன. மூர் மார்க்கெட் எரிந்து சுமார் 6 ஆண்டுகளுக்குப் பிறகு 1991-ல் புதிய மூர் மார்க்கெட் வளாகம் கட்டி முடிக்கப்பட்டது.
மூர் மார்க்கெட் எரிந்துபோனதால், பலர் தொழிலை விட்டு வெறியேறிவிட்டார்கள்; சிலர் இறந்தே போனார்கள். மிச்சமிருந்த சிலரோ, மனதை திடப்படுத்திக் கொண்டு சாலையோரங்களில், பிளாட்பாரங்களில் கடைகளைப் போட்டு வியாபாரத்தைத் தொடர்ந்தனர். அவர்களின் வெகு சிலரே இந்தப் புதிய மூர் மார்க்கெட்டில் வந்து மீண்டும் தங்கள் வியாபாரத்தைத் தொடங்கினர். நான்கு மாடிக் கட்டடமாக உருவாக்கப்பட்ட இந்தப் புதிய மூர் மார்க்கெட்டில் முதலில் அனைத்து தளங்களிலும் வியாபாரிகள் கடை போட்டனர். ஆனால், தரைத் தளத்திலும், முதல் தளத்திலும் மட்டுமே வியாபாரம் ஓரளவுக்கு இருந்ததால், மூன்று, நான்காம் தளங்களில் வியாபாரிகள் பெரும் நட்டத்தைச் சந்தித்தனர். வருமானமும் இன்றி, வாடகையும் கட்டமுடியாமல் காலப்போக்கில் அவர்கள் மறைந்துபோனார்கள். இன்று அந்தத் தளங்கள் நீதிமன்றங்களாகச் செயல்படுகின்றன.

பழைய மூர் மார்க்கெட் கட்டடத்தில் அங்கு வியாபாரம் செய்துவந்த மனிதர்களைத் தவிர்த்து, அதன் ஒரே நினைவு எச்சமாக இன்று இருப்பது அந்தக் கட்டிடத்தின் மினியேச்சர் மாடல். இது சென்னை புறநகர் ரயில்நிலையத்தின் வாசலில் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது.
அல்லிக்குளம் மூர் மார்க்கெட் வளாகத்தின் பராமரிப்பு என்பது மிக மோசமான நிலையில் உள்ளது. அருகிலேயே மாநகராட்சி அலுவலகம் இருந்தாலும், அல்லிக்குளம் வளாகத்தைச் சுற்றிலும் கழிவுநீர் தேங்கி சுகாதாரக் கேட்டை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. பழைய மூர் மார்க்கெட் கட்டடம் தீக்கிரையானது அழிக்க முடியாத சோக வரலாறு, ஆனால் அதிலிருந்து எந்தப் பாடமும் கற்றுக் கொள்ளவில்லை என்பதையே அல்லிக்குளம் மூர் மார்க்கெட் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தீயணைப்புக் கருவிகளின் இன்றைய நிலை நமக்கு உணர்த்துகிறது.

எந்த நோக்கத்துக்காகப் பிராட்வேயிலிருந்து சந்தை இங்கு மாற்றப்பட்டத்தோ, இருநூறு ஆண்டுகள் கடந்த பிறகு அந்தக் காரணம் தொடர்வது நம் காலத்தின் அவலமின்றி வேறென்ன?