Published:Updated:

ரூ.10,000 கோடிக்கு 'பில்' - ரேஷன் முறைகேடு புகாருக்கு இ.பி.எஸ் மெளனம் ஏன்?

ந.பொன்குமரகுருபரன்

தற்போது ரேஷன் கடைகளுக்குத் தேவையான பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட்ஸ், ஸ்வர்ணபூமி நிறுவனங்கள்தான்

ரேஷன் முறைகேடு
ரேஷன் முறைகேடு

தமிழக சத்துணவுத் திட்டம் மற்றும் ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் ஆகிய பொருள்களை சப்ளை செய்யும் கிறிஸ்டி நிறுவனம் மீதும், அதன் பினாமி நிறுவனங்கள் மீதும் ஏற்கெனவே முறைகேடு வழக்கு பாய்ந்துள்ளது.

இந்த நிலையில், தற்போது உயர் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு 'பில்' போட்டு பணத்தை எடுத்திருப்பதாகப் புகார் எழுந்துள்ளது. சத்துணவு ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், கிறிஸ்டிக்குச் சாதகமாக தமிழக அரசு செயல்படுவதாகவும் குற்றம்சாட்டுகிறார்கள்.

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஆண்டிபாளையத்தில், கிறிஸ்டி ஃபிரைடு கிராம் இண்டஸ்ட்ரி (கிறிஸ்டி ஃபுட்ஸ்) நிறுவனம் செயல்படுகிறது. 1982-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தமிழக அரசின் சத்துணவுத் திட்டத்துக்குத் தேவையான முட்டை, சத்துமாவு, பருப்பு வகைகளை விநியோகிக்கிறது. தற்போது வாரத்துக்கு ஐந்து முட்டைகள் வீதம் தினம்தோறும் 84 லட்சம் முட்டைகள், பள்ளிக் குழந்தைகளுக்கு வழங்கப்படுகின்றன.

ரூ.10,000 கோடிக்கு 'பில்' - ரேஷன் முறைகேடு புகாருக்கு இ.பி.எஸ் மெளனம் ஏன்?

2012 ஆண்டுக்கு முன்னதாக சத்துணவுத் திட்டத்துக்குத் தேவையான முட்டைகள், சத்துமாவு, பருப்பு ஆகியவை அந்தந்த மாவட்டங்களிலேயே கொள்முதல் செய்யப்பட்டன. ஜெயலலிதா ஆட்சிக்காலத்தில்தான் மொத்தமாகக் கொள்முதல் செய்யும் முறை கொண்டுவரப்பட்டது. 2013-14ம் ஆண்டுக்கான முட்டை டெண்டரில் நேச்சுரல் ஃபுட்ஸ் புராடக்ட்ஸ் (நாமக்கல்), ஸ்வர்ணபூமி என்டர்பிரைசஸ் (கோயம்புத்தூர்) ஆகிய நிறுவனங்கள் டெண்டரை எடுத்தன.

இந்த இரு நிறுவனங்களும், கிறிஸ்டி நிறுவனத்தின் உரிமையாளரான குமாரசாமியின் பினாமி நிறுவனங்கள். ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டியே, இந்த நிறுவனங்களுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு 'பில்' போடப்பட்டுள்ளது' என்பதுதான் இப்போதைய குற்றச்சாட்டு.

ஒரு நாளைக்கு 69 லட்சம் முட்டைகள் தேவைப்படும் நிலையில், இதில் விளையாடியிருக்கும் பணத்தைக் கணக்கிட்டால் தலைசுற்றும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய நுகர்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் சிலர், "2014-ம் ஆண்டில், சத்துணவு முட்டை விநியோகத்தில் நேச்சுரல் ஃபுட்ஸ், ஸ்வர்ணபூமி ஆகிய இரு நிறுவனங்களுக்கும் ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கும் சொந்தமாக கோழிப்பண்ணைகூட கிடையாது. வெளி மார்க்கெட்டில் முட்டைகளைக் கொள்முதல் செய்து, ஒரு ரூபாய் கமிஷன் அடிப்படையில் அரசுக்கு விநியோகித்துள்ளனர். ஒரு நாளைக்கு 69 லட்சம் முட்டைகள் தேவைப்படும் நிலையில், இதில் விளையாடியிருக்கும் பணத்தைக் கணக்கிட்டால் தலைசுற்றும்!

ஒப்பந்தப் புள்ளியில் முறைகேடு என்பது ஒருபுறமிருக்க, தரமில்லாத பொருள்களை விநியோகித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கர்நாடக அரசின் கறுப்புப் பட்டியலில் இருக்கிறது கிறிஸ்டி நிறுவனம். ஆனால், தமிழக அரசு அதைச் செய்ய மறுக்கிறது.

தற்போது ரேஷன் கடைகளுக்குத் தேவையான பாமாயில், துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு ஆகியவற்றை கிறிஸ்டியின் பினாமி நிறுவனங்களான நேச்சுரல் ஃபுட்ஸ், ஸ்வர்ணபூமி நிறுவனங்கள்தான் விநியோகிக்கின்றன. ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும், வரி ஏய்ப்புப் புகாருக்குள்ளான ஒரு நிறுவனத்தில் இருந்து பத்தாயிரம் கோடி ரூபாய்க்கு பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்கான காசோலைகளும் அரசால் அளிக்கப்பட்டுள்ளன" என்றவர்கள், அதற்கான ஆதாரங்களாக, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் வழங்கிய காசோலை விவரங்களையும் நம்மிடம் அளித்தனர்.

ரூ.10,000 கோடிக்கு 'பில்' - ரேஷன் முறைகேடு புகாருக்கு இ.பி.எஸ் மெளனம் ஏன்?

கிறிஸ்டி நிறுவனம் தரப்பில் இந்தப் புகார்கள் தொடர்பாக நம்மிடம் விளக்கம் அளித்தவர்கள், ''சட்டத்துக்குப் புறம்பாகவும் நாங்கள் செயல்படவில்லை. நேச்சுரல் ஃபுட்ஸ், ஸ்வர்ணபூமி இவ்விரு நிறுவனங்களுக்கும் எங்களுக்கும் எந்தச் சம்பந்தமும் கிடையாது" என்று சொன்னார்கள்.

அண்டை மாநிலத்தால் கறுப்புப் பட்டியலில் போடப்பட்டுள்ள ஒரு நிறுவனத்துக்கு... 1,350 கோடி ரூபாய் வரி ஏய்ப்புப் புகாரில் சிக்கியுள்ள ஒரு நிறுவனத்துக்கு... வழக்கு நிலுவையில் இருப்பதைக் காரணம் காட்டி பத்தாயிரம் கோடி ரூபாய் ஆர்டர் கொடுத்திருப்பதில் எந்த முறைகேடுமே இல்லையா?

பதில் சொல்லுங்கள் முதல்வர் பழனிசாமி அவர்களே!

- ந.பொன்குமரகுருபரன்

> 'பருப்பு... பாமாயில்... பத்தாயிரம் கோடி... பதில் சொல்லுங்க பழனிசாமி!' எனும் கவர் ஸ்டோரியை ஜூனியர் விகடன் இதழில் முழுமையாக வாசிக்கலாம். சந்தா விவரங்களுக்கு https://store.vikatan.com/