வருடம் 2009. புதிதாகப் பதவியேற்றிருக்கும் அந்த அமெரிக்க ஜனாதிபதியுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள வந்தது ஒரு குடும்பம். ஆஃப்ரோ அமெரிக்கர்களான அவர்கள், புகைப்படம் எடுத்த பின்னர், தங்களின் ஐந்து வயது மகன் ஜேக்கப், ஜனாதிபதியிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புவதாகத் தெரிவிக்கின்றனர். ஆனால், ஜேக்கப் என்ன கேள்வி கேட்கப் போகிறான் என்பது அவர்களுக்கே தெரியாது. ஜனாதிபதி அனுமதி அளிக்கிறார்.
"உங்கள் தலைமுடி என் தலைமுடியைப் போன்றே உள்ளதா என்று எனக்குத் தெரிய வேண்டும்" என்று தயங்கியவாறே பேசுகிறான் ஜேக்கப்.
அந்த அமெரிக்க ஜனாதிபதி அவனை உரக்கப் பேசுமாறு சொல்கிறார். அவனும் மீண்டும் அதே கேள்வியை முன்வைக்கிறான்.
"நீயே ஏன் அதைத் தொட்டுப் பார்த்து அறிந்து கொள்ளக்கூடாது?" என்று சொல்லிவிட்டு அவனுக்கு முன்னால் அவன் உயரத்திற்குக் குனிந்து நிற்கிறார் ஜனாதிபதி.
ஜேக்கப்பிற்குத் தயக்கம்.
"தொட்டுப் பார், டூட்!" என்று மீண்டும் அவரின் குரல் ஒலிக்கிறது.
ஜேக்கப் தொடுகிறான். "இப்போது என்ன நினைக்கிறாய்?" என்று அமைதியாகக் கேட்கிறார் ஜனாதிபதி.
"ஆம், என்னுடைய தலைமுடி போன்றுதான் உங்களுடையதும்" என்கிறான் ஜேக்கப். எங்கும் சிரிப்பலை.

ஜேக்கப் ஜனாதிபதியின் தலைமுடியைத் தொட்டுப் பார்ப்பதைப் படம் பிடித்திருக்கிறார் வெள்ளை மாளிகை புகைப்படக்காரரான பீட் சோஸா. ஆம், அந்த ஜனாதிபதி வேறு யாருமல்ல, பராக் ஹுசைன் ஒபாமாதான். அதுவரை இருந்த ஜனாதிபதிகள் பற்றிப் படித்திருந்த சிறுவன் ஜேக்கபிற்கு அந்தப் பதவி வெள்ளையர்களுக்கானது என்ற எண்ணம் மேலோங்கி இருந்திருக்கலாம். ஆனால், தன்னைப் போன்ற ஒரு ஆஃப்ரோ அமெரிக்கரும் அந்தப் பதவியை அலங்கரிக்கலாம் என்பதை ஜேக்கப் அன்று உணர்ந்துகொண்டான். அதற்கான வரலாற்றுச் சாட்சியம்தான் இந்தப் புகைப்படம்.
ஐக்கிய அமெரிக்கா இரண்டு உண்டு. ஒன்று, மனதளவில் வெள்ளைத் தோல் போர்த்தியபடி இனவெறி உள்ளுக்குள் உறங்கிக்கொண்டிருக்கும் அமெரிக்கா. மற்றொன்று நசுக்கப்படும் குரல்வளைகளைக் காக்கத் திமிறி எழவும், எழுந்த பின் போராடவும் எத்தனிக்கும் அமெரிக்கா. நம் நாட்டில் சாதி என்பது எப்படிப் புரையோடிப் போன, அவிழ்க்க விரும்பாத பரிவட்டமாகி விட்டதோ, அதேபோல் அங்கே இனவெறி என்பது அழிக்கவே முடியாத அரசியலாகிவிட்டது. ஆஃப்ரோ அமெரிக்கர்கள் நிறைந்த அந்த இரண்டாவது அமெரிக்காவிலிருந்து எழும் குரல் கேட்காதவாறு வெள்ளை அமெரிக்கா எப்போதும் தன் காதுகளை மூடிக்கொள்ளும். ஆனால், காலம் மாறும், காட்சிகளும் மாறும். அந்தக் காட்சி மாற்றம், ஓர் ஆட்சி மாற்றம் மூலம் அரங்கேறத் தொடங்கியது.

ஆம், எத்தனை காலம்தான் ஓர் இனத்தின் குரல்வளையை அதிகாரத்தின் கால்கள் கொண்டு நசுக்க முடியும்? கீழே இருப்பதாக ஒடுக்கப்படுபவர்கள் அதிகாரத்தின் உச்சிக்கு வரும்போது, பணியாத இனவெறியும் அடங்கித்தானே ஆகவேண்டும்?! அந்த இரண்டாவது அமெரிக்காவிலிருந்து ஒரு தலைவன் அதிகாரத்துக்கு வந்தான். இரண்டு அமெரிக்கா என்ற மாயத்தோற்றம் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியதன் தொடக்க அத்தியாயம் 13 ஆண்டுகளுக்கு முன்பு, இன்று எழுதப்பட்டது. 2009-ம் ஆண்டு, ஆஃப்ரோ அமெரிக்கரான பராக் ஹுசைன் ஒபாமா அமெரிக்காவின் 44-வது ஜனாதிபதியாகப் பதவியேற்றார். இந்த உயரிய பதவிக்கு வந்த முதல் ஆஃப்ரோ அமெரிக்கர் ஒபாமாதான்.
இந்த அதிகார மாற்றம் சுலபமாக நடந்துவிடவில்லை. அமெரிக்காவின் இலினோய் மாகாணத்தின் 47 வயது செனேட்டரான ஒபாமா, யாரும் தொட முடியாத உச்சிக்கு வருவதற்குக் கிட்டத்தட்ட 21 மாதங்கள் சுழன்று சுழன்று பிரசாரம் செய்யவேண்டியிருந்தது.
"இப்படியொரு மாற்றம், ரொம்ப காலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒன்று. இன்று நாம் செய்தது, இந்தத் தேர்தலில் நாம் செய்தது, இந்த ஒற்றை நிகழ்வு, இதன் மூலம் மாற்றம் என்பது அமெரிக்காவின் வாயிலுக்கு வந்துவிட்டது."பராக் ஒபாமா
தேர்தல் முடிவுகள் வெளிவந்த பின், மக்களிடம் ஒபாமா முதன்முறையாக உரையாடியபோது பேசிய வார்த்தைகள் இவை. அந்தத் தேர்தல் முடிவுகள் முழுவதும் ஒபாமாவின் பக்கம் சாய்ந்திருந்தன. ஃப்ளோரிடா, ஒஹாயோ, விர்ஜினியா போன்ற முக்கிய மாகாணங்கள் ஒபாமாவின் மக்களாட்சிக் கட்சியின் வசம் வந்தது. ஒபாமா இந்த வார்த்தைகளை உதிர்க்கும்போது, கூட்டத்திலிருந்த பலரின் கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தோடியது. அந்தக் கூட்டத்தில்தான் ஜெஸ்ஸி ஜாக்சன் என்ற ஆஃப்ரோ அமெரிக்கரும் நின்றிருந்தார். அமெரிக்கக் கொடியுடன் உணர்ச்சித் ததும்ப நின்றிருந்த அந்த மனிதர்தான் 1980-களில் இரண்டு முறை இதே மக்களாட்சிக் கட்சியின் மூலம் அதிபர் பதவிக்காக நிறுத்தப்பட்டவர். அப்போது அமெரிக்கா மாற்றத்துக்குத் தயாராகவில்லை. அவருக்குத் தோல்வியே கிட்டியது. ஆனால், அது இன்று ஒபாமாவின் மூலம் சாத்தியப்பட்டு விட்டதை அறிந்து பேரானந்தம் அடைந்த ஜெஸ்ஸி ஜாக்சனிடம் கண்ணீரைத் தவிர வேறு வார்த்தைகள் இல்லை.

"இது ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தேர்தல். ஆஃப்ரோ அமெரிக்கர்களுக்கு இந்தத் தேர்தல் எத்தனை முக்கியமானது என்பதை நான் அறிவேன். அவர்கள் பெருமைப்பட வேண்டிய இரவு இது!"ஜான் மெக்கெய்ன்
இதைச் சொன்னது ஒபாமாவை ஆதரித்த எவரோ இல்லை. அவரை எதிர்த்துப் போட்டியிட்ட குடியரசுக் கட்சியின் வேட்பாளரான ஜான் மெக்கெய்னின் வார்த்தைகள் இவை. மாற்றம் என்ற ஒன்றை ஏற்றுக்கொண்ட அதிகார வர்க்கத்தின் அடிபணிந்த குரலாகத்தான் இது பார்க்கப்பட்டது.
முன்னாள் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அதிகாரத்திலிருந்த எட்டு ஆண்டுகளில் செய்த சாதனைகள், எடுத்த முக்கிய முடிவுகள் பல உண்டு. இரண்டாவது பொருளாதாரப் பெருமந்தத்தை நோக்கிச் சென்று கொண்டிருந்த அமெரிக்காவை மீண்டும் வளர்ச்சிப் பாதைக்குக் கொண்டு வந்தது, ஒபாமா கேர் எனப்படும் நோயாளி காப்பு மற்றும் தாங்கத்தகு கவனிப்பு சட்டத்தின் மூலம் மருத்துவ காப்பீட்டில் புரட்சி செய்தது, வேலைவாய்ப்பின்மையை 10 சதவிகிதத்திலிருந்து 5 சதவிகிதத்துக்குக் கொண்டு வந்தது, வீழ்ச்சியிலிருந்த ஆட்டோமொபைல் துறையை நிமிரச் செய்தது, உச்சநீதிமன்றத்திற்கு முதல் லத்தீன் அமெரிக்க நீதிபதி உட்படப் பெண் நீதிபதிகளை நியமித்தது, காலநிலை மாற்றம் என்ற ஒன்றை முக்கியமான பிரச்னையாகக் கையில் எடுத்துக் கொண்டது, அமெரிக்காவின் பிரதான எதிரியாகப் பார்க்கப்பட்ட, பல தீவிரவாத கொடுஞ்செயல்களைச் செய்த ஒசாமா பின்லேடனை வீழ்த்தியது என அவரின் சாதனைகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இதற்கெல்லாம் முத்தாய்ப்பாக, 2009-ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு அவரைத் தேடி வந்தது.

மக்களுக்கிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்தியமைக்காகவும், சர்வதேச ரீதியில், அணு ஆயுதப் பரவலைத் தடுக்க பாடுபட்டமைக்காகவும், சர்வதேச நாடுகளிடையே நல்லெண்ணத்தை உருவாக்க பாடுபட்டமைக்காகவும் அவருக்கு இந்த விருது வழங்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்தது. ஆனால், அப்போதும் அந்த விருதைப் பெறுவதற்கான தகுதி தனக்கில்லை என்றே ஒபாமா கருதினார். நோபல் அறிவிக்கப்பட்டபோது "நோபல் பரிசா, எதற்கு?" என்று தனக்குத் தோன்றியதாக 2020-ம் ஆண்டு தனது சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.
ஒபாமாவை இரண்டு அமெரிக்காவும் ஏற்றுக்கொண்டது. குறிப்பாக இரு அரசியல் பிரிவுகளாக இருந்த மக்களாட்சிக் கட்சி மற்றும் குடியரசுக் கட்சியின் ஆதரவாளர்கள் ஒபாமாவை ஏற்றுக்கொண்டதன் மிக முக்கியக் காரணம், அக்கட்சிகளின் வண்ணங்களான நீலம் மற்றும் சிவப்புக்கு அப்பாற்றப்பட்டவராகத் தன்னை அவர் வெளிப்படுத்திக் கொண்டார். தன் சொந்தக் கட்சியிலேயே அவர் எடுக்கும் முடிவுகளுக்கு எதிர்ப்புகள் இருந்தாலும், அதையும் தாண்டி தான் கொண்ட கொள்கையில் உறுதியாக நின்றார்.
ஒபாமாவும் அவரின் இணையர் மிசெல் ஒபாமாவும் 'பிளாக் அமெரிக்கா' எனப்படும் அந்த இரண்டாவது அமெரிக்காவிற்கு புதியதொரு உத்வேகத்தைக் கொடுத்தனர். அடிமைப்பட்டுத்தான் கிடக்கவேண்டும் என்ற வெற்று சமாதானத்துக்கு மாற்றாக, நம்மாலும் மாற்றங்கள் சாத்தியப்படும், நம்மாலும் அதிகாரம் என்ற அரியணையைப் பெற முடியும் என்ற நம்பிக்கையை விதைத்துச் சென்றனர். பராக் ஒபாமா, மிசெல் ஒபாமா, அவர்களின் மகள்கள் சாஷா மற்றும் மலியா ஆகியோர் வெள்ளை மாளிகையை அலங்கரித்தது காலங்காலமாக அங்கே நிறுவனமாக்கப்பட்ட இனவாதத்துக்கு விழுந்த முதல் சவுக்கடியாகப் பார்க்கப்பட்டது. வரலாறு முழுக்க அடிமைகளாகச் சித்திரிக்கப்பட்ட ஒரு கூட்டம், தனக்கான ஒரு தலைவனை எல்லோருக்குமானதொரு அரியணையில் ஏற்றி அழகு பார்த்தது.
ஒபாமா தன் ஆட்சியில் செய்யத் தவறிய விஷயங்கள், அவரின் மேலான விமர்சனங்கள் என அதுவுமே நிறைய உண்டு. ஆனால், அதற்குள் நாம் செல்லத் தேவையில்லை. காரணம் ஒபாமா என்ற ஆஃப்ரோ அமெரிக்கர், வெள்ளையர்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு நாட்டில் உச்சபட்ச பதவியில் சென்று அமர்ந்ததே வாழ்நாளுக்குமான வரலாற்றுச் சாதனைதான். ஒபாமா குடும்பத்தின் எட்டு வருட ஆட்சி, உள்ளூரில் மட்டுமல்லாது உலக அளவிலும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதுவரை ஓரங்கட்டப்பட்ட பல லட்சம் ஆஃப்ரோ அமெரிக்கக் குழந்தைகளின் நம்பிக்கைகளும், கனவுகளும் மீண்டும் புத்துயிர் பெற்றன. அதுவரை தங்களின் வாழ்வையும், உயிரையும் அவர்களே குறைவாக மதிப்பிட்டுக் கொண்டு அடங்கிப் போயிருந்தனர். அந்த மனப்பான்மை ஒபாமாவின் பதவியேற்பின் போதே முற்றிலுமாக மாறிப்போனது.

வாய்ப்பளித்தால் ஆஃப்ரோ அமெரிக்கர்களும் சாதனையாளர்கள்தான் என்ற கூற்று உண்மையானது. இதை மற்றவர்கள் நம்புவதைக் காட்டிலும் முதலில் அடிமைப்பட்டுக் கிடந்த ஆஃப்ரோ அமெரிக்கர்களே நம்பவேண்டும். அவர்கள் நம்பத் தொடங்கினர். அதற்கான விதை ஒபாமா விதைத்தது. விதைத்த நாள் ஜனவரி 20, 2009.