ஆப்பிரிக்க காடுகளில் காட்டு மாடுகள் பயணத்தின் ஆரம்ப புள்ளியான நுடுத்து (NDUTHU) பகுதியில் காட்டு மாடுகளின் பிரசவத்தை அறிந்து கொண்ட நாம், அந்த பகுதியில் அதன் குட்டிகளை வேட்டையாடும், முக்கிய வேட்டை விலங்கான சிவிங்கிப்புலிகளை அறிந்து கொள்வோம்! அதன்பின் செரங்கெட்டி தேசிய பூங்காவிற்குள் நுழைவோம்!
CHEETAH தமிழில் சிவிங்கிப்புலி 1900 -ம் ஆண்டு துவங்கும்போது, உலகம் முழுவதும் 11 லட்சம் சிவிங்கிப்புலிகள் இருந்ததாகக் கூறப்படுகிறது. உலகம் முழுவதும் பரவி இருந்த சிவிங்கிப்புலி கள் தற்போது 9 ஆயிரம் வரை இருக்கலாம் எனச் சொல்லப்படுகிறது.

சிவிங்கிப்புலிகள் உலகில் அதிவேகமாக ஓடும் ஓர் உயிரினம். மணிக்கு 114 கிலோமீட்டர் வரை ஓடும். கண்களுக்கு கீழ் ஓர் கோடு வாய் வரை செல்லும் இதன் அழகே தனி. 1.2 மீட்டர் நீளமுள்ள இவை நீண்ட வாலைக் கொண்டிருக்கும். எடை 30 முதல் 50 கிலோ இருக்கும். ஆண் சிவிங்கிப்புலிகள் தன் சகோதரர்களுடன் வாழும். பெண் சிவிங்கிப்புலிகள் பெரும்பாலும் குட்டியுடன் மட்டுமே வாழும். இதன் இனப்பெருக்க காலம் மூன்று மாதங்கள். 2 முதல் 8 குட்டிகள் வரை ஈனும். இரண்டு வருடங்கள் குட்டிகளைப் பாதுகாக்கும்/ பெரும்பாலும் சிவிங்கிப்புலிகள் 7 வருடங்கள் உயிர் வாழும்.
வேட்டையாடும் போது 200 முதல் 300 மீட்டர் அருகில் சென்ற பிறகு வேட்டையாட ஓட ஆரம்பிக்கும். மணிக்கு 114 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும். இவை, மூன்றே வினாடிகளில் மணிக்கு 96 கிலோ மீட்டர் வேகமெடுக்கும், பெரும்பாலும் பரந்த நீண்ட புல்வெளிகளில் வாழ விரும்பும். காலை நேரங்களிலும் மாலை நேரங்களிலும் மட்டுமே இவை வேட்டையாடும். பெரும்பாலும் (பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த விலங்குகள் இரவில்தான் வேட்டையாடும்), சிவிங்கிப்புலிகள் மட்டும் பகலில் வேட்டையாடும்) இந்த நுடுத்து பகுதியில் மான்கள், காட்டு மாடுகளின் புதிய குட்டிகள், வரிக் குதிரைகளின் குட்டிகளை வேட்டையாடி உண்ணும்.
இவை வேட்டையாடிய பின்பு, உடனே சாப்பிட்டு முடித்து விடும்! ஏனெனில் சற்று பயந்த சுபாவம் கொண்ட, இவற்றின் உணவை சிங்கங்களும், கழுதைப்புலிகளும் எளிதில் பறித்து விடும் என்பதால்!

சிவிங்கிப்புலிகளும் சிறுத்தைகளும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்றாலும் தனித்தனி இனங்கள். சிவிங்கிப்புலி உயரமாகவும் நீளமாகவும் இருக்கும், சிறுத்தைப் புலிகள் உயரம் குறைவாக இருக்கும்.

சிவிங்கிப்புலிகளின் வால் தட்டையாக நீளமாக இருக்கும். சிறுத்தைகளின் வால் குழாய் போன்று சுருண்டு இருக்கும், சிவிங்கிப்புலிகளின் தோலில் தெளிவான கறுப்புப் புள்ளிகள் இருக்கும். சிறுத்தைகளில் அது சற்று வளையமாக இருக்கும். மேலே உள்ள படங்களைப் பார்த்தால் இந்த வித்தியாசம் தெரியும்.
சிவிங்கிப்புலிகளின் கண்களில் கண்ணீர் வடிவது போன்ற ஓர் அமைப்பு இருக்கும். இது பகலில் வேட்டையாடும் தன்மை கொண்டது என்பதால் இந்தக் கறுப்பு நிற அமைப்பு சூரிய ஒளியிலிருந்து கண்களுக்குக் கூசாத தன்மையைக் கொடுக்கிறது. சிறுத்தைகள் இரவில் வேட்டையாடும் தைரியசாலிகள். எந்த சூழ்நிலையிலும் வாழும் தன்மை கொண்டவை.

இந்திய சிவிங்கிப்புலிகளின் சோக வரலாறு!
இந்திய சிவிங்கிப்புலிகள் பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை இஸ்ரேல் முதல் இந்தியா வரை வாழ்ந்த உயிரினம். நமது திருநெல்வேலி மாவட்டத்தில் இது இருந்ததாகப் பதிவுகள் உண்டு. திறமையான வேட்டை விலங்குகளான இவை, அக்கால மன்னர்களால் நமது வீட்டு நாய்கள் போல், காட்டிலிருந்து பிடிக்கப்பட்டு, வீட்டு விலங்காக மாற்றப்பட்டது. பழக்கப்படுத்தப்பட்ட சிவிங்கிப்புலிகள் மன்னர்கள் வேட்டைக்கு செல்லும்போது அவர்களின் வேட்டையில் துணை புரிந்து, மான் மற்றும் காட்டு உயிரினங்களை வேட்டையாடி மன்னரிடம் கொண்டு சேர்க்கும்.

முகலாய சக்கரவர்த்தி அக்பரிடம் ஆயிரத்துக்கு மேற்பட்ட சிவிங்கிப்புலிகள் இருந்ததாகக் குறிப்புகள் உண்டு. இது மிகைப்படுத்தப்பட்ட குறிப்புகளாக இருந்தாலும், சிவிங்கிப்புலிகளைக் கொண்டு வேட்டையாடிய வரலாற்று ஆவணமாக ஓர் ஓவியம் உள்ளது.

சிவிங்கிப்புலிகள் இன்று இந்தியாவில் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. இன்றைய சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள கொரியா மாவட்டத்தில் 1947 -ல் கடைசியாக 3 சிவிங்கி புலிகள் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆவணம் தெரிவிக்கிறது. 1950-ல் ஒரு பெண் சிவிங்கிப்புலி கண்டறியப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. அதற்குப்பின் இதைப் பற்றிய எந்தக் குறிப்புகளும் இல்லை. முற்றிலும் இந்தியாவில் வேட்டையாடி அழிக்கப்பட்ட பூனை இனம் இதுவாகத்தான் இருக்கும்.
வேட்டை ஒருபுறம் என்றாலும் அரசர்கள் மட்டுமின்றி செல்வந்தர்கள் வீட்டு விலங்குகளாக இவற்றை வளர்த்ததால் இனப்பெருக்கத்திற்கு வழியின்றி அழிந்தன சிவிங்கிப் புலிகள், [இன்றைய கோவில் யானைகள் மாதிரி இவையும் அன்று இனப்பெருக்கத்திற்கு அனுமதிக்கப்படவில்லை. ]

தற்போது ஆசிய சிவிங்கிப்புலிகள் ஈரானில் மட்டுமே சொற்ப எண்ணிக்கையில் உள்ளன. 1970-ம் ஆண்டு அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி, ஈரானுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டார். அதன்படி ஈரானிடமிருந்து நாம் சிவிங்கிப்புலிகளைப் பெற்றுக் கொள்வது எனவும், அதற்குப் பதிலாக நாம் ஆசிய சிங்கங்களை ஈரானுக்கு தரவேண்டும் என்பதே அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம்.

ஆனால் ஒப்பந்தம் நிறைவேற கால தாமதம் ஆகியது. ஒப்பந்தம் கையெழுத்தான போது 250 சிவிங்கிப் புலிகள் ஈரானிடம் இருந்தன. தற்போது ஈரானிடம் 28 சிவிங்கிபுலிகள் மட்டுமே உள்ளன. இந்திய அரசு சிங்கங்களை கொடுக்க மறுத்ததாலும் ஈரான் அரசும் குறைந்த எண்ணிக்கையில் உள்ள சிவிங்கிப்புலிகளை கொடுக்க மறுத்தாலும் இந்தியாவில் இவற்றை மீட்டுருவாக்கம் செய்ய இயலவில்லை.
இந்த நிலையில் The National Tiger Conservation Authority (NTCA) நமீபியா [NAMIBIA] நாட்டிலிருந்து சிவிங்கிப் புலிகளை வாங்கி இந்தியாவில் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றத்தை நாடியது. ஆனால் International Union for Conservation of Nature (IUCN) இதற்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில் ஆப்பிரிக்க சிவிங்கிப்புலி வேறு, ஆசிய சிவிங்கிப்புலி வகைகள் வேறு என்பதைக் காரணம் காட்டி, அதை இந்திய காடுகளில் மீட்டுருவாக்கம் செய்ய இயலாது என மறுத்தது. ஆனால் NTCA , டிஎன்ஏ [DNA] பரிசோதனைகள் மூலம் நமீபியா சிவிங்கி புலி 89% ஆசிய சிவிங்கிப்புலிகளுடன் ஒத்துப்போவதை ஆதாரங்களுடன் நிரூபித்து உச்சநீதிமன்றத்தில் அனுமதியைப் பெற்றது.
உச்சநீதிமன்றமும் 2020-ம் ஆண்டு ஜனவரி 28-ம் நாள் இந்தியாவில் முக்கியமாக மத்தியப்பிரதேசத்தில் உள்ள ஆசிய சிங்கங்களுக்கு காத்திருக்கும் குனோ வனவிலங்கு சரணாலயம் [KUNO WILDLIFE SANCTUARY] காடுகளில் இதை மீட்டுருவாக்கம் செய்யலாம் எனவும் இது தவிர மேலும் சிவிங்கிப்புலிகள் மீட்டுருவாக்கம் செய்ய ஏற்ற காடுகளைக் கண்டறியவும் உத்தரவிட்டது.
அதன்படி கடந்த 2022 செப்டம்பர் மாதம் 8 ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் இந்தியா கொண்டுவரப்பட்டன, நம் இந்திய காடுகளில் இந்த ஆப்பிரிக்க சிவிங்கிப் புலிகள் எப்படி வாழ்கிறது என்பதை காலம் தீர்மானிக்கட்டும்….!
காடுகளின் அரசன் சிங்கம் அதை பத்தி பேசாம நாம எப்படி பயணம் செய்வது, எனவே அடுத்த அத்தியாயங்களில் அதையும் தெரிந்து கொண்டு அவ்வை பாடிய கான மயிலையும் பார்க்க அடுத்த வாரம் செரங்கெட்டி தேசிய பூங்காவின் மேற்குப் பகுதிக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன்.
-பயணிப்போம்...