தென் அமெரிக்காவின் மேற்கு பகுதியில் அமைந்திருக்கும் பெரு நாட்டில் பெரும் வன்முறை வெடித்திருக்கிறது. அந்த நாட்டின் ஜனாதிபதியாகப் பதவி வகித்த பெட்ரோ கஸ்ட்டிலோ, பதவிநீக்கம் செய்யப்பட்டு, புதிய ஜனாதிபதியாக டீனா போலார்ட்டே பதவியேற்றிருக்கிறார். இவர், அந்த நாட்டின் முதலாவது பெண் ஜனாதிபதி என்பது குறிப்பிடத்தக்கது.

பெருவின் கிராமப்புற மக்களின் அமோக ஆதரவுடன் காஸ்டிலோ கடந்த ஆண்டு ஆட்சிக்கு வந்தார். ஆனாலும், விலைவாசி உயர்வு காரணமாக காஸ்டிலோவின் செல்வாக்கு சரிய ஆரம்பித்தது. கடந்த சில மாதங்களாகவே விலைவாசி அதிகரித்துகொண்டே போனது. பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள்களின் விலைகள் கடுமையாக உயர்ந்ததால், உணவுப்பொருள்கள், உரம் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களின் விலைகளும் உயர்ந்தன. விலைவாசி உயர்வைக் கண்டித்து அரசுக்கு எதிராக மக்கள் பல இடங்களில் போராட்டங்கள் நடத்த ஆரம்பித்தனர்.
ரஷ்யா - உக்ரைன் போர் காரணமாக, ரஷ்யாவின் மீது மேற்கத்திய நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன. அதனால், பெரு உட்பட பல நாடுகளும் பாதிக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வருகின்றன. பெருவில் கச்சா எண்ணெய் மற்றும் உரங்களின் விலை வாங்க முடியாத அளவுக்கு உயர்ந்திருக்கிறது. கடந்த மார்ச் மாதம், கடந்த 26 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக பணவீக்கம் 1.48 சதவிதமாக அங்கு பதிவாகியது. இதனால், ஜனாதிபதி காஸ்டிலோ மீது மக்கள் மத்தியில் அதிருப்தி அதிகரித்தது.

இந்த போராட்டம், ஒரு கட்டத்தில் வன்முறையாக மாறியது. அதனால், தலைநகர் லிமாவில் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்தார், ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ. மேலும், நாடு சந்தித்துவரும் பொருளாதார, அரசியல் நெருக்கடிகளுக்கு மத்தியில், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக ஜனாதிபதி கஸ்டில்லோ அறிவித்தார். அது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதற்கு எதிராக பல்வேறு நாடுகளும் குரல்கொடுத்தன. திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்திய ஜனாதிபதி பெட்ரோ கஸ்டில்லோ, நாடாளுமன்றத்தைக் கலைப்பதாக அறிவித்தார்.
இந்த நிலையில், பெட்ரோ கஸ்டில்லாவுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது. மொத்தம் 130 எம்.பி-க்கள் வாக்களித்தனர். அவர்களில், நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கு ஆதரவாக 101 பேரும், எதிராக ஆறு பேரும் வாக்களித்தனர். அதையடுத்து, ஜனாதிபதி பதவியிலிருந்த நீக்கப்பட்ட பெட்ரோ கஸ்டில்லோ, கைதுசெய்யப்பட்டார். பின்னர், துணை ஜனாதிபதியாக பதவி வகித்த டீனா போலார்ட்டே ஜனாதிபதியாகப் பதவியேற்றார்.

எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் பெரு தலைநகர் லிமாவில் பெரும் போராட்டம் நடத்தத் திட்டமிட்டிருந்தன. அதைத் தடுப்பதற்காகத்தான், டிசம்பர் 12-ம் தேதி ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அதை எதிர்த்து பொதுமக்கள் லிமா நகரில் பேரணி நடத்தினர். அந்தப் பேரணியில் வன்முறை வெடித்தது. ஏராளமானோர் கைதுசெய்யப்பட்டனர். விவசாயி ஒருவர் காவல்துறையினரால் கொல்லப்பட்டார். பதற்றமான சூழல் நிலவியதால் ஊரடங்கை அரசு விலக்கியது.
அதன் பிறகுதான், நாடாளுமன்றத்தைக் கலைக்கப் போவதாக கஸ்டில்லோ வெளியிட்ட அறிவிப்பைத் தொடர்ந்து, அவர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். அவர், கைதும்செய்யப்பட்டிருக்கிறார். நாட்டில் அமைதி திரும்ப நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக புதிய ஜனாதிபதி டீனா போலார்ட்டே கூறியிருக்கிறார்.