தேனி மாவட்டம் சின்னமனூரில் குரங்குகளின் அட்டகாசத்தால் பொதுமக்கள், வியாபாரிகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் புலம்பிவருகின்றனர்.

மலைகள் சூழ் மாவட்டமான தேனியில், மேகமலை அருகே அமைந்துள்ளது சின்னமனூர். மலைகளில் உள்ள குரங்குகள், உணவு தேடி ஊருக்குள் வருவது வழக்கம். ஆனால், சின்னமனூருக்கு உணவு தேடி வந்த குரங்குக் கூட்டம் ஒன்று நிரந்தரமாக இங்கேயே தங்கி, மக்களைப் படாத பாடு படுத்துவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சின்னமனூர் பேருந்துநிலையம் அருகே பழக்கடை வைத்திருப்பவர், குரங்குகள் செய்யும் அட்டகாசத்தை நம்மிடம் விவரித்தார். ``பக்கத்தில் உள்ள தோட்டங்களில்தான் இவை தங்கியிருக்கின்றன. காலை ஏழு மணிக்கு தோட்டத்திலிருந்து கிளம்பும் கூட்டம், நேராக பஸ் ஸ்டாண்டு வரும். காய்கறி, பழங்கள் அதிகம் கிடைக்கும் என்பதால், இங்கே காலை, மதியம் சாப்பாட்டை முடித்துவிட்டு, மாலை 3 மணிக்கு மெள்ள நகர்ந்து, நகரின் மையப்பகுதிக்குச் சென்று டீக்கடை, ஹோட்டல்களில் இரவுச் சாப்பாட்டை முடிக்கும்.

பின்னர், மீண்டும் தோட்டங்களுக்குள் சென்று மறைந்துவிடும். என்னுடைய கடையில் தினமும் ஆயிரம் ரூபாய் பழங்களை குரங்குகளிடம் பறிகொடுக்கிறேன். எதுவும் செய்ய முடியவில்லை” என்று அவர் பேசிக்கொண்டிருந்தபோது, அருகே கரும்புக்கடை வைத்திருந்தவர் பேச ஆரம்பித்தார்.
Also Read
``சாப்பாட்டுக்காகத்தான் இங்கே வருகிறது என்றால்கூட, அனைவரும் அவற்றுக்கு சாப்பாடு கொடுப்பார்கள். ஆனால், அவை செய்யும் சேட்டைகள்தான் தாங்க முடியவில்லை. ஜவுளிக்கடைக்குள் சென்று துண்டு, சேலைகளை எடுத்துக்கொண்டு ஓடிவிடும். சலூன் கடைக்குள் சென்று அட்டகாசம் செய்து, உயிர் பயத்தைக் கூட காட்டுகின்றன. வாழை, தென்னை, மா விவசாயிகள் குரங்குகளால் நஷ்டமடைகிறார்கள். 100 குரங்குகள், இரண்டு கூட்டங்களாகச் சுற்றுகின்றன. சின்னமனூர் மக்களுக்கு குரங்குகளிடமிருந்து விடிவுகாலம் கிடைத்தால் போதும்” என்றார் அவர்.
இது தொடர்பாக சின்னமனூர் வனத்துறை ரேஞ்ச் அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, ``குரங்குகளை ஒருமுறை பிடித்து வனத்திற்குள் விட்டோம். ஆனால், அவை மீண்டும் வந்துவிட்டன. வெயில் அதிகமாக இருப்பதால், உணவுப் பற்றாக்குறை காரணமாக நகருக்குள் வருகின்றன. மேல் அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்திருக்கிறோம். விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.