அரசியல்
அலசல்
Published:Updated:

பயிரை அழிக்கிறார்கள்... வனத்தைவிட்டுத் துரத்துகிறார்கள்... கதறும் மலைகிராம மக்கள்!

மேகமலை
பிரீமியம் ஸ்டோரி
News
மேகமலை

உழவுக்குப் பயன்படுத்தும் டிராக்டர், மாடுகளைப் பறிமுதல் செய்கிறார்கள். ஏலச்செடி, தக்காளி, வெங்காயம், மிளகாய், பீன்ஸ் ஆகிய பயிர்களை அழிக்கிறார்கள்.

மேகமலை வன உயிரினக் கோட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் சாம்பல் நிற அணில்கள் சரணாலயம் இரண்டையும் இணைத்து, 1,017 சதுர மீட்டர் வனப்பகுதியை ‘ஸ்ரீவில்லிப் புத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயமாக’ மாற்றி 2021 பிப்ரவரியில் அறிவித்தது மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம். அதையடுத்து, மேகமலை யிலுள்ள வன விவசாயிகளை வெளியேற்ற வனத்துறை தீவிரம் காட்டிவருகிறது. இந்த வெளியேற்றும் முயற்சிக்கு எதிராகப் போராடிவருகிறார்கள் கிராம மக்கள். “மக்களை வெளியேற்றுவதில் குறியாக இருக்கும் வனத்துறை, இங்குள்ள எஸ்டேட்டுகளை ஏன் கண்டுகொள்வதில்லை?” என்று கேட்கிறார்கள் சூழலியல் ஆர்வலர்கள்!

‘தேனி மாவட்டம், மேகமலையில் வனம் அழிக்கப்பட்டுவருகிறது. ஆறுகளின் வழித்தடம் மாற்றப்படுவதால், மழை வளம் குறைந்து மூல வைகை மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது’ என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்பேரில், மேகமலை - வருசநாடு வனப்பகுதிகளிலுள்ள ஆக்கிரமிப்பு நிலங்களிலிருந்து வெளியேறுமாறு வன விவசாயிகளுக்குச் சமீபத்தில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

பயிரை அழிக்கிறார்கள்... வனத்தைவிட்டுத் துரத்துகிறார்கள்... கதறும் மலைகிராம மக்கள்!

இதற்கு எதிர்ப்பு தெரிவித்துவரும் வன விவசாயிகள், ‘‘கடந்த 1964-ம் ஆண்டில் ஏற்பட்ட பஞ்சம் காரணமாக ஏராளமான மக்கள், தும்மக்குண்டு, உப்புத்துறை, வெட்டுக்காடு, கோடாரியூத்து, கோரையூத்து, மஞ்சனூத்து, அரசரடி, பூசாரியூத்து, அரண்மனைப்புதூர், பொம்மராஜபுரம், வாலிப்பாறை, தண்டியக்குளம், கொடிக்குளம் குடிசை உள்ளிட்ட வனப்பகுதிகளில் குடியேறினார்கள். அவர்களுக்கு இடைபடு காடுகள் திட்டத்தின் கீழ் வனப்பகுதிகளில் காடுகளை வெட்டி மரக்கன்றுகளை நடவும், ஊடுபயிரிட்டுக்கொள்ளவும் வனத்துறை அனுமதித்தது. வனத்துறையின் தேவைக்காக எங்களைப் பயன்படுத்திவிட்டு இப்போது வெளியேறச் சொல்வது என்ன நியாயம்?’’ என்கிறார்கள்.

பொம்மராஜபுரத்தைச் சேர்ந்த விவசாயி ரத்தினத்திடம் பேசியபோது, ‘‘மேகமலை புலிகள் சரணாலயம் அறிவிப்புக்குப் பிறகு, கடந்த எட்டு மாதங்களாக வன விவசாயிகள் உழவு மற்றும் விவசாயப் பணிகளை மேற்கொள்ள வனத்துறையினர் தடைவிதித்திருக்கிறார்கள். உழவுக்குப் பயன்படுத்தும் டிராக்டர், மாடுகளைப் பறிமுதல் செய்கிறார்கள். ஏலச்செடி, தக்காளி, வெங்காயம், மிளகாய், பீன்ஸ் ஆகிய பயிர்களை அழிக்கிறார்கள். பட்டா விளைநிலங்களுக்குக்கூட மருந்து, உர மூட்டைகளை எடுத்துச்செல்ல அனுமதிப்பதில்லை. எங்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் நோக்கத்தோடு செயல்படும் மேகமலை வனச்சரகர் சதீஸ் கண்ணன் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போராட்டம் நடத்தியும், எவ்வித நடவடிக்கையும் இல்லை’’ என்றார் விரக்தியோடு.

பயிரை அழிக்கிறார்கள்... வனத்தைவிட்டுத் துரத்துகிறார்கள்... கதறும் மலைகிராம மக்கள்!

வனச்சரகர் சதீஸ் கண்ணனிடம் பேசியபோது, ‘‘பயிர்களைப் பறித்துப்போட்டது உண்மைதான். நீதிமன்ற உத்தரவைத்தான் நாங்கள் பின்பற்றுகிறோம். நாளையே விவசாயிகள் தங்களுக்கு ஆதரவான உத்தரவு நகலுடன் வந்தால், அதையும் பின்பற்றத் தயார். பட்டா வைத்திருப்போரை வெளியேறச் சொல்லவில்லை. ஆக்கிரமிப்பாளர்களை மட்டும்தான் வெளியேறச் சொல்கிறோம்’’ என்றார்.

“தற்போது மேகமலை - வருசநாடு மலைக்கிராமங்களில் 10,000 குடும்பங்கள் வாழ்ந்துவருகிறோம். 60,925 ஏக்கர் பரப்பில் விவசாயம் செய்துவருகிறோம். 2012-ம் ஆண்டில், வன உயிரின சரணாலயமாக மேகமலை அறிவிக்கப்பட்டதன் பிறகுதான், எங்களிடம் வனத்துறை கெடுபிடி காட்டத் தொடங்கியது. 2021 பிப்ரவரியில் புலிகள் சரணாலயமாக மாற்றிய பிறகு எங்களை மொத்தமாக வெளியேற்றப் பார்க்கிறார்கள். அதேசமயம், எங்கள் வாக்குகளுக்காக அரசியல் கட்சியினர் தொடர்ந்து தவறான வாக்குறுதிகளைக் கொடுத்து வருகிறார்கள். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போதுகூட ஆண்டிபட்டி தொகுதியில் பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் வேட்பாளர்கள் மு.க.ஸ்டாலினும் எடப்பாடி பழனிசாமியும் ‘வன விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்கப் படும்’ என வாக்குறுதி அளித்தார்கள். குறிப்பாக மு.க.ஸ்டாலின், ‘வன விவசாயிகளுக்குப் பட்டா வழங்கப்படும்’ எனவும் வாக்குறுதி அளித்தார். ஆனால், எங்கள் நிலைமையோ தினசரி போராட்டமாக இருக்கிறது. வாழ்வாதாரமும் நிம்மதியும் போச்சு” என்று கதறுகிறார்கள் மக்கள்.

பயிரை அழிக்கிறார்கள்... வனத்தைவிட்டுத் துரத்துகிறார்கள்... கதறும் மலைகிராம மக்கள்!

“மேகமலை - வருசநாடு வனப்பகுதிகளில் பல அரசியல்வாதிகளுக்கு எஸ்டேட்கள் உள்ளன. எஸ்டேட் முதலாளிகள் விதிகளைமீறி மரங்களை வெட்டி பாதைகள் அமைப்பதையும், தங்கும் விடுதிகள் கட்டுவதையும் வனத்துறை கண்டுகொள்வதில்லை. ஆனால், சாமானியர்களை மிரட்டி நடவடிக்கை எடுக்கிறது’’ என்கிறார்கள் சூழலியலாளர்கள்.

ஆண்டிபட்டி எம்.எல்.ஏ மகாராஜனிடம்(தி.மு.க) பேசியபோது, “வன விவசாயிகளுக்குச் சாதகமாக நீதிமன்ற உத்தரவு பெறும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். பிரசாரத்தின்போது தி.மு.க தலைவர் அளித்த வாக்குறுதி குறித்து உதயநிதி ஸ்டாலினிடம் தெரிவித்தேன். அவரும் வனத்துறை அமைச்சரிடம் பேசிவிட்டார். விரைவில் இந்த விவகாரத்தில் நல்ல தீர்வு காணப்படும்’’ என்றார்.

மகாராஜன்
மகாராஜன்

ஸ்ரீவில்லிபுத்தூர் - மேகமலை புலிகள் சரணாலயத் துணை இயக்குநர் ஆனந்திடம் பேசியபோது, “ஆக்கிரமிப்பாளர்கள் சிலருக்காகப் பல லட்சம் மக்களின் குடிநீர் ஆதாரமாக இருக்கும் வனத்தைப் பாதுகாப்பதிலிருந்து பின்வாங்கப்போவது இல்லை. நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் செயல்பட்டு வருகிறோம். எஸ்டேட் முதலாளி களுக்கு ஆதரவாக வனத்துறை செயல்படுவதாகக் கூறுவது தவறு’’ என்றார்.

முதல்வரின் வாக்குறுதியை நம்பியிருக்கும் மக்களுக்கு, அவர் என்ன சொல்லப்போகிறார்?