Published:Updated:

புதிய கல்விக்கொள்கை: சாதகம், பாதகம், சந்தேகம்!

புதிய கல்விக்கொள்கை
பிரீமியம் ஸ்டோரி
News
புதிய கல்விக்கொள்கை

ஆண்டுக்கு ஒரு லட்சம் பொறியாளர்கள் தமிழகத்தில் உருவாகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை.

‘உயர்தரக் கல்வியை அனைவருக்கும் வழங்கி, சமவாய்ப்பு வழங்கக்கூடிய உயிரோட்டமுள்ள அறிவுசார் சமூகமாக நம் நாட்டை மாற்றும் நோக்கில் உருவாக்கப்பட்ட கல்விக்கொள்கை’ என்ற முழக்கத்தோடு உருவாக்கப்பட்டுள்ள `தேசிய கல்விக்கொள்கை-2020-ஐ மத்திய அமைச்சரவை அங்கீகரித்திருக்கிறது. அடுத்த பத்தாண்டுகளில் படிப்படியாக இந்தக் கொள்கை நடைமுறைப்படுத்தப்படும். தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை ஒட்டுமொத்தக் கட்டமைப்பையும் மாற்றி அமைத்துள்ள இந்தக் கல்விக்கொள்கை, வரைவாக சமர்ப்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே கடும் எதிர்ப்புகளையும் சர்ச்சைகளையும் சந்தித்துவந்தது. இதில் இருக்கும் சாதகங்கள், பாதகங்கள், சந்தேகங்கள் என்னென்ன? முன்வைக்கிறார்கள் கல்வியாளர்கள்.

புதிய கல்விக்கொள்கை: சாதகம், பாதகம், சந்தேகம்!

சாதகங்கள் - ரமேஷ் பிரபா கல்வியாளர்

ஆண்டுக்கு ஒரு லட்சம் பொறியாளர்கள் தமிழகத்தில் உருவாகிறார்கள். அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. இன்னொருபுறம் பிளம்பர், எலெக்ட்ரீஷியன் போன்ற தொழில்நுட்பப் பணிகளுக்குத் தகுதியானவர்கள் கிடைப்பதில்லை. இந்த இடைவெளியை நிரப்பும்வகையில் தொழிற்கல்வியைப் பள்ளிக்கல்வியோடு இணைக்கிறார்கள். இது ஆக்கபூர்வமானது. ஆர்ட்டிபிஷியல் இன்டலிஜென்ஸ், கிராபிக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களைக்கூட இதில் மாணவர்கள் கற்கமுடியும்.

ஐந்தாம் வகுப்பு வரை தாய்மொழி வழிக்கல்வி என்பதை உறுதி செய்கிறது இந்தக் கொள்கை. முடிந்தால் 8-ம் வகுப்பு வரை நீட்டிக்கலாம் என்கிறார்கள். இது உண்மையில் வரவேற்கத்தகுந்தது. தமிழகத்தில் இருக்கும் சி.பி.எஸ்.இ பள்ளிகள்கூட இனி தமிழில்தான் தொடக்கக் கல்வியை வழங்கவேண்டும். அரசுப்பள்ளிகளை மேம் படுத்தினால், ஆங்கிலத்தை நாடி தனியார் பள்ளிகளுக்குச் சென்ற மாணவர்கள் மீண்டும் அரசுப்பள்ளிகளுக்குத் திரும்ப இது வழிவகுக்கும்.

ரமேஷ் பிரபா கல்வியாளர்
ரமேஷ் பிரபா கல்வியாளர்

ப்ளஸ் ஒன்னில் குரூப் தேர்வு செய்வது மாணவர்கள் எதிர்கொள்ளும் பெரிய சவால். தேர்ந்தெடுத்த குரூப்பில் இருக்கும் காரணத்தால், விருப்பமேயில்லாமல் ஒரு பாடத்தைப் படிப்பார்கள். இனி அந்த நிலை வராது. எந்தெந்தப் பாடங்கள் தேவையோ அதை காம்போவாக மாணவர்கள் தேர்வு செய்துகொள்ளலாம். தொழிற்கல்வியையும் அதில் சேர்த்திருக்கிறார்கள். ஓவியமோ, விளையாட்டோ, இசையோகூட ஒரு பாடமாகத் தேர்வு செய்துகொள்ளலாம். இதனால் மாணவர்கள் விரும்பிப் படிப்பார்கள்.

பின்தங்கிய பகுதிகளில் சிறப்புக் கல்வி மண்டலங்களை உருவாக்குகிறார்கள். மத்திய அரசும் மாநில அரசும் இணைந்து இவற்றை நடத்தும். இதன்மூலம் எல்லாப் பகுதி களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும்.

உயர்கல்வியில் இணைப்பு முறை ஒழியும். இந்த இடத்தில்தான் நிறைய முறைகேடுகள், ஊழல்கள் நடக்கின்றன. பல்கலைக்கழக நிர்வாகத்தைச் சரிக்கட்டினால் தரமற்ற கல்லூரிகளையும் நடத்தலாம் என்ற நிலை இனி இருக்காது. ஆன்லைனிலேயே விண்ணப்பித்து அனுமதி பெறலாம். 15 வருடங்களுக்குப் பிறகு எல்லாக் கல்லூரிகளும் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனங்களாகிவிடும்.

அண்ணா பல்கலைக்கழகம் கல்லூரிகளை வெறும் மேற்பார்வையிடும் அமைப்பாக மட்டுமே இருக்காது; தொழில்நுட்பம் சார்ந்த கண்டுபிடிப்புகளையும் ஆராய்ச்சிகளையும் மேற்கொள்ளும். தனியார் பல்கலைக் கழகங்களும்கூட படிப்படியாக ஆராய்ச்சி நிறுவனங்களாக மாறிவிடும்.

‘அகாடமிக் பேங்க் ஆப் கிரெடிட்’ என்றொரு சிஸ்டம் வருகிறது. கல்லூரிப் படிப்பை இடையில் கைவிட நேர்ந்தால், அதுவரை படித்தது டிஜிட்டலில் பதிவாகிவிடும். மூன்று வருடங்கள் கழித்து மீண்டும் படிக்கவந்தால் விட்ட இடத்திலிருந்து படிக்கலாம்.

பட்டப்படிப்பில் சேர்ந்துவிட்டு ஏதோவொரு காரணத்தால் இடையில் நிற்பவர்களுக்கு ஒரு சிறந்த ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. ஓராண்டில் இடைநிற்க நேர்ந்தால் சான்றிதழ் தரப்படும். இரண்டாம் ஆண்டில் நின்றால் டிப்ளமோ தரப்படும். மூன்று ஆண்டுகள் நிறைவு செய்தால் பட்டம். இதுவும் ஆக்கபூர்வமான திட்டம்.

ஆசிரியர் தயாரிப்பிலும் மிகுந்த கவனம் செலுத்துகிறார்கள். பி.எட் படிப்பை நான்காண்டுகளாக மாற்றுகிறார்கள். இந்தப் பாடத்துக்குத்தான் ஆசிரியர் என்றில்லாமல் நான்காண்டு பி.எட் முடித்த ஒருவர் எந்தப் பாடத்தையும் எடுக்கமுடியும். 2030-க்குப் பிறகு இந்த முறையில் பி.எட் படித்தவர்கள் மட்டுமே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள்.

தேர்வு முறைகளையும் மாற்றியிருக்கிறார்கள். `360 டிகிரி அசெஸ்மென்ட் சிஸ்டம்’ கொண்டு வருகிறார்கள். மாணவர்களின் தனித்திறனும் கணக்கிடப்படப்படும். தனித்தனியாக ஒவ்வொரு மாணவன்மீதும் கவனம் செலுத்த இந்தத் தேர்வுமுறை உதவும்.

உயர்கல்வி தனியார்மயமாகும் என்பது உண்மை. ஆனால், 574 கல்லூரிகள் இருந்ததால் தான் நம் பிள்ளைகள் இன்று இன்ஜினியராகி யிருக்கிறார்கள். தரமான கல்வி நிறுவனங்கள் நீடிக்கின்றன. தரமற்றவை காணாமல் போய்விட்டன. இதுதான் எதார்த்தம். தனியார்மயமாவதைப் பதற்றத்தோடு பார்க்கத்தேவையில்லை.

பாதகங்கள் - பேராசிரியர் ப.சிவகுமார் முதல்வர் (ஓய்வு), குடியாத்தம் அரசுக் கலைக்கல்லூரி

நர்சரி பள்ளிகள் முதல் பல்கலைக்கழகங்கள் வரை அனைத்தும் மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடும். இது அபாயகரமானது. மாநில அரசின் தனித்தன்மை பாதிக்கப்படும். டெல்லியில் தீர்மானிப்பதை மட்டுமே இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள் படிக்கநேரிடும்.

தேர்வுகள் மனதளவில் மாணவர்களை பாதிக்கிறது என்று உலகம் முழுதும் நடக்கிற ஆய்வுகள் சொல்கின்றன. இந்தக் கல்விக்கொள்கை மூன்றாம் வகுப்பு முதல் பட்டப்படிப்புகள் வரை ஏராளமான தேர்வுகளைத் திணிக்கிறது.

ப்ரீ.கே.ஜியில் இருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை 15 ஆண்டுகள் பல தேர்வுகளைக் கடந்து வரும் மாணவர்களுக்கு உயர்கல்விக்கும் நுழைவுத்தேர்வை நடத்துவது, மேலும் மேலும் மாணவர்களை வடிகட்டும் முயற்சியே.

தேர்வு, தொழிற்கல்வி என்று கடும் அழுத்தத்தால் மாணவர்கள் இடைநிற்கும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.

திட்டங்கள் நிறைய இருக்கிறதே ஒழிய நிதி ஆதாரங்கள் குறித்தோ, நிதி ஈட்டும் வழிகள் குறித்தோ தெளிவில்லை. ஜிடிபி ஒதுக்கீடு நெடுங்காலமாகப் பேசப்படுகிறது. நடந்த பாடில்லை. சுயசார்பு நிறுவனங்களாகக் கல்வி நிறுவனங்கள் மாற்றப்படும் என்கிறார்கள். ஏற்கெனவே தொடக்கக்கல்வி முதல் உயர்கல்வி வரை தனியார் கல்வி நிறுவனங்கள் தலையெடுத்து நிற்கின்றன. இந்தக் கொள்கை, பணம் கட்டிப் படிக்கமுடியாத எளிய மக்களை பாதிக்கும்.

சிறப்புக் குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துவருகிறது. அவர்களுக்கான சிறப்புப் பள்ளிகளின் தேவையும் அதிகரிக்கிறது. இந்தக் கல்விக்கொள்கையில் சிறப்புக் குழந்தைகளுக்கான பள்ளி பற்றி எந்தத் திட்டமும் இல்லை.

தமிழகத்தில் இருக்கிற கல்விக்கட்டமைப்புகள் அனைத்தும் வலுவிழந்துபோகும், கல்வி சார்ந்த மாநில சட்டங்கள் செல்லாமல்போகும். மாநில அரசு சுயமாக எந்த முடிவையும் எடுக்கமுடியாது.

இந்தக் கல்விக்கொள்கை மாநிலங்களின் தனித்தன்மை, வரலாறு, வளர்ச்சியைக் கருத்தில்கொள்ளவே இல்லை. பொருளாதார ரீதியாக, நிலவியல் வள ரீதியாக நிறைய ஏற்ற இறக்கங்களைக் கொண்ட இந்தியா போன்ற தேசத்துக்கு ஒரே மாதிரியான கல்வித்திட்டம் சாத்தியமில்லை.

கலை அறிவியல் படிப்புகள் உட்பட எல்லா உயர்கல்விக்கும் தேர்வு கொண்டு வருவது கிராமப்புற எளிய மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் மத்தியில் பாகுபாட்டை உருவாக்கும்.

இலவசக் கல்வி என்கிற வார்த்தையே கல்விக்கொள்கையில் இல்லை. இட ஒதுக்கீடு குறித்தும் தெளிவாகச் சொல்லப்படவில்லை. இலவசக் கல்வி இல்லையென்றால் ஏழை மாணவர்களின் நிலை என்ன ஆகும் என்று தெரியவில்லை.

ப.சிவகுமார், அ.கருணானந்தன்
ப.சிவகுமார், அ.கருணானந்தன்

சந்தேகங்கள் - பேராசிரியர் அ.கருணானந்தன் வரலாற்றுத்துறைத் தலைவர் (ஓய்வு) விவேகானந்தா கல்லூரி, சென்னை

கல்வியைப் பொறுத்தவரை தேசிய அளவில் ஒரு பிரேம் ஒர்க் இருக்கலாம். அதை அந்தந்தப் பகுதிகளின் தன்மைக்கேற்ப மாநிலங்கள் செயல்படுத்தலாம். ஒரே கொள்கை இருக்கலாமா? தமிழ்நாட்டில் பண்பாடு, வாழ்க்கைமுறை வேறுமாதிரியிருக்கும். ஆந்திராவில் வேறுமாதிரியிருக்கும். ஒவ்வொரு மாநிலத்துக்கான தேவையும் வேறுபடும். இந்தக் கல்விக்கொள்கை இந்தியா முழுவதும் கல்வியை ஓர்மைப் படுத்துகிறது. இது குழப்பத்தை உருவாக்காதா?

தாய்மொழி வழிக்கல்வியை இவர்களே முன்மொழிவதுபோல ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். தமிழகத்தில் தொடக்கக்கல்வி முதல் ஆய்வுப்படிப்பு வரை தாய்மொழியில் படிப்பதற்கான வாய்ப்புகள் இப்போதே இருக்கின்றன. இந்தக் கொள்கை மூலம் சிபிஎஸ்இ பள்ளிகளில் தாய்மொழியில் தொடக்கக்கல்வி கிடைக்குமே என்கிறார்கள். ஆனால், கேந்திரிய வித்யாலயா அதிகாரிகள், ‘தாய்மொழியில் பயிற்றுவிப்பது குழப்பத்தை உருவாக்கும்’ என்று இப்போதே எதிர்க்க ஆரம்பித்துவிட்டார்களே?

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வே தனியார் கோச்சிங் சென்டர்களைப் பெருக வைத்துவிட்டது. உயர்கல்வி அனைத்துக்கும் நுழைவுத்தேர்வு என்றால் கோச்சிங் சென்டர்கள் மேலும் பெருகிவிடாதா?

மும்மொழிக் கொள்கையில் இந்தித்திணிப்பு இல்லை என்று சொல்லப்படுகிறது. ஆனால் ‘ஏதாவது ஒரு இந்திய மொழியைப் படிக்கவேண்டும்’ என்னும்போது ஆசிரியர்கள் இருப்பு உட்பட பலவற்றைக் கணக்கிலெடுத்தால் இந்திமொழியைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே எதார்த்தம். மேலும் 2017 முதல் 2020 வரை சம்ஸ்கிருதத்துக்கு மத்திய அரசு ஒதுக்கிய தொகை 643.84 கோடி. தமிழ் மொழிக்கு ஒதுக்கப்பட்டது வெறும் 22 கோடி. இப்படி சம்ஸ்கிருதம், இந்திக்குப் பெருந்தொகை ஒதுக்கி உதவித்தொகை, கல்விக்கட்டணம் என்றெல்லாம் சலுகைகள் அறிவித்தால் பிற இந்திய மொழிகளைக் கற்க மாணவர்கள் ஆர்வம் காட்டுவார்களா?

புதிய கல்விக்கொள்கை: சாதகம், பாதகம், சந்தேகம்!

தொழிற்கல்வியைக் கற்க குழந்தைகளுக்கு மனமுதிர்ச்சி, வயது முதிர்ச்சி வேண்டும். எட்டாம் வகுப்பு செமஸ்டரோடு தொழிற்கல்வியையும் சேர்க்கி றார்கள். வறுமையான சூழலில் படிக்கிற ஒரு மாணவன் எட்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் கற்ற தொழிலைச் செய்யப் போய்விடும் ஆபத்து இருக்கிறதே?

இந்தப் புதிய கல்விக்கொள்கையின் இன்னொரு இலக்கு, 2035-ல் 50 சதவிகித மாணவர்களை உயர்கல்விக்குக் கொண்டு செல்வது. 2018-19-ல், தமிழகத்தில் 49 சதவிகிதம் பேர் உயர்கல்விக்குச் சென்றிருக்கிறார்கள். முன்னேறிய தமிழகத்துக்கும் பின்தங்கிய மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியான கல்வி என்பது எப்படி சரி?

`தரத்தின் அடிப்படையில் நிதியுதவி’, `5000 மாணவர்களுக்கு மேலுள்ள கல்லூரிகளுக்கே அனுமதி’ என்றெல்லாம் சொல்லப்படுவதால், எதிர்காலத்தில் தமிழகத்தில் 70 சதவிகிதம் கல்லூரிகள் இல்லாமல்போகலாம். தட்டுத்தடுமாறி கல்வியை எட்டிப்பிடித்து கல்லூரியில் கால்வைக்கிற கிராமப்புற மாணவர்களின் வாய்ப்புகளை இந்தக் கல்விக்கொள்கை பறித்துவிடாதா?

பள்ளிக்கல்வி முதல் பட்டப் படிப்பு வரை மாணவர்கள் எப்போது வேண்டுமானாலும் கல்விக்கூடத்தை விட்டு வெளியே போகலாம் என்கிறார்கள். திறந்தநிலைக் கல்விமூலம், பிறகு மீண்டும் படிக்கலாம், கல்விக்கொள்கை என்பது மாணவர்களைக் கட்டாயம் கல்விக்கூடத்தில் வைத்திருக்கவும் இடைநிற்றலைக் குறைக்கவும்தானே வழிதேட வேண்டும்? ஒவ்வொரு மட்டத்திலும் `நீ வெளியே போகலாம்’ என்று வழிகாட்டுவது சரியான அணுகுமுறை தானா?

இந்தக் கொள்கைப்படி மாநில அரசு, மத்திய அரசின் செயல்திட்டங்களை நடை முறைப்படுத்தும் ஒரு ஏஜென்ஸி. செலவு முழுவதும் மாநில அரசுகள்தான் சுமக்க வேண்டுமா? ஜிடிபியில் 6 சதவிகிதம் என்பதுகூட மத்திய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்யும் ஒதுக்கீடுதான். அதிகாரத்தைத் தன்கையில் வைத்துக்கொண்டு மாநில அரசுகள்மேல் பொறுப்பைச் சுமத்துகிற மத்திய அரசுக்கு மாநிலங்களுக்குக் கூடுதல் நிதி தரவேண்டிய பொறுப்பு இல்லையா?