சினிமா
ஆன்மிகம்
பேட்டி - கட்டுரைகள்
இலக்கியம்
Published:Updated:

வெள்ளிங்கிரி யாத்திரை போவோமா?

வெள்ளியங்கிரி
பிரீமியம் ஸ்டோரி
News
வெள்ளியங்கிரி

ஆன்மிகம்

இயற்கையும் இறையும் சங்கமிக்கும் இடம்; இரண்டும் வெவ்வேறல்ல, ஒன்றே என்று ஒவ்வொரு நொடியும் உணர்த்தும் பயணம்; பெரிதினும் பெரிதானதைக் கண்டடைய அதீத பிரயத்தனமும், அசைக்கமுடியாத நம்பிக்கையும், அளவில்லாப் பொறுமையும் தேவை என்று பாடம் நடத்தும் மலையேற்றங்கள்... ஆம், அதுதான் வெள்ளிங்கிரி யாத்திரை!

``ஏழு மலைகளைத் தாண்டி மலை உச்சியில் அமைந்திருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசித்தால், வடக்கே இமயத்துக்கு கயிலாய யாத்திரை சென்றுவந்த புண்ணியம் கிடைக்கும்'' என்று நம்பிக்கை பொங்கச் சொல்லும் பக்தர்கள், வெள்ளிங்கிரியை, `தென் கயிலாயம்’ என்றே போற்றுகிறார்கள். திருப்பதி, பழநி போன்று பேருந்து வசதிகளோ, விஞ்ச் வசதிகளோ வெள்ளிங்கிரி மலைக்குக் கிடையாது. முழுக்க முழுக்க நடராஜா சர்வீஸ்தான்! மலைக்குமேல் மூலவரின் தரிசனம் உள்ளத்துக்குப் பலம் சேர்க்கும் எனில், மலைப் பயணமும் அந்த மலைகளில் வளர்ந்துதிகழும் மூலிகைகளும் நம் தேகத்துக்குப் பலம் சேர்க்கும். வேடிக்கையாகச் சொல்கிறார்கள்... `ஒரு முறை வெள்ளிங்கிரி மலை ஏறி வந்தால் ஆண்டு முழுவதும் உடற்பயிற்சி செய்த பலன் கிடைக்கும்' என்று!

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

கோவையிலிருந்து பூண்டி, 40 கிலோமீட்டர் தொலைவிலிருக்கிறது. சிறுவாணி செல்லும் வழியில் வலதுபுறம் `இருட்டுப்பள்ளம்’ என்கிற ஊருக்கு ரோடு பிரிகிறது. அந்த ரோட்டில் செம்மேடு வழியாகப் பயணித்தால், பூண்டி மலையடிவாரம் நம்மை வரவேற்கிறது. இங்கு பூண்டி விநாயகர், வெள்ளிங்கிரி ஆண்டவர், மனோன்மணி அம்மன் ஆகிய சந்நிதிகளுடன் கூடிய கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது.

கோயிலின் பின்புறம் வடக்குப் பகுதியில் மலைமீது செல்வதற்கான படிகள் ஆரம்பிக் கின்றன. `எவ்விதத் தடங்கலுமின்றி அப்பனை தரிசித்துத் திரும்ப அருள்புரியப்பா' என்று பூண்டி விநாயகரை மனதார வேண்டிக்கொண்டு, பக்தர்களுடன் இரவு 11 மணிக்கு மலையேறத் தொடங்கினோம்.

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

மேலே சென்றுவர தோராயமாக 12 மணி நேரமாகும். சுறுசுறுப்பானவர்கள் இதைவிடக் குறைவான நேரத்திலேயே மலையேறிவிட முடியும். பயணத்துக்கு 24 மணி நேரம் எடுத்துக் கொள்பவர்களும் உண்டு. அது அவரவர் உடல் வலிமையையும் ஏறும் வேகத்தையும் பொறுத்தது.மலையேறும்போதும் இறங்கும்போதும் நமக்குத் துணையாக இருப்பது ஊன்றுகோலாகப் பயன்படும் நான்கடி நீளமுள்ள மூங்கில்தடிதான். இதைக் கோயில் அடிவாரத்திலேயே விற்பனை செய்கிறார்கள். மலையேறி வந்தவர்கள், இந்தத் தடியை வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வந்ததற்கான அடையாளச் சின்னமாக வீடுகளில் பாதுகாத்துவருகின்றனர்.

பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் மட்டும் மலை ஏறுவதற்கும் ஒரு காரணம் உண்டு. கோடைக்காலமான இந்தச் சமயத்தில், காட்டிலுள்ள யானை, மான் போன்ற மிருகங்களெல்லாம் தண்ணீரைத் தேடி மலைக்குக் கீழே சென்றிருக்குமாம். அதோடு, மழைக் காலங்களில் மலையேறுவது பாதுகாப்பானதல்ல. சறுக்கி, வழுக்கி விழும் அபாயம் அதிகம். அதனால்தான் கோடைக்காலத்தில் மட்டும் மலையேற அனுமதி வழங்கப்படுகிறது.

வெள்ளியங்கிரி
வெள்ளியங்கிரி

முதல் மலையே பலரையும் மிரளவைத்துவிடும். கற்களைக்கொண்டு படிகள் அமைக்கப்பட்ட செங்குத்தான மலைப்பாதை... ஒவ்வொரு படியும் அரை அடி முதல் ஓர் அடி வரை உயரம் கொண்டதாக இருக்கிறது. மூலிகை மணத்துடன் வீசும் குளிந்த காற்று, சோலைகளின் நடுவே பயணிக்கும் ரம்யமான சூழல், பறவை மற்றும் வண்டுகள் எழுப்பும் மெல்லிய ஒலி என உடலுக்கும் உள்ளத்துக்கும் இனிய அனுபவம். அதே சமயம், அரை மணி நேரம் ஏற ஆரம்பித்தவுடனேயே மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, அணிந்திருக்கும் பனியன், சட்டையை யெல்லாம் கசக்கிப்பிழிந்தால் நீர் கொட்டும் அளவுக்கு வியர்ப்பது மற்றுமோர் அனுபவம்.

மேலேயிருந்து கீழே இறங்குபவர்களிடம், ‘‘இன்னும் எவ்ளோ தூரமிருக்கு?’’ என்று விசாரணை ஆரம்பித்துவிடுகிறது. ‘‘இப்போதானே ஆரம்பிச்சிருக்கீங்க. போக வேண்டிய தூரம் நிறையவே இருக்கு’’ என்று ஏகாந்தப் புன்னகை யோடு பதில் சொல்லிவிட்டுப் போகிறவர்கள் நிறையபேர். குழுவாக வந்தவர்களில் ஒருவர், ‘‘மாப்ளே... இதுக்கு மேல என்னால ஏற முடியலைடா... நான் மெல்ல கீழே இறங்கி அடிவாரத்துல இருக்கேன்’’ என்று சொல்வதும், அவரைச் சமாதானப்படுத்தி அழைத்துச் செல்வதுமான காட்சிகளை ஆங்காங்கே காண முடிந்தது.

வெள்ளிங்கிரி யாத்திரை போவோமா?

`ஓட ஓட ஓட தூரம் குறையலை’ என்பதைப் போல, ஏற ஏறப் படிகள் வந்துகொண்டே இருப்பதைப்போன்ற உணர்வு. அதுதான் உண்மையும்கூட. கொஞ்ச நேரம் ஓய்வெடுக்க விடேன் என்று உடம்பு கெஞ்ச ஆரம்பிக்கிறது. ‘‘உட்கார்ந்து ஓய்வெடுக்காதீர்கள். ஓய்வெடுக்க வேண்டும் என்று தோன்றும்போது, மூங்கில் குச்சியை ஊன்றிக்கொண்டு நின்றுகொண்டே சற்று ஓய்வெடுத்துக்கொள்ளுங்கள். முதல் மலையை முழுமையாகக் கடந்த பிறகு சற்று ஓய்வெடுத்துக்கொள்ளலாம்’’ என்று மலையேறி அனுபவம் உள்ளவர்கள் ஆலோசனை சொல்கிறார்கள். அது சரியான ஆலோசனைதான். ஓரிடத்தில் உட்கார்ந்தால், மீண்டும் எழுவதற்கே சிரமமாக இருக்கிறது.

உடல் வலுவுள்ள, அளவான எடையுள்ள இள வயது நபர்கள் மட்டும் அதிக சிரமமில்லாமல் முதல் மலையைக் கடந்துவிடுகின்றனர். ஆனால், எல்லோருக்கும் அது சாத்தியப்படுவதில்லை. ‘‘முதல் மலையும் ஏழாவது மலையும் மட்டும்தான் கஷ்டம். மற்ற மலைகளில் இந்தச் சிரமம் இருக் காது’’ என்று தெம்பூட்டி, சோர்ந்துபோவோரின் மலைப்பயணத்தைத் தொடரவைக்கின்றனர்.

முதல் மலை முடிந்து, இரண்டாவது மலை தொடங்குமிடத்தில் வெள்ளை விநாயகர் சந்நிதி இருக்கிறது; `வெள்ளி விநாயகர்’ என்றும் சொல்கின்றனர். இந்தக் கோயிலை அடைவதே மலைப் பயணத்தில் முக்கியமான பகுதி. இந்த விநாயகரை வழிபட்டுவிட்டு சற்று நேரம் ஓய்வெடுத்துக்கொள்ளலாம். கோயிலுக்கு எதிரிலேயே வனத்துறையின் அனுமதியுடன் மலைவாழ் மக்கள் கடை அமைத்திருக்கின்றனர். வாட்டர் பாட்டில், லெமன் சோடா, குளுக்கோஸ், பிஸ்கெட் உள்ளிட்ட பொருள்கள் கிடைக்கின்றன. எனினும், பக்தர்கள் அதிகம் மலையேறாத நாள்களில் கடைகள் திறந்திருக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே, அத்தியாவ சியப் பொருள்களை எடுத்துச்செல்வது நல்லது.

இரண்டாவது மலையில், படிகள் சற்றுக் குறைவு. இடையிடையே படிகளற்ற மலைப்பாதை யும் உண்டு. சமவெளிப் பகுதிகள் அதிகமிருப்ப தால், அங்கெல்லாம் மலைவாழ் மக்களின் கடைகளும் இருக்கின்றன. இளைப்பாறிக் கொள்ள அதிக வாய்ப்புகள் உண்டு. இந்த மலையின் முடிவில் பாம்பாட்டிச்சித்தர் குகையும் `பாம்பாட்டி சுனை’ என்ற தீர்த்தமும் உள்ளன. சுனையிலிருந்து வரும் மூலிகை நீரைக் குடித்தால் அவ்வளவு புத்துணர்ச்சி.

மூன்றாவது மலை, வழுக்குப்பாறைகளை அதிகம்கொண்டது. நாம் வழுக்கிவிடாமலிருக்க, ஒரு பாதம் மட்டும் பதியும் அளவுக்குப் படிகள் போன்ற அமைப்பை ஏற்படுத்தியிருக்கிறார்கள். இந்த மலையில் ஏறும்போது வழுக்கி விடாமலிருக்க, மூங்கில் குச்சிகள் மிகவும் உதவுகின்றன. அதுவும், இறங்குவோருக்கு ரொம்பவே பயனுள்ளவையாக இருக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன்னர்வரை இந்தப் பகுதியைக் கயிறு கட்டியே கடந்தார்களாம். பின்னர்தான், படிக்கட்டுகளை அமைத்தார்களாம். வழுக்குப்பாறைகளைத் தாண்டியதும், ஆங்காங்கே படிகள், பாறைகள் என்று கடந்துவிடலாம். மூன்றாவது மலை முடிவில் `கைதட்டி சுனை’ இருக்கிறது. தாகம் தீரும்வரை தண்ணீர் அருந்தி விட்டு, தேவையான தண்ணீரைப் பிடித்துக்கொள்ளலாம்.

மூன்றாவது மலையேறும்வரை உடலிலிருந்து வியர்வை ஆறாகப் பெருகி ஓடுகிறது. பலரும் மேலாடையே அணிவதில்லை. வியர்த்தது நின்று, லேசாகக் குளிர ஆரம்பித்தால், நான்காவது மலையை எட்டிவிட்டோம் என்று அர்த்தம். இந்த மலை முழுக்க, மரங்களின் வேர்களுக்கு நடுவேதான் பாதை. நிலவொளி அல்லது டார்ச் வெளிச்சத்தில், குளிர்காற்றைச் சுவாசித்துக் கொண்டு, மரங்களின் நடுவே செல்வது புதுவித அனுபவம். இந்த மலையின் முடிவில் ஒட்டர் சித்தர் சமாதி அமைந்திருக்கிறது. `இந்த சித்தர்தான், கரடுமுரடாக இருந்த இந்த மலைப் பாதைகளைச் செப்பனிட்டவர்’ என்கின்றனர்.

மரங்களின் அடர்த்தி குறைந்து, சிறிய வகை தாவரங்கள் தென்படத் தொடங்கினால் அது ஐந்தாவது மலை. இதை `விபூதி மலை’ என்றழைக்கின்றனர். மலை முழுவதும் கருமையும் வெண்மையும் கலந்த வழுவழுப்பான மணலைக் காணலாம். இந்த மண்ணைப் பலரும் சுரண்டி பத்திரப்படுத்திக்கொள்கிறார்கள். இங்கே குளிரின் சதவிகிதம் இன்னும் கூடுகிறது. ஏற்ற இறக்கங்களும் அதிகம். சில இடங்களில் பாதை இரண்டு மூன்றாகப் பிரிந்து மீண்டும் ஒன்று சேர்கிறது. மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய தடங்களையே பாதையாகப் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. இந்த மலையில் ஓர் அடி தவறினாலும் கீழே விழவேண்டியதுதான் என்ற அளவுக்கு மலை விளிம்பையொட்டிப் பாதை நீள்கிறது.

இந்த மலையை, `பீமன் களியுருண்டை மலை’ என்றும் சொல்கின்றனர். மிகப் பிரமாண்ட களியுருண்டை வடிவில் பெரிய பாறை இருப்பதால், இந்தப் பெயர். இந்த மலையின் முடிவிலிருக்கும் கடையில், குளிருக்கு இதமாகக் கிடைக்கும் சுக்குக் காபியைக் குடித்துவிட்டு, அடுத்த மலையை நோக்கிப் பயணத்தைத் தொடரலாம்.

ஆறாவது மலையில் பயணத்தைத் தொடங்கிய போது, விடிய ஆரம்பித்திருந்தது. மலை முகட்டில் சூரியோதயத்தைக் காண்பதற்காகக் கூட்டம் கூட்டமாக ஆட்கள் காத்திருந்தனர். ஏழாவது மலையுச்சிக்குச் சென்று சூரியோதயத்தைக் காண்பதுதான் பெரும்பாலானோரின் திட்டமாக இருக்கிறது. ஆனாலும், முதல் மலையில் புறப்படும் நேரம் மற்றும் நடந்து வரும் வேகத்தைப் பொறுத்து, திட்டம் நிறைவேறாமல் போய்விடுகிறது. இருப்பினும், ஐந்தாவது, ஆறாவது மலைகளில் சூரியோதய அழகை ரசிப்பதும் பரவசமான அனுபவம்தான்.

ஆறாவது மலை ஏகப்பட்ட பாறைகள் கொண்டது. மற்ற மலைகளெல்லாம் ஏற்றங்கள் மட்டும் கொண்ட மலையாக இருக்கின்றன; இறக்கம் குறைவு. ஒரு மலையை ஏறி முடித்தவுடன், அடுத்த மலைக்கான பயணம் தொடங்கிவிடும். ஆனால், இந்த மலையில் ஏறி உச்சிக்குச் சென்ற பிறகு, மீண்டும் முழுமையாகக் கீழே இறங்கியாக வேண்டும். பல இடங்களில் தவழ்ந்தபடிதான் இந்த மலையைக் கடந்தாக வேண்டியிருக்கிறது. இந்த மலையிலுள்ள மண் செந்நிறமாக இருப்பதால் இதை, `குங்கும மலை’ என்கின்றனர்.

ஆறாவது மலையிலிருந்து இறங்கினால், `ஆண்டி சுனை’. ஜில்லென்று இருக்கும் அந்தச் சுனையில் குளித்தால், பயணக் களைப்பு தீரும். ஆனால், அடிக்கிற குளிரில் நின்று நிதானமாகவெல்லாம் குளிக்க முடியாது. அவசரக் குளியல்தான் சாத்தியம். ‘‘ஆண்டி சுனை நீர் ரொம்ப சுவையானது. மலையேற்றத்துக்குத் தேவையான நீரை அங்கே பிடித்துக் கொள்ளலாம்’’ என்று வரும் வழியில் பலரும் சொல்லியிருந்தனர். பலரும் தங்கள் ஆடைகளை அங்கே விட்டுச் சென்றதோடு, நீரை மிகவும் மாசுபடுத்தியிருந்ததால், குடிப்பதற்கு உகந்ததாக இல்லை. ஆண்டி சுனையை நம்பி தண்ணீர் கைவசம் இல்லாமல் வந்த பலரும், தாகத்தில் தவித்துப்போனார்கள்.

ஏழாவது மலை... ஏறுவதற்கு முன்னரே மலைப்பை ஏற்படுத்திவிட்டது. ஆண்டி சுனையில் குளித்து முடித்துவிட்டு சற்று நடை போட்டதுமே, தூரத்தில் மிகப்பெரிய மலை... அங்கே எறும்பு ஊர்வதுபோல் பக்தர்கள் கூட்டம். இங்கும் பாதை இரண்டு, மூன்றாகப் பிரிந்து செல்கிறது. ஒவ்வொருவரும் தங்கள் வசதிக்கேற்ற பாதைகளைத் தேர்வுசெய்து கொள்கின்றனர். ஆனால், எதுவும் வசதியானதாக இல்லை என்பதுதான் யதார்த்தம். செங்குத்தான மலையில் ஊர்ந்தும் தவழ்ந்தும்தான் போயாக வேண்டியிருக்கிறது. தடுமாறி விழுந்தால், பள்ளத்தாக்கில் போய் விழ வேண்டியதுதான். பயபக்தியோடு பயணத்தை மேற்கொண்டு, மலையுச்சியில் இரண்டு பெரும்பாறைகளுக்கு நடுவே அமைந்திருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவர் சந்நிதியை அடையலாம்.

`வெள்ளிங்கிரி ஆண்டவர் சந்நிதி செல்லும் வழி’ என்ற வழிகாட்டும் பலகையைப் பார்த்ததும் மனம் பரபரப்படைகிறது. இரண்டு பாறைகளுக்கு நடுவே குகைபோல் பாதை செல்கிறது. உள்ளே நுழைந்ததும், வெள்ளிங்கிரி ஆண்டவர் தரிசனம் கிடைக்கிறது. ஒரு சின்ன சிவலிங்கம். அங்கிருக்கும் சிவனடியார் ஒருவர் தீபாராதனை காட்டி, நெற்றியில் திருநீறு பூசிவிடுகிறார்.

சித்ராபெளர்ணமி உள்ளிட்ட விசேஷ காலங்களில் சென்றால், சிவனடியார்களான அகோரிகளும் அங்கு பெருமளவில் திரண்டு நிற்பார்களாம். ‘பூஜை நேரங்களில் ஆனந்த நடனமாடி அவர்கள் ஆர்ப்பரிப்பது மெய் சிலிர்க்கவைக்கும் அனுபவம்’ என்கின்றனர்.

தரிசனம் முடிந்து சந்நிதியிலிருந்து வெளியே வரும்போது, மலையேறிய சோர்வு நீங்கி உடலும் உள்ளமும் புத்துணர்வு பெறுகிறது.

பக்தர்கள் கவனத்துக்கு...

வெள்ளிங்கிரி மலை ஏறுவது என்பது சாதாரணமான காரியம் அல்ல. சர்க்கரைநோய் மற்றும் இதயம் பலவீனமானவர்கள், அதிக, குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள் மலையேறுவது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

முதியவர்கள் மலையேறுவதைத் தவிர்த்தல் நலம். பத்து வயதுக்கு மேலும், நாற்பது வயதுக்குக் கீழும் உள்ள பெண்கள் மலையேற அனுமதிக்கப்படுவதில்லை.

பங்குனி, சித்திரை, வைகாசி ஆகிய மாதங்களில் மட்டும்தான் பயணம் செய்ய அனுமதியளிக்கிறார்கள்.

சித்ரா பெளர்ணமி அன்று பயணம் செய்வது விசேஷம். இரவில் பயணம் செய்வது உசிதமானது. பகலில் சென்றால், வெயில் சுட்டெரித்துவிடும்.

முன்னிரவு நேரத்தில் பயணத்தைத் தொடங்கி, பொழுது விடியும் நேரத்தில் ஏழாவது மலையுச்சியிலிருக்கும் வெள்ளிங்கிரி ஆண்டவரை தரிசனம் செய்துவிட்டு, வெயில் கடுமையாவதற்குள் அடிவாரத்தை அடைந்துவிடுவதை இலக்காகக் கொண்டே பெரும்பாலானோர் பயணத்தைத் தொடங்குவார்கள்.