பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி வணிகம் செய்வதற்காக 1639-ல் மெட்ராஸில் வந்திறங்கியபோது, இந்த நிலத்துண்டு சிறு மீனவ கிராமமாக இருந்தது; சில ஆயிரம் பேர்களே இங்கு வசித்தார்கள். வணிக வாய்ப்புகள் இங்குக் கொட்டிக் கிடப்பதைக் கண்ட கம்பெனி நிர்வாகம், மெட்ராஸைத் தலைமையிடமாகக் கொண்டு புனித ஜார்ஜ் கோட்டையை உருவாக்கியது.
கோட்டைக்கு வெளியே முத்தியால்பேட்டை, பெத்தநாயக்கன்பேட்டை ஆகிய பகுதிகள் இணைந்து கறுப்பர் நகரமாக உருவெடுக்க, திருவல்லிக்கேணி, எழும்பூர், புரசைவாக்கம் போன்ற தூரத்து கிராமங்கள் ஒவ்வொன்றாக இணைக்கப்பட்டு மெட்ராஸ் நகரமாக வளரத் தொடங்கியது.

மதராஸப்பட்டணம் மிகக் குறுகிய காலகட்டத்திலேயே நகரமாக விரிந்துவிட்டது. அதனால், அடிப்படை வசதிகளை உருவாக்க வேண்டிய தேவை எழுந்தது. அந்தக் காலகட்டத்தில் பிரிட்டன் தலைநகர் லண்டன் தவிர, வேறெங்கும் நகர நிர்வாக அமைப்புகள் இல்லை. பிரிட்டனின் முக்கிய வணிக மையமாக வளர்ந்த மெட்ராஸிலும் அப்படியான ஓர் அமைப்பை உருவாக்கும் யோசனை, கிழக்கிந்தியக் கம்பெனி உயர் அதிகாரியாக இருந்த ஜோசையா சைல்டு மனதில் உதித்தது. வளர்ந்துவரும் சென்னை நகரத்தின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக நகராட்சி அமைப்பை ஏற்படுத்த வலியுறுத்தி 1687 செப்டம்பர் 28 அன்று பிரிட்டன் அரசர் இரண்டாம் ஜேம்ஸ்க்கு கடிதம் எழுதினார் சைல்டு. இந்தக் கோரிக்கையை ஏற்ற அரசர், அதற்கான அனுமதிப் பட்டயத்தை 1687 டிசம்பர் 30 அன்று வெளியிட்டார். இந்தக் காலகட்டதில் மெட்ராஸின் ஆளுநராக இருந்தவர் எலுஹு யேல்.

1688 செப்டம்பர் 29-ம் தேதியிலிருந்து மெட்ராஸ் மாநகராட்சி செயல்படத் தொடங்கியது. நாதனியேல் ஹிக்கின்சன் என்பவர் முதல் மேயராகப் பொறுப்பேற்க, ஆங்கிலேயர்கள், போர்ச்சுகீசியர்கள், யூதர்கள், இந்துக்கள் எனப் பலதரப்பு பிரதிநிதிகளையும் உள்ளடக்கிய குழு ஒன்றும் நகரை நிர்வகிக்க உருவாக்கப்பட்டது. நகராட்சிக்கு என்று தனி அலுவலகம் கட்டப்படாத நிலையில், கோட்டைக்குள் இருந்த டவுன் ஹாலில் அது இயங்கிவந்தது. தெருக்கள் அமைத்தல், சாலை போடுதல், கழிவுநீரோடைகள் அமைத்தல், பாலங்கள், பள்ளிகள் கட்டுதல் ஆகிய பணிகளை நகராட்சி நிர்வாகம் மேற்கொள்ளத் தொடங்கியது.
புனித ஜார்ஜ் கோட்டையிலிருந்து 10 மைல்களை உள்ளடக்கி சுமார் 40 ஆயிரம் மக்களுடன் நகரமாக வளரத் தொடங்கிய மெட்ராஸ், இன்று 426 சதுர கி.மீ பரப்பளவுக்கு விரிந்து கிட்டத்தட்ட 1 கோடி மக்களுடன் பெருநகர சென்னை மாநகராட்சியாக வளர்ந்துள்ளது. கோட்டைக்குள் இயங்கிய மாநகராட்சி ஒரு கட்டத்துக்குப் பிறகு ஜார்ஜ் டவுன் எர்ரபாலு செட்டித் தெருவில் வாடகைக் கட்டடம் ஒன்றுக்கு மாற்றப்பட்டது.
நகராட்சியின் பணிகள் விரிவடைந்த பிறகு, நிரந்தர அலுவலகம் தேவை என்ற கோரிக்கை எழுந்தது. அதையேற்று பிரிட்டிஷ் நிர்வாகம் கட்டியெழுப்பித் தந்த கட்டடம்தான் தற்போது மாநகராட்சி இயங்கும் ரிப்பன் மாளிகை.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில், பூந்தமல்லி நெடுஞ்சாலையும், ராஜா முத்தையா சாலையும் சந்திக்குமிடத்தில் பிரமாண்டமாக விரிந்திருக்கிறது ரிப்பன் மாளிகை.
நவசெவ்வியல் முறையில் அமைந்த ரிப்பன் மாளிகைக் கட்டடம், இந்தியாவில் பிரிட்டிஷார் முன்னெடுத்த கட்டிடக் கலையான இந்தோ-சராசனிக் பாணியின் உச்சங்களில் ஒன்று. பிரிட்டிஷ் இந்தியாவின் வைஸ்ராயாக அப்போது இருந்த மின்டோ பிரபு, 1909 டிசம்பர் 11 அன்று இந்த மாளிகைக்கு அடிக்கல் நாட்டினார். அக்காலகட்டத்தின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் ஜி.டி.எஸ்.ஹாரிஸ், இந்த மாளிகையை வடிவமைக்க, லோகநாத முதலியார் என்ற ஒப்பந்தக்காரர் கட்டிமுடித்தார். இந்த மாளிகையின் திட்ட மதிப்பீடு 7.5 லட்சம் ரூபாய். அதில் 5.5 லட்சம் ரூபாய் லோகநாத முதலியாருக்கு ஊதியமாகவே கொடுக்கப்பட்டதாக தரவுகள் சொல்கின்றன.
நான்கு ஆண்டுகளில் கட்டி முடிக்கப்பட்ட ரிப்பன் மாளிகை, 1913-ல் திறக்கப்பட்டது. ‘உள்ளூர் தன்னாட்சி நிர்வாகத்தின் தந்தை’ என்று போற்றப்பட்ட பிரிட்டிஷ் இந்தியாவின் கவர்னர் ஜெனரலாக இருந்த ரிப்பன் பிரபுவின் நினைவாக இந்த மாளிகைக்கு ‘ரிப்பன் மாளிகை’ என்று பெயர் சூட்டப்பட்டது.

செவ்வக வடிவத்தில் அமைந்திருக்கும் ரிப்பன் மாளிகை 279 அடி நீளமும், 105 அடி அகலமும், 141 அடி உயரமும் கொண்டது. கட்டடத்தின் முதல் மூன்று தளங்களும் சுமார் 30 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கின்றன. இந்த மாளிகையின் சிறப்பம்சமாகத் திகழும் மணிக்கூண்டு கோபுரத்தின் உயரம் 8.2 அடி; இயந்திர விசை மூலம் இயங்கும் இந்த மணிக்கூண்டுக் கடிகாரம் பிரிட்டனின் வெஸ்ட்மினிஸ்டர் அரண்மனையில் இயங்கும் கடிகாரத்தைப் போலவே வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கடிகாரத்தோடு இணைக்கப்பட்ட ஜில்லெட் & ஜான்ஸ்டன் நிறுவனம் வடிவமைத்த 4 வெண்கல மணிகள் இப்போதும் இந்த மாளிகையில் இருக்கின்றன.
ரிப்பன் மாளிகை திறக்கப்பட்ட காலத்தில் மாநகராட்சியின் தலைவராக இருந்தவர் பி.எல்.மூர். மாநகராட்சியின் பணிகள் 1850-களில் தெளிவாக வரையறுக்கப்பட, 1919-ம் ஆண்டு ‘மெட்ராஸ் முனிசிபல் கார்ப்பரேஷன் சட்ட’த்தில் பல திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு முறைப்படுத்தப்பட்டது. உறுப்பினர்கள், ‘கவுன்சிலர்கள்’ என்றும் மேயர், ‘தலைவர்’ என்றும் பதவிகளின் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டன. நீதிக் கட்சியின் தலைவர்களில் ஒருவரான பிட்டி தியாகராயர், சென்னை மாநகராட்சியின் முதல் இந்தியத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1933-ல் மேயர் பதவி மீண்டும் கொண்டுவரப்பட்டபோது, குமாரராஜா எம்.ஏ.முத்தையா சென்னை மாநகராட்சியின் கடைசி தலைவராகவும், முதல் மேயராகவும் பதவி வகித்தார். 1957-ல் சென்னை மாநகராட்சியின் முதல் பெண் மேயராக தாரா செரியன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவின் முதல் பெண் மேயரும் இவர்தான். இவரது கணவர் பி.வி.செரியனும் சென்னை மேயராக இருந்தவர் என்பது சுவாரஸ்ய வரலாறு.

1680களில் சென்னை மாநகராட்சித் தலைவர் பதவியென்பது, நீதிபதியின் பதவிக்கு இணையானதாக கருதப்பட்டது. அதனால் நீதிபதி அணியும் அங்கியைப் போன்ற ஆடையை மாநகராட்சித் தலைவரும் அணிவது நடைமுறையாக இருந்தது. அதிகாரங்களிலும் நடைமுறைகளிலும் மாற்றங்கள் வந்தாலும் 350 ஆண்டுகளைக் கடந்தும் இன்றும் அந்த வழக்கம் தொடர்கிறது. மாநகராட்சி மன்ற கூட்டத்தின் போது கருப்பு நிற அங்கியும், பொது நிகழ்ச்சிகளில் சிவப்பு நிற அங்கியும் மேயர் அணிவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.
சென்னை மாநகர மேயராகத் தேந்தெடுக்கப்படுபவர் பதவியேற்ற பின் 18 பவுன் தங்கச் சங்கிலி அணிந்து, கையில் பளபளக்கும் செங்கோல் ஏந்துவது வழக்கம்; ராஜா சர் முத்தையா மேயராக இருந்தபோது தான் அணிந்திருந்த 18 பவுன் தங்கச் சங்கிலியை தன் பதவிக்காலம் முடிந்ததும் மாநகராட்சியிடமே ஒப்படைத்தார். அதை வழிவழியாக மேயர் பதவிக்கான அடையாளச் சின்னமாக இப்போது வரை அணிகிறார்கள்.
ரிப்பன் மாளிகை வளாகத்தில் அமைந்திருக்கும் சிலைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வரலாற்றை புதைத்து வைத்திருக்கின்றன. பிரிட்டிஷ் கவர்னர் ஜெனரல் ரிப்பன், மேயராக இருந்த சுதந்திரப் போராட்டவீரர் சத்தியமூர்த்தி, மாநகராட்சியின் ஆணையராக இருந்த பி.எம்.சிவஞான முதலியார் உள்ளிட்ட மாநகராட்சியோடு தொடர்புடைய பலரின் சிலைகள் இங்கே இருக்கின்றன.

பெருநகர சென்னை மாநகராட்சி என்பது இன்று 200 வார்டுகள் கொண்ட 15 மண்டலங்களால் ஆன மிகப் பெரிய ஓர் அமைப்பு. சென்னை மாநகராட்சி இணையதளம் வழங்கும் தகவல்களின்படி, சென்னை மாநகரில், தினமும் 400 பிறப்புகள், 180 இறப்புகள் நிகழ்கின்றன. 370 கி.மீ. நீளத்தில் 1160 சாலைகள் அமைந்துள்ளன. 962 கி.மீ. நீள மழைநீர் வடிகால், 50 மெகா வாட் மின்சாரப் பயன்பாட்டில் இயங்கும் 2,13,045 தெரு விளக்குகள், 260 பூங்காக்கள், 113 சமூகக் கூடங்கள், 966 தூய்மை வாகனங்கள், 5 ஆயிரம் டன் அளவுக்குக் குப்பைகளைக் கையாளும் கொடுங்கையூர், பெருங்குடி குப்பைக்கிடங்குகள், 23,538 பணியாளர்கள் என பிரமாண்டமாய் இயங்கிக் கொண்டிருக்கிறது.
சொத்து வரி 700 கோடி, தொழில் வரி 350 கோடி, இதர வரிகள் 1,600 கோடி என ஆண்டுக்கு மொத்தம் ரூ.2,650 கோடி ரூபாய் சென்னை மாநகராட்சிக்கு வரி வருவாயாகக் கிடைக்கிறது. இதில் மாநகராட்சி ஊழியர்களுக்கான சம்பளம் மட்டும் 1300 கோடி.
1972-ம் ஆண்டு ‘மஸ்டர் ரோல்’ ஊழல் காரணமாகச் சென்னை மாநகராட்சி நிர்வாகம் கலைக்கப்பட்டது; 1996-ல் மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்ட மாநகராட்சி நிர்வாகத்துக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். மேயராக இருந்த காலகட்டத்தில் அவர் முன்னெடுத்த திட்டம்தான் ‘சிங்காரச் சென்னை’.

1600களில் தொடங்கி பல வரலாறுகளுக்குச் சான்றாக இருக்கிற சென்னை மாநகராட்சியின் சமீபத்திய வரலாற்று நிகழ்வு பட்டியலினத்தைச் சேர்ந்த பிரியா ராஜன் என்ற 28 வயது இளம்பெண் முதல் தலித் பெண் மேயராகத் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி நிர்வாகத்துக்கு வயது 333; மாநகராட்சிக் கட்டடமான ரிப்பன் மாளிக்கைக்கு வயது 109.
தன்னை நாடி வரும் எல்லோரையும் அரவணைத்துக்கொண்டு ‘வந்தாரை வாழ வைக்கும்’ மாநகரமாக வளர்ந்துகொண்டே இருக்கிறது சென்னை!