Published:Updated:

The Kashmir Files: "யாரேனும் ஒருவர் கட்டாயம் குரல் கொடுக்க வேண்டும்!"- சர்ச்சை குறித்து நாடவ் லேபிட்

நாடவ் லேபிட்
News
நாடவ் லேபிட்

"இப்படி வெளிப்படையாகப் பேசுபவர்களின் பின்னணியில் வெளிநாட்டு எதிரிகள், துரோகிகள் இருக்கிறார்கள் என்று கூறுவது வழக்கமான ஒன்றுதான்!" - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' விமர்சன சர்ச்சை குறித்து நாடவ் லேபிட்

Published:Updated:

The Kashmir Files: "யாரேனும் ஒருவர் கட்டாயம் குரல் கொடுக்க வேண்டும்!"- சர்ச்சை குறித்து நாடவ் லேபிட்

"இப்படி வெளிப்படையாகப் பேசுபவர்களின் பின்னணியில் வெளிநாட்டு எதிரிகள், துரோகிகள் இருக்கிறார்கள் என்று கூறுவது வழக்கமான ஒன்றுதான்!" - 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' விமர்சன சர்ச்சை குறித்து நாடவ் லேபிட்

நாடவ் லேபிட்
News
நாடவ் லேபிட்
கோவா தலைநகர் பனாஜியில் நடைபெற்ற 53-வது சர்வதேச இந்தியத் திரைப்பட விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் பேசிய தேர்வுக்குழுத் தலைவர் நாடவ் லேபிட், `தி காஷ்மீர் ஃபைல்ஸ்' திரைப்படம் குறித்து கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதுகுறித்து பேசியிருந்த அவர், “இந்தியாவின் இப்படியான மதிப்புமிக்க திரைப்பட விழாவின் போட்டிப் பிரிவில் ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ போன்றதொரு பிரசாரத் தன்மை வாய்ந்த இழிவான படத்தைப் பார்த்தது மன உளைச்சலையும் அதிர்ச்சியையும் தருகிறது" என்று கூறியிருந்தார். இது பெரும் விவாதத்தைக் கிளப்பியது. நாடவ் லேபிட்டின் இந்தக் கருத்து பல்வேறு எதிர்ப்புகளையும் ஆதரவுகளையும் பெற்றிருந்தது.

விவேக் அக்னிஹோத்ரி,  இஸ்ரேலியத் தூதர்  கிலோன்
விவேக் அக்னிஹோத்ரி, இஸ்ரேலியத் தூதர் கிலோன்

இதையடுத்து, ‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி, "இவையெல்லாம் எனக்குப் புதிதல்ல. ஏனெனில் இதுபோன்ற வார்த்தைகள் ஏற்கெனவே பயங்கரவாத அமைப்புகளாலும் நகர்ப்புற நக்சல்களாலும், 'துக்டே துக்டே’ கேங்கின் ஆதரவாளர்களாலும் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்திய அரசாங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒரு நிகழ்வின் மேடையில், இவ்வாறு பேசியது ஆச்சரியமாகவுள்ளது. எப்போதுமே இந்தியாவிற்கு எதிரான நிலைப்பாடுகள் எடுக்கும் இவர்கள் யார்?" என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

மேலும், "நகர்ப்புற நக்சல்கள் மற்றும் நாடவ் லேபிட் போன்றோர் இப்படத்தில் வரும் காட்சிகள் மற்றும் உரையாடல்களில் ஏதேனும் தவறு இருந்தால் அதை நிரூபிக்க நான் அவர்களுக்குச் சவால் விடுகிறேன். அப்படி அவர்கள் நிரூபித்தால், நான் படம் இயக்குவதை விட்டுவிடுகிறேன்" என்று தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுப் பதிலளித்திருந்தார்.

இதைத் தொடர்ந்து இந்தியாவுக்கான இஸ்ரேலியத் தூதர் கிலோனும், "இதுபோன்ற கருத்துகளை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். ஒரு மனிதனாக நான் வெட்கப்படுகிறேன். அவர்களுடைய தாராள மனப்பான்மைக்கும் நட்புக்கும் நாம் திருப்பிச் செலுத்திய மோசமான இந்த நடத்தைக்காக அவர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன்" என்று ட்வீட் செய்திருந்தார்

நாடவ் லேபிட்
நாடவ் லேபிட்

இதனிடையே நேர்காணல் ஒன்றில் இந்த விவகாரம் குறித்துப் பேசியுள்ள நாடவ் லேபிட், "இங்கே நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தால் மிகவும் வேடிக்கையாக இருக்கிறது. இது அரசின் விழா, இதில் சர்ச்சையாகப் பேசவேண்டும் என்று நான் பேசவில்லை. சாதாரணமாகப் பேசும்போது இதைக் குறிப்பிட்டிருந்தேன். இத்திரைப்படம் காஷ்மீரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இந்தியக் கொள்கையை நியாயப்படுத்துகிறது; பாசிச அம்சங்களைக் கொண்டுள்ளது. இத்திரைப்படம் பிரசாரம், பாசிசம் மற்றும் இழிவான தன்மை ஆகியவற்றை ஒருசேரக் கொண்டிருக்கிறது என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. என்னைப் போல இப்படி வெளிப்படையாகப் பேசுபவர்களின் பின்னணியில் வெளிநாட்டு எதிரிகள், துரோகிகள் இருக்கிறார்கள் என்று கூறுவது வழக்கமான ஒன்றுதான்" என்று கூறியுள்ளார்.

மேலும் பேசிய அவர், "எந்தெந்த நாடுகளில் எல்லாம் கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றனவோ, எங்கெல்லாம் உண்மையைப் பேசுவதற்கான வெளி இல்லையோ, அங்கே எல்லாம் யாரேனும் ஒருவர் கட்டாயம் குரல் கொடுத்தே ஆகவேண்டும். 'தி காஷ்மீர் ஃபைல்ஸ்' படத்தைப் பார்த்தபோது, இஸ்ரேலிலும் இப்படியான விஷத்தன்மை வாய்ந்த, அரசை நியாயப்படுத்தும் படங்கள் வந்தால் எப்படியிருக்கும் என்றே நினைக்கத் தோன்றியது. அப்படி இதுவரை அங்கே படங்கள் வரவில்லைதான், ஆனால் வருவதற்கான வாய்ப்புகள் நிச்சயம் உண்டு. அதனால்தான் இந்த மேடையில் நான் பேசினேன்" என்று நீண்ட விளக்கம் அளித்துள்ளார்.