கிட்டத்தட்ட இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்னர் முழு உலகமே பரபரப்பாக முணுமுணுத்த வார்த்தை Brexit. Britain Exit European Union என்பதன் சுருக்கமான `Brexit' என்ற வார்த்தையைப் பேசாத ஊடகங்கள் இல்லை. அலசாத மேடைகள் இல்லை. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளிவருமா வராதா என்ற கேள்வியே பட்டிமன்ற தலைப்பு போலப் பரபரப்பாக விவாதிக்கப்பட்டது. இன்று எல்லாம் நடந்து முடிந்துவிட்டது. பிரிட்டன் தனது 47 வருட உறவை முறித்துக் கொண்டு ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து பிரிந்து வந்துவிட்டது. தற்போது என்ன நடக்கிறது?
BREXIT என்றால் என்ன?
1 January 1973-ல் ஐரோப்பியப் பொருளாதார சமூகத்தில் (EEC) இணைந்த இங்கிலாந்து அங்கிருந்து வெளியேறும் முதல் நாடாகத் தன்னை பதிவு செய்து கொண்டது. 28 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் பற்றியும், அதன் யூரோ பொது நாணயம் பற்றியும், யூரோ டூரின் கடந்த அத்தியாயங்களில் பார்த்தோம். ஐரோப்பாவைத் தூக்கி நிறுத்தும் ஐரோப்பிய ஒன்றியத்தினால் அதன் உறுப்பு நாடுகள் எல்லாமே பல வகையிலும் நன்மைதான் அடைகின்றன. அப்படி இருக்கும் போது பிரிட்டன் இந்த முடிவை எடுக்கக் காரணம் என்ன?

பிரிட்டன் என்ன காரணத்திற்காக வெளியேற முடிவு செய்தது?
ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதான பிரிட்டனின் நம்பிக்கையை ஐரோப்பாவில் உருவான தொடர்ச்சியான நெருக்கடிகள் மெல்ல மெல்லச் சிதைக்கத் தொடங்கின. ஐரோப்பிய ஒன்றியத்துக்கு உள்ளே இருந்த திறந்த எல்லைக் கொள்கை, ஐரோப்பாவில் எழுந்த கடுமையான வேலையின்மை நெருக்கடி, சிரிய அகதிகள் நெருக்கடி போன்ற பல காரணிகள் பிரிட்டன் மக்களை அதிருப்தி அடையச் செய்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் டாப் 5 பங்களிப்பாளர்கள் வரிசையில் UK முக்கிய இடத்தை வகிக்கின்றது. ஐரோப்பியப் பாராளுமன்ற அதிகாரபூர்வ வலைத்தளத்தின் அறிக்கையின் படி 2019-ல் மாத்திரமே UK £14.4 பில்லியன் அளவுக்கு தன் மொத்த பங்களிப்பை வழங்கியுள்ளது. ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து வெறும் £5.0 பில்லியன் நிதியுதவியையே இங்கிலாந்து பொதுத்துறை பெற்றது. எனவே EU விற்கு UK-இன் நிகர பொதுத்துறை பங்களிப்பு 2019-இல் சுமார் £10 பில்லியனாக மதிப்பிடப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் NHS போன்ற அமைப்புகள் கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வருகின்றன. இந்த நேரத்தில் இங்கிலாந்து மக்களுக்காகச் செலவு செய்ய வேண்டிய பணத்தை ஐரோப்பிய ஒன்றியத்துக்கு எதற்கு வாரி வழங்க வேண்டும் என்பதும் பிரிட்டிஷ் மக்களின் பிரதான கேள்வியாக இருந்தது.
2008ல் இருந்து வளர்ந்து வரும் பொருளாதாரப் பிரச்னைகளைத் தீர்க்க ஐரோப்பிய ஒன்றியம் தவறிவிட்டது என்பது பிரிட்டனின் வாதம். தெற்கு ஐரோப்பாவில் உருவான 20% வேலையின்மை, சிரியா போன்ற நாடுகளிலிருந்து ஐரோப்பா நோக்கிப் படையெடுத்து வந்த அகதிகள், இவையெல்லாம் பிரிட்டனை மிகவும் பாதித்தது. இதனால் பிரிட்டனில் சட்ட விரோத குடியேற்றவாசிகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்தது.
பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற எடுத்த முடிவுக்கான பிரதான காரணம் இந்தக் குடியேற்றம்தான். ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த பல நாடுகள் எல்லைக் கட்டுப்பாடுகளைத் தளர்த்திக் குடியேற்ற விஷயத்தில் தாராளவாத போக்குடன் நடந்து கொண்டன. எனவே ஏனைய ஐரோப்பிய நாடுகளிலிருந்து, அதிலும் குறிப்பாகக் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வருவோர் பிரிட்டனில் குடியேறுவது அதிகரிக்கத் தொடங்கியது.

இதனால் தங்கள் நாட்டின் கலாசாரம் பாதிக்கப்படுவதோடு, பொருளாதாரம் சீர்குலைவதாகப் பிரிட்டன் மக்கள் கருதத் தொடங்கினர். குறிப்பாக மலிவு விலைக்குக் கிடைக்கும் கிழக்கு ஐரோப்பியத் தொழிலாளர்கள் காரணமாக இங்கிலாந்து மக்களின் வேலையின்மை விகிதம் அதிகரிக்க ஆரம்பித்தது. அதே போலக் குற்றங்களும் அதிகளவில் பெருக ஆரம்பித்தன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் அங்கத்துவம் பிரிட்டனின் சர்வதேச செல்வாக்கைக் கட்டுப்படுத்தி உலக வர்த்தக அமைப்பில் (WTO) பிரிட்டனின் சுதந்திரமான இடத்தை பறித்தது. சட்டங்கள் மற்றும் ஒழுங்குமுறைகளின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும் பிரிட்டன், ஐரோப்பியக் கொள்கைகளை தமக்குள் வலுக்கட்டாயமாகத் திணிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு இருந்தது.
இங்கிலாந்து மக்களின் மனதில் ஆழமாக வேரூன்ற ஆரம்பித்த Brexit எண்ணம், அது தொடர்பாக ஒரு வாக்கெடுப்புக்கு வித்திட்டது. 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 23-ம் தேதி 71.8% பேர் கலந்து கொண்ட அந்த வாக்கெடுப்பில் 51.9% மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் பிரிந்து செல்வதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.
பிரெக்ஸிட்க்கு எதிராக வைக்கப்பட்ட வாதங்கள்
500 மில்லியன் மக்கள் கொண்ட சமூகத்தின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் உறுப்பினராகப் பிரிட்டன் சர்வதேச விஷயங்களில் அதிக செல்வாக்கு செலுத்த முடியும் என்பது முக்கியமான ஒரு அனுகூலமாக இருந்தது. பயங்கரவாதம் மற்றும் எல்லை தாண்டிய குற்றம் உட்படப் பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்களைச் சமாளிக்க உறுதியான ஒரு கூட்டமைப்பின் உதவி ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் இங்கிலாந்துக்குக் கிடைத்தது. அதே போல ஐரோப்பிய வணிகங்கள் ஒவ்வொரு ஆண்டும் UK-இல் பில்லியன் கணக்கான பவுண்டுகளை பொதுத்துறை மற்றும் தனியார்த் துறைகளில் முதலீடு செய்கின்றன. இதனால் இங்கிலாந்தின் வேலைவாய்ப்பு அதிகரித்து பொருளாதார வளர்ச்சிக்கு உதவியது.
EU உறுப்பினராக இருந்த வரையில் ஐரோப்பிய ஒற்றைச் சந்தைக்கான அணுகலை ஐரோப்பிய ஒன்றியம் பிரிட்டனுக்கு வழங்கியது. இது உறுப்பு நாடுகள் முழுவதும் பொருள்கள், சேவைகள் மற்றும் மக்களை எளிதாக நகர்த்துவதற்கு உதவியது. இந்த சுதந்திர வர்த்தகம் தடைகளைக் குறைத்து நிறுவனங்கள் வளர உதவியது. இதனால் மில்லியன் கணக்கான பிரிட்டிஷ் வேலைகள் ஐரோப்பாவுடன் இணைக்கப்பட்டிருந்தன. ஐரோப்பிய ஒன்றியத்தால் எளிதாக்கப்பட்ட பொருள்கள் மற்றும் சேவைகளின் விலைக்குறைவு காரணமாக பிரித்தானியாவில் உள்ள ஒவ்வொரு சராசரி நபரும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான பவுண்டுகளைச் சேமிக்க முடிந்தது.

பொதுவாகப் பிரிட்டிஷ் மக்கள் பிளம்பிங், எலக்ட்ரீசியன், பராமரிப்பாளர், தொழிற்சாலை தொழிலாளர்கள். நர்சிங் போன்ற `Skilled Labour' வேலைகளைச் செய்ய விரும்ப மாட்டார்கள். எனவே இது போன்ற சில துறைகளில் திறமையான கிழக்கு ஐரோப்பியத் தொழிலாளர்கள் வேலை செய்து வந்தனர். Brexit இதில் பெரிய சரிவை ஏற்படுத்தும் என மக்கள் அஞ்சினர்.
பிரிட்டனின் வெளியேற்றம்
தனிப்பட்ட இரு நபர்கள் சுமுகமாகப் பிரிந்து செல்வதிலேயே ஏராளமான சிக்கல்கள் இருக்கும் போது பொருளாதாரம், வணிகம், அரசியல், ராணுவம், என நெருக்கமான தொடர்பு உள்ள ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து எப்படி அவ்வளவு சீக்கிரம் பிரிட்டனால் வெளியேற முடியும்? அதே போலப் பிரிந்ததும் அப்படியே ஐரோப்பிய ஒன்றியத்தைப் பிரிட்டனால் அவ்வளவு லேசாகத் தூக்கி எறிந்துவிட முடியாது. எனவே பிரெக்ஸிட் ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்துவந்த நிலையில், அப்போதைய பிரிட்டிஷ் பிரதம மந்திரி தெரசா மே பதவி விலக, தற்போதைய பிரதமர் போரிஸ் ஜான்சன் பதவிக்கு வந்தார். அதைத் தொடர்ந்து சுமுகமாக சில பல உடன்படிக்கைகளை மேற்கொண்டுவிட்டு, மார்ச் 29, 2019 அன்று இரவு பிரிட்டன் நேரப்படி 11 மணிக்கு ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறியது.
பிரெக்ஸிட்டிற்குப் பிறகான UK
அதுவரை இங்கிலாந்திலிருந்த பல ஐரோப்பியன் நிறுவனங்கள் தங்கள் தலைமையகத்தை EUக்கு மாற்றிவிட்டன. இதனால் பல வேலைவாய்ப்புகள் பறிபோனது. அதே போல ஐரோப்பிய கம்பெனிகளுடன் இங்கிலாந்து மேற்கொண்டு வந்த வணிக நடவடிக்கைகளுக்கு புதிய உடன்படிக்கைகளில் கையொப்பம் இட வேண்டிய நிலைமை ஏற்பட்டதால் பல சிக்கல்கள் உருவாகின. அதுவரை விசா கட்டுப்பாடுகள் இன்றி வேலை செய்து வந்த EU தொழிலாளர்கள் Brexit-ற்குப் பிறகு இங்கிலாந்தின் கடும் விசா கட்டுப்பாடுகளுக்கு உள்ளானதால் பலர் இங்கிலாந்தை விட்டே வெளியேறியனர். இதனால் குறைந்த திறன் மற்றும் நடுத்தரத் திறன் கொண்ட தொழிலாளர் பற்றாக்குறை பெருமளவில் ஏற்பட்டுள்ளது.
இன்னும் UK- உடன் உள்ள வடக்கு அயர்லாந்து, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒரு பகுதியாக உள்ள அயர்லாந்து குடியரசுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது. இங்கிலாந்து ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்த வரை இந்த இரண்டு நாடுகளுக்கு இடையேயும் சுங்க, குடிவரவு மற்றும் குடியகழ்வு எல்லைக் கட்டுப்பாடுகள் இருக்கவில்லை. ஆனால் பிரெக்ஸிட்டின் பிறகு மீண்டும் சுங்க எல்லைகள் கொண்டுவரப்பட்டதால் தினமும் சுமார் 9,300 பயணிகள், பணி மற்றும் பள்ளிக்குச் செல்லும் மாணவர்கள் சுங்கச்சாவடி வழியாகச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது மாத்திரம் இன்றி தினமும் பல நூறு லாரிகளும் டிரக்களும் சுங்க அனுமதிக்காகக் காத்திருக்கின்றன. இதனால் பொருளாதார மந்த நிலை இரு பக்கமும் ஏற்படுவதோடு மக்கள் மிகப்பெரிய சிரமங்களுக்கும் ஆளாகின்றனர்.

பிரெக்ஸிட் ஏற்கனவே இங்கிலாந்தின் நிதி மையமான லண்டனின் வளர்ச்சியைக் குறைத்துள்ளது. 2016 மற்றும் 2021-க்கு இடையில் லண்டனின் வணிக முதலீடு 11% ஆகக் குறைந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய பொருளாதாரத்துக்கு ஆங்கிலம் பேசும் நுழைவாக இதுவரை லண்டனைப் பயன்படுத்தி வந்த சர்வதேச நிறுவனங்கள் தற்போது டப்ளின் மற்றும் அயர்லாந்துக்கு மாறியுள்ளன. பிரெக்ஸிட்டுக்கு எதிராக வாக்களித்த ஸ்காட்லாந்து அரசு, தற்போது இங்கிலாந்தை விட்டு வெளியேறி ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்வது தொடர்பாக வாக்களிப்பை நடத்தத் தீர்மானித்துள்ளது. இது பிரிட்டனுக்கு மற்றுமொரு மிகப்பெரிய அடியாக விழுந்துள்ளது.
பிரெக்ஸிட்டிற்குப் பிறகான ஐரோப்பா
பிரெக்ஸிட் என்பது உலகமயமாக்கலுக்கு எதிரான நகர்வு. இதன் விளைவாக, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பை ஆதரிக்கும் சக்திகளை அது பலவீனப்படுத்தியுள்ளது. ஏற்கெனவே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக இருக்கும் பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி போன்ற நாடுகள் பிரிட்டனைத் தொடர்ந்து அதே பாதையைப் பின்பற்றி EU-விலிருந்து வெளியேறுவதற்கான முடிவை எடுக்க ஊக்கப்படுத்தலாம். ஒருவேளை அந்த நாடுகளில் ஏதேனும் ஒன்று வெளியேறினால் கூட ஐரோப்பிய ஒன்றியம் அதன் மிக வலுவான பொருளாதாரத்தை இழந்து ஆட்டம் காண ஆரம்பித்துவிடும்.
இது வரை பிரிட்டனுக்குப் படையெடுத்த ஐரோப்பிய ஒன்றிய மக்களுக்கு மிகப்பெரிய ஆப்பு வைத்தது பிரெக்ஸிட். இதனால் கிழக்கு ஐரோப்பியர்கள் மட்டுமல்ல மேற்கு ஐரோப்பியர்களுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல ஐரோப்பிய நிறுவனங்களின் மிகப்பெரிய வர்த்தக பங்காளியாக இருந்த இங்கிலாந்து தற்போது கை நழுவிப் போனதால் மிகப்பெரிய பொருளாதார நஷ்டத்தைப் பல ஐரோப்பிய நிறுவனங்கள் சந்தித்து வருகின்றன.
இது காலம் வரை ஐரோப்பாவில் வேலை செய்து வந்த பிரிட்டிஷ் மக்கள் பிரெக்ஸிட்டின் பின் வேலையை விட்டு மீண்டும் பிரிட்டன் செல்ல ஆரம்பித்தனர். அதே போல மாணவர்களையும் பிரெக்ஸிட் பலமாகப் பாதித்தது. அது வரை ஐரோப்பாவில் கட்டணம் இல்லாமல் இலவசமாகப் பல்கலைக்கழகக் கல்வியைக் கற்றுவந்த இங்கிலாந்து மாணவர்களும், பிரிட்டனில் பயின்றுவந்த ஐரோப்பிய மாணவர்களும் பிரெக்ஸிட்டிற்குப் பின்னர் கட்டணம் செலுத்திப் படிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர்.

மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் UK இணைவது சாத்தியமா?
ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிதாக இணைந்து கொள்ள விரும்பும் நாடுகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டாய விதிகளுள் ஒன்று, அவர்கள் யூரோவை பொது நாணயமாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது. எனவே மீண்டும் UK, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைய விரும்பினால் அவர்கள் தமது ஸ்டெர்லிங் பவுண்டைக் கைவிட்டு யூரோவை ஏற்றுக்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்படுவார்கள். இதை ஒருபோதும் ஐக்கிய ராஜ்ஜியம் விரும்பாது என்பதால், அவர்கள் மீண்டும் ஐரோப்பிய யூனியனில் இணைவது என்பது சாத்தியம் இல்லாத ஒன்றாகவே தென்படுகிறது.
ஐக்கிய ராஜ்ஜியம் விலகினாலும் ஐரோப்பா ஆட்டம் காணாமல் அதே உறுதியோடு உலக வல்லரசுகளுக்குச் சவால் விட்டுக்கொண்டுதான் உள்ளது. என்னதான் ஐரோப்பாவில் பல நாடுகள் இருந்தாலும், ஐரோப்பா இன்று பொருளாதார ரீதியாகவும் ராணுவ ரீதியாகவும் பலம் பொருந்தி இருப்பதன் முக்கிய காரணம் அதன் உயரடுக்கு குழு (Elite Group) நாடுகள். ஐரோப்பாவின் தலையெழுத்தைத் தீர்மானிக்கும் கிங் மேக்கர் நாடுகளைப் பற்றி அடுத்த வார யூரோ டூரில்...