2022-ம் ஆண்டு தொடக்கத்தில் அமெரிக்க ஆதரவுடன் நேட்டோவில் இணைய உக்ரைன் முயற்சி செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷ்யா பிப்ரவரி 24-ம் நாள் வான்வழி மற்றும் தரை வழி தாக்குதலை தொடங்கியது. அப்போது தொடங்கிய போர் பல மாதங்களாக நடந்து வருகிறது. இதில் 10 ஆயிரத்துக்கும் அதிகமான உக்ரைனிய மக்கள் மற்றும் 428 குழந்தைகள் கொல்லப்பட்டதாகவும், 10,769 பெரியவர்களும் 790 குழந்தைகள் போரால் காயம் அடைந்திருப்பதாக தரவுகள் கூறுகின்றன. 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் மின்சாரம், குடிநீர் வசதி இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது உக்ரைனில் குளிர் காலம் தொடங்கி பூஜ்ஜியம் செல்ஸியஸை எட்டி இருக்கும் நிலையில், அதில் இருந்து தற்காத்து கொள்ள உபகரணங்கள் இல்லாமல் தவிக்கின்றனர் மக்கள். இவ்வாறு அடிப்படை வசதி கூட இல்லாமல் மக்கள் அவதிப்படும்போதும் போர் நிறுத்தம் குறித்து ரஷ்யா யோகாசிக்கவில்லை என்னும் விமர்சனம் வைக்கப்படுகிறது.

இந்தப் போரால் இரு நாட்டுக்கும் ஏற்பட்ட இழப்பின் தாக்கம் உலக நாடுகள் மத்தியிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குறிப்பாக, உணவு மற்றும் எரிபொருள் தட்டுப்பாட்டால் உலக நாடுகள் பாதிக்கப்பட்டதாக ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது. குறிப்பாக, உணவு பொருள்கள் ஏற்றுமதி தடையால் பின் தங்கிய நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா-உக்ரைன் ஏற்றுமதி:
உக்ரைன்- ரஷ்யா என இரு நாடுகளும் தங்கள் நாட்டில் உற்பத்தியாகும் 53 சதவீதம் சமையல் எண்ணெயை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றன. குறிப்பாக, உலகளவில் எரிபொருள், எண்ணெய் போன்ற பொருள்களை ஏற்றுமதி செய்வதில் ரஷ்யா இடாண்டாவது இடத்தில் இருக்கிறது. தினசரி '50 லட்சம் பீப்பாய்கள்' உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.
மேலும், இந்த இரு நாடுகளிடம் இருந்து சூரியகாந்தி எண்ணெய், கோதுமை, பார்லி போன்றவற்றை துருக்கி 26% , சீனாவும் 23%, இந்தியா 13% என இறக்குமதி செய்கின்றன. ஆனால் போர் காலத்தில் இதன் விலை 20% அதிகமானது. இது வளரும் நாடுகளின் பொருளாதார நிலையை மோசமாக்கியது.
வளர்ச்சி அடையாத நாடுகள் நிலை!
பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கிய 25-க்கும் அதிகமான நாடுகள் மூன்றில் ஒரு பங்குக்கு அதிகமான உணவுப் பொருள்களை ரஷ்யா-உக்ரைன் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது. குறிப்பாக, ஆப்பிரிக்கா நாட்டுக்கு 32% கோதுமை ரஷ்யாவிலிருந்தும், 12% உக்கரைனிலிருந்தும் இறக்குமதி ஆகின்றன. ஆனால், இந்தப் போர் காலகட்டத்தில் இந்த உணவுப் பொருள்கள் கிடைக்காமல் பின்தங்கிய நாடுகள் பெரும் அவதிக்குள்ளாகின. அதிலும் சோமாலியா, எகிப்து, சூடான், காங்கோ, உகாண்டா, ஏமன், தென் ஆப்பிரிக்கா என பல பின்தங்கிய நாடுகள் முற்றிலுமாக இந்த இரு நாடுகளையும் நம்பி இருந்த வேளையில் இந்தப் போர் எல்லா நாட்டு மக்களையும் பசியில் வாட்டியது. இதனால் கடந்த எந்த ஆண்டுகளிலும் இல்லாத அளவில் உணவு பொருள்களுக்கான விலை இந்த நாடுகளில் உச்சத்தைத் தொட்டது.

ஏமன் நாட்டைப் பொறுத்த வரையிலும், அது உள்நாட்டு போரால் பெரும் உணவு பஞ்சத்தை சந்தித்து வருகிறது. இதனால் தானியங்கள் இறக்குமதி சார்பு 97% இருப்பதாக கூறப்படுகிறது. அதிலும் 42% இறக்குமதி ரஷ்யா - உக்ரைன் சார்ந்து இருக்கிறது. இந்தப் போரால் ஏற்பட்ட ஏற்றுமதி தடையால் ஏமன் மக்கள் நிலை மேலும் மோசமடைந்துள்ளது.

இதனிடையே, போரில் ஒரு பகுதியாக ரஷ்யா 36 நாடுகளுக்கு வான்வெளி பாதையில் கட்டுப்பாடுகள் விதித்தது. இதனால் பாதுகாப்பற்ற சூழலில் ரஷ்யா வழியாக ஏற்றுமதியாகும் சிக்கலைத் தவிர்க்க இந்தப் போக்குவரத்து முற்றியலுமாக நிறுத்தப்பட்டது. விமானம் வாயிலாக உணவுப் பொருள்கள் கொண்டு வர முடியாத சூழலில் கடல் வழியாக வர்த்தகத்தைத் தொடர நிர்பந்தம் ஏற்பட்டது. இதனால் அனைத்து நாடுகளுக்கும் கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்பட்டன.
நடுத்தர குடும்பங்களுக்கு பாதிப்பு
போரால் ஏற்பட்ட தட்டுப்பாட்டை சமாளிக்க வளரும் நாடுகள் அதிக விலையில் அடிப்படை பொருள்களை வாங்குகிறது. இந்த நிதி நெருக்கடியைச் சமாளிக்க எரிபொருள் விலை ஏற்றப்பட்டாலோ கடனின் வட்டி விகிதம் அதிகமாக்கப்பட்டாலோ அந்தப் பொருளாதார நெருக்கடி முழுவதும் நடுத்தர குடும்பங்களுக்கே பெரிய தலைவலியாக அமைகிறது. மேலும் இது நாட்டின் கடன் தொகை அதிகரித்து, பொருளாதார வளர்ச்சியைத் தேக்கும் என்பதே பொருளாதார வல்லுநர்கள் கருத்தாக இருக்கிறது.

இப்படி உக்ரைன் - ரஷ்ய போரால் பல நாடுகளும் பாதிப்புகளைச் சந்தித்தது. உலகமாயத்தலுக்கு பிறகுதான் நாடுகளுக்கு இடையே சார்பு நிலை அதிகரித்ததாகவும், இந்தப் போரால் இந்த நிலை இல்லாமல் போகும் என சில ஆய்வாளர்கள் கூறினார்கள். ஆனால், உலகமயமாதல் என்னும் கருத்து முற்றிலுமாக அழிவது நடக்காத காரியம் என்றும் அதற்கு இன்னும் சில காலங்கள் ஆகும் என சில ஆராய்ச்சியாளர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். அது வரையிலும் உலகில் எந்த மூலையில் போர் நடந்தாலும் அதன் பாதிப்பு அண்டை நாடுகளுக்கு மட்டுமல்லாமல் உலக நாடுகளுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது இதன் வாயிலாக தெரியவருகிறது!.