தமிழகத்தில் புதுமண தம்பதியருக்கு தீபாவளி சீர், ஆடி சீர் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில், தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி பொங்கல் சீர் கொடுப்பதை மற்ற பகுதிகளைவிட அதிகமாகக் கொண்டாடுகின்றனர் தேனி மாவட்ட மக்கள்.

இதுகுறித்து அறிய தேனி - மதுரை ரோட்டில் 25 ஆண்டுகளாக பாத்திரக்கடை நடத்திவரும் அருணிடம் பேசினோம். ``விவசாயத்தையும் விவசாயத் தொழிலையும், கால்நடைகளையும் வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள தேனி மாவட்டத்தில் உள்ள கிராமங்கள் இன்றும் பழமை மாறாமல் இருக்கின்றன.
பொதுவாக புதுமண தம்பதியருக்கு பெண் வீட்டார் தரப்பில் இருந்து தீபாவளி மற்றும் ஆடிக்கு சீர் செய்வது வழக்கம். இது அவரவர் விருப்பத்தைப் பொருத்தும், பொருளாதாரத்துக்கு ஏற்ற வகையிலும் மாறுபடும். சீர் செய்ய வேண்டியது கட்டாயம் இல்லை என்ற போதிலும், தங்கள் வீட்டில் இருந்து புதிய வீட்டிற்கு செல்லும் பெண்ணுக்குத் தேவையான பொருள்களை கொடுத்து அனுப்புவதை அனைத்து தரப்பு மக்களும் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

தீபாவளி, ஆடி சீர் வரிசை பொருள்களில் நகை, குத்துவிளக்கு, புத்தாடைகள், இனிப்பு உள்ளிட்ட பலகாரங்களை பரவலாக எல்லா பகுதிகளிலும் கொடுக்கின்றனர். ஆனால் தேனி மாவட்டத்தில் தீபாவளி, ஆடி சீர் கொடுப்பதை விட பொங்கல் சீர் கொடுப்பதை மக்கள் பெரிதும் விரும்பி செய்கின்றனர்.
ஏனென்றால் விவசாயத் தொழிலில் இருக்கும் மக்களுக்கு தை மாதம்தான் விளைவித்த பொருள்களை பணமாக்கும் காலம். அந்த மகிழ்ச்சியில், மகளுக்கும் பங்கு கொடுக்கும் ஆர்வமாக இதை பார்க்கலாம். எனவே பொங்கல் சீரை சிறப்பாக செய்து வருகின்றனர்.
பொதுவாக பொங்கல் சீரில், ஒரு கட்டு கரும்பு, புத்தாடைகள், பொங்கல் வைப்பதற்கான வெல்லம், அரிசி உள்ளிட்ட பொருள்களைக் கொடுப்பார்கள்.

இதில் தேனி ஸ்பெஷல் என்னவென்றால் 15 முதல் 20 வகையான பித்தளை, செம்பு மற்றும் சில்வர் பாத்திரங்களை கொடுப்பார்கள். குறிப்பாக பொங்கல் வைக்கத் தேவையான பானை, கரண்டி, அடுப்பு, தாம்பாள தட்டு, காசிப்பானை, சில்வர் பானை, குத்துவிளக்குகள், குடம் கண்டிப்பாக இடம் பெற்றுவிடும்.
கடந்த 15 ஆண்டுகளாக நாங்கள், பொங்கல் பண்டிகையின்போது பொங்கல் சீர் பாத்திரங்களை செட்டாகவே எடுத்து வைத்து விடுவோம்.
பொங்கல் சீர் கொடுக்க வருவோர் எதையும் தேடி எடுக்க வேண்டியது இல்லை. தனித்தனியாக வாங்குவதை விட இவ்வாறு மொத்தமாக வாங்கும்போது ஆயிரம், ரெண்டாயிரம் மிச்சப்படும். இந்தச் சலுகை மக்களிடம் நல்ல வரவேற்பைக் கொடுத்தது. மூவாயிரம் முதல் எட்டாயிரம் வரை செட்கள் தேவைகேற்றவாறு பிரித்து வைக்கப்பட்டுவிடும்.

பொதுவாக, திருமணத்தின்போது மணமகளுக்குக் கொடுத்து அனுப்பும் பாத்திரங்களில் பெண்ணின் பெயரை தந்தை பெயரின் முதல் எழுத்துடன் பொறித்துக் கொடுப்போம். ஆனால் பொங்கல் சீரின் போது மணமகனின் முதல் எழுத்துடன் சேர்த்து பெண்ணை பெயரை பொறித்துக் கொடுப்போம். சிலர் பெயர் அச்சிடாமலும் பாத்திரங்களை வாங்கிச் செல்வர்’’ என்றார்.
வரதட்சணை, சீர் போன்ற பழக்கங்கள் பெண் வீட்டினருக்கு சுமை, ஒழிக்கப்பட வேண்டியவை. ஆனால், நிர்பந்தம் இல்லாமல் பாரம்பர்யமும் பாசமுமாக இதுபோன்ற நடைமுறைகள் சில ஊர்களில் பின்பற்றப்படுகின்றன.