
இதற்குப் பதிலளிக்கும் விதமாக லைவ் ஷோவிலேயே, “இங்கு சில ஊடகங்கள் நீண்டகாலமாகக் கதை மட்டுமே சொல்லப் பழகி யிருக்கிறார்கள்.
‘The Nation wants to know’ - இதைப் படிக்கும்போதே உரத்த குரலில் அர்னாப் கோஸ்வாமி பேசும் காட்சி உங்கள் கண்முன் விரிந்திருக்கும். அந்த அளவுக்கு அனைவருக்கும் பரிச்சயமான ஒரு ஊடகக் குரலாக மாறியிருக்கிறது அர்னாப்பின் குரல்.
இன்று இந்திய ஊடக உலகில் அர்னாப் அளவு புகழ் யாருக்கும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ‘என்.டி.டிவி’, ‘டெலிகிராப்’, ‘டைம்ஸ் நவ்’ போன்ற செய்தி சேனல்களில் வேலைபார்த்தவர் இப்போது ‘ரிபப்ளிக் டிவி’ என்று சொந்தமாகச் செய்தி சேனல் வைத்திருக்கிறார். இன்று செய்தி சேனல்கள் விவாதங்களை ப்ரைம் டைமில் ஒளிபரப்புகின்றன என்றால் அதற்கு விதை போட்டது அர்னாப்தான். டைம்ஸ் நவ் சேனலில் நெறியாளராக இருக்கும்போதே ‘விவாதங்களில் மற்றவர்களைப் பேசவிடு வதில்லை, தனது கருத்தை மட்டுமே அழுத்தமாகப் பதிவு செய்கிறார்’ என்ற குற்றச்சாட்டு அவர்மீது உண்டு. ‘ரிபப்ளிக் டிவி’ ஆரம்பித்து அனைத்தும் தன் கட்டுப்பாட்டில் வந்த பிறகு அர்னாப் மீதான குற்றச்சாட்டுகள் இன்னும் அதிகரிக்கவே செய்தன. ‘ஆளும்கட்சிக்குத் துணைபோகிறார், முக்கிய பிரச்னைகளிலிருந்து கவனத்தைத் திருப்புகிறார்’ என ஏகப்பட்ட பிராதுகள் அவர்மீது. இதெல்லாம்கூட சிறு சிறு விஷயங்கள்தான். ஆனால், சமீபத்தில் TRP ரேட்டிங் விஷயத்தில் ‘ரிபப்ளிக் டிவி’ மோசடி செய்துள்ளதாகப் புதிய சர்ச்சை ஒன்று வெடித்துள்ளது.

“ஹன்சா ரிசர்ச் (Hansa Research) என்ற தனியார் நிறுவனம் ஃபக்த் மராத்தி, பாக்ஸ் சினிமா ஆகிய மராத்தி சேனல்கள் மீதும் ஆங்கில நியூஸ் சேனலான ‘ரிபப்ளிக் டிவி’ மீதும் TRP-யில் முறைகேடு செய்திருப்பதாகப் புகாரளித்திருக்கிறது” என்று கடந்த வாரம் தெரிவித்தார் மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீர் சிங். சரி, TRP விஷயத்தில் அப்படி என்ன முறைகேடு செய்ய முடியும் என்கிறீர்களா? அதைப் புரிந்துகொள்ள TRP ரேட்டிங் எப்படிக் கணக்கிடப் படுகிறது என்பதை முதலில் பார்ப்போம்.
2010-க்கு முன்பு TRP என்னும் ‘டெலிவிஷன் ரேட்டிங் பாயின்ட்ஸ்’ TAM Media research என்ற நிறுவனத்தால் கணக்கிடப்பட்டு வந்தது. ஆனால், ஏகப்பட்ட முறைகேடுகளில் சிக்கியதாலும், பல ஆயிரம் கோடி புரளும் தொலைக்காட்சிச் சந்தையின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் முழு அதிகாரமும் ஒரே ஒரு நிறுவனத்திடம் தேங்கியதாலும் தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தின் வழிகாட்டுதலின் கீழ் BARC (Broadcast Audience Research Council) என்னும் நிறுவனம் நிறுவப்பட்டது. இந்த நிறுவனம் குறிப்பிட்ட சில வீடுகளைத் தேர்வு செய்து Bar-O-meter என்ற சாதனங்கள் பொருத்தும். நிகழ்ச்சிகள் அனைத்துமே ‘ஆடியோ வாட்டர்மார்க்’ ஒன்றுடன்தான் டிவியில் ஒளிபரப்பாகும். இதை நம்மால் கேட்க முடியாது. ஆனால், இந்த Bar-O-meter சாதனங்களால் கேட்க முடியும். அதன் மூலம் அந்த வீடுகளில் என்ன பார்க்கிறார்கள் என்பதைக் கண்காணித்துத் தகவல் அனுப்பும் இந்தச் சாதனங்கள். இந்த முறையில்தான் TRP கணக் கிடப்படுகிறது. 130 கோடி மக்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதை 44,000 வீடுகள்தான் நிர்ணயிக்கின்றன என்றால் நம்பமுடிகிறதா? ஆனால், சரியான வீடுகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் ஏறத்தாழ சரியான முடிவுகளே கிடைக்கும் என்கிறது புள்ளியியல் கணிதம். இதனால் ஒவ்வொரு வீடும் பார்த்துப் பார்த்துத்தான் தேர்வு செய்யப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் இது மறு ஆய்வுக்கும் உட்படுத்தப்படுகிறது. உலகமெங்கும் இந்த நடைமுறைதான் பின்பற்றப் படுகிறது.
இந்த வேலையை BARC ஒப்பந்த அடிப்படையில் சில நிறுவனங்களிடையே பிரித்துக்கொடுக்கும். அப்படியான ஒரு நிறுவனம்தான் ஹன்சா ரிசர்ச். இந்தியா முழுவதும் 30,000 Bar-O-meter சாதனங்களை வைத்து TRP கணக்கிடும் பணியைச் செய்து வருகிறது ஹன்சா ரிசர்ச். இந்த நிறுவனம்தான் அதன் முன்னாள் ஊழியர் ஒருவர்மீது காவல் துறையில் புகார் அளித்திருக்கிறது. அதன்பெயரில் அவர்மீது FIR-ம் பதியப்பட்டிருக்கிறது. இவர் ரகசியமாக வைக்கப் பட்டிருந்த Bar-O-meter இருக்கும் வீடுகள் பற்றிய தகவல்களை வெளியில் கசிய விட்டதாகவும், அதை வைத்து மும்பையிலுள்ள சில வீடுகளுக்கு 400-700 ரூபாய் வரை பணம் கொடுத்து, குறிப்பிட்ட ஒரே சேனலைப் பார்க்கவைத்திருக்கிறார்கள் என்கிறது இந்தப் புகார்.
“BARC மற்றும் ஹன்சா நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இதுபோன்ற முறைகேடுகள் நடக்கும் சில வீடுகளின் விவரங்களை எங்களுக்கு வழங்கினார்கள். அவற்றில் மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களிடம் விசாரணை நடத்தினோம். ஒரு குறிப்பிட்ட சேனலைப் பார்ப்பதற்காகப் பணம் பெற்றதை அந்த மூன்று வீடுகளைச் சேர்ந்தவர்களும் ஒப்புக்கொண்டார்கள்’’ என்று காவல்துறை ஆணையர் பரம்பீர் கூறியிருந்தார்.
அர்னாப் கோஸ்வாமி இந்தக் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருக்கிறார். “மும்பை காவல்துறைமீது அவதூறு வழக்கு பதியப்போகிறோம். சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கில் மும்பை காவல்துறை ஆணையர் பரம்பீரிடம் நாங்கள் பல கேள்விகளை எழுப்பி னோம். அவற்றுக்குப் பதிலளிக்க முடியாமல் இப்படி ரிபப்ளிக் டிவி மீது பொய்க் குற்றச்சாட்டை அவர் சுமத்தியிருக்கிறார். அவர் பொதுவெளியில் எங்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது எங்களை நீதிமன்றத்தில் சந்திக்கத் தயாராக இருக்க வேண்டும்’’ என்று அறிக்கை ஒன்றை வெளியிட்டார் அர்னாப்.

இந்த விவகாரம் வடஇந்திய மீடியாக்களில் பெரும் தீயைப் பற்றவைத்திருக்கிறது. ரிபப்ளிக் டிவி ஒரு புறமும், இந்தியா டுடே, NDTV 24×7, டைம்ஸ் நவ், CNN நியூஸ்18 and ABP நியூஸ் மறுபுறமும் என நேரடியாக மோதிக்கொண்டிருக்கின்றன செய்தி சேனல்கள். குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால் ‘இந்தியா டுடே’-வும் ‘ரிபப்ளிக் டிவி’-யும் நேரடியாகவே மல்லுக்கட்டிக்கொண்டுள்ளன.
சுஷாந்த் வழக்கு தொடங்கி பல்வேறு விஷயங்களில் இந்த இரண்டு செய்தி நிறுவனங்களும் முரண்பட்ட கருத்துகளை முன்வைத்து மறைமுகமாக மோதிக்கொண்டு வருகின்றன. சில நாள்களுக்கு முன்கூட இந்தியா டுடே சேனலின் கன்சல்ட்டிங் எடிட்டரும் முக்கிய முகமுமான ராஜ்தீப் சர்தேசாயும், அர்னாப் கோஸ்வாமியும் நேரடியாக ஒருவரை ஒருவர் வசைபாடினர். ‘ஹத்ராஸ் கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்து எதுவும் பேசாமல் சுஷாந்தின் வழக்கையே பிடித்துக்கொண்டிருக்கிறார் அர்னாப்.’ என்ற அவர், “ஊடகவியலை உங்கள் அளவுக்குத் தாழ்த்திவிடாதீர்கள். இதுதான் நான் உங்களுக்கு வழங்கும் ஒரே அறிவுரை’’ என்று லைவில் பேசினார் சர்தேசாய். TRP-யைவிட முக்கியமான ஒரு விஷயம் இருக்கிறது. அது ‘Television Respect Points’ என்றும் பேசியிருந்தார் சர்தேசாய்.
இதற்குப் பதிலளிக்கும் விதமாக லைவ் ஷோவிலேயே, “இங்கு சில ஊடகங்கள் நீண்டகாலமாகக் கதை மட்டுமே சொல்லப் பழகி யிருக்கிறார்கள். அவர்களுக்கு ஏற்றாற்போலக் குற்றங்களையும் குற்றப்பின்னணியையும் மாற்றிக்கொள்கிறார்கள்’’ என்றார் அர்னாப்.
தொடங்கப்பட்டதிலிருந்து முதல் 100 வாரங்களுக்கு அதிகம் பார்க்கப்பட்ட ஆங்கில செய்தி சேனல் ரிபப்ளிக் டிவிதான் என்றது BARC அறிக்கை. இதற்கு வாய்ப்பே இல்லை என்றன மற்ற சேனல்கள். கேபிளில் இரு பிரிவுகளில் ரிபப்ளிக் டிவி ஒளிபரப்பானது, சில கேபிள் சேவைகளில் டிவியை ஆன் செய்ததும் ரிபப்ளிக்தான் வந்தது. இதெல்லாம் நெறியல்ல என்றன மற்ற சேனல்கள். தரவுகளிலிருந்த பல முரண்களை முன்வைத்து விசாரணை மேற்கொள்ளப்படவேண்டும் என்ற கோரிக்கையை டைம்ஸ் நவ் போன்ற சேனல்கள் இரண்டு வருடங்களுக்கு முன்பே முன்வைத்தன. அப்படி தரவுகளில் முக்கிய முரணாக இருந்தது சென்னைத் தரவுகள்தான். தொடங்கப்பட்ட முதல் மாதம் ‘ரிபப்ளிக் டிவி’யின் மொத்த டிராபிக்கில் பாதி சென்னையிலிருந்து வந்தது. இதற்கும் ரிபப்ளிக் தமிழகம் சார்ந்த எந்த ஒரு விவகாரத்தையும் கையில் எடுக்கவில்லை. சென்னையில் டைம்ஸ் நவ் சேனலில் ஒளிபரப்பான அர்னாப்பின் ‘News Hour’ நிகழ்ச்சி ஓரளவு பிரபலம்தான் என்றாலும் ஒரு நாளில் சென்னையில் இருப்பவர்கள் 23 நிமிடங்கள் ரிபப்ளிக் டிவி பார்க்கிறார்கள் என்ற BARC-ன் தரவுகள் பலருக்கும் சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.
வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ளன. இனி அர்னாப்தான் ‘ரிபப்ளிக் சேனல் டி.ஆர்.பி முறைகேட்டில் ஈடுபடவில்லை’ என்பதை நிரூபிக்க வேண்டும்.
ஆமாம் அர்னாப்.
‘The Nation wants to know.’