Published:Updated:

மானியம் என்னும் மர்மம்!

மானியம் என்னும் மர்மம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மானியம் என்னும் மர்மம்!

சவுதி அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ நிறுவனம் தீர்மானிக்கும் விலையின் அடிப்படையிலேயே சிலிண்டர் மானியம் தீர்மானிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

மானியம் என்னும் மர்மம்!

சவுதி அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ நிறுவனம் தீர்மானிக்கும் விலையின் அடிப்படையிலேயே சிலிண்டர் மானியம் தீர்மானிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள்.

Published:Updated:
மானியம் என்னும் மர்மம்!
பிரீமியம் ஸ்டோரி
News
மானியம் என்னும் மர்மம்!
ந்தியாவில் சுமார் 28.9 கோடிக் குடும்பங்கள் சமையல் எரிவாயுவைப் பயன்படுத்துகின்றன. இப்போது அத்தனை குடும்பங்களையும் தவிக்க வைத்திருக்கிறது மத்திய அரசு. பிப்ரவரி மாதத்தில் மட்டும் இரண்டு முறை சமையல் எரிவாயு விலை உயர்ந்திருக்கிறது. பிப்ரவரி 22-ம் தேதி நிலவரப்படி 14.2 கிலோ எடையுள்ள சமையல் எரிவாயு சிலிண்டர், 785 ரூபாய்.

எரிவாயு சிலிண்டர் விலை 785 ரூபாய்க்கு உயர்வது இது முதல் முறையல்ல. இதைவிட விலை அதிகமாகவும் விற்றிருக்கிறது. ஆனால், மத்திய அரசு, மானியம் தந்து மக்களின் தலையில் சுமையிறங்காமல் பார்த்துக்கொண்டது. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் சத்தமேயில்லாமல் படிப்படியாக மானியத்தைக் குறைத்து விட்டார்கள். கடந்த மார்ச் மாதம் எரிவாயு விலை 826 ரூபாய் அளவுக்கு உயர்ந்தது. ஆனால், அப்போது அரசு 263.38 ரூபாய் மானியமாக வழங்கியது. இன்று 785 ரூபாய் விற்கும் நிலையில் அரசு வழங்கும் மானியம், வெறும் 24.95 ரூபாய் மட்டுமே.

ஆனந்த் சீனிவாசன்
ஆனந்த் சீனிவாசன்

பிரச்னையின் தொடக்கம்

கச்சா எண்ணெய் என்பது முடிவுறு கனிமம். சில நாடுகள் அதன் மொத்த வணிகத்தையும் கையில் வைத்துக்கொண்டு உலகத்தை ஆள்கின்றன. இந்தியாவைப் பொறுத்தவரை பெட்ரோலியத் தேவையில் 80 சதவிகிதம் இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியன் ஆயில், இந்துஸ்தான் பெட்ரோலியம், பாரத் பெட்ரோலியம் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் இதைச் செய்கின்றன. ரிலையன்ஸ் நிறுவனமும் பெட்ரோலிய வர்த்தகத்தில் முன்னணியில் இருக்கிறது. முற்றிலும் இறக்குமதி சார்ந்தே இந்த வர்த்தகம் நடப்பதால், சர்வதேச சந்தையின் ஏற்ற இறக்கங்கள், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றைச் சார்ந்தே பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலியப் பொருள்களின் விலை தீர்மானிக்கப்படுகிறது. இவற்றின் விலையேற்றம் மற்ற அனைத்து வணிகங்களிலும் எதிரொலிக்கும் என்பதால், அரசு ஒவ்வொரு மாதமும் விலையைத் தீர்மானித்து, குறிப்பிட்ட தொகையை மானியமாகவும் வழங்கி வந்தது.

தட்சிணாமூர்த்தி
தட்சிணாமூர்த்தி

புதிய பொருளாதாரக் கொள்கை அறிமுகம் செய்யப்பட்டபிறகு, மத்தியில் ஆளும் அரசுகள் மானிய நடைமுறைகளையே மொத்தமாகக் கைகழுவும் முடிவுக்கு வந்துவிட்டன. அதற்கான முதற்கட்ட நடவடிக்கை 2014-ல் மன்மோகன் சிங் ஆட்சிக்காலத்தில் தொடங்கியது. ஆண்டுக்குப் பத்து லட்ச ரூபாய்க்குள் வருமானம் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஓராண்டுக்கு 12 சமையல் எரிவாயு சிலிண்டர்களை மட்டுமே மானிய விலையில் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. மானியமில்லா சிலிண்டர் விலை கணிசமாக உயர்த்தப்பட்டது. இப்படி மானியமில்லா சிலிண்டர் விலை 1,200 ரூபாய்க்கு மேல் உயர்த்தப்பட்ட நிலையிலும்கூட, மானிய சிலிண்டர்கள் 400-500 ரூபாய்க்குள்தான் விற்கப்பட்டு வந்தன. உதாரணத்துக்கு, 2015-ல் 14.2 கிலோ சிலிண்டர் 998 ரூபாய்க்கு விற்றபோது 563 ரூபாயை அரசு மானியமாக வழங்கியது.

ஒருகட்டத்தில், ‘சமையல் எரிவாயுவுக்குத் தரப்படும் மானியம் இடைத்தரகர்களின் கைகளுக்கே சென்று சேர்கிறது, அதனால் மானியம் நேரடியாக மக்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படும்’ என்று அறிவித்தது மன்மோகன் அரசு. கடும் எதிர்ப்புக்கிடையில் ‘Direct Benefit Scheme’ எனப்படும் அந்த நேரடி மானியத் திட்டம் நடைமுறைக்கு வந்தது. அங்கிருந்துதான் தொடங்கியது பிரச்னை. இந்தத் திட்டத்தைக் கடுமையாக எதிர்த்தது அப்போது எதிர்க்கட்சியாக இருந்த பாரதிய ஜனதா.

ஜோதி சிவஞானம்
ஜோதி சிவஞானம்

குறைக்கப்பட்ட மானியம்

“மானியத்தை மொத்தமாக நீக்கிவிடுவதுதான் மத்திய அரசின் கொள்கை. அதன் தொடக்கம்தான் நேரடி மானியத் திட்டம். மக்களை அதிக விலை கொடுத்து வாங்கப் பழக்கி, பிறகு அதையே நடைமுறையாக்கிவிடுவார்கள். முன்பு பெட்ரோலுக்கு அப்படித்தான் மானியம் தந்தார்கள். படிப்படியாக அதை நிறுத்தினார்கள். மன்மோகன் சிங் பிரதமராக இருந்தபோது பெட்ரோலின் விலையைத் தீர்மானிக்கும் உரிமையை நிறுவனங்களுக்கு வழங்கினார். மோடி, டீசலின் விலையையும் நிறுவனங்களிடமே விட்டுக்கொடுத்துவிட்டார். இப்போது நிறுவனங்கள் என்ன விலை நிர்ணயிக்கிறதோ, அதைத் தந்துகொண்டிருக்கிறோம். பெட்ரோலியப் பொருள்களின் விலையைவிட வரிகள் அதிகமாக இருக்கின்றன. அண்டை நாடுகளோடு ஒப்பிடும்போது இந்தியாவில்தான் பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. 2014-ல் பாரதிய ஜனதா அரசு பதவியேற்றபோது, கச்சா எண்ணெய் பேரல் 100 டாலராக இருந்தது. அப்போது சுங்கவரி 9 ரூபாயாக இருந்தது. இப்போது 33 ரூபாயாக உயர்த்தியிருக்கிறார்கள். ஒரு பேரல் 20 டாலருக்குக் கீழே குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காமல் வரியை இன்னும் அதிகமாக்கினார்கள். ஒரு பக்கம் மானியக்குறைப்பு. இன்னொரு பக்கம் வரி உயர்வு... அடித்தட்டு மக்களின் தலையில் வைக்கப்படும் இந்தச் சுமை நியாயமற்றது” என்கிறார் பொருளாதார நிபுணர் ஜோதி சிவஞானம்.

மானியம் என்னும் மர்மம்!

மானியம் எப்படித் தீர்மானிக்கப்பட்டது?

சவுதி அரசுக்குச் சொந்தமான சவுதி அராம்கோ நிறுவனம் தீர்மானிக்கும் விலையின் அடிப்படையிலேயே சிலிண்டர் மானியம் தீர்மானிக்கப்படுவதாகச் சொல்கிறார்கள். ஆனால், அதில் சிறிதும் வெளிப்படைத்தன்மை இல்லை. ஏப்ரல் 2019-ல் 14.2 கிலோ சிலிண்டர் விலை 722 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அப்போது 238.27 ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது. செப்-2019-ல் 606.50 ரூபாய்க்கு விற்றபோது 87.19 ரூபாய்தான் மானியம் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் 2020-ல் சிலிண்டர் ரூ.606.50-க்கு விற்றது. ஆனால், மானியம் 25.45 ரூபாய்தான் வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசோ, எண்ணெய் நிறுவனங்களோ எந்த விளக்கமும் தரவில்லை. இப்போது 785 ரூபாய் விற்கும் நேரத்தில் ரூ.24.95 தான் மானியம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த மானியமும்கூட பலரின் வங்கிக்கணக்கில் சேரவில்லை என்ற புகாரும் உண்டு.

ஏன் சர்வதேச விலை?

“தொடக்கத்தில் சிங்கப்பூர் மார்க்கெட்டின் விலை (ஜிஆர்எம்) அடிப்படையில் மானியத்தைத் தீர்மானிப்பதாகச் சொன்னார்கள். இப்போது ஒரு சவுதி அரேபிய நிறுவனத்தின் விலை அடிப்படையில் மானியம் என்கிறார்கள். ஆனால், மானியத்தைத் தீர்மானிக்கும் ஃபார்முலாவைச் சொல்ல மறுக்கிறார்கள். நம் எரிவாயுத் தேவையில் சுமார் 47 சதவிகிதம் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுகிறது. பிறகு ஏன் சர்வதேசச் சந்தை நிலவரப்படி இங்கு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்?” என்று கேட்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீநிவாசன்.

ஒதுக்கீடு குறைவு

2020-21 நிதியாண்டில் சமையல் எரிவாயு மற்றும் மண்ணெண்ணெய் மானியத்துக்கென ரூ.40,915 கோடியை ஒதுக்கியது மத்திய அரசு. இது, 2021-22 பட்ஜெட்டில் ரூ.12,995 கோடியாகக் குறைக்கப்பட்டுவிட்டது. எனவே, இனி மானியம் இதைவிடவும் குறையலாம் என்பதே யதார்த்தம்.

“கடந்த சில ஆண்டுகளின் தகவல்களை ஆராய்ந்தால் பெரும்பாலும் எல்லா மானியங்களுமே குறைக்கப்பட்டுள்ளன. பெட்ரோலைப் பொறுத்தவரை அடிப்படைக் கலால் வரி, சிறப்புக் கூடுதல் கலால் வரி, வேளாண் செஸ், சாலை மற்றும் உள்கட்டுமான செஸ், வாட் என வெளிப்படையாக வரி விகிதங்கள் அறிவிக்கப்படுகின்றன. சமையல் எரிவாயுவுக்குத் தரப்படும் மானியம் பற்றி மட்டும் வெளிப்படையாக எந்தத் தகவலையும் சொல்ல மறுக்கிறார்கள். தவிர்க்கவும் முடியாமல் அதிக விலை கொடுத்து வாங்கவும் முடியாமல் மக்கள் தவிக்கிறார்கள். இதை மக்களுக்குப் புரியவைப்பது எங்களுக்குப் பெரிய சவாலாக இருக்கிறது...” என்கிறார் தமிழ்நாடு ஹெச்.பி. கேஸ் விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் தட்சிணாமூர்த்தி.

கடந்த ஆண்டு, பெரு நிறுவனங்களுக்கான வரியை 36 சதவிகிதத்திலிருந்து 25 சதவிகிதமாகக் குறைத்தார் நிதியமைச்சர். இதனால் ரூ.1.54 லட்சம் கோடி வருவாய் குறையும் என்றும் சொன்னார். வாங்குகிற மெழுகுவத்திக்கும் தீப்பெட்டிக்கும்கூட வரிகட்டும் இந்தியாவின் எளிய குடிமக்களின் அத்தியாவசியமாக இருக்கிற எரிவாயுவுக்கு நியாயமான மானியம் கொடுத்தால் என்ன குறைந்துவிடும் என்பதுதான் மக்களின் கேள்வி!

மானியம் என்னும் மர்மம்!

சமையல் எரிவாயு விலை (ரூபாயில்)

14.2 கிலோ அடிப்படை விலை 686.29

மத்திய சரக்கு மற்றும் சேவை வரி (CGST) 18.69

மாநில சரக்கு மற்றும் சேவை வரி (SGST) 18.69

டீலர் கமிஷன் 61.33

இறுதி விலை 785.00

அரசு தரும் மானியம் 24.95

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism