சினிமா
பேட்டி - கட்டுரைகள்
Published:Updated:

அன்பெனும் மீட்புக்கயிறு!

 குவாடன் பெய்லஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
குவாடன் பெய்லஸ்

இப்படி வாழ்க்கை சென்றுகொண்டிருக்க, ஒருநாள் குவாடனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்றிருக்கிறார் அவன் தாய்.

வெறுப்பு, மொத்த உலகத்தையும் கொஞ்சம் கொஞ்சமாகச் சூழ்ந்துவருகிறது என அவ்வப்போது மனம் தளர்ந்தாலும், இந்த உலகின் அடிப்படை அன்புதான் என்பதை நிரூபிக்கும் சம்பவங்கள் அரங்கேறிக் கொண்டேதான் இருக்கின்றன. அப்படியான தொரு சம்பவம்தான் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது.

அன்பெனும் மீட்புக்கயிறு!
அன்பெனும் மீட்புக்கயிறு!

ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரைச் சேர்ந்த ஒன்பது வயதுச் சிறுவன் குவாடன் பெய்லஸ் ‘Achondroplasia’ என்னும் நோயால் பாதிக்கப்பட்டுள்ளான். இதனால் இவன் வழக்கத்தைவிடப் பெரிய தலையுடனும், குறைவான உயரத்துடனும் காணப்படுகிறான். இதனால் சக மாணவர்கள் இவனைத் தொடர்ந்து கிண்டலும் கேலியும் செய்துவந்துள்ளனர். இதனால் அடிக்கடி மன உளைச்சலுக்கு ஆளான குவாடனை முடிந்த அளவு தனது அன்பால் அரவணைத்து, நம்பிக்கை ஊட்டி வளர்த்து வந்திருக்கிறார் இவன் தாய் யாராகா பெய்லஸ்.

இப்படி வாழ்க்கை சென்றுகொண்டிருக்க, ஒருநாள் குவாடனைப் பள்ளியிலிருந்து அழைத்துவரச் சென்றிருக்கிறார் அவன் தாய். அன்று சக மாணவர்களின் கிண்டல்களால் மிகவும் மனமுடைந்த அவன் செய்வதறியாமல் கதறி அழுதிருக்கிறான். அதைப் பொறுத்துக்கொள்ள முடியாத அவன் தாய், அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுத் தனது ஆதங்கத்தைப் பதிவுசெய்தார்.

அன்பெனும் மீட்புக்கயிறு!
அன்பெனும் மீட்புக்கயிறு!

அந்த வீடியோவில், ``தயவுசெய்து யாராவது என்னைக் கொன்றுவிடுங்கள். எனக்கு ஒரு கயிறு கொடுங்கள், நான் தற்கொலை செய்துகொள்ள வேண்டும்” என்று குமுறியிருந்தான் குவாடன். “மாற்றுத்திறனாளிக் குழந்தைகளிடம் எப்படி நடந்துகொள்வது என தயவுசெய்து உங்கள் குழந்தைகளிடம் சொல்லிக்கொடுங்கள்” எனப் பெற்றோருக்கு இந்த வீடியோ மூலம் கோரிக்கை வைத்தார் அந்தத் தாய். குவாடன் ஆறு வயதாக இருக்கும்போதே தற்கொலைக்கு முயன்றான் என்ற தகவலையும் கூறினார் அவர்.

இந்த வீடியோ உலகமெங்கும் இருக்கும் மக்களின் மனங்களை உறைய வைத்தது. இதுபோன்ற செயல்களுக்குக் கண்டனங்களையும், குவாடனுக்கு ஆறுதலையும் தெரிவித்து வருகின்றனர் மக்கள். #IStandWithQuaden என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் டிரெண்டானது.

 குவாடன் பெய்லஸ்
குவாடன் பெய்லஸ்

குவாடனின் இந்த அழுகுரல் பிரபலங்களின் செவிகளையும் எட்டியது. “நீ எண்ணுவதைவிடப் பெரிய பலசாலி. இனி உன் நண்பர்களில் நானும் ஒருவன். அனைவரும் ஒருவரை ஒருவர் அன்பு செய்யப் பழகுங்கள்!” எனப் பதிவிட்டார் ஹாலிவுட் நடிகர் ஹுக் ஜேக்மேன். அமெரிக்க ஸ்டாண்ட் அப் காமெடியன் பிராட் வில்லியம்ஸ், குவாடனையும் அவன் தாயாரையும் டிஸ்னிலேண்டுக்கு அழைத்துச்செல்ல நிதி திரட்டினார். இதில் இதுவரை ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலருக்கு மேலான நிதி சேர்ந்துள்ளது. வில்லியம்ஸும் இத்தகைய நோயால் பாதிக்கப்பட்டவர்தான்.

வீடியோ பார்த்த ஆஸ்திரேலியாவின் முன்னணி ரக்பி வீரர்களும் குவாடனுக்கு ஆறுதல் கரம் நீட்டினர். முதலில் குவாடனுக்கு ஆதரவாக இந்த வீரர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டனர். குவாடனை மைதானத்தில் அவர்களுடன் அழைத்துக் கௌரவிக்க ஆசைப்படுவதாகவும் தெரிவித்த அவர்கள் அதை நிறைவேற்றவும் செய்தனர். மைதானத்தில் ஜெர்ஸி அணிந்த குவாடன், கேப்டன் கையைப்பிடித்து முன்னே செல்ல, ஆல்ஸ்டார்ஸ் ரக்பி அணி பின்வந்தது. வாழ்க்கையில் இனி நாம் மீள முடியாது என நினைத்த சிறுவனுக்கு, அச்சம்பவம் ஆயிரம் டன் எனெர்ஜி பூஸ்டர். அச்சிறுவன் எடுத்துவைத்த ஒவ்வொரு நடையும் ஏளனத்துக்கு எதிரான கம்பீர நடை. புன்னகை பூத்த முகத்துடன் அவன் மைதானத்தில் வலம்வரும் புகைப்படம் கடந்த வாரம் உலகளவில் அதிகம் வைரலான புகைப்படம்.

“அவனது வாழ்வின் மிகவும் மோசமான நாள்களிலிருந்து இந்த நாள்கள் சிறந்த நாள்களாக மாறிவருகின்றன’’ என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் அவன் தாய். இப்படி தன்னைக் கொல்லத் தூக்குக்கயிறு கேட்ட சிறுவனுக்கு அன்பெனும் மீட்புக்கயிறு நீட்டியிருக்கிறது உலகம். அன்பினால் ஏங்கும் ஒவ்வொரு சிறு இதயத்துக்கும் ஆறுதல் அளிக்க, நேசக்கரம் நீட்ட, நம்பிக்கை அளிக்க இங்கு இன்னும் மனிதம் மிச்சமிருக்கிறது என்பதைச் சொல்கிறது இச்சம்பவம்.

மனிதம் வெல்லும்!